Sunday, July 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 28

தோழர் MM 

"உக்காருங்க தோழர் கிருஷ்ணகுமார் ... உங்க விசயத்தப் பேசி முடுச்சுட்டோம்" என்று நிறுத்தினார்.

நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன்.எனக்குள் இருந்த பதட்டத்துக்கு எல்லையே இல்லை.எந்த வேலைக்கும் போகிற மனநிலையில் நான் அப்போது இல்லை. ஒரு வேலைக்குத்தான் போகவேண்டும் என்றால் ,எனக்கு வேலைதரப்  பல இடங்களில் ,பல நண்பர்கள் காத்திருந்தார்கள்.


நான் கட்சியின்முழு நேர ஊழியனாகி,தீக்கதிரில் பணிக்கு சேர்ந்து ஒரு மகத்தான பத்திரிகையாளனாகி விட வேண்டும் என்கிற நனவில் இருந்தேன் . கட்சி என்னை முழுநேர ஊழியன் ஆக்குவதாகவும், நான் தீக்கதிரில் ஜனவரி முதல் தேதி முதல் வேலைக்குச் சேரவேண்டும் என்று எனக்கு ஏற்கெனவே அறிவித்து இருந்தது என்பதால், அது எனக்குக் கனவல்ல ; நனவு .கனவு கலைந்தால்,மறு கனவொன்றைக் கட்டி எழுப்பிக் கொள்ளலாம். நனவு கலைவது நல்லதல்ல. அது கடினமானது .இதற்கு முன்பே சில நனவுகள் என் வாழ்வில் தகர்ந்து தரைமட்டமாகி இருந்தது. மிக இளம் வயதிலேயே சில துன்பங்களை , இழப்புகளை,துரோகங்களைச் சந்திக்கும் "நல்"வாய்ப்பை வாழ்க்கை தந்திருந்தது.எனவே எனது நனவு கலைந்து விடும் எதையும், தோழர் MM சொல்லிவிடக் கூடாது என்கிற பதைப்பு எனக்கு இருந்தது.

"இது தொடர்பான எல்லா அம்சங்களையும் கணக்குல எடுத்துக்கிட்டு பேசுனோம்.நான் உட்பட எல்லாத் தோழர்களும் அவங்க அவங்க கருத்துக்கள சொன்னாங்க.நீங்க... பேங்க் வேலைக்குப் போகணும்னு கட்சி ஏகமனதாக முடிவு எடுத்துருக்கு" என்று நிறுத்திக் கொண்டார். மெலிதான புன்னகை அவர் முகத்தில் பரவியது. என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க விரும்புகிறவர் போலத் தனது மேசை இழுப்பறையைத் திறந்து எதையோ தேடினார். நான் மெளனமாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தேன். எனது இன்னுமொரு நனவு தகர்ந்து கிடந்தது.

இதற்கு மேலும் பேச MM விரும்பவில்லையோ என்பது போல, அவர் எதையோ தேடிக்கொண்டே இருந்தார். நான் காத்திருந்தேன். அதற்கு மேலும் அவர் பேசாவிட்டால் நாமும் எதுவும் பேசக்கூடாது என்கிற உணர்வு மேலேறிக்கொண்டு வந்தது. துக்கம், கோபம், அவமதிப்பு, ஏமாற்றம், நிராகரிப்பு என்று கலைவையான உணர்வுகளில் கண்கள் சிவப்பேறுவதை உணர முடிந்தது. இதற்கு மேலும் நம்மிடம் பேச இவருக்கு ஒன்றுமே இல்லையா என்கிற வியப்பும் கூடி நின்றது.  

எதையோத் தேடிஎடுத்து , சட்டைப்பையில் வைத்துக்கொண்ட MM " ஒரு முக்கியமான பேப்பரைத் தேடிக்கிட்டு இருந்தேன் கிருஷ்ணகுமார் . மன்னிச்சுக்குங்க... நம்ம பேச்சு பாதியில நின்னு போயிருச்சு... சொல்லுங்க" என்று களங்கமில்லாமல் சிரித்தார் . எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

"எதுக்கு பேங்க் வேலைக்குப் போகச் சொல்லுறீங்க ?" என்று மட்டும் தான் கேட்க முடிந்தது .       

"இங்க பாருங்க ... எப்பவோ எழுதுன பரிட்சைக்கு இப்ப ஆர்டர் வந்துருக்கு . அது வரப்போய்த்தான் இந்த பிரச்சனை. இல்லாட்டி இங்க யாரும் உங்கள எந்த வேலைக்கும் போன்னு சொல்லப்போறதில்ல . நீங்களும் இன்னும் முழுநேர ஊழியரா முறைப்படி சேரல. முழுநேர ஊழியராச் சேந்திருந்தாக் கூட, இந்த பேங்க் வேலைத் தூக்கிப் போட்டுறலாம். அந்த பேங்க் வேலைய நம்ம யாரும் இப்ப தேடித் போகல. அதுவா வந்துருக்கு ... அப்ப..ஒருத்தருக்குத் தகுதி அடிப்படையில கெடைக்கிற வேலைய வேண்டாம்னு எதுக்கு சொல்லணும்? எல்லாருக்கும் வேலை வேணும்னு போராடுற ஒரு கட்சி,வந்த வேலைய வேணாமுன்னு எப்பிடிச் சொல்லும்? நான் நேத்தே சொன்ன மாதிரி, அங்கேயும் ஒரு கம்யூனிஸ்ட்க்கு நெறைய வேலை இருக்கும். நீங்க இப்போதைக்கு பேங்க் வேலைக்குப் போங்க... ஆனா இன்னொரு முக்கியமான முடிவையும் உங்களுக்குச் சொல்லணும்" என்று நிறுத்தினார். 

"என்னங்க MM'.. என்றேன் நைந்த குரலில்... 

முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு MM சொன்னார் ." இப்ப நீங்க பேங்க் வேலைக்குப் போங்க... ஆனா எதிர்காலத்துல எப்ப கட்சி சொல்லுதோ அப்ப நீங்க பேங்க் வேலைய விட்டுட்டு, கட்சி வேலைக்கு வந்துரணும். அது உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார்.

"நான் இப்பவே பேங்க் வேலைக்குப் போக விரும்பலன்னு உங்க கிட்ட சொன்னேன்" என்று நிறுத்தினேன். ஒரு நொடி கூடத் தயங்காமல்,"அதெல்லாம் முறைப்படி கட்சிக்குச் சொல்லிட்டேன்.நீங்க சொன்னதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கிட்டு தான் இந்த முடிவ எடுத்துருக்கோம்"என்றார்.

அதற்குப்பிறகும், எங்கள் உரையாடல் நீண்டநேரம் நடந்தது. ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, மில் தொழிலாளியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ச்செயலாளராகத் தான் பெற்ற  அனுபவ அறிவும் , இயக்க அனுபவமும் சேர்ந்து தந்த உடல் மொழியும், மொழி அறிவும் கொண்டு என்னை வங்கி வேலைக்குத் தயார் செய்து கொண்டே இருந்தார் MM .

நானும் அவரும் மட்டும் கட்சி ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். " வேலைக்கு சேந்துட்டு, வாங்க... சந்திப்போம். எங்க போகப்போறோம்.. எல்லாம் இங்கதான இருக்கப்போறோம்" என்றபடி சைக்கிள் ஏறிப்போனார் MM.

நான் தனித்து விடப்பட்ட மனநிலையில் இருந்தேன் . கட்சி என்னைக் கைவிட்டு விட்டது என்று , அந்தக் கணத்தில் மனமார நம்பினேன்.

வேலைக்குப் போவதில் எனக்கு இருந்த இயல்பான மனத்தடையை விட,வேறு மிக முக்கியமான இரண்டு தடைகள் என் கண் முன்னே பூதாகரமாகத் திரண்டு நின்றது.

நேரம் அதிகமாகி விட்டதால், வீட்டுக்குப் போக முடியாது. உறக்கத்தில் இருக்கும் அப்பாவை எழுப்ப முடியாது.காலையில் போய்த்தான் அப்பாவைப் பார்க்க வேண்டும்.ஏனோ, கட்சி அலுவலகத்தில் படுக்க மனம் விரும்பவில்லை.

டிசம்பர் மாதக்குளிர் மதுரையின் மீது தன்னைப் போர்த்திக்கொள்ளத் துவங்கி இருந்தது.எனக்கு எங்கு போவதென்றே புலப்படவில்லை. 

கையில் கொஞ்சம் காசு இருந்தது. மண்டபம் தோழர்கள் கொடுத்த காசு.

இந்த இரவை எங்கு கழிப்பது என்று திகைப்பாகி, எந்தப் பக்கம் போவதென்று முடிவுசெய்ய முடியாமல், ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டுப் புகை பிடித்தேன்.

புகை மார்பெங்கும் பரவிநின்று , நாசியின் வழியாக வெளியேறிய கணத்தில் , பாதியில் கலைந்த உறக்கம் போன்ற ஒரு சிறு மயக்கம் கண்களில் பரவியது. 

எங்கு போவது என்பதை மனம் தீர்மானம் செய்தது...

எங்கு போனேன்? 

அப்புறம் சொல்லுகிறேன்... 
     
-பாரதி கிருஷ்ணகுமார்.

3 comments:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 28 - நான் தனித்து விடப்பட்ட மனநிலையில் இருந்தேன் . கட்சி என்னைக் கைவிட்டு விட்டது என்று , அந்தக் கணத்தில் மனமார நம்பினேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Premkumar said...

"இன்னுமொரு நனவு தகர்ந்து கிடந்தது"
👌

Shri Prajna said...

வணக்கம் BK, Prem சொன்னார், BK எழுதிட்டுஇருக்கார் blog ல ன்னு ரொம்ப நல்லாயிருக்கு நீ படின்னு, படிக்க ஆரம்பிச்சு சில இடத்தில சிரிக்கவச்சு,சில இடத்திலே அழ வச்சு, பல இடங்களில் சிந்திக்க வச்சுன்னு ரொம்ப நாள் கழிச்சு வாசிக்கிறேன் BK.. ஓரே stretch ல ரசிச்சு ரசிச்சு படிச்சேன்...lock down க்கு அப்புறம் Netflix Amazon ன்னு போய்கிட்டிருந்த நேரத்தை வாசிப்பு பக்கம் திருப்பி இருக்கு யதார்த்தமான உங்க எழுத்து...காதல் பத்தி எழுதி இருந்ததை Prem க்கு copy பண்ணி அனுப்பிச்சேன்...Super BK.. தொடர்ந்து எழுதுங்க நல்லாயிருக்கு BK....

Post a Comment