Sunday, April 28, 2013

மௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டே . . .

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் நாள் அந்தப் படு பாதகம் நடந்தது .

கும்பகோணம் பள்ளியொன்றில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிச் சாம்பலானார்கள் .

அரசும் , அதிகார வர்க்கமும் அழுது கொண்டே , ஆறுதல் சொல்லிக்கொண்டே , நிவாரணத் தொகையை வேக வேகமாகப் பட்டுவாடா செய்து கொண்டே , மகத்தான பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருந்தார்கள். அரசு ஒரு நீதி அரசரின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தது .எல்லாப் பள்ளிகளிலும் உள்ள கீற்றுக் கொட்டகைகளை அகற்றச் சொன்னது .

மத்திய , மாநில அரசியல் வாதிகள் , அதிகாரிகள்  அறிக்கைகளில் அழுத வண்ணம் கும்பகோணத்தைச் சுற்றித் திரிந்தார்கள் . அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கென தனிக் குடியிருப்பை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தார் . எல்லாம் கொஞ்ச நாளைக்கு ... பிறகு .... ஒருவரையும் காணோம் . ஒன்றையும் காணோம் .


இன்னும் நடக்கிறது வழக்கு . பள்ளிக்கூடம் நடத்த அரசு வகுத்துள்ள விதி முறைகளைப் பின்பற்றாத பள்ளி நிர்வாகம் ... விதி முறைகளுக்கு மாறாக பள்ளி இயங்க லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்த கல்வித் துறை , வருவாய்த் துறை , தீயணைப்புத்துறை , பொதுப்பணித் துறை அதிகாரிகள் இவர்கள் தான் முதன்மைக் குற்றவாளிகள் . இதை அறிந்து கொள்ள ஓரறிவு இருந்தாலே போதுமானது .ஆனால் ஒன்பது அறிவு கொண்ட அரசுக்கும் , நீதி மன்றத்திற்கும் குற்றவாளிகள் யாரென்று கண்டு , அறிந்து தீர்ப்புச் சொல்ல இன்னும் காலம் தேவைப் படுகிறது . இன்னும் நடக்கிறது வழக்கு .

விபத்து நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான் பள்ளிக் கல்வி இயக்குனரகம் அந்தப் பள்ளிக்கு அந்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது . அதாவது 11.07.2004 அன்று ஆணை தரப்பட்டுள்ளது . 11.07.2004 அன்று ஒரு வேலை நாள் அல்ல . அது ஒரு ஞாய்ற்றுக் கிழமை .

இந்த உண்மை போல , இந்த நிகழ்வின் பின்னே இருந்த வேறு பல உண்மைகளையும் ஆவணப் படுத்த விரும்பி , சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குடந்தை போனேன் . இந்தத் துயரத்தை உணர்த்தும் பாடல் ஒன்றை ஆவணப் படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமெனவும் விரும்பினேன் .

பாடல் எழுதுமாறு நண்பனும் , கவிஞனும் ஆன புதுகை தனிக்கொடியை அழைத்தேன் . என்னவெல்லாம் பாடலில் இடம் பெறவேண்டிய செய்திகள் என்று விவரித்தேன் . கேட்டுக் கொண்டார் . ஐந்தாறு பல்லவிகள் எழுதிக் கொடுத்தார் . எனக்கு எதுவும் பிடிக்கவில்லை . அவர் அலுக்காமல் மேலும் எழுதினார் . எனக்கு அதுவும் போதுமானதாயில்லை .

இந்த சந்திப்பு சென்னையில் நடந்தது . அடுத்த வாரத்தில் குடந்தையில் படப்பிடிப்பு நடக்கிற இடத்திற்கு வந்து , அங்கே எழுதித் தருவதாகச் சொன்னார் கவிஞர் . ஒப்புக்கொண்டேன் .

அடுத்த வாரம் படப்பிடிப்புக்கு வந்தார் . கண்ணீரும் , துயரமும் பொங்கிப் பெருகும் அந்த பாவப்பட்ட பெற்றோர்களின் பேட்டியை நாங்கள் பதிவு செய்வதை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டே இருந்தார் . ஒரு சொல் கூடப் பேசவில்லை .

அன்றைய இரவு விடுதியில் , எனது அறையில் வந்து சேர்ந்து கொண்டார் . இரவு முழுவதும் அவர் உறங்கவே இல்லை . நானும் தான் . அதிகாலை மூன்று மணிவாக்கில் எழுந்து வெளியில் போனார் . நான் உறங்கிப் போனேன்.ஐந்து மணி வாக்கில் என்னை எழுப்பினார் . " சார் .. பாட்டு எழுதிட்டேன் ... படிக்கவா ? " என்றார் .

படிங்க என்றேன் . வழக்கத்திற்கு மாறான கனத்த , கட்டைக் குரலில் படித்தார் ..." சொல்ல மனம் துடிக்குதே தேமித் தேமி - எங்க
     புள்ளக்  கறி கேட்டது எந்தச் சாமி ?  
எனத் துவங்கிய அந்தப் பாடலை அவர் முழுவதுமாகப் படித்து முடித்த பிறகு மிக நீண்ட நேரம் இருவரும் மௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தோம் . அந்த மகத்தான பாடலைத் தனியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன் .