பாரதி விழாவில் பேசக் கூப்பிட்டார்கள். சம்மதித்தேன். உங்களோடு இன்னுமொருவரும் பேசப்போகிறார் என்றதும், யாரென்று கேட்டேன். ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான் என்றார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் தான் நிகழ்ச்சி. கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் வலம்புரிஜானை அழைத்துக்கொண்டு, சாலிகிராமத்திலிருக்கும் என்னையும் கூப்பிட்டுக் கொண்டு, ஒரே காரில் கல்லூரிக்குப் போவதென்பது பயணத்திட்டம்.
“முதலில் என் வீட்டுக்கு வந்து விடுங்கள். இங்கிருந்து ஜான் வீட்டுக்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து, கல்லூரிக்குப் போய் விடலாம். அவர் வந்து என் வீட்டு வாசலில் இரண்டொரு நிமிடங்கள் கூடக் காத்திருப்பதை நான் விரும்பவில்லை” என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.
மதியம் ஒன்றரை மணி போலக் குறிப்பிட்ட நாளில் கார் வந்தது. நேரே இப்போது அவர் வீட்டுக்குப் போகிறோமா? என்று கேட்டேன் . “இல்ல சார் அவர ஏற்கனவே pick up பண்ணிட்டோம்” என்றார் வந்தவர். “கீழ கார்ல அவரு இருக்காரா?” என்று பதறினேன்.” இல்ல சார்... வடபழனி பொன்னுச்சாமியில சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு... நாம போயிச் சாப்பிட்டுட்டுப் போகலாம் என்றார்கள். பொன்னுச்சாமிக்குப் போனோம்... வியர்க்க, விறுவிறுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.வணக்கம் சொன்னேன். நீங்க சாப்பிடலையா? என்று சைகையால் கேட்டார். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று சைகையிலேயே பதில் சொன்னேன். கீழே காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
பத்து நிமிடத்திற்குள் படியிறங்கி வந்தார். சிரமப்பட்டு நடப்பது போலத் தெரிந்தது. எங்கள் இருவருக்கும் இதற்குமுன் தனிப்பட்ட அறிமுகமில்லை என்றாலும், நான் அவரை நன்கு அறிவேன் என்பதால், இதற்குமுன்பு நான் ரசித்துக் கேட்ட அவரது பேச்சு ஒன்றைப் பற்றி அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். எந்த சுவாரசியமும் இன்றி அதை கேட்டுக்கொண்டிருந்தார் விருப்பமின்மையின் சாயல் அவரது முகத்தில் தெரிந்தது போல எனக்கிருந்தது. எனினும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசிக்கொண்டு இருந்த போதே, ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமான இடை வெளியில் அவர் உறங்க ஆரம்பித்து இருந்தார். மிகுந்த சங்கடமாகி விட்டது எனக்கு. வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.
கல்லூரிவந்தது. அவரை எழுப்பினார்கள். வாசலில் கல்லூரியின் தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் என்று ஒரு பெரும் கூட்டம் திரண்டு நின்றிருந்தது. அவரைத்தான் வரவேற்றார்கள். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரது பிரபலத்தை நான் உணர்ந்திருந்தேன்.
என் தனிமையைப் போக்க இரண்டு ஆசிரியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். ஜானைக் கல்லூரித் தாளாளரின் அறைக்குள் அழைத்துப் போனார்கள். நான் சுற்றிப்பார்க்கப் போனேன். இப்போதும் ஜான் சிரமப்பட்டுத்தான் நடந்து போனார். தூக்கச் சடவாக இருக்குமென்று கருதிக் கொண்டேன்.
நிகழ்ச்சியைத் துவங்க வேண்டுமென்று, என்னை அழைத்தார்கள். மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டிருந்தார்கள். என்னை முதலில் பேச அழைத்தார்கள் அப்போதே, தன் இருக்கையில் சாய்ந்து கண்களை முடிக்கொண்டிருந்தார் “வார்த்தைச் சித்தர்”. லேசாக முன்னும், பின்னும் தொட்டிலை ஆட்டுவது போல அசைந்து கொண்டேயிருந்தார். உறக்கம் வருவதற்காகப் படுத்துக்கொண்டு, கால்களை ஆட்டுகிற பழக்கம் எனக்கு இப்போதும் உண்டென்பதால், வலம்புரிஜான் உடலை ஆட்டிக்கொள்கிறார் என்று எனக்குப்பட்டது. ஒருவர் பேச ஆரம்பிக்கும் போது, உடன் பேச வந்த இன்னொருவர் இப்படிக் கண்களை முடிக்கொண்டு, தலையை முழுவதுமாகக் குனிந்து கொண்டு, எப்போதாவது உடம்பை மட்டும் முன்னுக்குப் பின் அசைத்துக் கொண்டுடிருப்பது மிகுந்த நாகரீகமற்ற செயலாக எனக்குத் தட்டுப்பட்டது. கோபம் முன் நெற்றியில் இருந்து மூளையின் மையம் வரை ஏறியது. உச்சந்தலையில் உஷ்ணமாய்ப் பரவியது. உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன்.
ஆரம்பம் முதலே எனக்கு அவர் செய்த அவமதிப்பு, மிகச்சிறப்பாக பேச வேண்டும் என்று என்னுள் வெறியூட்டிக் கொண்டிருந்தது. சன்னதம் கொண்டு, பாரதியின் உன்னதங்களை, அவைக்கு முன் அணி வகுக்கச் செய்தேன். தொடர்ந்த கரவொலிகளால், மாணவர்கள் எனக்கு மேலும் களியூட்டினார்கள். பலத்த கை தட்டலுக்கும் கூடக் கண் திறந்து பார்க்கவில்லை வலம்புரிஜான். “சே... என்ன மனுஷன் இந்த ஆள்?” என்று மனசுக்குள் கோபம் புரண்டது. நாம் மதிக்கிற ஒரு மனிதன், நாம் பேசுவதைக் கேட்டு, ஒரு வார்த்தை பாராட்டினால் எத்தனை மகிழ்சியாக இருக்கும்? இல்லை... பிறரை அஙகீகரிக்காத ஆளா?... சே... திரும்பிப்போகிறபோது இந்த மனுஷனோடு சேர்ந்து காரில் போகக் கூடாது என்று மனதுக்குள் உறுதி கொண்டேன்.
இந்த எண்ண ஓட்டங்களுக்கு இடையிலும், எனக்கு இட்ட பணியைத் திறம்படச் செய்தேன். கோடைமழை போல மாணவர்கள். கைதட்டினார்கள். ஊஹும்... அதற்கும் அசைந்துகொடுக்காமல், கண்களை முடிக்கொண்டு, தலையைக் கவிழ்த்தபடியே இருந்தார் அந்த மனிதர். மாணவர்களின் கைதட்டல் சிலநொடிகள் நீடித்தது.” இது போதும்... இந்த ஆள் பாராட்டி என்னவாகப்போகிறது...” என்கிற நினைப்புடன், பெருமிதமாகக் கம்பீரமாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.
அடுத்ததாக, வலம்புரிஜானைப் பேசக் கூப்பிட்டார்கள். தனக்கே உரித்தான, கவித்துவமான மொழிநடையில், கனத்த, கரகரத்த குரலோடு பேசத்துவங்கி, அவையில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி முடித்தார் ஜான். பிறகு தொடர்ந்தார் “அன்றாடம் மருத்துவர்கள் தரும் மருந்துகளாலும், மாத்திரைகளாலும் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடுமையான உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது எனக்கு. அவ்வப்போது திருட்டுத்தனமாக, வாய்க்கு ருசியாக, வீட்டுக்கும் மருத்துவருக்கும் தெரியாமல் சாப்பிட்டுக்கொள்கிறேன். வாரத்திற்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்து கொள்கிறேன், இன்று காலையில் கூட டயாலிசிஸ் செய்து கொண்டேன். மிகுந்த களைப்பும், சோர்வுமாக இருக்கிறது. இந்த உடல், இவ்வளவு நோய்களைக் கொடுத்து, அந்தத் துன்பங்களையெல்லாம் சுமந்து கொண்டே ஏன் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்று இறைவனிடம் பல முறை கேட்டிருக்கிறேன். அந்தக் கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது” என்று கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். மெதுவாக தலை சாய்த்து என்னைப் பார்த்தார்.
என்னைப் பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.” தம்பீ...யாரடா நீ? எங்கே இருந்தாய் இத்தனை காலம்?... எப்படியடா என் கண்களில் படாமல் போனாய்?... எப்படியடா என் காதுகளில் உன் குரல் விழாமல் போனது....? எப்படியடா ஒருவன் கூட உன்னைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை... இப்போது தெரிந்து விட்டதடா தம்பி... உன் பேச்சை ஒரு முறையேனும் நான் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இது நாள் வரை என்னை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறான்...” அரங்கம் அதைக் கைதட்டி அங்கீகரித்து, வழி மொழிந்தது. என் கண்களில் கண்ணீர் திரண்டது. தொடர்ந்து பேசினார். வாய்ப்புக்கிடைக்கிற போதெல்லாம், தம்பிசொன்னது போல... தம்பி குறிப்பிட்டது போல... தம்பி சுட்டிக்காட்டியது போல... தம்பி வெளிச்சமிட்டது போல... என்று வார்த்தை களால் சித்து விளையாடி முடித்தார் வலம்புரி ஜான்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஏற்கெனவே நான் முடிவு செய்த வண்ணமே, அவருடன் காரில் போகவில்லை. ஏனெனில் அவரோடு பயணம் செய்யும் தகுதி எனக்கில்லை என்று அந்தக் கணம் உணர்ந்தேன். தன்உயிரை முன் வைத்து என்னைப் பாராட்டிய அவருக்கு, என்றேனும் ஒரு நாள் நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
இரண்டாண்டுகள் சந்திக்கப் போகவில்லை. ஒருசந்தர்ப்பம் கூட வாய்க்கவில்லை. மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்த ஒரு நாளில், நண்பர்கள் மூலம் அவரது மரணச் செய்தி வந்தது. அஞ்சலி செலுத்த, நேரில் போகவும் இயலவில்லை.
தன் உயிரை முன்னிறுத்தி, என்னை வஞ்சகமின்றி, மனமார வானளாவப் புகழ்ந்த அந்த மனிதனது சொற்களை உயிருள்ள வரை மறக்க இயலாது. அந்தக் கணம் என் கண்களில் பெருகிய கண்ணீர், கண்ணுக்குள்ளேயே வரம்பு கட்டிக் கலங்கிக் கொண்டிருந்தது. ஒரு துளிக்கூட கண்ணிலிருந்து வெளியேறவில்லை ஒரு வேளை அது வெளிக் கிளம்பினாலும் அந்தக் கண்ணீர்த் துளியை என் இரு கைகளாலும் ஏந்துவேன். அதை என்றும் அவிழாத சிறிய ரோஜா மலராக மாற்றுவேன். அதை வலம்புரிஜானின் கல்லறை மீது சமர்ப்பணம் செய்வேன்.
6 comments:
என்ன ஒரு அற்புதமான நினைவுகூறல் பாரதி?
ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியான அடுக்குகளில் இயல்பான மனது பாராட்டுக்காக ஏங்கும் கோலத்தை நேர்மையாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
இறுதிப் பத்தி ஒரு கவிதை. என் கண்களுக்கு அவிழாத சிறிய ரோஜாப்பூ தெரிந்தது.அதை வலம்புரிஜானின் கல்லறையில் சமர்ப்பித்துவிட்டேன்.
அருமையான நெகிழ்ச்சியூட்டும் பதிவு.
நல்லதொரு அருமையான பதிவு.
உங்களின் வலைபதிவில் ஒவ்வொரு பதிவும் என்னை ஏதேனும் ஒருவிதத்தில்நெகிழவும் நெக்குறுகவும் வைத்து விடுகிறது. சுந்தர் ஜி சொன்னது போல் அவிழாத ரோஜா மலர் - அடடா
//உன் பேச்சை ஒரு முறையேனும் நான் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இது நாள் வரை என்னை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறான்...” அரங்கம் அதைக் கைதட்டி அங்கீகரித்து, வழி மொழிந்தது. என் கண்களில் கண்ணீர் திரண்டது. தொடர்ந்து பேசினார்// மருத்துவ உதவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த நாட்களிலும் அவரது பேச்சு எந்த வித பூச்சுமின்றி BK என்ற பேச்சாளியை உண்மையாகப்பாராட்டியது எனக்குப்பிடித்திருந்தது. எழுத்தும் நடையும் பிரமாதம். தொடருங்கள்...
வாழ்த்துக்களுடன்
திலிப் நாராயணன்
1998ல் ஒரு கூட்டத்திற்கா சிறப்பு விருந்தினராக அழைக்க சென்னை அவர் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தேன். முதல் சந்திப்பு, தன் வயதில் பாதி என்று கூட நினைக்காமல் அவர் அளித்த மரியாதை உருக்கமானது..
அதன் பின் பவானியில் நடந்த எங்கள் கூட்டத்தில் யார் பேசினாலும் கண்டு கொள்ளாமல், ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். எல்லொருக்குமே எரிச்சல்தான், ஆனால் இறுதியாக அவர் உரையாற்றும் போது எல்லோரும் பேசியதில் இருந்து பலவிசயங்களைச் சுட்டிக்காட்டிப்பேசினார்!
நிஜமாகவே உயர்ந்த மனிதர்தான்
migavum negizhchiyana nigazhvu. kidaitha paaratugalil sirandhadhil ondru endru nambugiren.
Post a Comment