MGR க்குப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசத் தெரியாது என்றொரு பொதுக் கருத்து எல்லோருக்கும் எப்போதும் இருந்தது.ஆனால் அன்றைக்கு MGR அதைப் பொய்யாக்கினார்.
வழக்கமான முறையில் , நிகழ்ச்சிக்கான நோட்டீஸில் இருந்த பெயர்களை வாசித்து முடித்ததும், அர்த்தமுள்ள ஒரு பேச்சைத் துவங்கினார் .
மூன்றே ஆண்டுகளில் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது நியாயமற்ற செயல் என்பதை தந்து பேச்சின் சாரமாக்கினார் .
"எதற்காக எனது ஆட்சியைக் கலைத்தீர்கள் ? இந்த இராமச்சந்திரன் ஊழல் செய்தானா " ... என்று கேட்டுவிட்டு சிலநொடிகள் மௌனம் காத்துவிட்டு "இல்லை" என்று தனியே சொல்லி நிறுத்தினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. பிறகு, தனது திறனைக் காட்டினார் MGR.
லஞ்சம் வாங்கினேனா ? நிறுத்திக் கொண்டார் . கூட்டம் இல்லை என்றது .
நிர்வாகத்தில் தலையிட்டேனா ?
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினேனா ?
என் நண்பர்களுக்கு ஏதாவது சலுகை காட்டினேனா ?.... கேள்விகளை மட்டும் அவர் கேட்க, கூட்டம் சீற்றத்துடன் இல்லை இல்லை என்று முழங்கியது ..
நான் தவறு செய்து, நீங்கள் என்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நான் தேர்தலில் நிற்காமல் , விலகி உங்களுக்கு வழிவிட்டு இருப்பேன். எந்தத் தவறும் செய்யாத என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் ? எதற்காக எனது அரசைக் கலைக்க வேண்டும்?என் மீது என்ன வழக்கு இருக்கிறது ? எந்த விசாரணைக்கமிஷன் முன்பு நான் நிற்கிறேன் ?
இப்படிக் கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்து வழக்குப் போடுவோம் என்கிறார் அருமை நண்பர் கருணாநிதி ... நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன் .. நீங்கள் முதலில் கோதுமை பேர ஊழலில் இருந்து வெளியே வாருங்கள் ... அவர் பேசப் பேச கூட்டம் குதியாட்டம் போடுகிறது.
கூட்டம் கைதட்ட , ஆரவாரம் செய்யப் போதுமான நேரமும் இடைவெளியும் தந்து பேசிக்கொண்டே போகிறார் MGR .
" பூச்சி மருந்து ஊழலில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் ... தன் மீதான குற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான், இனிமேல் தன் வாழ்க்கை முழுவதையும் செலவிட வேண்டும் என்பதை நண்பர் கருணாநிதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ."
எனது அரசை எதற்காக நீக்கினார்கள் என்று எனக்குத் தெரியும் ... என்று சில நொடிகள் நிறுத்தினார் . கூட்டம் அமைதி காத்தது ." என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதால் தான் எனது ஆட்சியைக் கலைத்தார்கள் " என்றார். இந்தமுறை கூட்டத்தை நோக்கி, அரைவட்டமாகக் கையைக் காட்டினார் . கூட்டம் மதம்கொண்ட யானைபோலப் புழுதி பறக்கப் புரண்டு படுத்தது .
கருணாநிதியைப் பற்றிப் பேசிய MGR , தனது ஆட்சியைக் கலைத்த இந்திராகாந்தியைக் குறித்து அந்தக் கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .அந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதையும் அந்த தந்திரத்தைக் கடைப்பிடித்தார் . ஆட்சிக்குத் திரும்ப வந்தால் இந்திராகாந்தியோடு நல்லுறவு வைத்துக்கொள்ளுவதற்கான வாசலைத் திறந்து வைத்துக்கொண்டே , பேசிக் கொண்டிருந்தார் MGR .
அந்தத் தந்திரம் பலித்தது . தேர்தலில் வென்றதும் , கருணாநிதிக்கும் இந்திராகாந்திக்கும் இருந்த உறவை முறித்துவிட்டுத் தான் போய் மீண்டும் இணைந்துகொண்டார் MGR .
கருணாநிதிக்கும் தனக்குமான பகைமையைத் தான் பிரச்சாரத்தில் முன்னிறுத்தினார் . எனது நண்பர் , அருமை நண்பர் என்று தான் கருணாநிதியைப் பற்றி எப்போதும் குறிப்பிட்டார் . தி மு க என்ற கட்சியின் பெயரைச் சொல்லாமல் தவிர்த்தார்.
வழக்கமாக திமுக மேடைகளிலும் , பிற பலகுரல் மன்னர்களும் MGR இன் குரலைப் பகடி செய்கிறபோது என்ன பேசுகிறோம் என்பதைப் புரியாததுபோல் பேசிக் காட்டுவார்கள் . அது உண்மையல்ல . துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு , அவரது தொண்டையிலேயே ஒரு தோட்டா தங்கிவிட்டபிறகு , அவரது குரலில் ஒரு மாற்றம் இருந்ததே தவிர , அவர் பேசும்போது சொற்கள் தெளிவாகத்தான் கேட்டது . தன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்துகொண்டு , சற்றே நிறுத்தி நிறுத்திப் பேசிப்போகும் பாணியை அவர் கடைப்பிடித்தார் . தெளிவாக, துல்லியமாக, தந்திரமாக, கண்ணியமாகத் தனது பேச்சை அமைத்துக் கொண்டார் .
அந்த பாணியின் முழுமையான , அடர்த்தியான உரையைத் தான் அவர் மதுரை கிழக்குத் தொகுதியில் நிகழ்த்தினார்.
இடது சாரிகளுக்கும் தனக்குமான நட்பைப்பற்றி பேச ஆரம்பித்தார் . அதைக் கூட்டணி உறவு என்று அவர் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை . இடதுசாரிகள் தனது நண்பர்கள் என்றார் . அதோடு நிற்கவில்லை . எத்தகைய நண்பர்கள் என்று விவரித்தார் . அதன் பொருட்டு நட்பு குறித்தும் , நண்பர்கள் குறித்தும் ஒரு கருத்தை விரிவாக , ஒரு ஆய்வு போல ,அந்தக் கூட்டத்திற்கு விளக்கினார் . இப்போது போல அப்போது நேரக் கட்டுப்பாடு ஏதுமில்லை . இந்தக் கூட்டம் முடிந்ததும் திரும்ப நேரே ஹோட்டலுக்குப் போவது தான் அவரது நிகழ்ச்சி நிரல் .
நிதானமாக , சாகவாசமாக , பதட்டமோ , தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் பேசினார் என்பது , எனக்கு அப்போதும் , இப்போதும் வியப்பான ஒன்றுதான்.
" நண்பர்கள் மூன்று வகைப்படுவார்கள் " என்று ஆரம்பித்தார் .
எப்படி வகைப்படுத்தினார் ?
அப்புறம் சொல்லுகிறேன் ...
- பாரதி கிருஷ்ணகுமார்.
2 comments:
சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் -20 - கருணாநிதியைப் பற்றிப் பேசிய MGR , தனது ஆட்சியைக் கலைத்த இந்திராகாந்தியைக் குறித்து அந்தக் கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .அந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதையும் அந்த தந்திரத்தைக் கடைப்பிடித்தார் . ஆட்சிக்குத் திரும்ப வந்தால் இந்திராகாந்தியோடு நல்லுறவு வைத்துக்கொள்ளுவதற்கான வாசலைத் திறந்து வைத்துக்கொண்டே , பேசிக் கொண்டிருந்தார் MGR .
அந்தத் தந்திரம் பலித்தது . தேர்தலில் வென்றதும் , கருணாநிதிக்கும் இந்திராகாந்திக்கும் இருந்த உறவை முறித்துவிட்டுத் தான் போய் மீண்டும் இணைந்துகொண்டார் MGR . - அருமை அரசியல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
அருமை சார்
Post a Comment