Friday, July 3, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 24

அப்பா ...



எனக்கொரு வங்கி வேலை கிடைத்ததை, எனக்கு  முதலில் சொன்னது... 

நான் வீட்டில் இருந்து வெளியேறி பல மாதங்களாகி இருந்தது . அந்த வங்கி வேலை குறித்து எந்த நினைவுகளும் , கனவுகளும் இல்லை . 
எங்காவது உண்டு  , எங்காவது உறங்கி , கட்சிக்கான பணிகளை மட்டும் செய்துகொண்டு இருந்த காலம் . 

கட்சி அனுப்புகிற வகுப்புகளுக்குப் போவது , பட்டிமன்றங்களுக்குப் போவது , நிறைய வாசிப்பது , தோழர்களோடு உரையாடுவது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது . அதில்  கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுவது என்கிற வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டிருந்த காலம் . 

இதில் பல நாட்கள் , எனது உணவுத் தேவைகளைக் கவனித்துக் கொண்ட நண்பர்கள் சிலர் இருந்தனர் . அதில் சௌபாவும் , குணசேகரபாண்டியனும் , முரளி என்கிற கிருஷ்ணமூர்த்தியும் மிக மிக முக்கியமானவர்கள் .இந்தத் தொடரை எழுதும் இந்த நாளில் அவர்கள் மூவருமே என்னோடு  இல்லை . சில ஆண்டு இடைவெளியில் மூவருமே அடுத்தடுத்து மறைந்து போனார்கள் . அவர்கள் இல்லாததால் தன் இதை எழுத முடிகிறது என்கிற அளவுக்கு , எதையும் எதிர்பாராது என் பசிப்பிணி தீர்த்தவர்கள் . அவர்கள் இருந்தால் நான் இதை எழுதிவிட முடியாது. எழுதச் சம்மதிக்கவே மாட்டார்கள் .
நான் எங்காவது போய்ப் பேசிச் சம்பாதித்து வந்தால் , அது எப்போதும் எனது பணமல்ல. எங்கள் எல்லோருக்குமானது .
நானும் உணவு தேடி ஒருவரது இடத்திற்கும் ஒருபோதும் போனதில்லை . போன இடத்தில் பசியாறி இருக்கிறேன் . பசியோடு பல நாட்கள் வாழவும் , பசிக்குப் பசியையே உண்ணவும் பழகி இருந்தேன் .பட்டினத்து சுவாமிகள் பாடியதுபோலத்தான் அந்த வாழ்க்கை இருந்தது . 

சௌபா பசியாறுவதற்குத்  தனது  வீட்டுக்கு அழைத்துப்போவான் . குணசேகரன் எனக்கு விருப்பமான உணவு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லுவான் . முரளியின் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய சைவ உணவு விடுதி இருந்தது . அங்கு அழைத்துப்போவான் . அல்லது அவனது இல்லத்திற்குப் போவதுண்டு . உணவு தருவதில், பரிமாறுவதில்  முரளியின் அன்னையின் பண்பு  மிக உயர்ந்தது .

பின்னாளில் நான் வங்கிப் பணிக்கு வந்தபின்னர் , நான் பணியாற்றிய ஊர்களுக்கெல்லாம் , என்னோடு உணவருந்துவதற்காகவே என்னைத் தேடி ஓடிவரும் நண்பர்களின் கூட்டத்தில் இவர்கள் மூவரும் எப்போதும் இருந்தார்கள் . 

என் செயல்பாடுகளில் நம்பிக்கைகொண்ட கட்சி என்னை நேரடியாகக் கட்சி உறுப்பினர் ஆக்கியது . AM , CM , என்பதெல்லாம் இல்லாமல் PM ஆனேன் . மதுரை நகர்க்குழுவில் இணைத்தார்கள் . த மு எ ச விலும் , SYF ல்லும் ஏற்கெனவே உறுப்பினராக இருந்து , அது தொடர்பான அமைப்பு சார்ந்த பணிகளிலும் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்தேன் .

கட்சி என்னை முழுநேர ஊழியராக்குவது என்று முடிவு செய்து , அந்த முடிவும் எனக்கு சொல்லப்பட்டு விட்டது . ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நான் தீக்கதிர் அலுவலகப் பணிகளில் இணைக்கப்படுவேன் என்பதும் முடிவாகி இருந்தது . ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்கிற எனது விருப்பம் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தேன் .

ஆனால் , பாண்டியன் கிராமவங்கியில் நான் இளநிலைக் காசாளர் மற்றும் எழுத்தர் அதாவது , Junior Clerk cum Cashier (Sofa cum Bed மாதிரி ) பதவிக்குத் தேர்வு செய்யப்பட கடிதம் மதுரையில் இருந்த வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது .

அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ,  கட்சி ஆபீசுக்குப் போகிற பாதையில் ,என்னிடம் நேரில் தந்துவிட வேண்டுமென்று பல மணிநேரம் சாலையில் , வெளியில் காத்துக் கிடந்து  இருக்கிறார் அப்பா  . கட்சி அலுவலகத்திற்குள், வருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை . அவருக்குப் பிடிக்காத கட்சியின் அலுவலகத்திற்குள் அவர் வர விரும்பவில்லை . யாரிடமும் சொல்லி அனுப்பவும் பிடிக்கவில்லை . தன்னையும் , தனது மகனையும் பிரித்ததாக அவர் கட்சி மீது கோபம் கொண்டிருந்தார் . எப்போதாவது நான் வெளியில் வந்தால் என்னிடம் தரவேண்டுமென்று காத்திருந்து , இரண்டு மூன்று நாட்கள்  வரை காத்திருந்து , என்னைக்காணாமல் , என் மூத்த சகோதரியின் மகனைக் கட்சி ஆபீசுக்கு அனுப்புகிறார் . நான் ஊரில் இல்லை என்றும் , மண்டபம் வரை போய் இருப்பதாகவும் கட்சி அலுவலகத்தில் தகவல் கிடைக்கிறது . என்றைக்குத் திரும்ப வருவேன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு , சில நாட்களுக்குப் பிறகு திரும்பவும் வந்து , அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு எனக்காகக் காத்திருந்தார் அப்பா . அப்பா வந்ததோ காத்திருந்ததோ எனக்குத் தெரியாது. " உங்க அக்கா பையன் வந்து , உங்களைக் கேட்டார் " என்பதைத் துல்லியமாக தோழர்கள் எனக்குச் சொன்னார்கள் . நான் அதைப் பொருட்படுத்தவில்லை . 

என்னை எதிர்பார்த்துத் தெருவில் அப்பா காத்திருந்த தருணத்தில் , சௌபா கட்சி அலுவலகம் வந்திருக்கிறான் . சௌபாவைப் பார்த்ததும் , உற்சாகமாகி அவனை அழைத்து , இந்த விவரங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார். அப்பா சௌபாவிடத்தில் வைத்த கோரிக்கை, " இது கட்சியில யாருக்கும் தெரியக்கூடாது . அவனுக்கும் மட்டும் தான் தெரியணும் " என்று சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது தான் . சத்தியத்தை சௌபா காப்பாற்றினான் . 

அன்று காலையில் தான் நான் மண்டபத்தில் இருந்து திரும்பி இருந்தேன் . SYF இன் ராமநாதபுர மாவட்ட மாநாடு , மூன்று நாட்கள் மண்டபத்தில் நடந்தது . அந்த மகாநாட்டில் பங்கு பெறவும் , இறுதி நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் என்னை அழைத்துப் போய் இருந்தார் தோழர் SAP .

SAP அப்போது கட்சியின் ராமநாதபுர மாவட்டச் செயலாளர் . அந்த மாநாட்டிற்கு தோழர்கள் PM குமார் , KP ஜானகியம்மாள் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன் . அந்த மாநாட்டில் தான் கவிஞர் கந்தர்வனை நான் முதல்முறையாகச் சந்தித்தேன் . அந்த மாநாட்டில் பங்கு பெற்றது , தனியே எழுத வேண்டிய அனுபவம் .


சௌபா வந்து சொன்னதும் நான் வெளியே ஓடினேன் . இறுக்கமான முகத்தோடு அப்பா எனது வேலைக்கான உத்தரவைத் தந்துகொண்டே ," என் கடமை . ஒரு வாரமா இந்த ரோட்டுல நிக்குறேன் . கட்சியில சொல்லாத ... இந்த வேலைக்குப் போயிரு . வேலைக்குக் கட்டவேண்டிய டெபாசிட் பணத்த நான் கட்டுறேன் ... இப்பிடியே போயிறலாம் .. வந்துரு " என்றார் .

சௌபா பக்கத்திலேயே மெளனமாக நின்றுகொண்டு இருந்தான் . 

என் வாழ்வில் மாபெரும் திருப்பங்கள் நிகழப்போவதை நான் அப்போது உணரவே இல்லை . உணர்ந்திருந்தால் , அந்தச்  சந்திப்பு நிகழாமல் தடுத்திருப்பேன், என்று உள்மனம் இப்போது நினைத்துக் கொள்ளுகிறது. இப்போது நினைப்பதனால் பயனென்கொல் ? 

வேலைக்கான நியமனக் கடிதத்தைக் கையில் வாங்கிக்கொண்டு, அப்பாவிடம் சொன்னேன் ...

என்ன சொன்னேன் ?

அப்புறம் சொல்லுகிறேன் ...

- பாரதி கிருஷ்ணகுமார் .

2 comments:

Rathnavel Natarajan said...

என்ன சொன்னேன் ?

அப்புறம் சொல்லுகிறேன் ...

- பாரதி கிருஷ்ணகுமார் .
- எதிர்பார்க்கிறோம். நன்றி சார் திரு bharathi krishnakumar

Shri Prajna said...

“ பசியோடு பல நாட்கள் வாழவும் , பசிக்குப் பசியையே உண்ணவும் பழகி இருந்தேன்” சிறப்பான வரி bk சார்

Post a Comment