மானமிகு கல்வி அமைச்சருக்கு!
உங்களுக்கு இது எனது இரண்டாவது கடிதம்.
எனது முந்தைய கடிதத்தை நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை.
படித்திருந்தாலும் பயன் ஏதுமில்லை.
ஏனெனில் 10ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடந்தே தீரும் என்றும்,
அதற்கு "முதலமைச்சரே" ஒப்புதல் தந்து விட்டதாகவும் நீங்கள் அறிவித்து விட்டீர்கள்.
யாரோ பெற்றோர்கள் தொடுத்த வழக்கில், கல்வித் துறையின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று நீதியரசர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால்,இப்போது மீண்டும் ஒரு வழக்கு வந்திருப்பதாகவும் விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.என்ன தீர்ப்பு வருமோ? நீதிமன்றங்களில் தீர்ப்பு வருமென்று தெரியும்.நீதி கிடைக்குமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்? அது நடக்கிறபடி நடக்கட்டும்...
எதற்காகத் தேர்வுகள் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்பதற்கான காரணங்கள் எதையும் நீங்கள் இதுவரை சொல்லவில்லை.இது உங்கள் அதிகார மமதையைத் தவிர வேறு எதையும் உணர்த்தவில்லை.
எந்தக் கேள்விக்கும் , யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் உங்களுக்கில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்.அது உண்மையல்ல.ஒரு ஜனநாயக நாட்டில் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை , பொறுப்பு. வெளியில் சொல்லமுடியாத காரணங்களுக்காகத்தான் நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று உங்களைப்பற்றி தவறாகக் கருதுவது பற்றிக் கூட நீங்கள் கவலைப்படவில்லையா?
அவசர அவசரமாக தேர்வுகளை நடத்தி , தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு , பள்ளிகள் துவங்கும் தேதியையும் அறிவித்தால் தான் , முதல் பருவத்துக்கான கட்டணமும் , வேறு வகையான கட்டணங்களும் வசூலிக்க முடியும் என்று சில தனியார் பள்ளிகள் விரும்புவதாகவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நீங்களும் உங்கள் துறையில் சில அதிகாரிகளும் "கடுமையாக உழைத்து" , பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று,பலர் பகிரங்கமாகப் பேசுவதை ... நான் நம்பவில்லை. ஒரு மாநிலத்தின் கல்வி அமைச்சரும் , அவரது அமைச்சகமும் அப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை , ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும் எப்படி நம்புவது?
ஏன் தேர்வுகள் நடத்தக்கூடாது என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள்...
- கொரோனா நோய்த் தோற்றும்,கொரோன உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் தேர்வுகள் தேவையற்றவை. அதுமட்டுமன்றி சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது குழந்தைகளுக்குச் சாத்தியமே இல்லை.
- பொதுப் போக்குவரத்து இன்னும் சீராக இயங்கத் துவங்கவில்லை.குழந்தைகள் எப்படித் தங்கள் இல்லங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து திரும்ப இயலும்?
- சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய அதிகம் கொரோனா பாதித்த பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு என்று ஏற்கனவே அறிவித்த பிறகு, இப்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 நடக்கும் என்று அறிவிப்பது கோமாளித்தனம் அல்லவா ?
- குழந்தைகள் தேர்வு மையங்களுக்கு யார் துணையோடு எப்படி வருவார்கள்? உணவு குடிநீர் இவைகளை எங்கு பெறுவார்கள்? யார் துணையுடன் எப்படித் திரும்பப் போவார்கள்?
- ஏற்கெனவே விடுதிகளில் தங்கிப் படித்த குழந்தைகள் என்ன செய்வார்கள்?
- கொரோனா விடுமுறை துவங்கியதும் பெரும்பாலான கிராமத்து,மலைவாழ் ஏழைக் குழந்தைகள் விவசாய வேலைகளுக்குச் சென்று விட்டதைத் தாங்கள் அறிவீர்களா? அவர்களுக்கு எப்படி தகவல் போகும்?
- ஏற்கெனவே நீங்கள் அறிவித்த ஜூன் 1, பிறகு ஜூன் 15 என்கிற ஒத்திவைப்பு குறித்த அறிவிப்புகளே அவர்களுக்குப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுவும் உங்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக் குழந்தைகள் எல்லோரும் கரும்பு வெட்டும் வேலைக்கு போனது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? தெரியும் என்றால் , அதற்குப்பிறகும் தேர்வுகள் நடத்துவது இரக்கமற்ற செயல் அல்லவா ? தெரியாது என்றால் நீங்கள் எதற்குக் கல்வி அமைச்சராக இருக்கிறீர்கள்?
- நகர்ப்புறக் குழந்தைகளிலும் ஆகப் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் நேரத்தை அலைப்பேசி,மற்றும் தொலைகாட்சி முன்பு தான் செலவிட்டது என்பதும் உங்களுக்கு தெரியாதா?
- ஏற்கெனவே கற்பித்ததை,கற்ற பாடங்களை மீண்டுமொருமுறை படிக்காமல்,வாசிக்காமல்,தேர்வெழுதுவது குழந்தைகளுக்குக் கடினமானது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?
- தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது குழந்தைகளின் மனநிலை சீராக இருப்பதற்கு மிக மிக அவசியமானது என்று மனநல மருத்துவர்கள் கூட்டாக அறிக்கை வெளி யிட்டது உங்கள் கவனத்திற்கு வரவே இல்லையா?
- இவ்வளவு கெடுபுடிகளுடன், இந்தத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் உங்கள் "கல்வித்தரம்" உயரும் என்று நீங்கள் மெய்யாகவே நினைக்கிறீர்களா?
- கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் (2017-95.2% , 2018-94.4% , 2019-93.6%)மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் சதவீதம் 94.4% என்றால்,தேர்வுகளே எதற்கு என்று உங்கள் அறிவிற்குத் தோன்றவே இல்லையா? மீதமுள்ள 5.6% சதவீதம் மாணவர்களையும் சேர்த்துத் "தேர்வுகளே இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதால் என்ன இழப்பு வந்து விடப்போகிறது?"
- கல்வி வணிகத்திற்கு உதவும் பொருட்டே நீங்கள் அவசர அவசரமாக இந்தப் பணியைச் செய்கிறீர்கள் என்று குற்றம் சுமத்துவது தவறில்லை தானே?
- மாணவர்களின் உயிர் எங்கள் உயிரை விட விலைமதிப்பற்றது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்று படித்தேன்.அதை நீங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இங்கு எவருக்கும் இல்லை.
- நீங்கள் மீறித் தேர்வை நடத்தினால் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் என அனைத்துப் பிரிவினர்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து இந்த முடிவை நீங்கள் மேற்கொள்கிறீர்கள்.
- இதன் மூலம் அனைத்துப் பிரிவினருக்கும் மிகுந்த மன உளைச்சலையும்,நடைமுறைத் துன்பங்களையும் நீங்கள் பரிசாகத் தருகிறீர்கள்.
- இதன் காரணமான இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்து பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியே தூக்கி எறியப்படும் பாவத்திற்கும் நீங்கள் காரணமாக இருக்கப்போகிறீர்கள்.
தேர்வுகளை நடத்துங்கள்.
குழந்தைகளின் கழுத்தில் உங்கள் முழங்காலை வைக்கிறீர்கள்.
எங்களால் சுவாசிக்க முடியவில்லை என்ற, ஏழைக்குழந்தைகள், கற்றல் திறனில் மிதமான ,கற்றல் திறனில் பின்தங்கிய குழந்தைகளின் குரல் எங்களுக்குக் கேட்கிறது.
ஏறி மிதிப்பவர்களுக்கு, எப்போதும் ஏழைகளின் குரல் கேட்பதே இல்லை.
இத்தனைக்குப் பிறகும் நீங்களும், உங்கள் துறையில் உங்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அதிகாரிகளும், இறுதி அனுமதி வழங்கும் முதலமைச்சரும் தேர்வு நடத்துவது என்று முடிவெடுத்தால் ....
ஏனோ..
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கென்று இருந்த பள்ளியறையை மூடிய குடும்பங்களுக்குத் தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் இல்லை என்கிற ஒரு கதை இப்போது நினைவுக்கு வருகிறது.
****
****
நேற்றிரவு எழுதிய இந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட மனமில்லை.இது உங்கள் செயல்பாட்டிற்கு ஒரு சாட்சியமாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இன்று காலையில் இதைப் பதிவேற்றம் செய்யும் தருணத்தில்,10 மற்றும் 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக,தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் அறிவிப்பைக் காண நேர்ந்தது.
இலட்சக்கணக்கான ஏழைக்குழந்தைகளின் சார்பில் தமிழக அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றி.
1 comment:
நல்ல தர்கங்களை முன் வைத்தீர்கள்.எனக்கு அரசின் இந்த முடிவால் என்ன மகிழ்ச்சி என்றால் எந்த மாணவ உயிரும் போகாது.கரோனாவாலும் சரி,தேர்வு முடிவுகளாலும் சரி.
Post a Comment