Thursday, June 11, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 19



ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...
கூட்டத்தில் எழுந்த ஆரவாரமும் , MGR மற்றும் மேடையில் இருந்தவர்களின் முகக்குறிப்பை உணர்ந்து பின்னே திரும்பிப் பார்த்தேன் .

எனக்கு நான்கைந்து வரிசைகள் தள்ளி நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் நின்றுகொண்டு இருந்தார் . அவர் தனது  இடது கையால் தனது வலது முழங்கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்க , உயர்த்திய அவரது வலது உள்ளங்கையில் ஒரு அருநெல்லிக்காய் அளவுள்ள கற்பூரம் கனன்று எரிந்து கொண்டிருந்தது . அடுத்த கணம் அவர் MGR க்கு நேரே தனது வலது கரத்தை உயர்த்தி , MGR க்கு திருஷ்டி கழிக்க ஆரம்பித்தார்.  கூட்டம் வெறிகொண்டு கத்திக் கைதட்டிப் புகழ் முழக்கம் செய்துகொண்டே இருந்தது . இடமிருந்து வலமாக , வலமிருந்து இடமாக மூன்று முறை அவர் சுற்றினார் . சிறிதும் பதட்டமோ , எரிச்சலோ , வலியோ ... என எந்த உணர்ச்சியும் இன்றி , பக்திப் பெருக்கோடு அதைச் செய்து கொண்டிருந்தார் . 

மேடையில் இருந்தவர்களில் தோழர் NS மட்டும் பதறிப்போய் அவரை அமருமாறு செய்கை காட்டிக்கொண்டே இருந்தார் . அந்த மனிதரோ MGR ஐத் தவிர எதையும்,யாரையும் பார்க்கவில்லை. நான் கீழிருந்து பார்த்தபோது , MGR இன் கருப்புக் கண்ணாடியில் அந்த எரியும் கற்பூரத்தின் பிம்பம் தெரிந்தது . நான் கருப்புக் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும்  , அந்த மனிதனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . MGR என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறிய இயலாமல் , எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அவரது கண்கள் தெரியாதபடி அவரது கருப்புக் கண்ணாடி இருந்தது . அதை அவர் அணிந்திருக்கவில்லை என்பதைப்போலவும் மாறாக அவரது உடலுறுப்பே போலவும்,அது இருந்தது .

 MGR ஆடாமல் , அசையாமல் அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் .  பதறவில்லை . தடுக்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் அதை அவர் மானசீகமாக ஏற்றுக்கொண்டு இருந்தார். கருப்புக் கண்ணாடிக்கு வெளியே தெரிந்த அவரது முகம் அதைத்தான் உணர்த்தியது .எனக்கு MGR மீது தீராத கோபமும் , அருவருப்பும் தோன்றியது . அந்த உணர்ச்சி எனக்கு இப்போதும் இருக்கிறது. 

திருஷ்டி கழித்து , தீபாராதனை  முடிந்து அந்த மனிதர் அமைதியாகப் பதட்டமே இல்லாமல் தரையில் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார் .ஆனால்,இம்முறை அவரது இடதுகை வலது மணிக்கட்டைப் பற்றி இருந்தது. முகத்தில் வலியின் எரிச்சலின் ரேகை  மெல்லிதாகப் பரவி இருந்ததை நான் கண்டேன். 

இந்தத் தருணத்தில்,இது தொடர்பில் இன்னொன்றை எழுத விரும்புகிறேன். கோடை வெயிலுக்கு இதம் வேண்டி ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இரவும் பகலும்,24 மணி நேரமும் ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை எப்படிப் புரிந்துகொள்வது? தனது உணர்ச்சிகளை மறைப்பதற்கான கேடயமாக கருப்புக் கண்ணாடியை ஒருவர் அணிகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.வியக்கத்தக்க முறையில் MGR கருப்புக் கண்ணாடியை அணிந்துக்கொண்டது போலவே,அவரது அரசியல் எதிரியான கருணாநிதியும் அணிந்துகொண்டே இருந்தார். நானறிந்தவரை உலகிலேயே 24 மணி நேரமும் கருப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டே இருந்தவர்கள், அவர்கள் இருவர் மட்டுமே.அவர்களோடு உரையாடும்போது,அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டறிவது கடினம்.எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறிவது மிக மிகக் கடினமானது.

மேடையில் வந்து அமர்ந்து வலது காலை இடதுகாலின் மீது போட்டுக்கொண்டதைத் தவிர MGR மற்ற நேரம் முழுவதும் ஆடாமல் அசையாமல் மெழுகு பொம்மை போல் உட்கார்ந்து இருந்தார். இருபது முப்பது நிமிடங்களுக்குப் பிறகு நாற்காலியில் இருந்து சற்று முன்னே வந்து இரண்டு கைகளாலும் வேட்டியைப் பிடித்து உயர்த்திக்கொண்டு இடது காலைத் தூக்கி வலதுகாலின் மீது போட்டுக்கொண்டார். இந்த ஒரு அசைவுக்காகக்,கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்து முழங்கிச் சிலிர்த்தது.
  
ஓரிருவர் பேசி முடித்ததும் ,தோழர் NS பேசினார். தோழர் NS பேசத் துவங்கியதில் இருந்து முடிக்கிறவரை அவரது பேச்சை,லேசாகத் தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு,முழுவதுமாக கவனித்தார் MGR. தோழர் NS பேசி முடித்ததும் MGR ஐப் பேச அழைத்தார்கள்.கட்டியிருந்த வேட்டி கசங்காமல் விருட்டென்று எழுந்து,ஒலிபெருக்கிக்கு அருகே போனார் MGR. அவர் பேசுவார் என்று அறிவித்ததிலிருந்து, பேசத் துவங்குகிற வரை கூட்டத்தின் பேரிரைச்சல் குறையவே இல்லை. 

தனது வழக்கமான, "ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறப்புக்களே" என்றதும் கூட்டம் மேலும் ஆவேசமுற்று முழங்கியது. 

அவரே கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு செய்கையால் பணித்தார். "அவர் சொன்னால் மட்டுந்தான் கேட்போம்" என்பது அந்தக் கூட்டத்தின் பண்பாக இருந்தது. கூட்டம் ஆரவாரம் குறைந்து அவரது பேச்சைக் கேட்கத் துவங்கியது.

MGR க்குப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசத் தெரியாது என்றொரு பொதுக் கருத்து எல்லோருக்கும் எப்போதும் இருந்தது.ஆனால் அன்றைக்கு MGR அதைப் பொய்யாக்கினார்.

என்ன பேசினார்?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.        

1 comment:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 19 - கருப்புக் கண்ணாடி - எனக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment