" எனக்கொரு சத்தியம்செய்து கொடுப்பீர்களா?" என்று கேட்டார் MGR. கூட்டம் "செய்வோம்" "செய்வோம்" என்று , ஒழுங்கற்று வீசுகிற காற்றுப் போல ஊளையிட்டது .
MGR அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது . என் முந்தையவொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல , MGR மதுரை மேற்குத்தொகுதியில் போட்டி இட்டதால் , அ இ அ தி மு க காரர்கள் ஒருவர் கூட கிழக்குத் தொகுதியில் தென்படவே இல்லை . எல்லோரும் மேற்குத் தொகுதிக்குத் தேர்தல் வேலை செய்யப்போய் விட்டார்கள். ஆனால் மேற்குத் தொகுதி CPM தோழர்கள் , கிழக்குத்தொகுதிக்கு வராமல் மேற்கிலேயே நின்று பணியாற்றினார்கள். இந்த உண்மையை MGR முழுமையாக உணர்ந்து கொண்டார் . CPM தலைவர்களும் இந்தக் குறைபாட்டை MGR இடத்தில் சுட்டிக்காட்டினார்கள். அதைச் சரி செய்யும் பொருட்டே இந்த "சத்தியம்" என்கிற உத்தியைக் கையாண்டார் .
முதலில் எனக்கொரு சத்தியம் செய்து தருவீர்களா என்று கேட்டு, அவர்கள் சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட MGR , மிக நுட்பமாக அந்தப் பிரச்சனையைக் கையாண்டார் .
"தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற அச்சம் நண்பர் கருணாநிதிக்கு வந்துவிட்டது. எனவே நமது வெற்றியைத் தட்டிப்பறிக்க அனைத்துத் தவறான வழிமுறைகளையும் அவர் கையாளுவார். அ இ அ தி மு க வேட்பாளர்கள் மட்டுமல்ல, நமது கூட்டணியில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றாக வேண்டும் . அதை உறுதி செய்ய வேண்டும் என்றால் , யாரும் அவர்களுடைய சொந்தத் தொகுதியைவிட்டு வேறு தொகுதிகளுக்குப் போகக்கூடாது . அப்படிப் போனால் அதை நண்பர் கருணாநிதி முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவார் . அதை அனுமதிக்கலாமா ?" என்று கூட்டத்தை நோக்கிக் கேட்டார் . கூட்டம், "கூடாது" "கூடாது" என்று உச்ச ஸ்தாயியில் கூவியது .
கூட்டம் கூவி அடங்கியதும் MGR மென்மையாகத் துவங்கினார் . " ஆனால் ... உங்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக நண்பர் கருணாநிதி எந்தத் தந்திரத்தையும் கையாளுவார் . இன்றிலிருந்து , இப்போதிலிருந்து கிழக்குத் தொகுதியில் இருக்கும் என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகள் , வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்கும்வரை இந்தத் தொகுதியை விட்டுப் போக மாட்டோம் என்று என் தாயின் பெயரால் சத்தியம் செய்து கொடுப்பீர்களா ?" என்று கூட்டத்தை நோக்கித் தனது வலது கையை நீட்டினார் . என் தாயின் பெயரால் என்று கேட்டபோது மட்டும் அவர் குரல் நன்கு உயர்ந்தது . "செய்வோம்" "செய்வோம்" என்று மொத்தக் கூட்டமும் குரல் உயர்த்திக் கூவியது .
MGR வார்த்தைகளில் சொல்ல முடியாத உற்சாகத்தோடும் , அமைப்போடும் இருந்ததை என்னால் உணர முடிந்தது . MGR நிறுத்தவில்லை .." வாக்குப்பதிவு அன்றைக்குக் கற்பனை செய்ய இயலாத வதந்திகளைப் பரப்ப நண்பர் கருணாநிதி திட்டமிட்டு இருப்பதும் எனக்குத் தெரியும் . வாக்குப் பதிவு நடைபெறும் அன்றைக்கு நானே இறந்து விட்டதாக .... அவர் அந்த வாக்கியத்தை நிறைவு செய்யவே இல்லை. கூட்டம் துடிதுடித்துப் போனது . தலைவா ... அப்பிடிச் சொல்லாத... விதவிதமான எதிர்ப்புக் குரல்கள் , கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்கள் என்று ... சில நொடிகள் அமர்க்களமாகி விட்டது . MGR அசரவில்லை . கூட்டத்தைக் கைகளால் அமைதிப்படுத்திவிட்டு ,"நானே இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தாலும் , தொகுதியை விட்டுப் போகாமல் , அவரவர்கள் அவரவர் தொகுதியில் இருந்து கடமையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் " என்று தனது உரையை நிறைவு செய்தார் . தன் பேச்சில் கருணாநிதியைக் குறிப்பிடும் போதெல்லாம், நண்பர் கருணாநிதி என்றே குறிப்பிட்டார். "தி.மு.க." என்று, கட்சியின் பெயரைக் குறிப்பிடவே இல்லை.
பேசி முடித்ததும்,கைக்குட்டையால் வியர்வையை கவனமாக ஒற்றி எடுத்துக் கொண்டார்.அந்தச் சிறிய மேடையின் மூன்று பக்கமும் சுற்றி வந்து வணங்கினார் . கைகளை அசைத்தார் . சுற்றும் முற்றும் பார்த்தார் . அருகாமை வீடுகளின் மாடிகளில் நின்றவர்களை நோக்கிக் கும்பிட்டார் . இரண்டு கரங்களையும் குவித்து, இரண்டு கண்களுக்கு இடையில் கைகளைப் பொருத்தி , சற்றே தலை குனிந்து , வஞ்சகமின்றிக் கும்பிட்டார் . அவர் கும்பிடும் விதம் , அவரை எதிர்கொள்ளும் எவரையும் இருகரம் கூப்பிக் கும்பிடவைக்கும் வகையான வணக்கம். சட்டென படிகளில் தாவித் தாவி இறங்கினார் . கூட்டம் கொண்டாடியது . கண்ணிமைக்கும் நேரத்தில் தனது காரில் போய் ஏறிக் கொண்டார் . கூட்டம் தேனீக்கள் போலக் காரை மொய்த்தது .அவரது பாதுகாவலர்களும் , செந்தொண்டர்களும் அவரது கார் போக வழி ஏற்படுத்தித் தந்தார்கள் . கூட்டம் கலைந்தது.கலைந்து விலகியது. ஒரு ஐம்பது சினிமா தியேட்டர்களில் ஒரே சமயத்தில் காட்சி முடிந்த உணர்வு , எனக்கு உண்டானது .
நான் சௌபாவைப் பார்த்தேன் .
சௌபா சொன்னான் ,"BK ... மத்தவனெல்லாம் நடிகன் ... இவன் மகா நடிகன் ". நான் சௌபாவுக்குக் கைகளை நீட்டினேன் . அவனும் புன்னகைத்தபடி கைகளை நீட்டினான் .
நான் அவன் கரம் பற்றிக் குலுக்கினேன். "உள்ளங்கை உண்மை" என்றேன் . சௌபா புரிந்துகொண்டு உரக்கச் சிரித்தான் . நானும் அவன் புரிந்துகொண்டதை உணர்ந்து , மகிழ்ந்து சிரித்தேன் .
நானும் அவனும் சிரிக்க ஆரம்பித்தால், அது மகிழ்ச்சியின் உச்சம் . எங்கள் அடக்கமுடியாத சிரிப்பைப் பார்த்து மகிழ்ந்து , என்னவென்றே தெரியாமல் சிரித்தவர்கள் உண்டு . நாங்கள் சிரிப்பதைப் பார்த்து வியந்தவர்கள் உண்டு .பயந்தவர்கள் உண்டு . பொறாமைப் பட்டவர்களும் உண்டு . உருண்டு உருண்டு சிரிப்பது என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள் . அப்படிச் சிரிப்பது எங்களுக்குப் பழக்கமாக இருந்தது. சிரிக்கத் தேவையான செய்திகள் எங்களுக்காகச் சேர்ந்துகொண்டும் இருந்தது. இதை எழுதுகிறபோது கூட நான் புன்னகைத்துக்கொண்டே எழுதுகிறேன் என்பது எங்கள் சிரிப்பின் சிறப்பு தான் .இறந்தவர்களை நினைக்கிற போது நமக்குத் துன்பமான உணர்வுகள் மட்டுமே வருவதில்லை. அவர்களோடு இருந்து பெற்ற இன்பங்களும் அதே இன்பத்தைத் தருவது தனித்த வரம் .
அது கிடக்கட்டும் . MGR தன் தாயின் பெயரால் வாங்கிய சத்தியம் பலித்ததா ?
அப்புறம் சொல்லுகிறேன் ...
- பாரதி கிருஷ்ணகுமார்.
4 comments:
superb writeup !
பேசி முடித்ததும்,கைக்குட்டையால் வியர்வையை கவனமாக ஒற்றி எடுத்துக் கொண்டார்.அந்தச் சிறிய மேடையின் மூன்று பக்கமும் சுற்றி வந்து வணங்கினார் . கைகளை அசைத்தார் . சுற்றும் முற்றும் பார்த்தார் . அருகாமை வீடுகளின் மாடிகளில் நின்றவர்களை நோக்கிக் கும்பிட்டார் . இரண்டு கரங்களையும் குவித்து, இரண்டு கண்களுக்கு இடையில் கைகளைப் பொருத்தி , சற்றே தலை குனிந்து , வஞ்சகமின்றிக் கும்பிட்டார் . அவர் கும்பிடும் விதம் , அவரை எதிர்கொள்ளும் எவரையும் இருகரம் கூப்பிக் கும்பிடவைக்கும் வகையான வணக்கம். சட்டென படிகளில் தாவித் தாவி இறங்கினார் . கூட்டம் கொண்டாடியது . கண்ணிமைக்கும் நேரத்தில் தனது காரில் போய் ஏறிக் கொண்டார் . சௌபா சொன்னான் ,"BK ... மத்தவனெல்லாம் நடிகன் ... இவன் மகா நடிகன் ". நான் சௌபாவுக்குக் கைகளை நீட்டினேன் . அவனும் புன்னகைத்தபடி கைகளை நீட்டினான் - அருமை. மிகவும் ரசித்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
“ இறந்தவர்களை நினைக்கிற போது நமக்குத் துன்பமான உணர்வுகள் மட்டுமே வருவதில்லை. அவர்களோடு இருந்து பெற்ற இன்பங்களும் அதே இன்பத்தைத் தருவது தனித்த வரம்”
சிறப்பு BK சார் என்ன சொல்ல...👌🏽
“ இறந்தவர்களை நினைக்கிற போது நமக்குத் துன்பமான உணர்வுகள் மட்டுமே வருவதில்லை. அவர்களோடு இருந்து பெற்ற இன்பங்களும் அதே இன்பத்தைத் தருவது தனித்த வரம்”
ஆஹா அருமை 👌
Post a Comment