Sunday, May 22, 2011

ராஜா சந்திரசேகரின் "கை விடப்பட்ட குழந்தை"

ந்த வார ஆனந்த விகடனில், திரு ராஜா சந்திரசேகரின் கவிதை "கை விடப்பட்ட குழந்தை" பிரசுரம் கண்டிருக்கிறது.

ல்லாப் பிறழ்வுகளுக்கும் பின்னே, கைவிடப்பட்ட, நிராதரவான குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகமெங்கும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்குப் பிறகும், "பிள்ளைமை"யுடன் வாழ்வையும், சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகள் பெரும் துன்பக் கேணிகள்.
குற்றமற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை, அதன் விளைவை குழந்தைகள் எதிர் கொள்ளும் விதம் அலாதியானது. வலி உணர்ச்சியைச் சுமக்கும்
குழந்தைகள் ஒரு போதும் பழி உணர்ச்சி கொள்வதேயில்லை. அதுவே, பிள்ளைமையின் பெருஞ் சிறப்பு. வலியின், துயரத்தின் நீட்சியில் இருந்து, கணப்
பொழுதில் வெளியேறி, தனது கனவுலகுக்குள் பயணிக்கும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டென்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை தந்த ஆறுதல்
சொல்லி மாளாத ஆறுதல். ஆனால்....

"கை விடப்பட்ட குழந்தை ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது" எனத் துவங்கிய கவிதையின் வரிகள் என் நம்பிக்கைகளைத் தகர்த்துப் பொடித்துத்
தூர்ந்து போகச் செய்தன. கலங்கடித்தது கவிதை. கவிதையை வாசிக்கிற போது, எதனைக் கவிஞன் பாடு பொருளாக்கிப் பாடினானோ, அதுவாகவே நம்மை
உணர வைத்த கவிதை. "கை விடப்பட்ட குழந்தைகள்" என்று பன்மையில் தலைப்பிட்டிருக்க வேண்டுமெனத் தோன்றியது. அச்சில் வடிவமைத்தவர்களும் வலியை
அந்தப் பக்க மெங்கும் பரவ விட்டிருந்தார்கள். அந்தப் படங்களிலுள்ள எல்லாக் குழந்தைகளின் கண்களிலும் ஒளிரும் பிள்ளைமை நம்மைக் குற்றவாளிகளாக்கித்
தெருவில் நிறுத்துகிறது. தரையில் கிடக்கும் எதையோ எடுத்துச் சாப்பிடும் பசித்த சிறுவனின் படம்.... ஐயோ....

முள் வேலியை வாயில் கடித்த படி ஒரு குழந்தை....
வாயால் துண்டித்து விட முடியுமா முள் வேலியை?....
முடியத்தான் வேண்டும்.
இலங்கையில் போடப்பட்டிருக்கும் முள் வேலிகளை பற்களால் கடித்தேனும் கிழித்தெறிய வேண்டும் என்கிற சினம் பெருகுகிறது.

குழந்தைகளுக்கான ஒரு உலகத்தை நாம் சிருஷ்டிக்கத் தவறினோம் என்பது மட்டுமன்று நமது குற்றம். அவர்கள் சிருஷ்டித்து வைத்திருந்த
உலகத்தையும் நாமே சீரழித்தோம். இந்தக் கணம் கவிஞர் ரத்திகா எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.....
"குழந்தைகளிடம் கற்றுக் கொள்.... பொம்மைகளை எப்படி மகிழ்விப்பதென்று?...." மகத்தான சொற்கள்... தனது உலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்தையும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு வயப்படுத்தும் அதிசயம் குழந்தைகளின் தனித்த பேராற்றல். அந்த ஆற்றலைப் பறித்து சிதைத்து அழித்திருக்கிறோம். இறுதி ஊர்வலங்கள்
போன பின்னே, வீதியில் கிடக்கும் பூக்களைப் போலக் குழந்தைகளை எடுத்தெறிந்து விட்டோம்.

விதை இப்படி முடிகிறது.....

" கை விடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச் செல்கிறது இன்னொரு
குழந்தையைத்
தன் கைப்பிடித்து அழைத்துச்செல்ல....."

திப்பிற்குரிய ராஜா சந்திரசேகர் நானும், நீங்களும் ஏன் எல்லோருமே, எத்தனையோ தருணங்களில், கைவிடப்பட்ட குழந்தைகள் தாம்...
உங்கள் கைகளை நான் பற்றிக் கொள்கிறேன்.

4 comments:

Unknown said...

அண்ணா....! அந்தக் கவிதையை நானும் படித்தேன்...ஆனந்த விகடனில். அது என்னை வெகு நேரம் செயலற்று போகச் செய்தது. நாம் பேருந்து நிலையத்தில்....கடைத்தெருவில்..... என எதிர்பாராவிதமாய் நம் கால்களை சுரண்டி காசுக்காக தம் பிஞ்சு கைகளை ஏந்தும் அந்த குழந்தைகளின் ஏக்கப்பார்வையை எந்தவித குற்ற உணர்வும் இன்றி கடந்து போக இந்தச் சமூகமே நம்மை பழக்கிவிட்டிருக்கிறது. இது போன்ற கவிதைகள் தான் நம் பொடனியில் தட்டி நமக்கு வலியை தந்து நாமும் சுரணையுள்ள மனிதர்கள்தான் என நினைவு கொள்ள செய்கிறது.
என கருதுகிறேன். அவசியமான பதிவு....!

ஓலை said...

Vivarippu pramaathamaaga irukku, kavithaiyin thaakam nangu therigirathu.

Rathnavel Natarajan said...

நானும் படித்தேன்.
கவிதையும் படங்களும் வேதனையாக இருந்தது.

ராஜா சந்திரசேகர் said...

உங்களின் ஆழமான வரிகளின் மூலம் கவிதையின் ஆழம் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.உங்கள் பதிவுக்கும் கவனத்திற்க்கும் நன்றி.

Post a Comment