https://youtu.be/rhgvvKnbObg
அதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் நவம்பர் மாத அந்திமழையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.
இது முழுக் கட்டுரையும் ...
30 ஏப்ரல் 1990
அப்போது நான் கிராம வங்கி ஊழியன். அதன் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். அகில இந்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர். நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஏற்றத்தாழ்வுகள்.மிகவும் இழிவான நிலைமையில் வைக்கப்பட்டு இருந்தார்கள் நான்காம் நிலைக் கடைநிலை ஊழியர்கள்.பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் இன்றி , அந்தக் கூலிகளாக அற்ப ஊதியத்தில் பணி புரிந்தனர். என் கவனம் முழுவதையும் அவர்கள் பக்கம் திருப்பினேன் . அவர்கள் பணிநிலைமையை மாற்ற, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் ஆளுக்கொரு திசையில் கைகாட்டி விட்டு, ஆடம்பரமாய்த் திரிந்தார்கள். பொறுக்க முடியாமல் 28 ஏப்ரல் 1986 ஆம் தேதி ஒரு நீண்ட கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதினேன் . 13 ஜுன் 1986 அன்று , பழுப்பு நிற நீண்ட உறையில் ,அரக்கு வண்ணத்திலான உச்ச நீதிமன்றத்தின் இலச்சினையோடு கூடிய கடிதம் வந்தது.எனது முந்தைய கடிதமே , மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இந்தக் கடிதம் சொன்னது . நான் வழக்காடத் தயாரானேன் . பின்னாளில் நீதியரசரான திரு கே சந்துரு , அப்போது எங்கள் சங்கத்தின் வழக்குரைஞர். எல்லாம் தயாரானது.
அந்தச் சமயத்தில், கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை உச்சநீதி மன்றமே அமைத்தது.எங்கள் வழக்குகள் அனைத்தும் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. தீர்ப்பாயத்தில் அனைத்து ஆவணங்களுடனும் ஆதாரங்களுடனும் சாட்சியம் அளித்தேன் . நான்காம் நிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தினேன் . மூன்றாண்டு கால விசாரணைக்குப் பிறகு 30 ஏப்ரல் 1990 அன்று தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து இயங்கிய தீர்ப்பாயத்தின் அலுவலகத்தில் நீதிபதி ஓபுல்ரெட்டி தனது தீர்ப்பை வழங்கிய போது , அந்த அறையில் நானும் இருந்தேன் . நாங்கள் வழக்கில் பெற்றோம்.
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பணி நிரந்தரம் நடந்தது பாண்டியன் கிராம வங்கியில் தான் . சராசரியாக ₹20000 வரை ஊதிய நிலுவைத் தொகை நான்காம் நிலை ஊழியர்களுக்குக் கிடைத்தது. பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்று, காசாளர்கள்/ மேலாளர்கள் ஆகிப் பணி ஓய்வும் பெற்று விட்டார்கள் . ஒரு நாகரீகமான ஓய்வூதியமும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சி அல்ல ...எனக்கு மட்டுமான மகிழ்ச்சியுமல்ல ...பலருக்குமான தொடர் மகிழ்ச்சி.
28 ஏப்ரல் 1986 அன்று சாத்தூரில் , 42 B, LF தெருவில் இருந்த , எங்கள் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது .
அந்த இடத்தை , எழுதிய கணத்தை இப்போதும் நினைக்கிறேன்.
மகிழ்கிறேன்.
பாரதி கிருஷ்ணகுமார்
இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு எனது கதை, திரைக்கதை, உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் “என்று தணியும்”
வேல் புரொடக் ஷன்ஸ் சார்பில் அத்திரைப்படத்தைத் திருப்பூர் யுனிவர்சல் திரையரங்க உரிமையாளரும், நான் எப்போதும் அப்பா என்று மதிப்புடனும் பணிவுடனும் அழைக்கும் திரு. கே.பழனிசுவாமி அதைத் தயாரித்திருந்தார்.
முற்றிலும் புதுமுகங்களே நடித்த திரைப்படம்.
படத்தில் ஒருவருக்கும் ஒப்பனை கிடையாது.
அது உண்மைக் கதை அல்ல, உண்மைகளின் கதை.
தமிழில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகப் பேசிய முதல் திரைப்படம்.
உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் போன்ற ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கிறோம் என்று நாங்கள் தந்த விளம்பரத்தை எந்த நாளிதழும் வெளியிடவில்லை, தீக்கதிர் தவிர..
அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழரை நேரில் சந்தித்து அழைத்தேன்.
இலங்கையில் இருந்து அவர் எடுத்து வந்த ஆவணப்படத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் மதிப்புமிகு வாய்ப்பை, எனக்கு மிக முன்னதாகவே அவர் தந்திருந்தார்.
நண்பர்களோடும் தோழர்களோடும் வந்திருந்து சிறப்பித்தார்.
திரைப்படத்தைப் பார்த்தார். மனம் திறந்து பாராட்டினார்.
இத்தருணத்தில் அவர் தந்த அங்கீகாரத்திற்கு மனமார்ந்த நன்றி பாராட்டுகிறேன்.
மதுரையில் இருந்து இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழிகாட்டுதலில், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய ஆவணப்படமே “எனக்கு இல்லையா கல்வி..?”
கல்வி குறித்த ஆவணப்படங்களில் தலை சிறந்தது எனப் பேராசிரியர் ச. மாடசாமி அவர்களால் பாராட்டப் பெற்ற ஆவணம்.
ஆவணப் படத்திற்கென சாட்சியம் அளிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்தவர் ச.இராமதாசு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.
தயக்கமின்றி இசைவு அளித்தார். தரமான சாட்சியம் அளித்தார். கல்வி தொடர்பாக மிகுந்த காத்திரமான சிந்தனைகளோடு உரையாடினார்.
அவரைச் சந்தித்த கணங்கள் முக்கியமானவை.
சந்திப்பை சாத்தியப்படுத்தி, உடனிருந்து ஒத்துழைத்து உதவினார் அருமை நண்பர் கவிஞர். ஜெயபாஸ்கரன்.
இணைந்து பணியாற்றினார் நண்பர் ஷ்யாம்.
கும்பகோணம் பள்ளியில் நடந்த துயரமான தீ விபத்துக்குப் பிறகு , தமிழக அரசு மறைத்த உண்மைகளை வெளிப்படுத்தி , ஆவணப்படுத்திய ஆவணத்திரைப்படம் "என்று தணியும் ?"
அது பற்றி அமரர் தென்கச்சி சுவாமிநாதன் எனக்கு எழுதிய மடல் .
![]() |
| தோழர் MM |
![]() |
| தோழர்.MM |