உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள் என்று "அந்திமழை" மாத இதழில் இருந்து ஒரு கட்டுரை கேட்டார்கள் . அனுப்பினேன் . பிரசுரம் ஆகி இருக்கிறது. அந்திமழைக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.
அதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் நவம்பர் மாத அந்திமழையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.
இது முழுக் கட்டுரையும் ...
30 ஏப்ரல் 1990
அப்போது நான் கிராம வங்கி ஊழியன். அதன் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். அகில இந்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர். நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஏற்றத்தாழ்வுகள்.மிகவும் இழிவான நிலைமையில் வைக்கப்பட்டு இருந்தார்கள் நான்காம் நிலைக் கடைநிலை ஊழியர்கள்.பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் இன்றி , அந்தக் கூலிகளாக அற்ப ஊதியத்தில் பணி புரிந்தனர். என் கவனம் முழுவதையும் அவர்கள் பக்கம் திருப்பினேன் . அவர்கள் பணிநிலைமையை மாற்ற, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் ஆளுக்கொரு திசையில் கைகாட்டி விட்டு, ஆடம்பரமாய்த் திரிந்தார்கள். பொறுக்க முடியாமல் 28 ஏப்ரல் 1986 ஆம் தேதி ஒரு நீண்ட கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதினேன் . 13 ஜுன் 1986 அன்று , பழுப்பு நிற நீண்ட உறையில் ,அரக்கு வண்ணத்திலான உச்ச நீதிமன்றத்தின் இலச்சினையோடு கூடிய கடிதம் வந்தது.எனது முந்தைய கடிதமே , மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இந்தக் கடிதம் சொன்னது . நான் வழக்காடத் தயாரானேன் . பின்னாளில் நீதியரசரான திரு கே சந்துரு , அப்போது எங்கள் சங்கத்தின் வழக்குரைஞர். எல்லாம் தயாரானது.
அந்தச் சமயத்தில், கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை உச்சநீதி மன்றமே அமைத்தது.எங்கள் வழக்குகள் அனைத்தும் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. தீர்ப்பாயத்தில் அனைத்து ஆவணங்களுடனும் ஆதாரங்களுடனும் சாட்சியம் அளித்தேன் . நான்காம் நிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தினேன் . மூன்றாண்டு கால விசாரணைக்குப் பிறகு 30 ஏப்ரல் 1990 அன்று தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து இயங்கிய தீர்ப்பாயத்தின் அலுவலகத்தில் நீதிபதி ஓபுல்ரெட்டி தனது தீர்ப்பை வழங்கிய போது , அந்த அறையில் நானும் இருந்தேன் . நாங்கள் வழக்கில் பெற்றோம்.
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பணி நிரந்தரம் நடந்தது பாண்டியன் கிராம வங்கியில் தான் . சராசரியாக ₹20000 வரை ஊதிய நிலுவைத் தொகை நான்காம் நிலை ஊழியர்களுக்குக் கிடைத்தது. பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்று, காசாளர்கள்/ மேலாளர்கள் ஆகிப் பணி ஓய்வும் பெற்று விட்டார்கள் . ஒரு நாகரீகமான ஓய்வூதியமும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சி அல்ல ...எனக்கு மட்டுமான மகிழ்ச்சியுமல்ல ...பலருக்குமான தொடர் மகிழ்ச்சி.
28 ஏப்ரல் 1986 அன்று சாத்தூரில் , 42 B, LF தெருவில் இருந்த , எங்கள் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது .
அந்த இடத்தை , எழுதிய கணத்தை இப்போதும் நினைக்கிறேன்.
மகிழ்கிறேன்.
பாரதி கிருஷ்ணகுமார்
4 comments:
நான் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும்
AIRRBEA வின் பெயர் எழுதியிருக்கிறது.
Feeling happy when you ensure others’ happiness is a priceless moment. Congratulations.
42 B , L.F தெரு , சாத்தூர் . இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சி அல்ல ...எனக்கு மட்டுமான மகிழ்ச்சியுமல்ல ...பலருக்குமான தொடர் மகிழ்ச்சி.
28 ஏப்ரல் 1986 அன்று சாத்தூரில் , 42 B, LF தெருவில் இருந்த , எங்கள் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது .
அந்த இடத்தை , எழுதிய கணத்தை இப்போதும் நினைக்கிறேன். - மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
ஆஹா! சகமனிதர்களுக்காகப் போராடிப் பெற்றது தான் வாழ்வில் பெருமகிழ்ச்சியா? தன்னலமற்ற சேவை. வாழ்த்துகள் பா.கி.
Post a Comment