Friday, March 29, 2013

வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு எனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவானது கீழவெண்மணி குறித்த ஆவணத் திரைப்படம் .

கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டுமெனப் போராடிய எளிய , ஏழை விவசாயக் கூலிகளை ஒடுக்க எல்லா வகையான அடக்குமுறைகளையும் ஏவி விட்டது அரசும் , போலீஸ்காரர்களும் , நிலப் பிரபுக்களும் இணைந்த, புனிதமற்ற, கள்ளக் கூட்டணி .

அதன் உச்சமாக , நாற்பத்தி நான்கு பேரை  தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கொலைகாரக் கும்பல் . இருபது பெண்கள் , பத்தொன்பது குழந்தைகள் , ஐந்து முதியவர்கள் என நாற்பத்தி நான்கு உயிர்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் நடைபெற்ற படுகொலை அது . அவர்கள் அஞ்சி ஒடுங்கி இருந்த குடிசை ராமையா என்பவருக்குச் சொந்தமானது . அது பற்றியே ஆவணத் திரைப்படத்திற்கு "ராமையாவின் குடிசை" எனப் பெயர் இட்டேன் .

அந்த ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொருட்டு , இரண்டு ஆண்டுகள் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தேன் . போகாத கிராமமில்லை . சந்திக்காத மனிதர்கள் இல்லை . ஒரு பெரும் தேடல் அது . அந்த அனுபவங்கள் தனியே எழுதத் தக்கவை .

அந்தத் தேடலின் ஊடே , ஒரு நாள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலையில் , மாவூர் என்ற சிறிய கிராமத்தின் எல்லையில் , இடது புறம் போகிற ஒரு சிறிய பாதையின் உள்ளே இந்த அய்யனார் இருந்தார் .

அந்த மாவட்டத்தில் முன்பு நிலவி இருந்த அதிகாரத்தின் , அடக்குமுறையின் வடிவமாக எனக்கு அந்த அய்யனார் தென்பட்டார் . தரையில் அமர்ந்து, மேல் நோக்கிய கோணத்தில் அவரைப் படம் பிடித்தேன் . இந்த வண்ணத்தில் அவர் இருக்கவில்லை . வடிவமைப்பில் இந்த வண்ணத்தை அவருக்குத் தந்தோம் .

ஆவணத் திரைப்படம் வருவதை முன்னறிவிக்கும் பிரசுரத்தில் அய்யனார் இடம் பெற்றார் . மிகுந்த பாராட்டைப் பெற்றார் அய்யனார் . அதற்குப் பிறகு, எங்கள் அனுமதியின்றி பலர் அவரைப் பயன் படுத்திக் கொண்டதையும் நான் பார்த்திருக்கிறேன் .

அதற்குப் பிறகு, அதே சாலையில் பல முறை பயணம் செய்தும், அவரைப் பார்க்கப் போக வாய்க்கவில்லை . எனக்கு அது ஒரு மனக் குறை  தான் . அந்த வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும் . அடுத்த முறை அந்தப் பாதையில் பயணித்தால்அவசியம் வருகிறேன் அய்யனாரே .... அது வரை பொறுத்தருளும் .

4 comments:

ilangovan thayumanavar said...

உங்க படத்தில் அய்யனாருக்கு ஒரு ரோல் கொடுத்தது மட்டுமல்லாமல், கலர் வேற மாத்தி, ரோல் மாடல் ஆக்கி, இவ்வளவும் செய்துட்டுப், போய் பாத்துட்டு வந்து பொங்கல் வைக்காம இருந்தா எப்படி?
சாமி கண்ணைக் குத்தும்..

சே.வேங்கடசுப்ரமணியன் said...

சார் குறுந்தகடு எங்கு கிடைக்கும்.தங்களை செல்பேசியிலும் தொடர்பு கொண்டு கேட்டேன் பிறகு தொடர்பு கொள்ளச் சொன்னீர்கள்.திருச்சியில் கிடைக்கும் இடம் சொல்லுங்களேன்.

bharathi krishnakumar said...

good day mr . venkata subramanian .
you could not get the vcd at tiruchi .
pls send a remainder message to my mobile no 94442 99656 after monday the 8th april .
i shall make it possible to reach you .

Unknown said...

எங்களுக்கு நேரமுமில்லை, சொந்தமாய் குதிரையுமில்லை. கொஞ்சம் நீரே வந்து போமய்யா..... அய்யனாரே!

Post a Comment