Sunday, July 5, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 26



கடிதத்தை மெதுவாகப் படித்துக்கொண்டே வந்தார் . அவர் முகத்தில் இருந்து எந்தக் குறிப்பையும் என்னால் அறிய முடியவில்லை . படித்து முடித்ததும் தோழர் MM என்னிடம் கேட்டார் .


"BK தோழர் ..நீங்க என்ன நெனைக்குறீங்க ?"



" கட்சி என்ன சொல்லுதோ அப்பிடி செய்யுறேன் தோழர்"என்றேன் .


"ரொம்ப நல்லது .. அப்பிடியே செய்யலாம். அது தான் சரி. அதுல எந்த மாற்றமும் இல்ல . ஆனா நான் கேட்டது அது இல்ல . உங்க தனிப்பட்ட விருப்பம் என்ன ? கட்சி வேலையே பாக்குறீங்களா? பேங்க் வேலைக்குப் போக விரும்புறீங்களா?"


"நான் கட்சி வேலை பாக்கத்தான் விரும்புறேன் "


அவர் முகத்தில் , அவர் மறைக்க முயன்றும், மறைந்து

கொள்ளாமல் ஒரு சிறிய புன்னகை தோன்றி மறைந்தது . எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகி விட்டது .


"நாளைக்கு செயற்குழு . அதுல பேசி முடிவு எடுத்துறலாம் . ஒருவேள, வேலைக்குச் சேரணும்னா ஒரு வாரம் பத்துநாள் தான

இருக்கு" என்று நிறுத்தினார்.


எனக்கு அதிர்ச்சியாகி, திகைப்புடன் அவரைப் பார்த்தேன். புன்னகைத்தபடி எழுந்து, "ஒரு வேலையா நெல்பேட்ட

வரைக்கும் போயிட்டு வர்றேன்." நடக்க ஆரம்பித்தார் . நானும் சௌபாவும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.


மண்டையன் ஆசாரி சந்தில் இருந்த கட்சி அலுவலகம், ஒரு அக்ரகாரத்து வீடு போல நீண்ட, ஆனால் அகலக் குறைவான அமைப்புடன் இருக்கும் . முன் வாசலில் நுழைந்ததும் முதல் மாடிக்குப் போகிற மரப்படிகள் இருந்தது. அந்த மரப்படிக்குக் கீழே தான் , தனது சைக்கிளை நிறுத்தி இருப்பார் MM .


MM மில் தொழிலாளியாக இருந்து, இயக்கத்துக்கு வந்தவர். பள்ளிப் படிப்பெல்லாம் ஏதுமில்லாத பஞ்சாலைத் தொழிலாளி . மதுரை நகரத்தின் கட்சி வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அவரது காலத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது .என் வயதொத்த பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் இளைஞர்களும் கட்சியைத் தேடி வந்து இணைந்த நாட்கள் அவை .


கட்சிக்கு வந்த எல்லோரையும் அரவணைத்து, உரையாடி , அவர்களை ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தன்னிலும் படித்த , வாசிக்கிற , திறமை மிக்க தோழர்கள் குறித்து அவருக்குப் பெருமித உணர்வு இருந்ததே அன்றி , அச்ச உணர்வு இருந்ததே இல்லை . அவர்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமும் , பொறுப்பும் பெற்றுத் தருவதைக் கடமை உணர்வாகக் கொண்டிருந்தார். புதிய வெள்ளம் பாய்வதைத் தடுத்ததே இல்லை . தனக்குப் பின்னே வந்தவர்களைத்

தன்னிலுமுயர்ந்த கட்சிப் பதவிகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். அவர் கறுப்பில்லை . முதிர்ந்த வேப்பம் பட்டையின் நிறத்தில் இருப்பார். தலைமுடி அலை அலையாய் கருப்பும் வெள்ளையும் கலந்த எள்ளும் பச்சரிசியும் கலந்தது போல ,ஏற்றிச் சீவிய வெட்டு . இப்போதைய கேரள முதல்வர் போல இருக்கும் முடிவெட்டு . அன்றாடம் சவரம் செய்த, சதுர முகம் . முழுக்கைச் சட்டையை இறுக்கமாகச் சுற்றி மடித்து ஏற்றி விட்டிருப்பார். புகை பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது . SCISSORS என்றொரு சிகரெட் . இன்னும் அவரைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்க ஆசையாக இருக்கிறது .



இதற்கெல்லாம் முன்னதாக , இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே , CPM இல் சேருவது என்கிற முடிவை நானே தான் எடுத்திருந்தேன். வில்லாபுரம் பகுதியில் இருந்த SYF தோழர்கள் நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு என் பெயரையும் அவர்கள் அச்சிட்டு விட்டார்கள் . வேறொரு அமைப்பில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்த என் பெயரை SYF இன் கூட்டத்தில் எப்படிச் சேர்க்கலாம் என்று , அந்தப் பகுதித் தோழர்கள் கேள்விக்கு உட்படுத்தப் பட்டார்கள் .



வேறொரு அமைப்பில் இருந்து நான் வெளியேறி விட்டதை கட்சி அறிந்திருக்கவில்லை. எனது தொடர்ந்த வாசிப்பு மற்றும் மிக மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு , இருக்கும் இடதுசாரி இயக்கங்களில் CPM சிறந்தது என்கிற முடிவுக்கு நானே வந்திருந்தேன் .


பல நாட்கள் பல இரவுகள் அந்த விவாதங்கள் நடந்ததை நான் வியப்புடன் இப்போது நினைவு கூர்கிறேன் . ஒரு குறிப்பிட்ட

புத்தகத்தைப் படித்துவிட்டுப் பிறகு பேசலாம் என்று பிரிந்து ... பிரிந்ததில் இருந்து அந்தப் புத்தகத்தை எழுத்தெண்ணிப் படித்து மீண்டும் சந்தித்துப் பேசி விவாதித்து .... அதிலிருந்து வேறொரு புத்தகத்துக்கு நகர்ந்து ... என் வாழ்வில் கல்விப்புலம் சார்ந்த தேர்வுகளுக்குக் கூட அப்படிப் படித்ததில்லை .


என் அறிவின் எல்லைக்குள் , வரம்புக்குள் நான் எடுத்த முடிவின் அடிப்படையில் கட்சியில் சேருவது என்கிற முடிவெடுத்த பிறகு , நானே கட்சி அலுவலகம் வந்து சந்தித்தது தோழர் MM அவர்களைத்தான் . இதை முன்னரே எழுதி இருக்கிறேன்

என்றபோதும் , மீண்டும் எழுதும் ஆசையைத் தடுக்க இயலவில்லை. கூறியது கூறல் குற்றமாமே .... ஆகட்டும் . அதனாலென்ன?மனம் நிறைந்த மனிதர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவது குற்றமென்று சொல்லும் இலக்கணம் எனக்கெதற்கு ? நமக்கெதற்கு?



"இந்தக் கட்சியில சேரணுமுன்னு எதுக்கு முடிவெடுத்தீங்க " என்று தோழர் MM என்னைக் கேட்டதும் , நான் இரண்டு மணிநேரம் அதற்கு விளக்கம் சொன்னபோது , அதை நுட்பமாகச் செவிமடுத்து என்னை அறிந்து அங்கீகரித்த மனிதரை , தோழரைப் பின்தொடர்ந்து வந்ததற்கு ஒரு காரணம் எனக்கு இருந்தது.


நான் கட்சிப்பணி ஆற்ற வேண்டுமா , வங்கி வேலைக்குப் போக வேண்டுமா என்பதில் எனது தனிப்பட்ட விருப்பத்தை தோழர் MM கேட்டு அறிந்துகொண்டது போலவே , தோழர் MM இன் தனிப்பட்ட விருப்பம் என்னவென்று அறிந்துகொள்ள நான் விரும்பினேன் .



தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த தோழர் MM இன் அருகில் போய் நின்றேன்.


"என்ன தோழர் ?" என்று தன் வழக்கமான சிரிப்போடு , என் தோளில் கை வைத்தார்.


"கட்சி முடிவு எதுன்னாலும் நான் கட்டுப்படுவேன் ... அது உங்களுக்குத் தெரியும் .. ஆனா .... என்று இழுத்தேன் ...


"சொல்லுங்க" என்றார் MM .


"உங்க தனிப்பட்ட விருப்பம் என்னன்னு சொல்லுங்க .. நான் கட்சி வேலை பாக்கட்டா .. இல்ல பேங்க் வேலைக்குப் போகட்டா " என்றேன் . சௌபா பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தான்.


சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் தோழர் MM சொன்ன பதிலில் , நான் உறைந்து போனேன் .


MM என்ன சொன்னார் ?


அப்புறம் சொல்லுகிறேன் .










- பாரதி கிருஷ்ணகுமார் .

No comments:

Post a Comment