Friday, July 10, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 27

தோழர்.MM

"உங்க தனிப்பட்ட விருப்பம் என்னன்னு சொல்லுங்க .. நான் கட்சி வேலை பாக்கட்டா .. இல்ல பேங்க் வேலைக்குப் போகட்டா " என்றேன் . சௌபா பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தான்.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் தோழர் MM சொன்ன பதிலில் , நான் உறைந்து போனேன் .

"சௌந்திரபாண்டி ... நீங்க கொஞ்சம் உள்ள இருங்க" என்று இடதுகையைக் கட்சி ஆபீசுக்குள் காட்டினார் . சௌபா போகும்வரை மெளனமாக இருந்தார் .

இடது கையை என் தோளின் மீது ஆதரவாக வைத்தார்.

"BK தோழர் ... நான் ஒரு முழு நேர கட்சி ஊழியர் . நகரச் செயலாளர் . அதனால , கட்சி தொடர்பான விசயங்கள்ல எனக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பமும் இல்ல ... இருக்கவும் கூடாது . கட்சி என்ன முடிவெடுக்குதோ அது தான் என்னோட முடிவு."

என் முகம் இறுகியது.அவரே தொடர்ந்தார்.

"..அப்ப ... உங்களுக்குச் சொந்தமா கருத்தே இல்லையான்னு நினைப்பீங்க ... இருக்கு . ஆனா அதை நான் ரோட்டுல நின்னு யார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது . உங்க கிட்டக் கூட சொல்லக்கூடாது . கட்சியில என்னைக் கேக்கும்போது , அங்க அங்க, அதுக்கு உரிய இடத்துல சொல்லணும் . அது தான் கட்சி கட்டுப்பாடு . நெறையப் பேரு கட்டுப்பாடுன்னா பேசவே கூடாதுன்னு நெனைக்குறாங்க ... மனுசனாப் பொறந்துட்டு எப்பிடிப் பேசாம இருக்க முடியும் "

புகையால் லேசாகக் கரை படிந்திருந்து, கொஞ்சம் கீழ் வரிசை தேய்ந்து இருந்த தன் பற்கள் முழுவதும் தெரிய, தோள்கள் குலுங்க, கண்களும் ஒன்று சேர, மெலிதாக ஓசையெழ ,நேர்மையாகச் சிரித்தார் . நல்ல களங்கமற்ற சிரிப்பு . அது அவர் எப்போதும் சிரிக்கிற இயல்பான சிரிப்பு .

என் முகம் இளகியது . அவர் தொடர்ந்தார்.

" பேசக் கூடாதுன்னு கட்சி எப்பிடி சொல்லும் ? எங்க எப்பன்னு இடம் தெரிஞ்சு பேசணும் .நீங்க கேக்குறதுக்காக , என்னோட விருப்பம்னு நான் எதையாவது சொல்லிட்டு , நாளைக்கு கட்சி வேற மாதிரி முடிவெடுத்தா அது தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கலாம். அது மாதிரி சங்கடங்களைக் கட்சிக்கொண்டு வராம இருக்குறது தான் நம்ம கடமை .

கட்சி எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு சம்மதம்ன்னு நீங்க முதல்ல சொன்னது எனக்குப் பெருமையா இருந்துச்சு ... அதுலயே நில்லுங்க ...

ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் ...நீங்க எங்க வேல பாத்தாலும் , உங்களுக்கும் எனக்கும் உள்ள தோழமையும் , நட்பும் மாறப் போறதில்ல .. நீங்க பேங்க் வேலைக்குப் போனாலும் அங்கேயும் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு வேலை இருக்கும் ... கட்சில வேலை பாத்தா கட்சி அரங்கம். பேங்குல வேலை பாத்தா வங்கி அரங்கம் ... அரங்கம் தான மாறும் ... ஆளுகளும் குணமும் மாறிருமா " என்றார்.

தோளில் வைத்திருந்த இடது கை இறுகியது . இம்முறை இன்னும் மலர்ந்து , மகிழ்ந்து பெரும் ஓசையுடன் சிரித்தார் .

கைகளை எடுத்தபடியே ," இங்க தான் இருப்பீங்களா ? எங்கயாச்சும் போறீங்களா?" என்று கேட்டார் . " இங்க தான் இருப்பேன் " என்றேன் .

"இதப் பத்தி யார் கிட்டயும் எதுவும் பேசிக்க வேணாம் . சௌந்திரபாண்டி கிட்டயும் சொல்லிருங்க . கட்சி முடிவு எடுத்தப்புறம் சொல்லிக்கலாம் ... இருங்க .. வந்துர்றேன் ... ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துருவேன் " என்றபடியே , சைக்கிளில் இடதுகாலைப் பெடலில் வைத்து, வலது காலைத் தரையில் அழுத்திய படியே , புறப்பட்டுப் போனார் .

நான் அவரது பதிலில் இருந்த பொறுப்புணர்வைக் , கட்சிக் கட்டுப்பாட்டை எண்ணி வியந்து நின்றேன்.

கட்சி அலுவலகத்திற்குள் போனதும் MM என்ன சொன்னாரு ? என்று சௌபா கேட்டான் . இதப்பத்தி நம்ம ரெண்டுபேரும் யார் கிட்டயும் எதுவும் பேச வேணாம்னு சொன்னாரு என்றேன் . சௌபா சம்மதம் என்பதுபோலத் தலையசைத்தான் .

சைக்கிள் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு , இருவரும் வீட்டுக்குப் போனோம் . அப்பாவிடம் சொன்னேன் ."நாளைக்குக் கட்சி செயற்குழு . சாயங்காலம் தான் செயற்குழு . அதுல பேசிட்டு சொல்லுவாங்க .. அதனால காலைல நீங்க அங்க வர வேணாம் . கூட்டம் முடிஞ்சதும் நானே வர்றேன் " என்றேன் .

ஒரு வார்த்தை பேசாமல் , எந்த உணர்ச்சியும் இல்லாமல் , முகம் இறுகிக் கிடக்க" உன்னோட லைப் அ மத்தவங்க டிசைட் பண்ணுறது நல்லாவா இருக்கு ? இதை எப்பிடிப் பெருமையா வந்து சொல்லுற ? என்ன நடக்கணும்ன்னு உன் தலையில எழுதி இருக்கோ அதுபடி நடக்கட்டும் ... திரும்பவும் சொல்லுறேன் .. உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்காத "என்று ஒரே மூச்சாக கோபமாகப் பேசி முடித்தார் . நான் எப்போதும் அவரை எதிர்த்துப் பேசுவதில்லை . அவர் என்ன பேசினாலும் கேட்டுக்கொள்ளுவேனே தவிர , எதிர்த்துப் பேசும் வழக்கமில்லை .என் வாழ்வில் இரண்டுமுறை தான் அவரை எதிர்த்துப் பேசி இருக்கிறேன் . அது பற்றி பிறகு எப்போதாவது சொல்லுகிறேன்.

அவர் பேசி முடிக்கிறவரை காத்திருந்தேன் . சௌபாவை வீட்டுக்கு சற்றுத் தொலைவில் நிற்கச் சொல்லி இருந்தேன் . எப்படியும் திட்டத்தானே போகிறார்,இதற்கு எதுக்கு ஒரு சாட்சி என்று நினைத்தது போலவே பேசி முடித்தார் . தரையைப் பார்த்தபடி," நான் கிளம்புறேன்" என்றேன் . "ம்ம்"என்றவர் "சாப்பிட்டியா " என்றார் . "சாப்பிடப்போறேன்" என்றேன் . "சாப்பிட்டுப் போறியா "என்றார் . " இல்ல போகணும் " என்று விரைந்து புறப்பட்டுப் போனேன் .

சௌபா வீட்டுக்குப் போனான். நான் கட்சி ஆபீசுக்குப் போனேன் .


MM இருந்தார் . இரவு நீண்ட நேரம் வரை என்னோடு பேசிக்கொண்டு இருந்தார் . 
என்னைப்பற்றியோ , என் வேலை பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .

மறுநாள் செயற்குழு கூடியது. முன்னால் இருந்த முதல் மாடியில் கூட்டம் நடந்தது. கட்சியின் முடிவுக்காக நான் காத்திருந்தேன். இரவு ஒன்பது மணி வாக்கில் கூட்டம் முடிந்து தோழர் NS உட்பட எல்லோரும் இறங்கி வந்து , நடையைத் தாண்டி இருந்த முன் ஹாலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.எல்லோரும் அறிந்த அறிமுகமான தோழர்கள்.பரஸ்பரம் வணக்கம் , புன்னகை எல்லாம் பரிமாறிக்கொண்டும், பேசிக்கொண்டும் நின்றார்கள் . எல்லாம் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் . எல்லோரும் சட சடவெனப் புறப்பட்டுப் போய்க் கொண்டே இருந்தார்கள்.என்னைப் பற்றிய ஒரு விசயத்தைப் பேசி முடித்த தடயம் ஒருவர் முகத்தில் கூட இல்லை. நான் தவித்துப் போய் இருந்தேன்.

எல்லோரும் புறப்பட்டுப் போன பிறகு , தனது பணிகளை எல்லாம் முடித்துக்கொண்டு, மற்றவர்களைப் போகச்சொல்லி விட்டு MM என்னை அழைத்தார். 

" உக்காருங்க தோழர் கிருஷ்ணகுமார்" ... உங்க விசயத்தப் பேசி முடுச்சுட்டோம்" என்று நிறுத்தினார். 

என்ன பேசி முடித்தார்கள் ?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.

1 comment:

Rathnavel Natarajan said...

எதிர்பார்க்கிறேன். நன்றி சார்

Post a Comment