Monday, December 16, 2019

கவிஞர் மானசீகன் எனக்களித்த பிறந்தநாள் பரிசு...

****மானசீகன்****


இந்த  உலகத்தில்  ஒவ்வொரு விஷயத்திலும் பிடித்தது, தேறுவது, நன்றென்று பெயர் பெற்றது, சிறந்தது என்று பலவகைகள் இருக்கும். அனைத்துமே கொண்டாடப்படப் வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால்  ஆகச் சிறந்தது என ஒன்றிருக்கும். அதை அல்லது அப்படிப்பட்ட நபரை உச்சி முகர்ந்து எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருப்பதுதான் தேர்ந்த ரசனையின் அடையாளம். 

அநத  வகையில் ,

ஞானி- புத்தர், நபிகள் 
சுய சிந்தனையாளர் - ஓஷோ
வாழ்வாசிரியன்- வள்ளுவன்
உலகத் தலைவர் - காந்தி
சீர்திருத்தவாதி- பெரியார் 
இந்தியத் தலைவர் -நேரு ,விபி.சிங்
தமிழகத் தலைவர் -அண்ணா
தேர்ந்த  அரசியல்வாதி- கலைஞர்
கவிஞர் - கம்பன்
புனைவாளர் - வண்ணதாசன்
எழுத்தாளர்- ஜெயமோகன்
பல்துறை வித்தகர் - சுஜாதா 
இயக்குநர் - மணிரத்னம், மிஷ்கின் 
பாடலாசிரியர் - கண்ணதாசன்,  வைரமுத்து 
இசை - ராஜா, ரஹ்மான் 
நடிப்பு - சிவாஜி, கமல்
பாடகர் - எஸ்பிபி, ஹரிஹரன்
பாடகி - ஜானகி, ஸ்ரேயா கோஷல்
கிரிக்கெட்  ஆட்டக்காரர் -லாரா , சச்சின் 
ஆளுமை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
அமைப்பாளர் - ச.தமிழ்ச்செல்வன்
அதிகாரி - உதயச்சந்திரன் ஐஏஎஸ்
ஆசிரியர் - முனைவர். பீ.மு.மன்சூர்
அழகி - ஐஸ்

ஆகியோரே பல்வேறு துறைகளில் நான் வியக்கும் ஆகச்சிறந்தவர்கள்.

அந்த வகையில் 'மேடைப் பேச்சு' என்றால் சந்தேகமே இல்லாமல் பாரதி கிருஷ்ணகுமார்தான். தமிழ்நாட்டில்  எல்லா பேச்சாளர்களுக்கும் அவர்தான் சிலபஸ். இப்போது பேசுகிறவர்களில் நான் உட்பட அவர் மீது பொறாமைப்படாத , வியக்காத, ரசிக்காத பேச்சாளர் எவரும் கிடையாது. 

பேச்சின் தொடக்கத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம்  ஒரு கதையோ . சம்பவமோ சொல்வார். அதைக் கேட்டால் சிலுவையில்  ஆணி அறைந்து கொண்டிருப்பவனும் கூட ,இயேசுநாதரை அதிலிருந்து  இறக்கி விட்டு மேடைக்கு முன்னே முதல் வரிசையில்  அமர்ந்து கொள்வான். உண்மையில் அது வெறும் கங்கு மட்டுமே.  அதற்குப் பிறகுதான் தீ எரியும். தீ என்றால்  சாதாரணத் தீ அல்ல.  சகலத்தையும் எரித்து விட்டு மானுடப் பேரன்பை சாம்பலாக மிச்சம் தந்து உண்ணச் சொல்லும் ஊழித் தீ.

பேச்சின்  இடையிடையே வெளிப்படும் அவரது நகைச்சுவை நினைத்து நினைத்து இன்புறத்தக்கது. அது யாரையோ அறையும்.யாரிடமோ கொஞ்சும். யாரையோ நினைவு கூர வைத்து கண்ணீராகிக் கசியும்.அரிவாளோடு யாரையோ மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு சண்டியரின் வேட்டியை அவிழ்த்து விட்டு எக்களிக்கும். ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் காரியக் கோமாளிகளை எட்டி உதைக்கும்.

1996 ல் ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக படம் காட்டிக் கொண்டிருந்த நேரம்.  கிருஷ்ணகுமார்  இப்படிப் போட்டுடைத்தார்.
' நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரியா? அப்ப ஒரு தடவையாவது சொல்லுங்க சாமி . வர்றேன் இல்ல வர்லன்னு'.23 ஆண்டுகளுக்கு முந்தைய பேச்சாளனின் தீர்க்கதரிசனம் அது.

தமிழ் சினிமாவின் போலித்தனங்களை அவரளவிற்கு நுட்பமாக   அம்பலப்படுத்தியவர்கள் வெகுசிலரே(நன்மாறனும் அப்படித்தான்)எஜமான் படம் வந்தபோது அவர் ஒரு மேடையில் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. ' பொண்டாட்டி வயித்துல  இருக்கிறது புள்ளயா? தலகாணியான்னு தெரியாதவனுக்கு எப்புடிடா புள்ள  பிறக்கும்?' 

அவர் பேச்சில் ஓர் இடத்திலாவது கண்கள் கசியாமல் எவரும் இருக்க முடியாது.  கல்நெஞ்சத்தையும் அசைத்து நகர வைக்கும் காட்டாறொன்றை அவர் நாவில் வைத்திருக்கிறார். அவருடைய குரலில் வெளிப்படும் நவரசங்களுக்காக ஆஸ்காரே தரலாம். ஆனால்  அது நடிப்பல்ல.  அவருடைய  உணர்வுதான் குரல் வழியே நதியாகித் தளும்பி நம்மை நகர விடாமல் நனைக்கிறது.

பேச்சே கேட்காத ஓர்  ஆரம்ப கட்ட ரசிகனுக்கும். ஆயிரம் மேடைகள் கண்ட சாதனைப் பேச்சாளனுக்கும் ஒரே நேரத்தில் பிடித்த பேச்சாளர்  அவராக மட்டுமே இருக்க முடியும். 

 பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு நேர்சந்திப்பில் (மலேசியாவில்)என்னிடம் சொன்னார்' ரஃபீக் நம் பேச்சு மேக்ரோ லெவலில் சமகாலத்தின் மாபெரும் பிரச்சினையொன்றைப் பேச வேண்டும்.  அதேநேரத்தில் இணைகோடாக அது மைக்ரோ லெவலில் ஒவ்வொருவரின் மன  ஆழத்தையும் அன்றாட வாழ்வியல் அனுபவம் வாயிலாகத் தொட வேண்டும் '. சிறந்த மேடைப் பேச்சுக்கு Bk யின்  இந்த  இலக்கணம் ஒன்றே போதுமானது.

பாடலில் எஸ்பிபி மாதிரி எந்த  ஏரியாவிலும் ஜெயிக்கிற பேச்சாளரும் கிருஷ்ணகுமார்தான்.பள்ளி, கல்லூரி, மக்கள் மன்றம், கோவில் திருவிழா, ரோட்டரி,அரசு ஊழியர் சங்கக் கூட்டங்கள், பிரிவு உபச்சார விழா,  இலக்கியக் கூட்டங்கள், பெண்கள் மாநாடு,நவீன  இலக்கிய  அரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், மதிப்பீட்டு உரைகள், மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், மீலாது விழாக்கள், புத்தாண்டு விழாக்கள், திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் என்று எந்த இடத்திலும் அவர் தோற்று நான் பார்த்ததே இல்லை.  அவுட்டாக்கவே முடியாத  அதிரடி பேட்ஸ்மேன் அவர். சிக்ஸ் அடித்தால் அவுட்டாகி விடுகிற  அபாயமிருக்கிற முட்டுச் சந்திலும், தொலைதூரத்தில் எல்லைக்கோடிருக்கிற ஈடன்கார்டன் மைதானத்திலும் சதமடிக்காமல் ஓயாத மேடை அபூர்வம் அவர். மைக்கேல் பெவனுக்குள் சேவாக்கின் வெறித்தனம் புகுந்து கொண்டால் அதன் விளைவு எப்படி  இருக்குமோ? அதுவே கிருஷ்ணகுமாரின் பேச்சு. ஒரே நேரத்தில் மனுஷ்யபுத்திரனையும், அப்துல் காதரையும் ,நாஞ்சில் சம்பத்தையும் ,கு. ஞானசம்மந்தனையும்,சுகி.சிவத்தையும், அவ்வை  நடராசனையும் அவரால் கண்களில்  நீர் துளிர்க்க நெகிழ்வோடு ஆச்சர்யப்படுத்தி விடமுடியும். இதுவரை அங்கு பேசியிருக்கிறாரா என்று தெரியவில்லை.  ஆனால்  சுவிஷேசக் கூட்டங்களில் கூட  அவரால்  பால்தினகரனை விட சிறப்பாகப் பேச முடியும். ஆனால் பால்தினகரன் பலமுறை  அழைத்தும் வராத  இயேசு, கிருஷ்ணகுமார் தன் கிசுகிசுப்பான குரலால் ' அம்மா ' பற்றி பேசினால்( அவருடைய  மாஸ்டர் பீஸ் அந்த ஏரியா. பாரதியின் அம்மா ஏக்கத்தை அவர் பேசிக் கேட்க வேண்டும் )
கண்டிப்பாக  குழந்தை இயேசுவாகி மரியன்னையின் முலையைப் பற்றியபடி வந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது  

தமுஎகசவின் இன்றைய வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்.  மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் நிகழ்வில்  பல நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகும்  அலுப்பில்லாமல் ஒரு பெருங்கூட்டம் Bk என்கிற இரண்டெழுத்துக்காகக் காத்திருக்கும்.  இரவு 12 மணி அல்லது 1 மணிக்கு Bk கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து வருவார்.  தோல்வியே காணாத மாபெரும் தளபதி களத்தில் வீரர்களுக்கு முன்னால் புரவியில் வரும் போது எழும் ஆரவாரமாய் சபை அதிரும். அந்த மாபெரும் வரவேற்பை மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியபடியே கம்பீரமாக நடத்து போய் மைக்கை தன் உயரத்திற்குக் கீழே  இறக்கி  அந்தப் பெருங்கலைஞன் தன் கிசுகிசுப்பான குரலால் 'தோழர்களே ! ' என்று ஆரம்பிப்பான். அந்தப்  பனி விழும் இரவில்  இந்தக்  குரலைக் கேட்டால் அம்பானியே ஒரு மணிநேரத்திற்கு கம்யூனிஸ்டாகியே தீர வேண்டும்.வேறு வழியில்லை.  Bk யின் பேச்சு நம் உடம்பில்  வெடிகுண்டைக் கட்டி விட்ட பிறகு சுற்றி வளைத்துக் கொள்கிற வனநெருப்பை ஒத்தது. வெடித்துச் சிதறாமல் எவனும், எவளும், எதுவும் தப்பி விடமுடியாது. 

எங்கள்  கல்லூரிக்கு வராத பேச்சாளர்களே இல்லை.மறைந்த  அடிகளார் தொடங்கி பர்வீன் சுல்தானா வரை சகலரையும் அங்கு பணியாற்றிய மூட்டா சண்முகசுந்தரம், முனைவர்.சங்கிலி,முனைவர்.அப்துல் சமது போன்ற பெரும்பேராசிரியர்கள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்கள் . பேச்சாளர்களின் வேடந்தாங்கல் எங்கள் கல்லூரி. அந்த வகையில் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களை வைரவிழா கண்ட  எங்கள்  கல்லூரி பார்த்திருக்கிறது. ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்த மர்ஹூம் சேக்மைதீன் ஐயா அவர்கள்  எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து விடுவார்.  அனைவரின் பேச்சினையும் அவர் ஐம்பது ஆண்டுகளாகக் கேட்டிருப்பார். அவருக்கு  என்னை மிகவும் பிடிக்கும். சந்திக்கும் போதெல்லாம் கைகளைப் பற்றிக் கொண்டே உற்சாகப்படுத்திப் பேசுவார்.  அவர் அடிக்கடி சொல்கிற விஷயம்
 ஒன்றுண்டு ' வளத்தியா ஒருத்தர் வந்து பேசுனாருல. அவரு மாதிரி  நீங்க பேசனும்.  அதான் எங்களுக்குப் பெருமை ' எத்தனையோ பேரைத் தாண்டி  இரண்டே தடவைகள் வந்து போன இந்த வளந்தவர்தான் ( BK)அவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை பேச்சென்பது தகவல்களின் தொகுப்பு அல்ல. தகவல்கள்தான் புத்தகங்களிலும், கூகுளிலும் நிறைய  கொட்டிக் கிடக்கின்றனவே? பேச்சென்பது மாபெரும் நிகழ்த்துக்கலை. அபூர்வமாக சிலர் பேச்சையே படைப்பாக மாற்றி விடுவார்கள். ஒவ்வொரு மேடையிலும் விரல்களாலும், குரலாலும் ஒரு புத்தகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எழுதிவிடுகிற படைப்பாளிதான் அவர்.  அவர் பேச்சைக் கேட்ட பிறகு நாம் பார்க்கும் வள்ளுவரும், பாரதியும், கம்பனும், மார்க்ஸூம் முற்றிலும் வேறானவர்கள்.வரலாற்றுப் புத்தகங்களில் நாம் கண்ட சிலவரிக் குறிப்புகளுக்கு ரத்தமும், சதையுமாய் உயிர் தந்து நம் முன்னால் நடமாட விட்டு, கொஞ்ச விட்டு , காதலிக்க விட்டு, சண்டையிட  விட்டு , அந்தக் கனவு கலைவதற்கு முன்னால் நம் முன்னிலையிலேயே மரிக்கச் செய்து பார்ப்பவர்களைக் கதற வைக்கும் மேடை திரிமூர்த்தி அவர். 

2011 என்று நினைக்கிறேன். குற்றாலத்தில் படைப்பிலக்கியப் பயிலரங்கை இஸ்லாமிய  இலக்கியக் கழகம் சார்பாக  சமது சார் ஏற்பாடு செய்திருந்தார். அந்த  நிகழ்வுக்கு கிருஷ்ணகுமார்தான் நிறைவுரை. நான் தொகுப்புரை. அரங்கில் பிரபஞ்சன், எஸ்ரா, தோப்பில், நாகூர் ரூமி,நைமு இக்பால்,கவிமாமணி அப்துல் காதர்,அண்ணன் ஹாமீம் முஸ்தபா,  எழுத்தாளர் களந்தை,  மீரான் மைதீன்,   போன்ற  பெரும் ஆளுமைகள் அமர்ந்திருந்தனர். கவிக்கோவும் ஸ்டைலாக  கால் மேல் காலிட்டபடி அமர்ந்திருந்தார். அவர் பிறரின் பேச்சைக் கேட்பதே அபூர்வம்.  அவர் முன்னால் பிறர் பேசுவதென்பது பல்கலைக்கழகத்தின் முன்னால் நின்றபடி வாய்ப்பாடு விற்பதற்குச் சமம்.  சுலபத்தில் பிறரைப் பாராட்டி விடமாட்டார்( அவர்  என்னைப் பாராட்டிய தருணங்களையெல்லாம் விருதுகளாகக் கருதி நெஞ்சில் ஃபிரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறேன்) அன்று கிருஷ்ணகுமாரின் ஒருமணி நேர  உரையை உற்றுக் கவனித்துக் கேட்டார். உண்மையில்  அது பேச்சே இல்லை. கண்கட்டப்பட்ட நீதி தேவதை தன் கறுப்புத் துணியை  அவிழ்த்து விட்டு பாபர் மசூதி  இடிப்பிற்குப் பிறகு  தனிமைப்பட்டுக் கிடக்கும்  ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களை  மடியில் போட்டுப் பாடிய  கண்ணீர் நிரம்பிய தாலாட்டு அது. கோடானுகோடி  பக்தர்களின்  பிரார்த்தனையை நெஞ்சில்  சுமந்தபடி சாமியாடும் தொல்குல மூதாதை  ஒருவனின் கேவல் நிரம்பிய ஆராதனை அது.  ஒரே ஒரு மாயக்கரத்தால் ஆயிரக்கணக்கான  உடல்களை தொட்டு வருடி இதயம் மீட்டும்  மாயக்கண்ணனின் ஸ்பரிசம் அது.  இதுவரை  உலகத்தில் பேசப்பட்ட  அனைத்து உரைகளையும் காலடியில் போட்டு எக்களிக்கும் மாகாளியின் உக்கிரச் சிரிப்பு அது.  அந்தப் பேச்சில் சபை உறைந்து கிடைத்தது.  எப்போதும் நூறு ரன்கள்  அடிப்பவன் ஒரு டெஸ்ட் மேட்சை ஒன்டேயாக்கி விளாசிய இரண்டு இரட்டைச் சதம்  அது.  சகலரும் அழுதார்கள். விம்மினார்கள். கேவினார்கள்.உறைந்தார்கள். குலுங்கிய முதுகுகளைக் காட்டியபடி முகத்தை மறைத்துக் கொண்டார்கள். கண்களின் வழியே கொட்டிய வரலாறை பிறரியாமல் துடைத்துக் கொண்டார்கள். அந்த  தழுதழுத்த குரலை விரல்களாகப் பிடித்துக் கொண்ட மழலையாய் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். ஒரே  ஆள் ஆயிரம் பேரை ஒரு தருணத்தில் சாக வைத்து உயிர்ப்பித்தான். நிகழ்வு முடிந்ததும் சகலரும் கிருஷ்ணகுமாரைச் சூழ்ந்து கொண்டார்கள். கோவிலை சுற்றி வளைத்த நதியாக சபை நுரைத்துக் கிடந்தது.  அதுவரை தானும் ஒரு சிலையாகி உறைந்து கிடந்த கவிக்கோ எழுந்து வந்தார். அந்த  வெள்ளை ஜிப்பா,  வேட்டியைக் கண்டதும் திரிவேணி சங்கமம் வளைந்து ஒதுங்கியது. கவிக்கோ பக்கத்தில் போனார். கிருஷ்ணகுமார் சற்றே குனிந்தார். கவிக்கோவே உயரம். இது அதுக்கும் மேலே.  கட்டித் தழுவி கிருஷ்ணகுமாரின் தோளில் முகம் வைத்து கவிக்கோ குலுங்கினார். சபை இரண்டாவது தடவையாக  உறைந்தது.  எல்லோரும் பொது இடத்தில்  கவிக்கோ அழுவதை முதல்முறையாக  ஆச்சர்யமும், கண்ணீரும் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தோம். உம்மா இறந்ததற்கு அழும் தந்தையைத் தேற்றும் பிரிய மகனின் கிசுகிசுப்பான குரலில் கவிக்கோவின் முதுகில்  உரிமையோடு தடவிக் கொடுத்தபடி கிருஷ்ணகுமார் சொன்னார் ' அழாதீங்க வாப்பா! அழாதீங்க வாபபா'. ஒரு பேச்சாளன் தன் ரசிகர்கள் முன்னிலையிலேயே பெற்ற ஞானபீட  விருது அது. 

 அன்பின் Bk !உங்கள்  வாப்பா  இப்போது இல்லை. ஆனால்  கைவிடப்பட்டவர்களின் முதுகுகளை இன்னும் நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதை உங்கள் வாப்பா நாடி நரம்புக்குச் சமீபமாக  இருந்தபடி பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்.

இந்தப் பிறந்த நாளில்  நீங்கள் பல்லாண்டு வாழப் பிரார்த்தனை செய்யச் சொல்லி ஆன்மாவாகி விட்ட  உங்கள் வாப்பாவின் சூட்சமக் காதுகளில் கிசுகிசுப்பான குரலில் நான் வேண்டிக் கொள்ளட்டுமா Bk?