Wednesday, April 15, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி ஐந்து -பாரதி கிருஷ்ணகுமார்



அந்த மூவரும் தங்களுக்குள் உரையாடியபடியே எங்களை நோக்கித்தான் வந்தார்கள் .

மூவரில் , இடது ஓரத்தில் நா. முத்துக்குமார் .

அருகில் வந்ததும் மலர்ந்த முகத்தோடு அண்ணே என்றான் . இரண்டு கரங்களையும் கூப்பி வணங்கினான். சௌபா கூப்பிய அவன் கரங்களைத் தன் கையால் பற்றி " தம்பி கவிதை அட்டகாசம் டா ... அதைவிடக் கணையாழிக்குச் சந்தா கொடுத்தது இன்னும் அட்டகாசம் டா " என்று மலர்ந்து மகிழ்ந்து மனமாரப் பாராட்டினான் .

வெட்கப்பட்டானா அல்லது இதை எல்லாம் விரும்பவில்லையா என்பதைக் கண்டறிய இயலாத ஒரு உணர்ச்சியுடன் முத்துக்குமார் ஒரு புன்னகை செய்தான்.

"தம் அடிப்பியா?" என்று கேட்டான் சௌபா. மற்றதெல்லாம் தேவையே இல்லை இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி," இடைவெளியே இல்லாமல் அடிப்பேண்ணே" என்று பதில் தந்தான் முத்துக்குமார் .

"எங்க இதெல்லாம் பழக்கமில்லன்னு சொல்லி என்னைப் பயமுறுத்திருவையோன்னு நெனச்சேன் " என்றான் சௌபா . சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான் . 

"நீங்க பயப்படாதீங்கண்ணே ... சரக்கும் போடுவேன்" என்றான் முத்துக்குமார் .

எல்லோரும் சிரித்தோம் . களங்கமில்லாமல் கபடமில்லாமல் கலந்து சிரித்தோம் .

சந்தித்த சில நொடிகளுக்குள் ஒருவருக்கொருவர் அன்பினால் இணைந்தோம் . அதற்கு மதுவும் புகைப்பதும் காரணம் அல்ல . அது குறித்த பொய்மையும் போலித்தனமும் இல்லாததே .

நான் சொல்லத் துவங்கினேன் ," தம்பி அந்தக் கவிதைய நான் ஏற்கெனவே படிச்சுட்டேன் . வேலைக்காரி திருடினதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர் என்கிற இடம் தான் அந்தக் கவிதையில் எனக்கு உச்சமான இடம். நமது இழிவான எண்ணம் சகதியாக , சகதியோடு சகதியாக வெளிவரும் அந்த இடம் தான் எனக்குப் பிடித்தமான இடம். அப்பா கடைசி வரை தன் மனதுக்குள் தூர் வாரவேயில்லை என்கிற இறுதிவரிகள் எனக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை . ஏனெனில் பெரும்பாலான அப்பாக்கள் அப்படித்தான் என்பது நான் அறிந்தது தான் . உணர்ந்த உண்மைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்துவதில்லை தானே " என்றேன். 

என் கண்களைப் பார்த்து , என் கண்களுக்குள் பார்த்து நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தான் முத்துக்குமார் . " ஆமாண்ணே .. எனக்கும் ரொம்பப் பிடிச்ச வரி அதுதான் என்றான் .  அப்பா மனசுக்குள் தூர் வாரவே இல்லைன்னு  எழுதி இருந்தாலும் எனக்கு எங்க அப்பா அப்பிடி இல்ல " என்றான் . தனது கவிதையின் வழியே தன் தந்தையை யாரும் பார்த்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடு பேசினான் .

நான் ஆமோதித்து விட்டு," தம்பி நீ மேடையிலலேயே காச எண்ணிப் பாத்ததும் அடச் சே .. இந்தப் பையன் எதுக்குப் பரிசுப் பணத்த மேடையிலே எண்ணிப் பாக்குறான்னு உன்னப்பத்தி தப்பா நெனச்சேண்டா ... ஆனா பாதிப் பணத்த சந்தாவுக்குக் குடுத்து அசத்தீட்ட... சாரிடா தம்பி" என்று அவன் கரங்களைப் பற்றிக் கொண்டேன் .

"அட ... நீங்க என்னண்ணே சாரில்லாம் கேக்குறீங்க .. நீங்க நெனச்சது தப்பே இல்ல ... அது தான கரெக்ட் ... நீங்க அப்படி நெனச்சது தான் சரி . அப்பிடி எல்லாம் நெனச்சுட்டு உன்னைப் பத்தி தப்பா நெனைக்கலைன்னு சொல்லுறது தான் தப்பு ... உங்க பேச்சு கேக்கத்தாண்ணே நான் வந்தேன் " என்றான் .

எனக்கு வியப்பாகி விட்டது . இவன் எப்போது நம்ம பேச்சைக் கேட்டான் என்பதாக நான் அவனைப் பார்த்தேன் . " அண்ணே ... செங்கல்பட்டு , வேலூர் , சைதாபேட்டை ன்னு நீங்க எங்க பேசுனாலும் பத்து கிலோமீட்டர் , இருபது கிலோமீட்டர்ன்னாலும் சைக்கிள்லயே கூட்டம் கேக்க வந்துருவேண்ணே... நீங்க ரெண்டு மணி மூணு மணிக்கு மேல பேசுவீங்கண்ணே... கேட்டுட்டு வீட்டுக்குப் போக விடிஞ்சுரும்ண்ணே... பல நாட்கள நீங்க தான்ண்ணே விடிய வெச்சுருகீங்க.  உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்குண்ணே... எழுதுறது மாதிரியே பேசுறிங்கண்ணே" என்றான் . வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அண்ணே அண்ணே என்று அழைத்து மனமெங்கும் நிறைந்தான் ... 

இப்போதும் மனமெங்கும் நிறைந்திருக்கிறான் ...


முதல் சந்திப்பு முடிந்தது.

-பாரதி கிருஷ்ணகுமார் . 


Monday, April 13, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி நான்கு -பாரதி கிருஷ்ணகுமார்




ஒருபோதும் அந்தப் பணத்தை மேடையிலேயே அவன் எண்ணிப்பார்த்து இருக்கக் கூடாது .அவன் முதல் முறை எண்ணிப்பார்த்தபோதே எனக்கு சங்கடமாகி விட்டது .

தனது தந்தை கடைசிவரை மனதுக்குள் தூர் எடுக்கவேயில்லை என்று எழுதிய இவனும் மனதுக்குள் தூர் எடுக்காமல் தான் இருக்கிறானோ என்று தோன்றிய கணத்தில் , எண்ணி முடித்த பணத்தை மீண்டும் எண்ணத்தொடங்கினான் முத்துக்குமார் .

எனக்கு இன்னும் வெறுப்பாகி விட்டது. எழுதுகிறவர்கள் எல்லோரும் தங்கள் எழுத்தைப் போலவே உயர்வாக இருப்பதில்லை என்பதை நான் எனது அனுபவத்தில் கண்டு உணர்ந்து கசந்து போயிருந்த நாட்கள் அவை . அடச் சே ... இவனும் அப்படியான ஆள் தான் போலிருக்கிறது என்று மனதுக்குள் குமைந்துகொண்டிருந்த கணத்தில், இரண்டாவது முறை எண்ணிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு, எண்ணிய பணத்தில் இருந்து கொஞ்சப் பணத்தை எடுத்து... கொடுத்தவர் கையில்கொடுத்து அவரிடம் ஏதோ சொன்னான். அவர் புன்னகைத்தார் . என்ன பேசிக்கொண்டார்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. மீதம் இருந்த பணத்தைப் பைக்குள் வைத்தபடி முத்துக்குமார் மேடையில் இருந்து இறங்கிப் போனான் . கடந்துபோகும் போது என் முகம் பார்த்து மெல்லிய புன்னகையைத் தட்டிவிட்டுப் போனான் .நானும் ஒரு வறண்ட புன்னகையைத் திருப்பி அனுப்பினேன்.

சில நொடிகளில் யாரோ மேடையில் உரத்தகுரலில் அறிவித்தார்கள். "தனக்குப் பரிசாக வந்த பணத்தில் இருந்து கணையாழிக்கு ஓராண்டுச் சந்தாவாக ருபாய் ஐநூறைத் திரு . நா . முத்துக்குமார் தந்திருக்கிறார் ... என்று ...

அரங்கம் மீண்டும் அதிர்ந்து கரவொலி தந்து முத்துக்குமாரைப் பாராட்டியது . நானும் மகிழ்ந்து என்னை மறந்து தலை சாய்த்து கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்தேன். தசரா அறக்கட்டளை வாங்கிய கணையாழிக்கு முதல் சந்தா தந்த பெருமை நா. முத்துக்குமாருக்குத் தான் சேரும் . 

1995 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த நிகழ்ச்சி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. கஸ்தூரிரெங்கனுக்குப் பிறகு தசரா அறக்கட்டளை நடத்தத் தொடங்கிய கணையாழிக்கு திரு மா இராஜேந்திரன் ஆசிரியர் ஆனார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கணையாழி இதழில் இதைப்பற்றி எழுதியும் இருந்தார். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவரே ஆசிரியராக இருந்து சிறப்பித்தும் வருகிறார் . (இடையில் சில ஆண்டுகள் அவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகப் பொறுப்பு வகித்தபோது மட்டும் வேறு யாரிடமோ அந்தப் பொறுப்பு தரப்பட்டது.)

நா . முத்துக்குமாரின் இந்தச் செயல் அரங்கில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம். எனக்குக் குற்றஉணர்வு வந்து விட்டது. எப்போதாவது சந்தித்தால் இது பற்றி அவனிடம் பேசி அவனிடத்தில் மன்னிப்புக்கோர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கணையாழியின் வளர்ச்சியில் அக்கறை இருப்பதாகப் பேசத் தெரிந்த நமக்கு , தரமானது என்றால் கூவிக் கூவி விற்றுத் தருவதாக வீரம் பேசிய நமக்கு மேடைக்கு வருவதற்கு முன்னமே ஒரு சந்தா கொடுக்கத் தெரியவில்லையே என்கிற கூச்சம் வந்து விட்டது .அவன் பணத்தை எண்ணிப் பார்ப்பது நாகரீகம் அற்றது என்று எண்ணத் தெரிந்த நமக்கு , அவன் எதற்காக எண்ணிப் பார்க்கிறான் என்று , எண்ணிப் பார்க்கத் தெரியவில்லையே என்று வெட்கமாகி விட்டது.

நாம் காணுகிற காட்சிக்குப் பின்னே , கண்டதும் அந்தக் கணமே  நமது அறிவு நமக்கு ஒரு அர்த்தத்தை தந்து விடுகிறது . எத்தனை கட்டுப்படுத்தினாலும் இந்த உடனடி முடிவுகளுக்குப் போவதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படியான போதனா முறையும் வாழ்க்கை முறையும் தான் நம்மை உருவாக்கி இருக்கிறது. ஆனால் நமது சிந்தனை முறையும் , கற்பிதங்களும் மிக மிகப் பிழையானவை என்று வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதிலும் நம்மினும் இளைய மனிதர்களும் , எளிய மனிதர்களும் தான் நமக்குக் கற்றுக்கொடுக்கிற ஆசான்கள். அப்படி நான் நிறையக் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் நான் சிறிதேனும் தூய்மை பெறுகிறேன். 

என்னைப்பற்றி நீ என்ன நினைத்தாய் ... நான் என்ன செய்தேன் என்று பார் என்று என்னிடம் நா. முத்துக்குமார் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தான் . மேடை விட்டு இறங்கும்போது அவன் உதிர்த்த புன்னகைக்கு அதுவே பொருள் என்று நானே அர்த்தம் கொண்டேன் . இப்போது அந்தப் புன்னகை மேலும் பொலிவு கொண்டதாக இருந்தது .

அப்புறம் விழாமேடையில் நடந்த, நடந்து கொண்டிருந்தவைகளுக்குள் கவனம் திரும்பிக் கொண்டது . கூட்டத்தில் அவனைத் தேடினேன் . எங்கிருந்து எழுந்து வந்தானோ அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். பிறகு நான் அவனை மறந்து, நிகழ்ச்சிக்குள் போயிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து நானும் சௌபாவும் அரங்கிற்கு வெளியே வரத் துவங்கினோம் . சௌபா எனது பேச்சைப் பாராட்டிப் பாராட்டி அகம் மிக மகிழ்ந்து கொண்டே வந்தான் . வழக்கமான இலக்கியக் கூட்டங்களில் நடப்பது போலவே சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள் . நானும் சௌபாவும் எந்தக் குழுவிலும் சிக்காமல் வாசலை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம் . முகம் தெரியாத பலர் கைகளைப்பிடித்து அவரவர்க்கு விருப்பமான சொற்களால் பாராட்டிக் கொண்டே இருந்தார்கள். நானும் நன்றி சொல்லிக்கொண்டே ஆனால் நகர்ந்து கொண்டே இருந்தேன் .

விடுதி அறைக்குப் போவதைவிடவும் மூன்று மணிநேரம் புகை பிடிக்காமல் இருந்தோம் என்பதுதான் எனக்கும் சௌபாவுக்கும் மிகப்பெரிய தியாகமாக இருந்தது . எங்கள் விரைவுக்கும் அதைவிட வேறு காரணங்கள் இல்லை . இந்த விசயத்தில் நானாவது கொஞ்சம் கூடுதல் நேரம் தியாகம் செய்யும் பக்குவம் பெற்று இருந்தேன் . சௌபா அதற்கு மேலும் தியாகம் செய்ய இயலாத நிலைமைக்கு ஆளாகி இருந்தான்.

கொஞ்சம் யார் கண்ணிலும் படாத தூரத்தில் , பட்டாலும் பரவாயில்லை என்கிற தூரத்தில் போய்  நின்றுகொண்டோம் . படபடப்பாகப் பையில் இருந்து வில்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டோம் . 


மற்ற நேரங்களில் நம்மைச்சுற்றி எப்போதும் எல்லோரும் இருக்கவேண்டும் என்று கருதுகிற மனது இந்தமாதிரித் தருணங்களில் நமக்கான தனிமையை எல்லோரும் தரவேண்டும் என்று ஆசைப்படுவது விநோதமானது .

எங்கள் தனிமையைக் குலைக்கவென்றே ஒன்றிரண்டு பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். முற்றிலும் புதியவர்கள் வயதில் இளையவர்கள் என்றால் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டியதில்லை . கொஞ்சம் யாராவது பெரிய ஆட்கள் என்றால் என்னசெய்வது என்ற திகைப்பு எனக்கும் சௌபாவுக்கும். 

மூன்று பேர் எங்களைநோக்கி வந்தார்கள்.

அந்த மூவரும் தங்களுக்குள் உரையாடியபடியே எங்களை நோக்கித்தான் வந்தார்கள் .

மூவரில் , இடது ஓரத்தில் நா. முத்துக்குமார் ...



மற்றது ... மேலும் 





Saturday, April 11, 2020

ஒரு கனவு கரையேறுகிறது - பாரதி கிருஷ்ணகுமார்

ஏப்ரல் எட்டாம் தேதி பிற்பகல் தனிமை குறித்து ஒரு சிறிய பதிவை முகநூலில் எனது பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். நிறைய எதிர் வினைகள். யாருடைய கருத்துடனும் நான் முரண்படவில்லை . அவரவர்கள் தங்கள் தங்கள் அனுபவம் புரிதல் சார்ந்து எழுதி இருந்தார்கள். எனவே அதில் முரண்பட ஏதுமில்லை . 

திரு.குமாரதாசன் கந்தையா எழுதிய ஒரு சிறு பதிவு நீண்ட உரையாடல் ஆகி, அந்த உரையாடலே,தனிப் பதிவாக வந்தது. அதனைத் தனிப் பதிவாகப் போடுமாறு என் நண்பர் சென்னைத் தமிழன் தந்த யோசனையால் அது நிகழ்ந்தது. அந்த உரையாடலில் ஜெயகாந்தன் இடம் பெற்றதும், அன்று தான் ஜெயகாந்தன் நினைவு நாள் என்பதும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் நிகழ்ந்தவை.இயல்பாக நடக்கும் எதற்கும் ஒரு அழகு,வசீகரம் தானாகவே கூடிவிடுகிறது.


அப்படித் திட்டமிடாமல் நடந்த இன்னொரு அழகு பற்றி இதனை எழுதுகிறேன். என் பதிவிற்கு எதிர் வினையாய் தனிமை பற்றி தான் எழுதிய ஒரு கவிதையைத் தம்பி திருக்குமரன் பதிவிட்டு இருந்தார்.
பொருளும் ஓசையும் பிணைந்த மரபுக்கவிதை.கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள் சிலர் . பொய் ஒருபோதும் அழகானதில்லை. உண்மை தான் அழகு. அலங்காரம் ஏதும் இன்றியே மிளிரும் அழகு உண்மை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தமும் சாரமும் இணைந்து வாசித்த கவிதை. ஓசையும் பொருளும் கலந்து கலந்து பிரிக்க இயலாது இயங்குவதே கவிதை . இரட்டை நாதஸ்வர இசை போலக் கலந்து வந்த கவிதை. சாரையும் நாகமுமாய்ப் பிணைந்து வந்த கவிதை. வாசிக்கும்போது எல்லாப் புலன்களையும் இன்புறச் செய்த கவிதை . செவி நுகர் கனியென வாய்த்த கவிதை. அன்பெனும் தனிமை என்பது கவிதைக்கான தலைப்பு.

இவையெல்லாம் அந்தக் கவிதை எனக்குத்தந்த மெய்ப்பாடுகள் . மேனி சிலிர்த்து மெய் விதிர்த்து நான் பெற்ற அனுபவம் இது. ஒரு சொல் கூட மிகையாகாது. அந்தக் கவிதையினை நீங்கள் வாசிக்கிறபோது அது உங்களுக்கு எந்தப் பரவசத்தையும் தராது போகலாம் .எதற்கு எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனது ரசனையை நீங்கள் நிந்திக்கலாம். அல்லது என்னிலும் பெரும் வாசிப்பு இன்பத்தை இந்தக் கவிதை உங்களுக்குத் தரலாம். 

மழை எல்லோருக்கும் ஒன்று தான் . ஆனால் நிலமும் கலமும் எல்லோருக்கும் வேறு வேறு தானே . 

என் உணர்வுகளுக்கு கவிதை மட்டுமல்லாது கவிஞனும் காரணமாக இருக்கலாம்.இந்தக் கவிதையை எழுதிய திருக்குமரன் திருச்செல்வத்தை நான் சந்தித்தது இல்லை. நான்கைந்து முறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். ஈழத் தமிழன். விடுதலைப்போரில் பங்குபெற்ற போராளி.முன்னாள் போராளி என்று சொல்ல என் எழுத்து இடம் கொடுக்கவில்லை.கவிஞன் . எழுத்தாளன் . ஊடகத்துறையில் பணியாற்றியவன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவன் . சூழலியலில் அக்கறை கொண்டவன்.
ஐந்து நூல்கள் எழுதியவன் .

  • திருக்குமரன் கவிதைகள்(கரிகணன்      பதிப்பகம் 2004)
  • விழுங்கப்பட்ட விதைகள்(முதல் பதிப்பு 2011:உயிரெழுத்துப் பதிப்பகம் , இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்) 


  • தனித்திருத்தல்(உயிரெழுத்துப் பதிப்பகம் 2014)
  • விடைபெறும் வேளை(யாவரும் பதிப்பகம் 2019)
  • சேதுக்கால்வாய்த் திட்டம்- இராணுவ , அரசியல் , பொருளாதார சூழலியல் நோக்கு ஆய்வு நூல் (பிரம்மா பதிப்பகம் 2006).


இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு ( அதை இறுதி யுத்தம் என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை. வென்றவர்களுக்கு அது இறுதி யுத்தமாக இருக்கலாம் . வென்றவர்களுக்குச் சில உரிமைகள் உண்டு தானே ) அங்கிருந்து புலம்பெயர்ந்து அயல் தேசம் ஒன்றில் அகதியாக வாழ்கிறவன். 

இடைப்பட்ட ஆண்டுகளில் இலங்கை இந்தியா லண்டன் அயர்லாந்து எனப் பல நாடுகளில் தடுப்புக்காவலில் சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தனிமையில் இருந்தவன் .

அதிலும் இலங்கை மற்றும்  இந்தியாவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் , குற்றச்சாட்டே இன்றி , அந்த நாட்டின் சட்டங்களுக்கு முரணாக , சட்டவிரோதமாகத் தடுப்புக்காவலில் ரகசியச் சிறைகளில் இருந்தவன்.தன் பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கும் ஒரே மகன் . ஆனால் .... 

ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் எழுதியதுபோலக் குரங்கு கிழித்த தலையணை போலக் குடும்பம் சிதறிக் கிடக்கிறது . அவனோ பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தனிமையில் . அவன் எழுதி இருக்கிறான் அன்பெனும் தனிமை என்னும் கவிதை .

இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு உயிரெழுத்துப் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்த அவனது விழுங்கப்பட்ட விதைகள் என்னும் நூலை காலம் சென்ற எனது நண்பன் சௌபா எனக்கு வாங்கித் தந்தான் (அவனது இயற்பெயர் சௌந்திரபாண்டியன். ஜூனியர் விகடன் இதழுக்கு மாணவ நிருபராகத் தேர்வு செய்யப்பட்டதும் என்ன புனைப்பெயரில் எழுதுவது என்று என்னிடம் ஆலோசனை கேட்டான் .நான் உன்னை எப்போதும் அழைக்கும் சௌபா என்கிற பெயரிலேயே எழுது என்றேன்) .மரபுக் கவிதை எழுதும் ஆற்றல் சௌபாவுக்கு உண்டு . சொன்ன மாத்திரத்தில்,இருந்த இடத்தில் எழுதுவான். பலமான பரிந்துரையோடு அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தான் .யாரென்று தெரியாமலே அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். சில மாதங்கள் கழித்து நானும் சௌபாவும் சந்தித்தபோது அந்தப் புத்தகம் பற்றி பேச்சு வந்தது. நான் அதன் ஓசை நயம் , பொருட் சிறப்பு இவைகளைப் பற்றி சொன்னதும் , தம்பி கிட்ட பேசுறீங்களா என்றான் சௌபா. பேசுகிறேன் என்றேன். அரை மணிநேர முயற்சிக்குப் பிறகு திருக்குமரனுடன் முதன்முறையாக அலைபேசியில் பேசினேன். சிறிது நேரம் தான் பேசினோம் . எல்லாம் கவிதை மொழி இலக்கியம் குறித்த உரையாடல் .

பின்னும் சில மாதங்களுக்குப் பிறகு சௌபா அலைபேசியில் அழைத்தான். திருக்குமரனுக்கு ஒரு விருப்பம் அதை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். என்னது என்றேன் . அவனது மரபுக் கவிதைகளை நான் எனது குரலில் வாசித்துக் கேட்கவேண்டும் என்று திருக்குமரன் விரும்புவதாகச் சொன்னான். என் குரலிலா என்றேன். ஆம் .. உங்கள் குரலில் தான் என்றான் சௌபா . என் குரல் பழைய தகர டப்பாவைத் தார் ரோட்டில் போட்டு இழுப்பது மாதிரி இருக்குமே என்றேன் . அதெல்லாம் இல்லை ... நீங்கள் வாசித்தே ஆகவேண்டும் என்றான். எனக்கு எந்த மனத்தடையும் இல்லை . என் குரல் தான் எனக்குத் தடை என்றேன் . உங்கள் குரல் தான் அவனுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்றான். வெறும் ஒலிப்பதிவாக மட்டும் அனுப்புவது இருவருக்கும்  சம்மதம் இல்லை. எனவே நான் வாசிக்க அதைக் காட்சிப்படுத்தித் தம்பி திருக்குமரனுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தோம் . முடிவு அமலாகவில்லை . பலமுறை திட்டமிட்டும் அது நடைபெறவே இல்லை . ஆண்டுகள் பல கடந்து போயின. திருக்குமரன் தொடர்பில் இல்லாது போனான். சௌபா மரணித்துப் போனான் . எனக்கு மட்டும் அவ்வப்போது அல்லது எப்போதாவது  திருக்குமரனுக்கு அவனது ஒரு கவிதையையாவது வாசித்துக் கொடுத்து இருக்கலாமே என்று ஒரு நினைவு வந்து உறுத்தும் .அந்தக் கணம் தான் அந்த உறுத்தல் நிற்கும் , மீண்டும் அன்றாட வாழ்க்கை என்னும் சகதிக்கு வாழ்க்கை திரும்பிக் கொண்டு விடும் .

இப்போது அந்தக் கனவு கரை ஏறுகிறது .ஆம்.


என் முக நூலில் திருக்குமரன் பதிவிட்ட அன்பெனும் தனிமை என்னும் கவிதையை அன்புத் தம்பித் திருக்குமரனுக்காக இப்போது வாசிக்கிறேன் .கரகரத்த குரலில் தான் வாசிக்கிறேன் ...

திருக்குமரனுக்காக வாசிக்கிறேன் .
சௌபாவுக்குச் சமர்ப்பிக்கிறேன் ...

நான் இந்தியாவில் 
திருக்குமரன் அயல் நாடொன்றில்  
சௌபா விண்ணகத்தில்...

மூவரும் தனிமையில்...
அன்பெனும் தனிமை.


 திருச்செல்வம் திருக்குமரன்





 சௌபா 




இந்த இணைப்பில் கவிதையைக் கேட்கலாம் :
https://youtu.be/HyPtUoMQTI8


-பாரதி கிருஷ்ணகுமார் .


Thursday, April 9, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி மூன்று-பாரதி கிருஷ்ணகுமார்



அப்போதும் அந்த அரங்கில் முத்துக்குமார் இருந்தது எனக்குத் தெரியாது.

சுஜாதாவைப் பேச அழைத்தார்கள். 

சுஜாதா எப்போதும் மென்மையான குரலில் பேசுகிற பழக்கம் உடையவர். தனக்குப் பேசவராது என்று நம்புகிற சிலரில் அவரும் ஒருவர். ஆனால் நன்றாகப் பேசுகிறவர் தான் என்பது எனது எண்ணம்.நன்கு சிந்திக்கிற எல்லோருமே நன்கு பேசி விடவும் முடியும். இது அசலான உண்மை.

உடல் மொழியோடு , ஏற்ற இறக்கங்களோடு பேசுகிறவர்கள் தான் சிறந்த பேச்சாளர்கள் என்றொரு மூட நம்பிக்கைத் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவுகிறது என்பதை நானறிவேன்.சொல்லும் திறன் மட்டுமே சிறந்த பேச்சாகி விடாது . உடல் மொழியில் எந்த மாற்றமும் இல்லாது, அளவான பாவம் சேர்த்து அற்புதமாகப் பேசும் பலரை நானறிவேன் . 

சுஜாதா பேச ஆரம்பித்தார். தனது புதுடில்லி  வாழ்வும் அதனால் தனக்குக் கணையாழியோடு நிகழ்ந்த அறிமுகம் உறவு என்று விரிவாகப் பேச ஆரம்பித்தார் . தனக்கு கணையாழி தந்த சுதந்திரம் தான் தனது தொடக்ககால எழுத்துக்குப் பெரும் பலம் சேர்த்தது என்றார். ஸ்ரீரெங்கம் . எஸ் . ஆர் என்ற பெயரில் கணையாழியில் தான் எழுதிவந்த கடைசிப்பக்கம் குறித்துப் பேசினார். எதைப் பற்றி வேண்டும் என்றாலும் தான் எழுதலாம் என்பது தனக்கு , தனது ஆரம்பகால எழுத்துகளுக்குப் பேருதவி செய்ததைப் பற்றி பெருமிதமும் நன்றியும் ததும்பக் குறிப்பிட்டார் .

இந்தத் தருணத்தில் உங்களோடு நான் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . பொதுவாக ஒரு பத்திரிகையை வாங்குகிறவர்கள் அதை முதல் பக்கத்தில் இருந்துதான் படித்துக் கொண்டு போவார்கள். அது தான் பொது இயல்பு . நானெல்லாம் அப்படித்தான். நானறிந்த பலரும் அப்படித்தான். மிகச் சில விதிவிலக்குகள் உண்டு. முதல் பக்கத்தைப் பார்த்துவிட்டு உடனே தாங்கள் தொடர்ந்து படிக்கும் தொடர்/ பகுதி இருக்கும் பக்கத்திற்கு ஓடுகிற வாசகர்கள் உண்டு . ஆனால் கணையாழி வந்தால் முதலில் படிப்பது கடைசிப்பக்கம் தான் என்ற போதையை தன் எழுத்தால் உருவாக்கி வைத்திருந்தார் சுஜாதா. மிகப் பரபரப்பாக இலக்கிய வாசகர்கள் பேசுகிற பகுதியாக கடைசிப்பக்கம் இருந்தது. சுஜாதாவை நேசிக்காதவர்கள் கூட ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை அது .

கடைசிப்பக்கம் பற்றி பேசிவிட்டு கவிதைகளின் பக்கம் வந்தார் சுஜாதா . புதுக்கவிதைகளுக்குக் கணையாழி உருவாக்கித் தந்த பரந்த மேடை பற்றி விரிவாகப் பேசினார். தமிழில் எழுதிக்கொண்டு இருக்கும் சில மிக முக்கியமான படைப்பாளிகளது படைப்புகள் கனையாழியில் இடம் பெற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மிக முக்கியமாக, பல நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளுக்கு கணையாழி இடம் தந்து சிறப்பித்ததைப் பெரும் பங்களிப்பு என்று சொன்னார் . உதாரணமாக அந்த மாதம்  கணையாழியில் வந்த ஒரு கவிஞரின் கவிதை தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் , தன் மனதை அசைத்த கவிதை என்றும் குறிப்பிட்டார் . கையில் இருந்த கணையாழியைப் புரட்டி அந்தக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் . அதுவரை மெல்லிய குரலில் பேசிக்கொண்டு இருந்த சுஜாதாவின் குரல் உயர்ந்தது. விடை தெரிந்த கேள்விக்குச் சொல்லுகிற பதிலை உரக்கச் சொல்லுவது போல, தன் குழந்தையின் பெருமையை மற்றவர்களுக்குச் சொல்லுகிறபோது பெருமிதம் கொள்ளுகிற ஒரு தாயின் குரல் உயர்வது போல .. சுஜாதாவின் குரல் மேலே ஏறி வந்தது. அந்த அரங்கில் இருந்த எல்லோருக்கும் கேட்கிற அளவுக்குக் குரல் விரிந்து வந்தது. அவருக்கு ஒன்றும் மெல்லிய குரல் இல்லை என்று அவரே உணர்ந்த தருணம் அது ... அதன் தலைப்பைத் துல்லியமாக வாசித்தார் .

இது தான் அந்தக் கவிதை ...

தூர் 

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

அந்தக் கவிதையை வாசித்துவிட்டுச் சொன்னார். கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன். இதை எழுதியவர் யாரென்று எனக்குத் தெரியாது . நா . முத்துக்குமார் என்பவர் எழுதி இருக்கிறார் என்றார் .

கவிதையை சுஜாதா வாசித்து முடித்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பிக் கவிதையைக் கொண்டாடியது .அதே கணத்தில் அரங்கின் மையப் பகுதியில் ஏதோ சலசலப்பு . வலது கையை உயர்த்தியபடி மெலிந்த சற்றே உயரமான ஒரு இளைஞன் கூட்டத்திற்குள் எழுந்து நின்றான். எவர் என்று தெரியவில்லை . கூட்டத்தில் இருந்து ஒரு குரல் " அவர் தான் முத்துக்குமார் " என்றது . மொத்த அரங்கமும் அவனைத் தான் பார்த்தது . கவிதைக்குத் தந்ததை விடவும் கூடுதல் கரவொலியும் அங்கீகாரமும் தந்து கவிஞனைக் கொண்டாடியது கூட்டம். 

அந்தக் கவிதையை நன் ஏற்கெனவே வாசித்து அதன் சிறப்பை உணர்ந்து இருந்தேன் . எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . கவிதையும் கவிஞனும் ஒருசேரத் தரிசனம் காட்டுவது எப்போதும் எல்லோருக்கும் வாய்க்கும் வரமல்ல .

சுஜாதா அவனை மேடைக்கு அழைத்தார் .நான் அமர்ந்து இருந்த பக்கமாக மேடை ஏறி வந்தான் நா . முத்துக்குமார் . கொஞ்சம் சுருண்ட ஆனால் படிந்த தலைமுடி . மெலிந்த தேகம் . ஒட்டிய கன்னங்கள் . எதையும் கூர்ந்து பார்க்காமல் அலைந்து திரியும் கண்கள் ஒரு பத்து நாட்கள் சவரம் செய்யாத இளந்தாடி .

என் இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம் என் கையை நீட்டினேன். இருவரும் கை குலுக்கிக் கொண்டோம் . அவனது கரம் இளம் சூட்டோடு இருந்தது . பதட்டமில்லாமல் இருந்தான் . அது தான் நான் அவனை முதலில் பார்த்தது . 


அரங்கம் குதூகலமாய் இருந்தது . கூட்டத்தில் இருந்து ஒருவர் 

அந்தக் கவிதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகச் சொன்னார் . 

பணம் கொடுத்தவரே மேடைக்கு வந்தாரா அல்லது பணம் மட்டும் 

மேடைக்கு வந்ததா என்று தெரியவில்லை .



நான் அவனை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன் . யாரோ 

அவனுக்கு அந்த ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்கள் . எல்லாமே 

நூறு ரூபாய் நோட்டுகள் என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது . 

சிறிய புன்னகையோடு அந்தப் பணத்தை வாங்கிய முத்துக்குமார் 

அங்கேயே மேடையிலேயே அந்தப் பணத்தை எண்ண 

ஆரம்பித்தான். எனக்கு சங்கடமாகி விட்டது .இந்தப் பையன் 

இங்கேயே இந்தப் பணத்தை எண்ணுவதைத் தவிர்த்து இருக்கலாமே 

என்று எண்ணிக் கொண்டேன் .மீண்டும் எண்ண ஆரம்பித்தான் . 

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது ....


ஆனால்...



மற்றது ... பிறகு ...

-பாரதி கிருஷ்ணகுமார்




Monday, April 6, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி இரண்டு - பாரதி கிருஷ்ணகுமார்


அந்தக் கூட்டத்திற்குள் அவனும் இருந்தது எனக்குத் தெரியாது.

கணையாழியை விற்பது என்று முடிவு செய்திருந்த போதும் ரொம்பவே கலங்கிப்போய் பேசினார் கஸ்தூரிரெங்கன். கண்களுக்குள் கண்ணீர் ததும்பி , கரை உடைக்காமல் கண்களுக்கு உள்ளேயே  நின்றதை உணர முடிந்தது.அது அரங்கம் முழுவதையும் இறுக்கமாக்கி விட்டது.


திருவாளர்கள் தமன் பிரகாஷ், மா . ராஜேந்திரன், கமல்ஹாசன், சுவாமிநாதன் , சுஜாதா நான் என்று மேடை நிரம்பக் கூட்டம். நான் தயாரித்து வைத்து இருந்ததை எல்லாம் யாரோ பேசி முடித்து இருந்தார்கள். நான் மனதுக்குள் வேறு புள்ளிகள் வைத்து வேறு கோலம் போட்டுக்கொண்டே இருந்தேன். 


முதலில் கஸ்தூரி ரெங்கனின் துயரம் அரங்கம் முழுவதும் பரவி அடர்ந்து நிற்பதை விலக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டேன் .

அதே போல் சிறு பத்திரிகைகள் சந்திக்கும் துயரங்கள் நெருக்கடிகள் சவால்கள் பற்றி எல்லோரும் ஏதாவது ஒரு வார்த்தை துயரமாகச் சொல்லி இருந்தார்கள் .ஒவ்வொருவரும் பேசப்பேச சிறு பத்திரிகைகளே துயரம் என்கிற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது . 

பிரச்சினைகள் துன்பங்கள் சவால்கள் நெருக்கடிகள் பற்றிப் பேசும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் . தொடர்ந்து ஒரே மேடையில் நான்கைந்து பேர் அதனை வேறுவேறு சொற்களில் வேறு வேறு தொனியில் வேறுவேறு உடல் மொழியில் பேசியதும் அது ஒப்பாரியாக உருப்பெற்று விடுகிறது . அது தீர்வே இல்லாத துயரமாகப் பிறப்பெடுக்கிறது . மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அன்றைக்கு அந்த உணர்வு தோன்றி விட்டது.பழைய சாக்கை நனைத்துத் தலையில் போட்டது மாதிரி ஆகி இருந்தது அரங்கம்.



என்னைப் பேச அழைத்தார்கள். முதலில் எல்லோருக்கும் ஒரே வரியில் வணக்கம் சொன்னேன் . அதுவே அரங்கத்தில் பலருக்கு ஆறுதலும் நிம்மதியும் தந்திருக்க வேண்டும். தயாரித்துக்கொண்டு போன குறிப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்தேன் ." இத்தனை காலம் நடத்திய கணையாழி பத்திரிகையை இன்னும் ஒருவருக்குக் கை மாற்றிக் கொடுத்தமைக்காக கஸ்தூரி ரெங்கன் வருந்தக்கூடாது . இதில் வருந்துவதற்கு ஒன்றுமேயில்லை. கை மாறினால் தான் கணையாழிக்குப் பெருமை அழகு மங்களம் என்றேன். அரங்கம் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தது. எனக்கு அது உவப்பானது தான். அதனினும் நன்கு, மனமாரப் புன்னகைத்துத் தலையாட்டிக் கஸ்தூரி ரெங்கன் என்னைப் பார்த்துத் தன் கண்களை மூடி ஆமோதித்த கணம் இருக்கிறது பாருங்கள் ... அது தான் அந்த நாளின் மகிழ்ச்சி.


வண்டி புறப்பட வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அது முன்றிலில் ஓடும் வண்டியைப் போலன்று .. மூன்றுலகும் சூழ்ந்தே நன்கு திரியும் விமானத்தைப் போலாகி விடும் . மேடைப்பேச்சு என்பது நினைத்ததைப் பேசுவதற்குப் போதுமான சொற்கள் சிந்தையில் இருப்பதும் அதனை எடுத்துப்பரிமாறுவதும் தான். அதற்கு மேலும் சில நகாசு வேலைகள் தெரிந்திருப்பது மேடைப்பேச்சை மேலும் சுவை உள்ளதாக்கி விடும். 


சிறு பத்திரிகைகள் சந்திக்கும் சவால்கள் பற்றி எல்லோரும் சொன்னதையே நாமும் எதற்குச் சொல்ல வேண்டும் இப்படித் துவங்கினேன் " நாம் எந்தச் சமூகத்தில் எந்தச் சூழலில் இலக்கியம் பேசுகிறோம் எழுதுகிறோம் என்கிற கவனம் இன்றியா இருக்கிறோம்.நீங்கள் குறிப்பிட்ட சவால்கள் துயரங்கள் நமக்கு இருந்தே தீரும் . இருக்காது என்று கருதுவதும் இருக்கலாகாது என்று விரும்புவதும் நமது ஆசைகள் மட்டுமே ... கள் உட்கார்ந்த இடத்திலயே விற்றுப் போகிறது. மோரைத் தெருத்தெருவாக அலைந்து தான் விற்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகச் சூழலில் தான் சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டி இருக்கிறது . எனவே நமது பொருள் தகுதி உடையதாக இருந்தால் அதைக் கூவி விற்கும் கம்பீரமும் நமக்கு வேண்டும் . கணையாழி மோராக இருந்தால் நான் கூவி விற்றுத் தருவேன். எழுதுவது மட்டும் நமது பணியல்ல எடுத்துரைப்பதும் நமது பணியேயாகும் என்றேன் .


அரங்கம் முழுவதும் மகிழ்ந்து செருக்குடன் கரவொலி எழுப்பி அங்கீகாரம் செய்தது . அரங்கில் எல்லோரும் ஆமோதித்தது எனக்கும் நிறைவைத் தந்தது .பலத்த கரவொலியோடு பேசி முடித்து என் இருக்கைக்குத் திரும்பினேன். 


எனக்குப் பக்கத்து இருக்கையில் சுஜாதா. என்னைப் போலவே உயரம் . ஆனால் தோள்கள் இரண்டும் காதுவரைக்கும் ஏறி இருந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார் .தனது இரண்டு தோள்களுக்கு இடையில் தன் தலையைப் பிடித்து வைத்துக்கொண்டு இருந்தார் .  எனக்கு அவரது எழுத்து ரொம்பப்பிடிக்கும். வந்து அமர்ந்ததும் மெல்லிய குரலில் நல்லாப் பேசுனீங்க என்றார் . நிச்சயம் கேலி இல்லை . தன் கைகளை நீட்டினார் . முகத்தில் ஒரு இரண்டு சென்டிமீட்டர் அளவான புன்னகையுடன் கைகளை நீட்டினார் . மெலிந்த நீண்ட குளிர்ந்த விரல்கள் . தலை சாய்த்து அவரது பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டேன் . விரல்களைப் பார்த்தேன் . குண்டூசி விழுந்தால் கூட எடுத்து விடும் வெளுத்த நீண்ட கூர்மையான விரல்கள் . சுத்தமாக நகம் வெட்டித் தூய்மையாக இருந்தன விரல்கள் .



சுஜாதாவைப் பேச அழைத்தார்கள் .


அப்போதும் அந்த அரங்கில் முத்துக்குமார் இருப்பது எனக்குத் தெரியாது ....



மற்றது ... பிறகு   

Sunday, April 5, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது - பகுதி ஒன்று - பாரதி கிருஷ்ணகுமார்


அப்போது நான் பாண்டியன் கிராமவங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.கணையாழி இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்த இயலாமல் அதை யாருக்காவது விற்று விடுவது என்று திரு கஸ்தூரி ரெங்கன் முடிவு செய்து இருந்தார்.அதனை தசரா அறக்கட்டளை வாங்க வேண்டும் என்று முடிவடுத்தது . அந்த முடிவில் சம்பந்தப்பட்ட பலரில் நானும் ஒரு முக்கிய பங்கு வகித்தேன்.எனவே கணையாழி இதழைத் தசரா அறக்கட்டளை வாங்கும் நிகழ்வை ஒரு விழாவாக நடத்துவது என்று முடிவு செய்தோம்.

அந்த விழாவில் நானும் பங்குபெற்று உரையாற்ற வேண்டும் என நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். எனக்கு இருந்த வேலைப்பளு காரணமாக நான் முதலில் சம்மதிக்கவில்லை.தொழிற்சங்கமும் அதன் பணிகளும் எனது நேரம் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த நாட்கள் அவை .சங்க அலுவலகத்தில் உடன் பணியாற்ற , சொன்னதைத் துல்லியமாகச் செய்ய பல தோழர்கள் இருந்தார்கள்.
என்றபோதும் முடிவுகளை எடுக்க இரண்டாம் நிலையில் இருந்த தலைவர்கள் எவரும் முன்வரவே இல்லை . இரண்டு மூன்று நாட்கள் எங்காவது பயணம் போய்விட்டு வந்தால் சங்கத்திற்கு வந்த எல்லாக் கடிதங்களும் பிரிக்கப்படாமல் அப்படியே கிடக்கும் . அது போலக் கடிதங்கள் கிடக்கும் நாட்கள் எப்போது வெளியூர் போய்  வந்தாலும் காணக் கிடைக்கும் . எனவே என் இயலாமையைச் சொல்லிகொண்டே இருந்தேன். நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.நேரம் தான் பிரச்சனை என்றால் விமானத்தில் வந்து போகலாம் என்றார்கள் . நான் அதற்கும் சம்மதிக்கவில்லை. ஒரு நண்பர் சொன்னார் . "ஒரு காரியத்தில் எங்களை ஈடுபடுத்திவிட்ட பிறகு இறுதிவரை எங்களோடு இருப்பது தான் நல்லது bk " என்றார்.சம்மதித்தேன்.

நிகழ்ச்சி நடந்த அன்றைக்குக் காலையில் இரயிலில் சென்னைபோய்ச் சேர்ந்தேன் . மாலையில் நிகழ்ச்சி. மனதிற்குள் என்னபேச வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக்கொண்டே இருந்தேன் .இப்போதும் எப்போதும் எனக்கு அந்தப் பழக்கம் உண்டு . மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுவேன் . குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ளுவேன். மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துக் கொள்ளுவதும், எழுதி எழுதிப் பார்த்துக்கொள்ளுவதும் சலிக்காமல் நடக்கும் .பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு எழுதிக் கிழித்து குறைத்து அதையே மீண்டும் எழுதி மேலும் குறைத்து அன்றைய நிகழ்ச்சிக்குத் தயாராவது என்பது பெரும் துன்பம் தான் .

இன்றைக்கு நன்றாகத் தயாரித்து விட்டோம் என்கிற நிறைவோடு ஒரு கூட்டத்துக்கும் போனதில்லை . அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுவதால் நிறையக் குறிப்புகள் நினைவில் தங்கிவிடும். எனவே மேடையில் பேசுகிறபோது குறிப்புகளைப் பார்க்காமல் பேசுவது சாத்தியமாகி விடும் . எப்படி இப்படி குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் பேசுகிறீர்கள் என்று இப்போதும் சிலர் கேட்பார்கள் .இரண்டு மூன்று நாட்கள் தரையில் புரண்டு உருண்டு தயாரித்தால் பேசுவது எளிதானது . இவ்வளவுக்குப் பிறகும் மிகச் சிறியதாகவேனும் குறிப்புகளைப் பேசும்போது கையில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறேன் .

நன்றாகப்பேசிப் புகழ் பெறவேண்டும் , யாரைவிடவும் நன்றாகப் பேசிவிட வேண்டும் என்பதெல்லாம் உள்ளிருக்கும் விருப்பங்கள் தான்.ஆனால் முதன்மையான நோக்கம் எப்போதும் அதுவல்ல . தங்களது நேரத்தை நமக்கெனத் தந்து அந்த அரங்கில் கூடி இருக்கும் மனிதர்களில் ஒரு சிலருக்கேனும் அல்லது ஒருவருக்கேனும் சிறு அளவேனும் பயன்தரத்தக்க ஒரு உரையைத் தந்துவிட வேண்டும் என்பது தான் எப்போதும் எந்த மேடையிலும் முதன்மையான இலட்சியமாக இருக்கிறது . அது தருகிற அச்சம் தான் மேடைக்குப் போகுமுன்னர் அந்தப்பாடு படுத்துகிறது.

எனக்கு எப்போதும் மேடை அச்சம் உண்டு . அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பான் வள்ளுவன் . அந்த அச்சம் இருக்கிற வரை தான் மேடைகளுக்குப் பேசப் போவேன் . அந்த அச்சம் விலகிய நாளில் நான் ஒருபோதும் மேடையில் பேசச் சம்மதிக்க மாட்டேன்.

இதை எல்லாம் இப்போது எதற்குச் சொல்லுகிறேன் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது .நீங்கள் நாட்கணக்கில் போராடிப் புரண்டு புரண்டு படித்து மாற்றி மாற்றி எழுதி மனதில் நினைவில் ஏற்றிக்கொண்டு போனால் உங்களுக்கு முன்னே பேசுகிற வரம் பெற்றவர்கள் நீங்கள் எழுதி வைத்த எல்லாவற்றையும் உங்கள் காது பார்க்கப் பேசிக்கொண்டு இருப்பார்கள் .அல்லது நீங்கள் தயாரித்த குறிப்புகளுக்குத் தொடர்பேயில்லாத வேறு ஒரு திசையில் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கும். எது வேண்டுமானாலும் நடக்கும்.

அரங்கில் யாரும் வந்துசேருவதற்கு முன்பாக பேசச்சொல்லி விடுவார்கள். அல்லது எல்லோரும் போனபிறகு பேசச் சொல்லுவார்கள் . பதினைந்து நிமிடங்கள் பேசவேண்டும் என்று அழைப்பார்கள் . மேடை ஏறும்போது காதுக்கருகில் வந்து பத்து நிமிடம் என்பார்கள், பேச அழைப்பதற்கு முன்பு ஐந்து நிமிடம் என்பார்கள் . இடுப்பில் டைம்பாம் கட்டித்தான் பேச அனுப்புவார்கள் .

இன்னைக்கு வேற யாரும் வரல்ல .. நீங்க மட்டும் தான் ரெண்டு மணி நேரமும் நீங்க தான் பாத்துக்கணும்... என்று எல்லாச் செங்கல்லையும் நம் தலையில் கட்டிவிட்டுக் கால் நடுங்காமல் நடக்கிறோமா என்று முன் வரிசையில் அமர்ந்து கவனிக்கிறவர்களும் உண்டு.எதுவும் நடக்கும். எது வேண்டுமானாலும் நடக்கும் .

அப்படியாகக் காலையில் இருந்து தயாரித்துக்கொண்டு கணையாழி விழாவிற்குப் போனேன். தயாரித்து எடுத்துக்கொண்டு போன குறிப்புகள் எதையும் பேச இயலவில்லை .அரங்கம் வேறு ஒரு சூழலில் மனநிலையில் இருந்தது. எனக்கு முன்னே பேச அழைக்கப்பட்ட ஒருவர் நான் தயாரித்துக்கொண்டு வந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டே இருந்தார்.அந்தக் கணம் நடந்த நடக்கிற நிலைமைக்கு ஏற்பப் பேசவேண்டிய நிலைமை வந்துவிட்டதை உணர்ந்தேன் .

அந்த அரங்கில் முத்துக்குமாரும் இருந்தது எனக்குத் தெரியாது ....


மற்றது... பிறகு

Tuesday, March 31, 2020

நானும் நா . முத்துக்குமாரும் .... ஒரு நினைவுக் குறிப்பு


என்று தணியும் திரைப்படத்தின் தயாரிப்பு துவங்குவதற்கு முன்பே , பாடல் எழுத நா.முத்துக்குமாரை அழைப்பதில்லை என்று முடிவு செய்து இருந்தேன் . ஏனெனில் , சிறு முதலீட்டுத் திரைப்படம் என்பதால் அவன் அப்போது வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தை அவனுக்குத் தர இயலாது என்பதால் அவனை அழைப்பதில்லை என்பதென் முடிவாக இருந்தது . ஆனால் , எந்தப் புதிய கவிதை எழுதினாலும் அது அச்சுக்குப் போவதற்கு முன் எனக்கு வாசித்துக் காட்டுகிற பழக்கம் அவனுக்குண்டு . என் கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை அது அச்சுக்குப் போகுமுன்னர் அவனுக்கு வாசித்துக் காட்டுவது எனது பழக்கம் . இதுவன்றி எனக்கும் அவனுக்குமான அன்பை பிரியத்தை நெருக்கத்தை அந்தரங்கத்தை எப்படி எழுதியும் யாருக்கும் உணர்த்திவிட இயலாது , எனவே எனது முதல் திரைப்பட பணிகள் குறித்து அவனுக்குச் சொல்லாமல் நான் படப்பிடிப்புக்குப் போக இயலாது . அவனுக்குத்தான் முதலில் சொன்னேன் . கதை கேட்க வேண்டும் என்றான் . இருவரும் சந்திப்பது என்று முடிவானது . வழக்கமாக சந்திக்கிற இடத்தில் சந்தித்தோம் . கதை அவனுக்குப் பிடித்தது . "அண்ணே எல்லாப் பாடல்களையும் நானே எழுதுகிறேன்" என்றான் . எனக்குப் பதட்டமாகி விட்டது . தயாரிப்பாளரிடம் பேசிவிட்டுப் பிறகு தொடர்பு கொள்கிறேன் என்றேன் . படம் சிறு முதலீட்டுப்படம் என்று மெல்லிய குரலில் சொன்னேன் . "அதெல்லாம் பாத்துக்கலாண்ணே " என்றான் . நான் தயங்குவதைக் கண்டறிந்து கொண்டான் . " என்ன யோசிக்கிறீங்க ? " என்றான் . இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாதென்று , தயக்கமின்றி சொன்னேன் . "தம்பி ... இது ரொம்ப சின்ன பட்ஜெட் படம்டா ... உனக்கு சம்பளம் குடுக்குற அளவுக்கு பட்ஜெட் இல்லடா " என்றேன் . முகம் சிவந்து இறுகிக் கோணலாக , " உங்ககிட்ட எவன் காசு கேட்டான் ... அண்ணன் படம் பண்றீங்க .. தம்பி பாட்டெழுதுறேன் " ....என்றான் . மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தும் முகம் அவனுடையது . அவனது மனமும் அத்தகையது தான் . சரிடா தம்பி ... நான் ப்ரொடக்சன்ல பேசிட்டு உன்னைக் கூப்புடுறேன் என்றேன் . வலது கையில் இருந்த சிகரெட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டு , வலது கையை நீட்டினான் . நானும் வலது கையை நீட்டினேன் . இறுக்கமாக கைகுலுக்கிக் கொண்டோம் . என்னை ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ... நான் மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு தான் கரம் குலுக்கினேன் . ஆம் . எனக்கும் அவனுக்கும் இருந்த நட்பையும் அன்பையும் பயன்படுத்தி அவனது கவிதையைக் குறைந்த பணத்திற்குப் பெறுவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன் . அப்போது அவன் பெரும் பணம் தரும் நிறுவனங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டு இருந்தான் . அவகாசம் இல்லாமல் சொற்கள் தேடி அவனுக்குள் அலைந்து கொண்டிருந்தான் . சொற்கள் கிடைக்காமல் அன்று . எந்தச் சொல்லைத் தேர்வு செய்வது என்று தவித்துக்கொண்டே இருந்தான் . அவன் தமிழ் இலக்கிய மாணவன் . ஆகச் சிறந்த கவிஞன் . எனவே சொற்களுக்குப் பஞ்சமேயில்லை அவனுக்கு . ஆனால் எளிய மனிதர்களுக்கான எளிய சொற்கள் எளிய நடையில் தான் பாடல்கள் எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் . எழுதிய பாடல்களுக்குப் பணம் பெறுவதிலும் அவன் கெட்டிக்காரன் இல்லை என்பது எனக்குத் தெரியும் . அவனுக்குப் பேசிய பணத்தைத் தராமல் இருந்தவர்கள் பற்றி அவன் சொன்ன உண்மைக்கதைகள் நானும் அவனும் மட்டுமே பகிர்ந்து கொண்ட உண்மைகள் . அப்போது கூட அதை அவர்களைப் பற்றிய அவதூறாகவோ புகாராகவோ அல்லாமல் தகவலாக மட்டுமே சொல்லும் மாண்பும் அவனுக்கு இருந்தது .இது தொடர்பாக எழுத நிறைய இருக்கிறது என்றபோதும் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல என்பதால் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் . நான் அவனை அழைப்பதில்லை என்று முடிவு செய்தபடியே அவனை அழைக்காமல் இருந்து கொண்டேன் . இசை அமைப்பாளருடன் கலந்து பேசி கவிஞர்கள் யுகபாரதி , தனிக்கொடி ஆகியோரை அழைத்து பாடல்கள் எழுதி வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டேன் . படப்பிடிப்புக்குப் புறப்படுவதை முத்துக் குமாருக்குச் சொல்லாமல் தவிர்த்தேன் . யுகபாரதி , தனிக்கொடி ஆகிய இருவருக்கும் கூட நல்ல சம்பளம் கொடுத்தேன் என்று சொல்லிவிட முடியாது . சிறு முதலீட்டுப்படம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தப் படத்திற்கு இருந்தது . நான் தந்த சிறு தொகையைப் பெற்றுக்கொண்டு எனக்காகப் பாடல் எழுதித் தந்த யுகபாரதியும் , தனிக்கொடியும் எப்போதும் என் அன்பிற்கு உரியவர்கள் , படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது . முத்துக்குமார் அழைத்தான் . வழக்கம் போல ... "அண்ணே என்று அழைத்து நிறுத்தினான் . நானும் தம்பி என்று அழைத்து நிறுத்திக் கொண்டேன் . எங்க இருக்கீங்க என்றான் . அருப்புக்கோட்டை என்று நிறுத்திக்கொண்டேன் . ஏதும் மீட்டிங்கா என்றான் . இல்ல தம்பி ஷூட்டிங் என்றேன் . ஷூட்டிங்கா என்று திகைப்போடு கேட்டான் . என்கிட்டே சொல்லல என்றான் ... பாட்டு கேக்கல என்றான் ... இதற்குப் பிறகும் மறைக்கலாகாது என்பதால் தம்பி அடுத்த படத்துக்கு எழுதுடா என்றேன் ... " அண்ணே ... உங்க முதப் படத்துல எம் பாட்டு இல்லாம இருக்கலாமா ... காசு நான் கேட்டனா ... அண்ணன் படத்துல நீ எதுக்குப் பாட்டு எழுதலன்னு யாராவது கேட்டா காசுப் பிரச்சனைன்னு சொல்ல சொல்லுறீங்களா ....இந்த பாருங்க எம் பாட்டு இல்லாமா உங்க படம் வரக்கூடாது ... வீட்டு வாசல்ல உண்ணாவிரதம் இருப்பேன் எனக்கு situation சொல்லுறீங்க ... நான் பாட்டு எழுதுறேன் .. நாளைக்கு இதே டைம் கூப்புடுறேன் என்றான் ... தம்பி என்றேன் தயக்கமாக ... வேற பேசாதீங்கண்ணே என்றான் உறுதியாக ... சொன்னபடி மறுநாள் அழைத்தான் . அவன் பாடல் எழுதவென்று ஒரு சூழலை உருவாக்கி கதையில் சேர்த்து அவனுக்குச் சொன்னேன் . இசை அமைப்பாளருடன் பேசி இரண்டொரு நாளில் பாடல் எழுதித் தந்தான் . கதையில் வரும் காட்சியை மட்டும் மனதில் கொள்ளாமல் மொத்தக் கதையையும் மனதில் கொண்டு ஒரு சிறந்த பாடலை எழுதித் தந்தான் . இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அந்தப் பாடலைப் படமாக்கினேன் . எங்கள் பொருளாதார வரம்புக்குள் அந்தப் பாடலைப் படமாக்கினோம் . ஒரு பரந்த நிலப்பரப்பில் அந்தப் பாடலைப் படமாக்க எண்ணி இருந்த நாளில் செல்வி ஜெயலலிதா இறந்து போனார் . படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டிய நிலை வந்தது . அது பெரும் பொருள் இழப்பை உருவாக்கும் . எனவே நண்பர் ஒருவரின் தோட்டத்தில் , பாழடைந்த பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட ஒரு குடவுனில் இரவில் படமெடுத்து முடித்தோம் . படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு சிறிய தொகையை அவனுக்குத் தந்தேன் . அவன் மறுத்தான் . நான் வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தேன் . படம் முடிந்தபின்னர் படத்தின் நீளம் குறித்த பிரச்சினையில் அந்தப்பாடல் காட்சி நீக்கப்பட்டு விட்டதைத் தடுக்க இயலவில்லை . அது நீக்கப்பட்டு விட்டதை நான் அவனுக்குச் சொல்லவில்லை . பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது அவன் உடல் நலம் குன்றி இருந்தான் . எனவே அவனால் விழாவுக்கு வர இயலவில்லை . மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி அவனது பாடல் இன்றிப் படம் வந்தது . படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகவில்லை என்பதையும் மிகக் குறைந்த அரங்குகளில் தான் வந்தது என்பதையும் அவனிடம் சொன்னேன் . அவனது பாடல் இடம் பெறவில்லை என்பதை அவனுக்குச் சொல்லவில்லை. ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதி அவன் இறந்தான் . அப்போதும் அவன் பாடல் இடம் பெறாமல் என் படம் வெளியானது அவனுக்குத் தெரியாது .

என்று தணியும் திரைப்படபாடல்.
இந்த இணைப்பில் பாடலைக் கேட்கலாம் :
https://youtu.be/8Qh9DWDZXUw

Tuesday, March 17, 2020

இராஜபாளையம் கம்பன் கழகம் .40 ஆம் ஆண்டு விழா





இராஜபாளையம் கம்பன் கழகம் தனது நாற்பதாவது ஆண்டு  கம்பன் விழாவை, பெப்ரவரி மாதம் பதினைந்து மற்றும் பதினாறு என இரண்டு நாட்கள் கொண்டாடியது .
இரண்டாம் நாள் மூவர் அரங்கம் .

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
தேர்ந்த சுவைஞர்கள் .

கம்பன் புகழ் பேசி கன்னித்தமிழ் வளர்த்தோம் .

Wednesday, March 11, 2020

யாழ்ப்பாணம் கம்பன் விழா 2020




எந்த மண்ணுக்கு ஒருமுறையேனும் போகவேண்டும் என்று விரும்பினேனோ அந்த மண்ணுக்குப் போய்வரும் வாய்ப்பு வாய்த்தது .

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழாவில் பங்குபெறும் பாக்கியத்தினால் அது நிகழ்ந்தது .

சென்னையில் இருந்து புறப்பட்டு பலாலி விமானநிலையம் போய்ச்சேரும் போது பிற்பகல் பன்னிரண்டு மணி .

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாலுகாத் தலைநகரப் பேருந்து நிலையத்தை விடவும் கொஞ்சம் பெரியது என்று சொல்லிவிட முடியாத விமானநிலையம் .

விமான நிலையத்தைச் சுற்றி , கண்ணுக்குஎட்டிய தூரம் வரை ஒரு குடியிருப்பேனும் இல்லை .

எங்கும் காடுபோல அடர்ந்த மரங்கள் . பாதுகாப்புக் கோபுரங்கள் . முள் வேலிகள் . ராணுவச் சோதனைச்சாவடிகள் .
இராணுவ வீரர்கள் , குடியேற்ற அதிகாரிகள் , காவல் துறையினர் என எல்லோருமே நல்ல தமிழில் பேசினார்கள் .
கண்களைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள் .

நான் திரும்ப வருவதற்கு என்று தீர்மானித்துப் பயணச்சீட்டு போட்டிருந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக எனது விசாவுக்கான அனுமதித் தேதி முடிந்து இருந்தது .

எனவே எனது விசாவை நீட்டித்துத் தருமாறு குடியேற்ற அதிகாரிகளைக் கேட்டேன் .
நீங்கள் ஏன் முதல் நாளே இந்தியா திரும்பக்கூடாது என்று அவர் என்னைக் கேட்டார் .
அன்றைக்கு விமானப் போக்குவரத்து இல்லையே என்றேன் .
விசாவை நீட்டித்துத் தர இசைந்தார் .

ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டார் .

ஒரு முறைக்கு இரண்டு முறை பயணப் பெட்டிகளைத் திறந்து பார்த்துக் கவனமாகப் பரிசோதித்தார்கள் . கெடுபிடிகள் ஏதுமில்லை .

ஒரு சிறிய பாட்டிலில் , கால் வலிக்கென நான் வைத்திருந்த மஞ்சள் நிறமான மருந்துப் பொடியை எடுத்துத் திறந்து பார்த்த ஒரு பெண் காவல் அதிகாரி அது என்னவென்று தனது பெரிய கண்களால் , எனது சிறிய கண்களுக்குள் கேட்டார் .
விரல் நுழைத்து ஒரு சிட்டிகை மருந்தெடுத்து வாயில் போட்டுக்கொண்டு , என் சிறிய கண்களால் , அந்தப் பெரிய கண்களுக்கு விடை அளித்தேன் .

ஒரு வறண்ட புன்னகையைப் பதிலாகத் தந்தார் . அதே பெரிய கண்களால் போகச் சொன்னார் .

விமானம் அரைமணிநேரம் முன்னதாகத் தரை இறங்கியும் , இந்த நடைமுறைகளால் ஒன்றரை மணிநேரம் கழித்தே வெளியே வர முடிந்தது .

அழைக்க வந்தவர்கள் தவித்துப் போனார்கள் .


அதைவிட என்னோடு விமானத்தில் வந்த ஒரு வயதான மூதாட்டி ரொம்பவும் பரிதவித்துப் போனார் .

ஏனெனில் , எடை அதிகமாக இருந்ததால் தனது இரண்டு புடவைகளை எனது பெட்டியில் வைத்துக்கொள்ளுமாறு ஒரு மூதாட்டி, என்னை சென்னை விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டார் .

அப்படி யாராவது விமானப்பயணத்தில் கேட்டுக்கொண்டால் உதவாமல் இருப்பதே நல்லது என்பது பயணிகளுக்குத் தரப்படும் அறிவுரை , ஆலோசனை .
ஏனெனில் , அப்படி வாங்கி வைத்துக்கொள்ளும் பொருட்களில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் இருந்தால் வீண்பழி சுமக்க நேரும் .

தனது பிள்ளைகளின் துணை இல்லாமல் முதன்முறையாக விமானப்பயணம் செய்யும் அவர்,  தான் கொண்டுவந்த பொருட்களில் கூடுதல் எடை இருந்ததால் செய்யும் வழி தெரியாமல் தவித்துப் போய் இருந்தார் . சென்னையில் , வழி அனுப்ப வந்து வாசலுக்கு வெளியே நின்ற தனது பிள்ளைகளிடம் போய்க் கேட்டுவிட்டு வந்து என்னைக் கேட்டார் .

நான் சம்மதித்தேன் .

இலங்கையில் எனது விசா நீட்டிப்பும் , சுங்கப் பரிசோதனைகளும் முடிகிறவரை அவரும் காத்திருந்து தவித்துப் போனார் . நன்றி சொல்லிவிட்டுப் போகிறபோது "எண்ட பிள்ளைகள் இல்லாமல் இப்பத்தான் தனியா வந்து நிக்குறன் ... நல்ல வேளை அந்த ஆஞ்சநேயர் தான் எனக்குத்துணையா உங்களை அனுப்பி இருக்கார் " என்றார் .

அவருக்கு ஆஞ்சநேயர் நினைவு வந்ததற்கும் , டார்வினுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்தோம் .

ஆம் . என்னோடு தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்களும் வந்திருந்தார் .

பலாலி விமான நிலைய வாசல் வந்தபோது மணி இரண்டை நெருங்கி இருந்தது . ஆனாலும் சூரியன் தலைக்குமேலே தான்  நின்றது .

வெயில் . அதே சென்னை வெயில் .

ஒருமுறை சுற்றிப் பார்த்தேன் . பலாலி தான் .
யாழ்ப்பாணம் தான் . இலங்கை தான் . வெயில் மட்டும் தான் அதே வெயில் .



இன்னும் போகணும் ....