Sunday, February 24, 2013

ஒரு சாலையோரச் சிற்பம்

எனக்கு இல்லையா கல்வி ? ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொழுது , தமிழகத்தின் இருபது மாவட்டங்களில் எங்கள் குழு பயணம் செய்தது .

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசு நடு நிலைப் பள்ளியில் படப்பிடிப்பு முடித்து விட்டு , அடுத்த பள்ளிக்குப் போகிற வழியில் இந்த சாலையோரத்து சிலையைக் கண்டு அடைந்தேன் .

செடிகளும் , கொடிகளும் சுற்றி எவர் கண்களிலும் எளிதில் படாத விதத்தில்  தான் இருந்தது ..பக்கத்துக் குடிசையில் இருந்து அரிவாள் வாங்கி செடி கொடிகளை அப்புறப்படுத்தினேன் .
உடன் வந்தவர்களுக்கு இது என்ன வெட்டி வேலை ? என்று தான் பட்டிருக்கும் . இருந்தாலும் , யாரும் எதுவும் கேட்கவில்லை . எனக்கோ அது ஆயிரம் சேதிகளைச் சொல்லிக் கொண்டே இருந்தது .

மதுரை வீரன் தன் மனைவிகளோடு இருக்கும் சிற்பம் அது . கோவில் கட்ட வேண்டுமெனக் கருதி ஒரு மனிதன் தொடங்கிய வேலை . அவரது மறைவால் பாதியில் நின்று போக , தொடர்ந்து எடுத்துச் செய்ய ஆளில்லாமல் நின்று போயிருக்கிறது .

பல கோணங்களில் வித விதமாக படங்கள் எடுக்கச் சொன்னேன் .
குறிப்பாக இருண்ட கண்களும் , அடைத்த வாயும் கொண்ட  அந்த முகம்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு அதை ஆவணப்படத்திற்கு முகப்பாக வடிவமைத்தேன் .

அதைப் பார்த்த அன்றே அது அடையப் போகும் இறுதி வடிவத்தை நான் பல முறை எனது கனவுகளிலும் கண்டிருக்கிறேன் .
நான் கனவு கண்ட விதமே அதை வடிவமைத்துத் தந்தார் எனது எடிட்டரும் ,டிசைனருமான  அருள்முருகன் .
நம் கனவுகளை நனவாக்குகிற கலைஞர்களுடன் பணி புரிவது மிகுந்த உற்சாகமும் , பெருமிதமும் தருகிற அனுபவம் .


 

1 comment:

vimalanperali said...

இது போல புதரும்,முட்களும் கலைத்து பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளது,வாழ்த்துக்கள் .

Post a Comment