என்று தணியும் திரைப்படத்தின் தயாரிப்பு துவங்குவதற்கு முன்பே , பாடல் எழுத நா.முத்துக்குமாரை அழைப்பதில்லை என்று முடிவு செய்து இருந்தேன் . ஏனெனில் , சிறு முதலீட்டுத் திரைப்படம் என்பதால் அவன் அப்போது வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தை அவனுக்குத் தர இயலாது என்பதால் அவனை அழைப்பதில்லை என்பதென் முடிவாக இருந்தது . ஆனால் , எந்தப் புதிய கவிதை எழுதினாலும் அது அச்சுக்குப் போவதற்கு முன் எனக்கு வாசித்துக் காட்டுகிற பழக்கம் அவனுக்குண்டு . என் கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை அது அச்சுக்குப் போகுமுன்னர் அவனுக்கு வாசித்துக் காட்டுவது எனது பழக்கம் . இதுவன்றி எனக்கும் அவனுக்குமான அன்பை பிரியத்தை நெருக்கத்தை அந்தரங்கத்தை எப்படி எழுதியும் யாருக்கும் உணர்த்திவிட இயலாது , எனவே எனது முதல் திரைப்பட பணிகள் குறித்து அவனுக்குச் சொல்லாமல் நான் படப்பிடிப்புக்குப் போக இயலாது . அவனுக்குத்தான் முதலில் சொன்னேன் . கதை கேட்க வேண்டும் என்றான் . இருவரும் சந்திப்பது என்று முடிவானது . வழக்கமாக சந்திக்கிற இடத்தில் சந்தித்தோம் . கதை அவனுக்குப் பிடித்தது . "அண்ணே எல்லாப் பாடல்களையும் நானே எழுதுகிறேன்" என்றான் . எனக்குப் பதட்டமாகி விட்டது . தயாரிப்பாளரிடம் பேசிவிட்டுப் பிறகு தொடர்பு கொள்கிறேன் என்றேன் . படம் சிறு முதலீட்டுப்படம் என்று மெல்லிய குரலில் சொன்னேன் . "அதெல்லாம் பாத்துக்கலாண்ணே " என்றான் . நான் தயங்குவதைக் கண்டறிந்து கொண்டான் . " என்ன யோசிக்கிறீங்க ? " என்றான் . இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாதென்று , தயக்கமின்றி சொன்னேன் . "தம்பி ... இது ரொம்ப சின்ன பட்ஜெட் படம்டா ... உனக்கு சம்பளம் குடுக்குற அளவுக்கு பட்ஜெட் இல்லடா " என்றேன் . முகம் சிவந்து இறுகிக் கோணலாக , " உங்ககிட்ட எவன் காசு கேட்டான் ... அண்ணன் படம் பண்றீங்க .. தம்பி பாட்டெழுதுறேன் " ....என்றான் . மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தும் முகம் அவனுடையது . அவனது மனமும் அத்தகையது தான் . சரிடா தம்பி ... நான் ப்ரொடக்சன்ல பேசிட்டு உன்னைக் கூப்புடுறேன் என்றேன் . வலது கையில் இருந்த சிகரெட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டு , வலது கையை நீட்டினான் . நானும் வலது கையை நீட்டினேன் . இறுக்கமாக கைகுலுக்கிக் கொண்டோம் . என்னை ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ... நான் மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு தான் கரம் குலுக்கினேன் . ஆம் . எனக்கும் அவனுக்கும் இருந்த நட்பையும் அன்பையும் பயன்படுத்தி அவனது கவிதையைக் குறைந்த பணத்திற்குப் பெறுவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன் . அப்போது அவன் பெரும் பணம் தரும் நிறுவனங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டு இருந்தான் . அவகாசம் இல்லாமல் சொற்கள் தேடி அவனுக்குள் அலைந்து கொண்டிருந்தான் . சொற்கள் கிடைக்காமல் அன்று . எந்தச் சொல்லைத் தேர்வு செய்வது என்று தவித்துக்கொண்டே இருந்தான் . அவன் தமிழ் இலக்கிய மாணவன் . ஆகச் சிறந்த கவிஞன் . எனவே சொற்களுக்குப் பஞ்சமேயில்லை அவனுக்கு . ஆனால் எளிய மனிதர்களுக்கான எளிய சொற்கள் எளிய நடையில் தான் பாடல்கள் எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் . எழுதிய பாடல்களுக்குப் பணம் பெறுவதிலும் அவன் கெட்டிக்காரன் இல்லை என்பது எனக்குத் தெரியும் . அவனுக்குப் பேசிய பணத்தைத் தராமல் இருந்தவர்கள் பற்றி அவன் சொன்ன உண்மைக்கதைகள் நானும் அவனும் மட்டுமே பகிர்ந்து கொண்ட உண்மைகள் . அப்போது கூட அதை அவர்களைப் பற்றிய அவதூறாகவோ புகாராகவோ அல்லாமல் தகவலாக மட்டுமே சொல்லும் மாண்பும் அவனுக்கு இருந்தது .இது தொடர்பாக எழுத நிறைய இருக்கிறது என்றபோதும் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல என்பதால் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் . நான் அவனை அழைப்பதில்லை என்று முடிவு செய்தபடியே அவனை அழைக்காமல் இருந்து கொண்டேன் . இசை அமைப்பாளருடன் கலந்து பேசி கவிஞர்கள் யுகபாரதி , தனிக்கொடி ஆகியோரை அழைத்து பாடல்கள் எழுதி வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டேன் . படப்பிடிப்புக்குப் புறப்படுவதை முத்துக் குமாருக்குச் சொல்லாமல் தவிர்த்தேன் . யுகபாரதி , தனிக்கொடி ஆகிய இருவருக்கும் கூட நல்ல சம்பளம் கொடுத்தேன் என்று சொல்லிவிட முடியாது . சிறு முதலீட்டுப்படம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தப் படத்திற்கு இருந்தது . நான் தந்த சிறு தொகையைப் பெற்றுக்கொண்டு எனக்காகப் பாடல் எழுதித் தந்த யுகபாரதியும் , தனிக்கொடியும் எப்போதும் என் அன்பிற்கு உரியவர்கள் , படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது . முத்துக்குமார் அழைத்தான் . வழக்கம் போல ... "அண்ணே என்று அழைத்து நிறுத்தினான் . நானும் தம்பி என்று அழைத்து நிறுத்திக் கொண்டேன் . எங்க இருக்கீங்க என்றான் . அருப்புக்கோட்டை என்று நிறுத்திக்கொண்டேன் . ஏதும் மீட்டிங்கா என்றான் . இல்ல தம்பி ஷூட்டிங் என்றேன் . ஷூட்டிங்கா என்று திகைப்போடு கேட்டான் . என்கிட்டே சொல்லல என்றான் ... பாட்டு கேக்கல என்றான் ... இதற்குப் பிறகும் மறைக்கலாகாது என்பதால் தம்பி அடுத்த படத்துக்கு எழுதுடா என்றேன் ... " அண்ணே ... உங்க முதப் படத்துல எம் பாட்டு இல்லாம இருக்கலாமா ... காசு நான் கேட்டனா ... அண்ணன் படத்துல நீ எதுக்குப் பாட்டு எழுதலன்னு யாராவது கேட்டா காசுப் பிரச்சனைன்னு சொல்ல சொல்லுறீங்களா ....இந்த பாருங்க எம் பாட்டு இல்லாமா உங்க படம் வரக்கூடாது ... வீட்டு வாசல்ல உண்ணாவிரதம் இருப்பேன் எனக்கு situation சொல்லுறீங்க ... நான் பாட்டு எழுதுறேன் .. நாளைக்கு இதே டைம் கூப்புடுறேன் என்றான் ... தம்பி என்றேன் தயக்கமாக ... வேற பேசாதீங்கண்ணே என்றான் உறுதியாக ... சொன்னபடி மறுநாள் அழைத்தான் . அவன் பாடல் எழுதவென்று ஒரு சூழலை உருவாக்கி கதையில் சேர்த்து அவனுக்குச் சொன்னேன் . இசை அமைப்பாளருடன் பேசி இரண்டொரு நாளில் பாடல் எழுதித் தந்தான் . கதையில் வரும் காட்சியை மட்டும் மனதில் கொள்ளாமல் மொத்தக் கதையையும் மனதில் கொண்டு ஒரு சிறந்த பாடலை எழுதித் தந்தான் . இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அந்தப் பாடலைப் படமாக்கினேன் . எங்கள் பொருளாதார வரம்புக்குள் அந்தப் பாடலைப் படமாக்கினோம் . ஒரு பரந்த நிலப்பரப்பில் அந்தப் பாடலைப் படமாக்க எண்ணி இருந்த நாளில் செல்வி ஜெயலலிதா இறந்து போனார் . படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டிய நிலை வந்தது . அது பெரும் பொருள் இழப்பை உருவாக்கும் . எனவே நண்பர் ஒருவரின் தோட்டத்தில் , பாழடைந்த பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட ஒரு குடவுனில் இரவில் படமெடுத்து முடித்தோம் . படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு சிறிய தொகையை அவனுக்குத் தந்தேன் . அவன் மறுத்தான் . நான் வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தேன் . படம் முடிந்தபின்னர் படத்தின் நீளம் குறித்த பிரச்சினையில் அந்தப்பாடல் காட்சி நீக்கப்பட்டு விட்டதைத் தடுக்க இயலவில்லை . அது நீக்கப்பட்டு விட்டதை நான் அவனுக்குச் சொல்லவில்லை . பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது அவன் உடல் நலம் குன்றி இருந்தான் . எனவே அவனால் விழாவுக்கு வர இயலவில்லை . மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி அவனது பாடல் இன்றிப் படம் வந்தது . படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகவில்லை என்பதையும் மிகக் குறைந்த அரங்குகளில் தான் வந்தது என்பதையும் அவனிடம் சொன்னேன் . அவனது பாடல் இடம் பெறவில்லை என்பதை அவனுக்குச் சொல்லவில்லை. ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதி அவன் இறந்தான் . அப்போதும் அவன் பாடல் இடம் பெறாமல் என் படம் வெளியானது அவனுக்குத் தெரியாது .
என்று தணியும் திரைப்படபாடல்.
இந்த இணைப்பில் பாடலைக் கேட்கலாம் :
https://youtu.be/8Qh9DWDZXUw