Saturday, July 4, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 25



சௌபா ... உடன்ஒளிப்பதிவாளர் WIDE ANGLE RAVISHANKAR... புகைப்படம் தந்து உதவியதும் ரவி தான் .



வேலைக்கான நியமனக் கடிதத்தைக் கையில் வாங்கிக்கொண்டு, அப்பாவிடம் சொன்னேன் ...


"இதுக்காக நீங்க எதுக்கு வந்து ரோட்டுல காத்துக்கிட்டு நிக்கணும் ... யார் கிட்டக் குடுத்தாலும் , என் கிட்டக் கொண்டுவந்து குடுத்துருவாங்க " என்றேன் .


" நான் பாத்துக் குடுத்துட்டா எனக்கு நிம்மதி .. அது சரியா உன் கைக்கு வந்து சேராம , அதனால இந்த வேலை இல்லன்னு ஆகிரக்கூடாது ... இப்பவே , இப்பிடியே வந்துரு .. கட்சில சொல்லாத .. அவங்க உன்னைய விடமாட்டாங்க ..சொன்னாக் கேளு " என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டார். மிக மிக மென்மையான , மிருதுவான அப்பாவின் கைகள் , ஒரு பூப்பந்து போல என் கைகளைச் சுற்றிக் கொண்டது. அப்பா ஒரு திறமையான மருந்தாளுனர் (Pharmacist). எப்போதும் தூய்மையின் அடையாளம் அப்பா.


சௌபாவைப் பார்த்து ," நீ இவனுக்கு எடுத்துச் சொல்லு ... நல்ல வேல . வேலைல இருந்துகிட்டே கட்சி வேலையும் பாக்கட்டும் . சம்பாதிக்கிற காசு எதுவும் எனக்குத் தர வேணாம். அவனே வச்சுக்கட்டும்.எனக்குப் பென்ஷன் இருக்கு .. அப்புறம் சின்னதா பிராக்டீஸ் பண்ணி சமாளிச்சுருவேன் . "


சௌபாவுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை . " அப்பா நீங்க போங்க ..எல்லாம் நல்லதா நடக்கும் " என்று தெனாலிராமன் மாதிரி தத்தளித்தான் . அவரை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில் நானும் கவனமாக இருந்தேன்.


அவரது முகத்தைப் பார்க்காமலே , அவர் தந்த கடிதத்தைப் பார்த்துக் கொண்டே ,"நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் கட்சியில சொல்லாம வர முடியாது . வரக் கூடாது . இந்தமாதிரி வேலை வந்துருக்குன்னு கட்சியில சொல்லணும் . சொல்லுவேன் . அப்புறம் அவங்க பேசி ஒரு முடிவு சொல்லுவாங்க .. வேலைக்குப் போகச் சொன்னா , வேலைக்குப் போவேன். போகாதேன்னு கட்சி சொன்னா போக மாட்டேன் . எதுன்னாலும் கட்சியில பேசிட்டு உங்களுக்குச் சொல்லுறேன் .கட்சி சொல்லுறது தான் முடிவு . நானே வீட்டுக்கு வர்றேன் . நீங்க இங்கெல்லாம் வந்து நிக்க வேணாம் ... நானே வர்றேன் ... முடிவு தெரிஞ்சுட்டு வர்றேன் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன் .


இந்த பதிலை என்னிடம் எதிர்பார்த்து வந்ததைத் தான் அறிந்து இருப்பதைப் பார்வையால் உணர்த்தினார். முகம் இறுக்கமாகியது . உதடுகளை மடித்துக் கடிப்பது போல இறுக்கிக் கொண்டார் . அவரது சிறிய கண்கள் சிவந்து கலங்கின . சட்டென்று , இடுப்பில் இருந்த மூக்குப்பொடி மட்டையை எடுத்து ,விரித்துக் கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும் நெறிபட ஒரு சிட்டிகைக்கும் மேலாகப் பொடியை எடுத்து , நாசித் துவாரங்களில் நிரப்பினார் . கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார் . சைக்கிளில் ஏறி அமர்ந்தார் . வலது காலைத்தூக்கிப் போடுகிறபோது , அடிவயிற்றிக்குச் சற்று கீழே, வேஷ்டி விலகாமல் இருக்க இடது கையால் ஒத்திப் பிடித்துக் கொண்டார். என்னைத் திரும்பிப் பார்த்து "உங்க அம்மா இருந்து சொன்னாக் கேப்பியோ என்னமோ ? போனவள எங்க இருந்து கூட்டிட்டு வர்றது ? என்றபடி , இடது கையால் மோவாயைத் துடைத்துக் கொண்டார் . கொஞ்சநேரம் மெளனமாக இருந்தார் . அந்தப் பரபரப்பான சாலையின் போக்குவரத்து நெரிசலையும் மீறி அவரது மௌனம் எனக்கு உரத்து ஒலித்தது . அவரே தொடர்ந்தார் "யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டா.. என்ன செய்ய முடியும் ? நான் நாளைக்கு இதே நேரத்துக்கு வர்றேன் " ... என்றபடி புறப்பட்டுப் போனார் .


" நீங்க வரவேணாம் " என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை . அவர் போவதையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை .



காக்காத் தோப்புத் தெருவில் இருந்து , கட்சி ஆபீசைக் கடந்து , டவுன்ஹால் ரோட்டில் , அந்த நாற்சந்தியின் , தென்மேற்கு மூலையில் இருந்த தோழர் கந்தசாமியின் கடைக்குத் தேநீர் குடிக்க , நானும் சௌபாவும் போனோம் . கந்தசாமி மிகுந்த பிரியத்துடன் வரவேற்றார் . எனது வீடு இருந்த 40 ஆவது வார்டின் கட்சிக் கிளைச் செயலாளர் ஆக இருந்தவர் தோழர் கந்தசாமி . அந்தப் பகுதியில் SYF கிளையை நான் உருவாக்கியது , கட்சி மேடைகளில் பேசுவது , முழுநேர ஊழியராகப் போவது என்று அனைத்தையும் அறிந்தவர் . என் மீது மிகுந்த அன்பும் தோழமையும் கொண்டவர் . " என்ன தோழர் ... அப்பா இப்ப சைக்கிள்ல போனாங்களே பாத்தீங்களா " என்று கேட்டார் . "அக்கா வீட்டுக்குப் போயிட்டுப் போறாங்க " என்றேன் . பொய்யுரைப்பது என் நோக்கமல்ல . முறையாகக் கட்சிக்குச் சொல்லுவதற்கு முன்னால் , வேறு எவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை . வழக்கம் போலக் காசு வாங்க மறுத்தார் காவன்னா .வற்புறுத்திக் காசுகொடுத்துவிட்டுத் திரும்பும் போது நான் சௌபாவிடம் சொன்னேன் "இந்தக் கடிதம் வந்ததைப் பத்தி கட்சிக்குச் சொல்லாம இருந்துட்டா என்ன ?".


ஒரு நொடியேனும் தாமதிக்காமல் சௌபா சொன்னான் . " கட்சியில கேட்டுச் சொல்றேன்னு அப்பா கிட்ட சொல்லிட்டீங்க.. அவரும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டாரு ... இப்ப கட்சிக்கே சொல்லாம இருந்து , அவரு நேரா கட்சியில போய்க்கிட்டு ... குழப்பமாயிடும்" என்றான் .


"சரி ... கட்சியில போய்ச் சொல்லி , நாளைக்குக் கட்சி பேங்க் வேலைக்குப் போன்னு சொல்லீட்டா? என்ன செய்யுறது? "


"பேங்க் வேலைக்கா ... உங்களையா ? கட்சி ஒருநாளும் உங்கள பேங்க் வேலைக்குப் போகச் சொல்லாது .. இப்பவே நேராப் போய் தோழர் MM கிட்டச் சொல்லுவோம் ... ஆர்டர் ஐக் காட்டுவோம் . என்ன சொல்லுரார்னு பாப்பமா " என்றான் .


சௌபா தந்த உற்சாகத்தில் அப்போதே , கட்சி அலுவலகத்திற்குள் சென்று , அங்கு ஏதோ முக்கிய பணியில் இருந்த தோழர் MM இடத்தில் எனது வேலைக்கானக் கடிதத்தைக் கொடுத்தேன் .கடிதத்தை வாங்கியதும் , என்ன என்று விசாரிப்பது போலப் பார்த்துக்கொண்டே , தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமருமாறு சைகை காட்டினார் .


கடிதத்தை மெதுவாகப் படித்துக்கொண்டே வந்தார் . அவர் முகத்தில் இருந்து எந்தக் குறிப்பையும் என்னால் அறிய முடியவில்லை. படித்து முடித்ததும், தோழர் MM என்னிடம் கேட்டார் .

என்ன கேட்டார் ?


அப்புறம் சொல்லுகிறேன் ...



- பாரதி கிருஷ்ணகுமார் .

1 comment:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 25 - அருமை. ஒரு தந்தையாய் என்ன சொல்வதென தெரியவில்லை. மிகவும் நெகிழ வைக்கும் நிகழ்ச்சி - நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment