Tuesday, December 17, 2019

கன்னியாகுமரி - ஆவணத்திரைப்படம் | இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் | Kanniyakumari-A documentary film | Direction : Bharathi Krishnakumar

யற்கையை அழித்து எந்த வளர்ச்சியையும எந்தக் கொம்பனாலும் உருவாக்கிவிட முடியாது. இயற்கையை அழிப்பதன் பெயர் வளர்ச்சியன்று, வீழ்ச்சி. இதுவே, இந்த ஆவணப்படம் சொல்லும் உண்மை. கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல, ககனம் முழுமைக்கும் பொருந்துவது.

இந்த ஆவணத் திரைப்படத்தை உருவாக்கும் நல்வாய்ப்பை எனக்குத் தந்தது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.தாமஸ் பிராங்கோ அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் எப்போதும் உரியது.
அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அல்ல.
இயற்கையை நேசிப்பவர். ஆக்கபூர்வமான சிந்தனையாளர்.
செயல் திறன் மிக்கவர். கல்வியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய மகளிர் சுயநிதிக் குழுவான "மலர்" அமைப்பை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவர்.

இதன் உருவாக்கத்திற்கு உதவிய அனைத்துப் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றி பாராட்டுகின்றேன்.

என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.
இன்னும் மீதம் இருக்கும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் அழகை, அழகுற, என் எண்ணம் உணர்ந்து காட்சிப்படுத்திய புகைப்படக் கலைஞன் தம்பி ஏர்னெஸ்டோவிற்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

நம் காலத்தின் மிகத்தீவிரமான ஒரு சமூகப்பிரச்னையை கன்னியாகுமரி மாவட்டத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இதை உலகம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். பார்க்க முடியும். மீத்தேன் , எட்டு வழிச்சாலை என இயற்கைக்கு எதிரான எல்லா அதிகார ஆடம்பரங்களுக்கும், ஆணவங்களுக்கும் இதுவே பதிலாகும். எனவே இதை எல்லோருக்கும் பார்க்கப் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.