Friday, June 5, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 18

முந்தைய மதுரைக் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  மாரியம்மன் தெப்பக்குளம்.

தோழர் N S.  அவர்களைச் சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில்  மீண்டும் மீண்டும் சந்திக்க நேர்ந்தது.


அவசரநிலையைத் தொடர்ந்து வந்த 1977 பாராளுமன்றத் தேர்தலில் இந்திராவும் எம் ஜி ஆரும் CPI உம் கூட்டணி . கருணாநிதியோ  ஜனதா கட்சி மற்றும் CPIM உடன் எதிர் அணியில் நின்றார். தமிழகத்தில் 39 இல் 34 இடங்களில் எம் ஜி ஆர் கூட்டணி  வென்றது .

ஆனால் மத்தியில் ஜனதா கட்சி  ஆட்சி.  மூன்றே ஆண்டுகளில் நிலைமை மாறியது. ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. எம் ஜி ஆருக்கும் , இந்திரகாந்திக்கும் இருந்த நல்லுறவும்
முறிந்தது .

இப்போது கருணாநிதியும் இந்திராகாந்தியும் ஓரணியில் நின்றார்கள் .  எம் ஜி ஆர் இடதுசாரிகளோடு எதிர் அணியில் நின்றார் .

1980 பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை கருணாநிதியும் , காங்கிரசும்  வென்றனர் . எம் ஜி ஆர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று துவண்டு போனார் . 

1980 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இந்திராகாந்தி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அ.இ அ தி மு க அரசைக் கலைத்தார் . அ இ அ தி மு க அரசைக் கலைக்க வேண்டும் என்று கருணாநிதியும் கோரிக்கை வைத்தார் . மூன்றே ஆண்டுகளில் அ இ அ தி மு க அரசு கலைக்கப்பட்டது .


நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வந்தது. கருணாநிதியும் , இந்திரா காந்தியும் ஓரணியில் . எம்  ஜி ஆர் இடதுசாரிகளுடன் இணைத்து கொண்டார். நாடளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற உற்சாகம் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் இருந்தது . அதைவிட மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தது காங்கிரஸ் . இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆகியிருந்தார்.


1977சட்டமன்றத் தேர்தலின் போது, அருப்புக்கோட்டை தொகுதியில் நின்று வென்ற எம்  ஜி ஆர்,   1980 சட்டமன்றத் தேர்தலில் CPIM  ஆலோசனையை ஏற்று மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா CPIM இன் வேட்பாளர் . மதுரை மத்திய தொகுதியில் தி மு க காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பழ நெடுமாறன் சுயேச்சை வேட்பாளர் . அவரை ஆதரித்து அந்தத் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்தவில்லை எம் ஜி ஆர் . 


மொத்தத்தில் மதுரை மிகுந்த உஷ்ணமான களமாக மாறி இருந்தது . இரண்டு தேர்தல் பணிகளின் போதும் தோழர் NS உள்ளிட்ட எல்லாத் தலைவர்களையும் அன்றாடம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது .


மதுரை கிழக்குத் தொகுதியில் ,64 ஆவது வார்டில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது . அங்கிருந்த இ எம் எஸ் படிப்பகம் தான் தங்குமிடம் . அந்த வார்டில் என்னோடு இணைந்து பணியாற்ற நாட்டரசன்கோட்டையில் இருந்து தோழர் இளஞ்செழியன் வந்திருந்தார் . அவர் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்தவர் . 


என் உயரம் . நல்ல தமிழ் அறிவு . நல்ல தோழமைப்பண்பு . நல்ல நகைச்சுவை உணர்வு . சேர்ந்து பணியாற்றியது மறக்கவொண்ணா இன்பம் . அங்கு எங்களைப் பார்க்கவரும் பலரில் சௌபாவும் , எப்போதும் இருந்தான் . 


அவ்வப்போது எனது அன்பிற்குரிய ஆசான் , அருமைத்தலைவர் எஸ் ஏ பி யும் அங்கு வருவார் . நான் அவருக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமாகி  நட்பும் தோழமையும் வளர்ந்து பூத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை .


அவர் இளஞ்செழியனின் நலம் காணவே அங்கு வருவார் என்பதை நான் அறிவேன் . அது குறித்து இளஞ்செழியனுக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது . இரவெல்லாம் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் . பல இரவுகளில் சேகர் , தங்கமாரி , சௌபா என யாராவது சேர்ந்து கொள்ளுவார்கள் . பெரும்பாலான சமயங்களில் எல்லோரும் இருப்பார்கள். என்னைத் தேடிவரும் என் நண்பர்கள் தோழர்கள் குறித்து இளஞ்செழியன் எப்போதும் எந்தப் புகாரும் சொன்னதில்லை . மாறாக அகமிக மகிழ்ந்து அரவணைத்துக் கொண்டார் . நாங்கள் எல்லோருமே எந்த வருமானமும் இல்லாத , அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவர்கள்.எனது நண்பர்கள் என்னைப் பார்க்க வருவது குறித்துச் சொல்லப்பட்ட புகார்களை இளஞ்செழியன்  இடது கையால் தள்ளினார் . 


கடுமையாகத் தேர்தல் பணி செய்தோம் . வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பது , வீதிகளில் சின்னம் வரைவது , சுவர் விளம்பரங்கள் எழுதுவதை உறுதி செய்வது , ஓவியருக்குத் தேவையான உதவிகள் செய்வது , வீதி வீதியாகப் போய் நிதி வசூல் செய்து அதைப் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பது ,  போஸ்டர்கள் ஒட்டுவது, அதற்கான பசை காய்ச்சுவது ,வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது , வீடுகளுக்குத் தருவதற்கான டோர் ஸ்லிப் எழுதுவது , அதை வீடுகளில் கொண்டுபோய்த் தருவது ,    அன்றாடப் பணிகள் குறித்து கட்சி அலுவலகத்திற்குத் தகவலும் அறிக்கையும் தருவது , மாற்றுக் கட்சியின் பணிகளை கண்காணிப்பது , மதிப்பிடுவது , அது பற்றியும் கட்சிக்குத் தகவல் தருவது , வார்டுக்குள் நடக்கும் மாற்றுக்கட்சிப் பொதுக்கூட்டங்களுக்குப் போவது , அவர்கள் பேசுவதைக் கட்சிக்குச் சொல்லுவது ,தொகுதியின் மற்றப் பகுதிகளில் நடக்கும் சிறந்த பணிகளைக் கண்டு நமது வார்டிலும் அதை அமலாக்குவது , பிரச்சாரத்திற்குத் தலைவர்கள் வந்தால் அவர்களுடன் இணைந்து செல்வது , அவ்வப்போது ஒலிபெருக்கி இல்லாமல் தெருமுனைக் கூட்டங்களில்  உரையாற்றுவது , அவ்வப்போது அழைக்கப்படும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுவது ... 

 எனப் பலப்பல பணிகளைச் செய்துகொண்டே இருந்தோம் . கடின உழைப்பின் அருஞ்சுவையை அருந்திக்கொண்டே இருந்த நாட்கள் அவை. 

ஆனால் கூட்டணியில் இருந்த அ இ அ தி மு கவின் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் எங்களோடு பணியாற்றவில்லை . அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிட்ட மேற்குத் தொகுதிக்குக் குடிபெயர்ந்து போய் விட்டார்கள் . நாங்கள் கட்சியில் புகார் சொல்லுவதும் , கட்சி அ இ அ தி மு க தலைமைக்குப் புகார் சொல்லுவதும் , உடனே இரண்டு நாட்கள் எங்கள் கண்களில் படத் திரிவதும் , பிறகு காணாமல் போவதும் என்று நாடகம் நடந்துகொண்டே இருந்தது .


இரண்டு கட்ட வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது . இப்போது போல பிரச்சாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு ஏதும் அப்போதில்லை . கலைஞர் இரவு ஒரு மணிக்கும் , எம் ஜி ஆர் அதிகாலை மூன்று மணிக்கும் கூட வாக்குச் சேகரிக்க வருவார்கள் . ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து நிற்பார்கள் . முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது .


இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வந்தது மதுரை . வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் இருந்தபோது , தோழர் சங்கரய்யாவை ஆதரித்து , மதுரை கிழக்குத் தொகுதியில் , ஒரு பொதுக்கூட்டத்தில் எம் ஜி ஆர் பேசுகிறார் என்று சொல்லப்பட்டது . 


மதுரை கீழவாசலுக்கு அருகில் இருந்த மைனா தெப்பக்குளம் என்கிற இடத்தில் அவர் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டது .

அவரது வருகை மற்றும் பொதுக்கூட்டம் பற்றி விரிவாக , வீடு வீடாக விளம்பரம் செய்யுமாறு பணிக்கப்பட்டோம் . எல்லா வகையான விளம்பரங்களும் செய்தோம் . 

கூட்ட நாளன்று மாலையில் எம் ஜி ஆரின் கூட்டத்திற்குப் புறப்பட்டோம் . சௌபாவும் , தங்கமாரியும் உடன் வந்தார்கள் . கூட்டம் அப்போதே அலைமோத ஆரம்பித்து இருந்தது . மேடைக்கு அருகில் போவது கடினமாக இருந்தது . திகைத்துக் கொண்டிருந்தபோது தோழர் MM எங்களை அழைத்தார் . எங்களை மேடைக்கு முன்புறம் முதல் வரிசையில் தரையில் உட்கார வைத்தார் . " அவர் என்ன பேசுறார்னு விரிவா குறிப்பு எழுதி வச்சுக்கங்க... அத நாளைக்குத் தீக்கதிர்ல போடலாம் " என்று காதில் முணுமுணுத்தார், தோழர் MM . வரவு செலவு எழுதிவைத்த ஒரு காகிதத்தின் பின்புறத்தில் MGR பேசுவதைக் குறிப்பெடுக்கத் தயாரானேன்.நான் என்னை ஒரு பத்திரிகையாளன் ஆக முதன்முறை உணர்ந்தேன் . 


அதுவரை இருந்த கண்கள் அல்ல எனது கண்கள் ... எனது கண்கள்  காதுகள் என எல்லா அவயங்களும் புதிதாக வேறொன்றாக மாறி இருந்ததை உணர்ந்தேன் . ஒரு பத்திரிகையாளனாக ஆகப் போகிறோம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது . அந்த விருப்பம் கல்லூரி நாட்களில் நண்பர்களோடு நடத்திய சிறு பத்திரிகைகளின் தொடர்ச்சி தான் . 


கூட்ட மேடை , அதன் உயரம் , மேடையில் இருந்தவர்கள் , பிரமுகர்கள் , ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டம் எல்லாவற்றையும் கண்கள் அளக்க ஆரம்பித்தது . 


மாலை ஏழு மணிக்குக் கூட்டம் துவங்கும் என்று சொல்லி இருந்தார்கள் . ஆறு மணிக்கே கூட்டம் அலைமோதியது . மதுரை மேற்குத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு , தான் தங்கி இருக்கும் பாண்டியன் ஹோட்டலுக்கு MGR போய்க்கொண்டு இருக்கிறார் என்று தகவல் வந்தபோது மணி எட்டரை . கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது . மேற்கே கீழவாசலைத் தாண்டியும் , கிழக்கே அரசமரம் வரைக்கும் கூட்டம் . கண்ணுக்கு எட்டியவரை கூட்டம் என்பது அதுதான் . 


பாண்டியன் ஹோட்டலில் இருந்து அவரை அழைத்துவர CPMதலைவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது மணி ஒன்பதரை .


பத்து மணி தாண்டிய சில நிமிடங்களில், அந்த இடம் மொத்தமும் பரபரப்பானது . கார்கள் வருவதற்காக , ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த ஒரு பாதையில் கீழவாசலில் இருந்து, பொதுக்கூட்ட மேடை நோக்கி இரண்டு மூன்று கார்கள்   விரைந்து வந்தன.


முதல் காரில் இருந்து தோழர் NS வெளியில் வந்த அதே கணத்தில் இரண்டாவது காரில் இருந்து எம் ஜி ஆர் வெளிப்பட்டார் . தாமதம் ஏதுமின்றி மேடையில் ஏறுவதற்காகப்  போடப்பட்டிருந்த படிகளில் மின்னலைப் போலத் தாவி ஏறினார் . மேடையில் இருந்த விளக்கு ஒளியில் மேலும் மின்னி மின்னி ஒளிர்ந்தார் . மேடையின் முகப்பு வரைவந்து , நான்கு திசையும் நடந்து திரும்பி கரங்களைக் கூப்பி , கரங்களை அசைத்து , புன்னகைத்து ஒரு பெரும் உற்சாக அலையைத் தன் செயல்களால் உற்பத்தி செய்துகொண்டே இருந்தார் . கூட்டம் வெறி கொண்டு கூவிக் கத்தி வாழ்த்தி கரை புரண்டது .


சட்டென அனைத்தையும் நிறுத்திக்கொண்டு தனக்கான  நாற்காலியில் அமர்ந்து கொண்டார் . கூட்டத்தைக் கைகளால் அமைதிப் படுத்தினார் . அவரது ஒவ்வொரு அசைவுக்கும் கூட்டம் ஆர்ப்பரித்தது . கைகளை மீண்டும் சற்று அதிகமாக உயர்த்திக் கூட்டத்தை அமைதி காக்கச் சொன்னார் . கூட்டம் கொஞ்சம் அடங்கியது . NS பக்கமாகத் திரும்பி கூட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார். 


சந்தன நிறத்தில் வேஷ்டி , அதே நிறத்தில் முழுக்கைச் சட்டை . வலது மணிக்கட்டில் , சட்டையின் மீது கட்டிய கைக்கடிகாரம் . வலது கரத்தில் சுருட்டி இறுகப் பிடித்த கைக்குட்டை . வேஷ்டியைத் தழையத் தழையக் கட்டி இருந்தார் . நல்ல புதிய நன்கு பாலிஷ் செய்த கருப்பு கட் ஷூ .எங்கிருந்து பார்த்தாலும் , அவரது கண்கள் தெரியாத அடர்ந்த கறுப்புக் கண்ணாடி .



யாரோ வரவேற்றுப்பேசிக்  கொண்டிருந்தார்கள் .சட்டென 
தனது இருக்கையில் இருந்து சற்று முன்னே வந்து குனித்து பார்த்தார் . மீண்டும் சற்று பின்னே சென்று , உட்கார்ந்தபடியே தனது இரண்டு கைகளாலும் , தனது முழங்காலுக்கு அருகே  , தனது வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு , தனது வலது காலை எடுத்து இடது காலின் மீது போட்டுக் கொண்டார். கசங்காமல் வேஷ்டியை மெதுவாகக் கீழே விட்டார். அதைப் பார்த்துக் கூட்டம் ஆர்ப்பரித்தது .இடது கையின் மீது வலது கரத்தை வைத்துக் கொண்டார் . தோழர் NS பேசுவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக , நான் மிகவும் பதறிப் போன , என்னால் பார்க்கச் சகிக்காத ஒரு செயல் எனக்குச் சற்றுப் பின்னே நடந்தது .

ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...


என்ன அது ...


அப்புறம் சொல்லுகிறேன்... 


- பாரதி கிருஷ்ணகுமார். 

2 comments:

drJeeva said...

Always leaving a twist in each n every part... congrats

Rathnavel Natarajan said...

நான் என்னை ஒரு பத்திரிகையாளன் ஆக முதன்முறை உணர்ந்தேன் .

அதுவரை இருந்த கண்கள் அல்ல எனது கண்கள் ... எனது கண்கள் காதுகள் என எல்லா அவயங்களும் புதிதாக வேறொன்றாக மாறி இருந்ததை உணர்ந்தேன் . ஒரு பத்திரிகையாளனாக ஆகப் போகிறோம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது . அந்த விருப்பம் கல்லூரி நாட்களில் நண்பர்களோடு நடத்திய சிறு பத்திரிகைகளின் தொடர்ச்சி தான் . அருமை. தொடருங்கள் சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment