Sunday, June 21, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 23




MGR தன் தாயின் பெயரால் வாங்கிய சத்தியம் பலித்ததா ?


தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, MGR மைனா தெப்பக்குளம் பொதுக்கூட்டத்தில் சத்தியம் வாங்குகிற வரை, அ இ அ தி மு க வின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தலைவர்களும் , தொண்டர்களும், எப்போதாவது தான் எங்கள் கண்களில் தென்படுவார்கள். நான் முன்பே எழுதி இருந்ததுபோல் அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிடும் மதுரை மேற்குத்தொகுதிக்குப் புலம் பெயர்ந்து போய் இருந்தார்கள் .

" எங்க கட்சி உங்க கட்சி மாதிரி கெடையாது ... இங்க எவனும் எவன் பேச்சையும் கேக்க மாட்டானுங்க .. எல்லோருமே MGR சொன்னாத்தான் கேப்பானுங்க " என்று ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் என்னிடம் சொல்லிவிட்டு , வெடித்துச் சிரித்தார். அதை ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவையாகக் கருதி நானும் சிரிக்கவேண்டும் எனக் கருதினார் . நான் அவர் பேசியதை ரசிக்கவில்லை . ரசிக்கப் பழகி இருக்கவில்லை.

எனவே அ இ அ தி மு க ஆட்கள் வார்டுக்குள் வேலை செய்ய வருவதில்லை என்று முறைப்படி நாங்கள் கட்சியின் தலைமைக்குத் தகவல் தந்தோம் .

கட்சித் தலைமை இதுபற்றி மதுரை மாவட்ட அ இ அ தி மு க தலைவர்களிடம் எவ்வளவு எடுத்துச்  சொல்லியும் , நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.எனவே அது பற்றி MGR  இடமே எடுத்துச் சொன்னது கட்சித் தலைமை . அதன் விளைவே MGR வாங்கிய சத்தியம் .

சத்தியம் வேலை பார்த்தது . தேன் கூட்டைக் கலைத்தது மாதிரி , கூட்டம் முடிந்த மறுநாள் காலையில் அ இ அ தி மு க இரண்டாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் 64 ஆவது வார்டில் இருந்த கட்சியின் தேர்தல் அலுவலகத்தை மொய்த்தார்கள் . " இவ்வளவு நாளு இந்தக் கூட்டமெல்லாம் எங்க இருந்துச்சு " என்று வியந்து போனோம் . மதுரை கிழக்குத் தொகுதி முழுவதும் கூடுதல் பரபரப்பானது . வாக்குப்பதிவு முடிகிறவரை , MGR வாங்கிய சத்தியம் பலித்தது .

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சிறிய தொகுதி என்று அறியப்பட்ட மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா தோற்கவேண்டும் என்று எதிர்த் தரப்பு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது . தேர்தலுக்குச் சில நாட்கள் இருந்த போது , என் நண்பர்கள் பலருடன் சௌபாவும் என்னோடு தேர்தல் வேலையில் வந்து சேர்ந்துகொண்டான் . 

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் , நாங்கள் இரவும் பகலும் இணைந்து பணியாற்றிய நாட்கள் என் நினைவில் இம்மி பிசகாமல் காட்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறது .
எத்தனை எத்தனையோ நினைவுகள் . 

அந்த நினைவுகளுக்குக் காரணமாய் இருப்பது ... "எதையும்" எதிர்பார்க்காத , அசலான தன்னலமற்ற உழைப்பு . அதுதான். அதுமட்டும் தான் . அது போன்ற உழைப்பின் வசீகரத்தை என் வாழ்நாளில் எப்போதும் , இப்போதும் செய்துகொண்டே இருக்கும் வாய்ப்பை இந்த வாழ்க்கை, எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறது . எந்த வேலை செய்தாலும் அதில் தனக்கு என்னவென்று கணக்குப் பார்த்துப் பார்த்து , மனசுக்குள் ஒரு "சிட்டையை" எப்போதும் , இப்போதும் வைத்துக்கொண்டே இருக்கிற ஆட்களை நானறிவேன் . அவர்களோடு பணியாற்றியும் , அவர்களிடம் இருந்து அதனைக் "கற்றுக்கொள்ள" த் தவறினேன் என்பது எனக்கான பெருமிதம் . ஒரு YELLOW BOOK போடுகிற அளவு அவர்களின் பெயர்ப் பட்டியல் பெரியது. என்ற போதும் , அதனினும் பெரியது,  எதையும் எதிர்பார்க்காது உழைக்கிற திருக்கூட்டம் என்பது தான், இப்போதும் உழைப்பதற்கான நம்பிக்கை .

தேர்தல் முடிந்து , வாக்குப்பதிவு நடக்கும் போது , எல்லா மேசைகளுக்கும் சென்று , மேசை வாரியாக வாக்கு எண்ணிக்கையைக் குறிக்கும் பணி எனக்குத் தரப்பட்டது . எனக்கு இடப்பட்ட பணிக்கு ஏற்ப , தேவையான Writing pad , பேப்பர் , பென்சில்,  ரப்பர், பேனா , வார்டுகளின் எண் , மேசைகளின் எண் என்று கோடு போட்டு வரைந்து வைத்துக் கொண்டு வாக்குகள் என்னும் இடத்திற்குப் போனேன் . இரவெல்லாம் முனைப்போடு செய்த அந்தப் பணியில் தங்கமாரியும் , சௌபாவும் தான் துணை இருந்தார்கள் .   


வாக்குகள் எண்ண எண்ண,  ஒவ்வொரு மேசையாகப் போய், வாக்கு எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டே வந்து, அவ்வப்போது அந்த எண்ணிக்கைகளைக் கூட்டிக்கொண்டே வந்து , 5900 க்கும் அதிகமான வாக்குகளில் தோழர் சங்கரையா வெற்றிபெற்றார் என்பதை முதலில், வெளியில் வந்து சொன்ன பெருமை எனக்கு வாய்த்தது . பிறகு ஒரு அரைமணி அல்லது ஒருமணிநேரம் கழித்துத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது .1980 மே மாதம் இறுதியில் இந்தத் தேர்தல் நடந்தது . 


தேர்தலுக்கு முன்பும் , தேர்தலுக்குப் பின்னும் நான் முழு நேரமும் கட்சிப்பணி செய்துகொண்டு இருந்தேன் . அந்த ஆண்டு இறுதியில் , கட்சி என்னைத் தனது முழுநேர ஊழியராக சேர்த்துக்கொள்வதென்று முடிவு செய்து , அந்த முடிவும் எனக்குச் சொல்லப்பட்டு விட்டது .  

இந்தச் சூழலில் தான் நான் மறந்துபோய் இருந்த வங்கி வேலைக்கான பணி நியமன ஆணை எங்கள் வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது. நானோ வீட்டைவிட்டு வெளியேறிப் பல மாதங்களாகி இருந்தது .

எனக்கொரு வங்கி வேலை கிடைத்ததை, எனக்கு  முதலில் சொன்னது... 

அப்புறம் சொல்லுகிறேன் ..

-பாரதி கிருஷ்ணகுமார்.

2 comments:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 23 - " எங்க கட்சி உங்க கட்சி மாதிரி கெடையாது ... இங்க எவனும் எவன் பேச்சையும் கேக்க மாட்டானுங்க .. எல்லோருமே MGR சொன்னாத்தான் கேப்பானுங்க " என்று ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் என்னிடம் சொல்லிவிட்டு , வெடித்துச் சிரித்தார். அதை ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவையாகக் கருதி நானும் சிரிக்கவேண்டும் எனக் கருதினார் . நான் அவர் பேசியதை ரசிக்கவில்லை . ரசிக்கப் பழகி இருக்கவில்லை.
- அருமை. பெருமிதமாக இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Shri Prajna said...

Arumai BK sir

Post a Comment