Thursday, July 23, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 29எங்கு போவது என்பதை மனம் தீர்மானம் செய்தது.

இந்த நேரத்திற்குப் பிறகு யார் வீட்டுக்குப் போவதும் உவப்பான செயல் அல்ல.
கால்கள் கிழக்கு நோக்கி நடக்க முனிச்சாலை வந்து சேர்ந்தது . மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும் உண்பதற்குச் சூடாக உணவு தரும் கடைகள் நான்கைந்து இருந்தது. எனக்கோ பசி உணர்ச்சி இல்லை.தினமணி திரையரங்கை ஒட்டி கிழக்கு நோக்கி , மாரியம்மன் தெப்பக்குளம் வரை செல்லும் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள சாலைக்குப் புது இராமநாதபுரம் சாலை என்று பெயர். முற்றிலும் சிமெண்ட்டால் போடப்பட்ட ,சாலை என்பதால் அதை சிமெண்ட் ரோடு என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அந்தச்சாலை துவங்குகிற இடத்தில் ,சாலையை ஒட்டி ஒருவர் பருத்திப்பால் விற்றுக் கொண்டிருப்பார். மதுரையின் அடையாளங்களில் ஒன்று பருத்திப்பால். நாலணாவுக்கு அரைக் கிளாசும் , எட்டணாவுக்கு முழுக் கிளாசும் தருவார்கள். முழுக் கிளாசு குடித்தால், அப்புறம் பசிக்க ஐந்தாறு மணிநேரமாகும். ஒரு கிளாஸ் பருத்திப்பால் குடித்தேன் . ஒரு பாக்கெட் சார்மினார் சிகரெட் வாங்கினேன். சிமெண்ட் ரோட்டில் நூறு மீட்டர் நடந்ததும், இடது புறத்தில் சக்தி சந்நியாசி கோவிலும் , அதையொட்டி ஒரு பிள்ளையார் கோவிலும் இப்போதும் இருக்கிறது.கோவிலுக்கு எதிரே ஒரு வற்றாத ஊரணி முன்பு இருந்தது.அது கோவிலுக்குச் சொந்தமானது தான்.அந்த ஊரணியில் குப்பைகளைக் கொட்டி , அதைக் குட்டையாக்கி,மேலும் குப்பைகளைக் கொட்டி அதை மைதானமாக்கி இருந்தது மதுரைநகராட்சி.
கோவிலுக்குப் பின்னே முன்பொரு காலத்தில் நதியாக இருந்தது , இப்போது சாக்கடையாகிக் கருத்து நாறிய படியே ஓடிக்கொண்டு இருக்கிறது.அந்தச் சாக்கடை சிமிண்ட் ரோட்டின் இடது புரம் மூணு கிலோமீட்டர் தூரமும் மார்ஜின் போட்டது போலக் கிடக்கும்.கோவிலைத் தாண்டியதும், புதிதாக உருவான அந்த மைதானத்திற்கு எதிரே இரண்டு மிகப் பெரிய புளியமரங்கள் நிற்கும். இரண்டும் இரண்டு பெரிய அசுரர்களைப்போல நின்றிருக்கும்.இரண்டு பேர் சேர்ந்து பிடிக்கிற மாதிரி அடி பெருத்த மரங்கள். அந்த இடத்தில் மின் விளக்குகளும் கிடையாது. அந்தப் புளியமரங்கள் குறித்து அந்தப் பகுதியில் எல்லோருக்கும் மிகுந்த அச்சமுண்டு.ஏனெனில், அந்தப் பகுதியில் பேய் ஓட்டுகிறவர்கள் பயன்படுத்தும் மரம் அது.பின்னிரவில் சாமியாடிகளும் , பேயோட்டுகிறவர்களும், பேய் பிடித்தவர்களுடனும் அவர்கள் உறவினர்களுடனும் உடுக்கை முழங்கப் புளிய மரத்தடிக்கு வருவார்கள்.பேய் பிடித்தவர்களின் தலைமுடியை நீளமாக வெட்டி, ஒரு ஆணியைப் புளியமரத்தில் அறைந்து அதில் அந்தத் தலைமுடியை இறுக்கிச் சுற்றி விடுவார்கள். ஒரு சிறிய மாலையும் அந்த ஆணியில் தொங்க விட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.இதெல்லாம் நடக்கிற வரை பேய் ஆடிக்கொண்டே இருக்கும்.    
பகலில் கூட, அந்தச் சாலையில் நடந்து வருகிறவர்கள் புளியமரங்களை நெருங்கியதும் எதிர்த் திசைக்குப் போய் விடுவார்கள்.அந்த மரத்தில் பேய்கள் கூட்டமாகக் குடியிருப்பதாக எல்லோரும் திடமாக நம்பினார்கள். ஓராண்டுக்கு முன்பே அந்தப் புளியமரத்தடியில் நானும் எனது நண்பர்களும் குடியேறினோம்.நாங்கள் குடியேறிய பிறகு, அங்கிருந்த பேய்கள் அச்சத்தில் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாக சிலர் நம்பினார்கள்.புளியமரத்திற்க்குப் பக்கத்திலேயே  தனியாருக்குச் சொந்தமான ஒரு கல் பாலம் இருந்தது.கல் பாலத்தைக் கடந்துபோனால் தனியாருக்குச் சொந்தமான பெரிய ரைஸ் மில். பெரிய கதவு போட்டு வாசலை அடைத்திருப்பார்கள்.ரைஸ் மில் காரர்களே அந்தப் பாதையில் புழங்கமாட்டார்கள்.அந்த மரத்தின் பிஞ்சுகள் சுவை மிகுந்தவை.அந்தப் புளிப்புச் சுவைக்குத் தாகம் தணிக்கும் வல்லமை இருந்தது.
புளியமரத்தைக் கடந்து இருநூறு அடி நடந்ததும் எனது வீடு இருந்த காம்பவுண்டு வலதுபுறமும், எதிரே சாக்கடையைக் கடக்க ஒரு பாலமும் உண்டு . பாலத்தில் மேடு ஏறிப்போக வருவது பகத்சிங் தெரு . அது நேரே வடக்காக நீண்டு இன்றைய காமராஜர் சாலை என்று அழைக்கப்படும் பழைய ராமநாதபுரம் சாலையில் சென்று இணையும். உண்மையில் அந்தத் தெருவின் பெயர் பகத்சிங் தெரு அல்ல . வாழக்கொண்டா சீனிப் பட்டறை சந்து என்பது தான் அந்தத் தெருவின் உண்மையான பெயர். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தான் அந்தத் தெருவுக்கு பகத்சிங் பெயரைச் சூட்டினோம். அந்த வரலாறு தனியே சொல்லப்பட வேண்டியது .சொல்வேன். 

அங்குமிங்குமாகக் கொஞ்சநேரம் அலைந்து திரிந்து விட்டுப் புளியமரத்தடியில் இருந்த கல் பாலத்தில் வந்து படுத்துக்கொண்டேன்.இரவு முழுவதும் உறங்கவே இல்லை .புகைத்துக்கொண்டே இருந்தேன்.

இப்படி ஒரு வங்கியில் வேலை வந்துசேரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை .ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளனாக வரவேண்டும் என்கிற கனவு இப்படித் தரைமட்டமாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை . கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியனாகி , கிராம்ஷியைப் போல எழுதவிரும்பிய கனவு காய்ந்து போனது. இறந்து போன அம்மாவின் நினைவு பெரும் துக்கமாக ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது. 

அதிகாலையிலே எழுந்து, பகத்சிங் தெருவைக் கடந்து பழைய ராமநாதபுரம் சாலைக்குத் தேநீர் அருந்தப்போனேன்.
பிறகு போய் அப்பாவைப் பார்த்து, கட்சி முடிவு பற்றிச் சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன். தேநீர் குடித்து விட்டுப் புகை பிடிக்கத் தொடங்கினேன்.

வேலை கிடைத்த துக்கம் குறையவேயில்லை.குமாரு என்று கூப்பிட்டு என் நினைவோட்டத்தைக் கலைத்தார் தேநீர் கடைக்காரர். அங்க பாருங்க என்றார்.

பார்த்த திசையில் ...

1 comment:

drJeeva said...

"வேலை கிடைத்த துக்கம் குறையவேயில்லை"
ஒருவரியில் ஒட்டுமொத்த மனவோட்டத்தையும் வெளிப்படுத்தியது சிறப்பு

Post a Comment