எப்போதும் , ஒருவர் அறிமுகமாகிற போது , அன்றி நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிற போது உரையாடலைத் துவங்க கேள்விகளைத் தான் நம்பி இருக்கிறோம் நாம் . இந்தக் கேள்விகளின் நோக்கம் உரையாடலைத் தொடர்வது மட்டுமல்ல . அவரை , அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் , வாய்ப்பிருந்தால் ரகசியங்களையும் அறிந்து கொள்ளுகிற அவசர அவசியம் தான் . ஆனால் நாம் உணர்வதில்லை அந்தக் கேள்விகள், உள்ளுக்குள் அறுத்துக் குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள் என்பதை.சிலர் எந்த உள் நோக்கமும் இன்றி இந்தக் கேள்விகளைக் கேட்டு வைக்க , பலர் திட்டமிட்டே, கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .
எப்படியெல்லாம் கேட்டு விடுகிறார்கள் . வேலை கிடைக்காமல் வெறுத்துப் போய் , வெம்பிப் போய் அலைகிறவர்களிடம்,"இப்ப என்ன பண்ணுற ? .. எங்க வேல பாக்குற? "
திருமணம் ஆகாமல், பொருத்தமான இடம் அமையாமல் அவதிப்படும் ஆட்களிடம் ,"எப்பம் கல்யாணம் ? கல்யாணச் சோறு எப்பப் போடுவ ? ". திருமணமாகிக் குழந்தை பிறக்காமல் மனதாலும் உடம்பாலும் தவமிருக்கிறவர்களிடம் , "எதுவும் புழு பூச்சி இருக்கா? எத்தினி குழைந்தங்க ?" என்று கூசாமல் கேட்டு வைக்கிறோம்/வைக்கிறார்கள்.
பத்துப் பன்னிரெண்டு வருடமாக வாய்ப்புத் தேடிப் போராடுகிற ஒரு உதவி இயக்குனரிடம்,"எப்பம் தனியா படம் பண்ணுவ ? எவன் எவனோ பண்றான் . நீ என்ன பண்ற? "
எத்தனை கேள்விகள்? ? ?
தன் சொந்த சாதி , மதம், பிறப்பு குறித்து ஏதோ குற்ற உணர்ச்சியோ , தாழ்வு மனப்பான்மையோ , ஒருவருக்கு இருக்கலாம் என்பதை உணராமல்,"நீங்க என்ன ஆளுங்க?..என்ன சாதி ? அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க ? " என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்டு விடுகிறார்கள். பிக் பாக்கெட் அடிக்கிறவன் விரல்களுக்கு நடுவில் வைத்திருக்கும் கூர்மையான பிளேடால் நமது பையை அறுத்து நம் பொருளைக் கவர்ந்து போவது போல. ஒவ்வொரு கேள்வியும் இதயத்தின் அடிப்பகுதியை அறுத்து குருதி கொப்புளிக்க வைக்கிறது . பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் குருதி அடி வயிற்றில் இறங்கி உறைந்து கெட்டி தட்டி நின்று விடுகிறது . " ஏதாவது விசேஷம் இருக்கா ? .. என்னமாவது தகவல் உண்டா ? .... என்பதான நாசூக்கான கேள்விகளும் கூட இதில் அடங்கி விடும் . ஒரு கல்யாண வீட்டில் , நண்பரொருவர் எதிரில் வந்த ஒரு பெரியவரை, அன்புடன் , "நல்லா இருக்கீங்களா ? " என்று கேட்டதும் பெரியவர் முகம் சிவந்து , " நல்லா இருக்குறவங்களப் பாத்து எதுக்கு இப்பிடிக் கேக்குற ? என்றார்.
பிறகு எப்படிப் பேசுவது ... என்ன பேசுவது ... எங்கே துவங்குவது என்று பலருக்குத் தோன்றும் . எந்த வகையிலும் காயம் உண்டாக்காத கேள்விகள் இருந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மனம் திறக்கிற வரை காத்திருக்கத் தான் வேண்டும் .
ஒரு குழந்தை தன் தாய் மொழியைத் தடையின்றிப் பேச மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம் . ஆனால், அதை முறையாகப் பேசி விட வாழ்நாள் முழுவதும் போராட வேண்டி இருக்கிறது..எல்லாச் சந்திப்புகளிலும், உரையாடல்களிலும் சக மனிதர்களுடைய இதயத்தை அறுத்து விடாத சொற்களை எனது மொழி எனக்குத் தர வேண்டும் என்று தவமிருக்கிறேன்.
7 comments:
ஒரு மனிதனாய்
-------------------------
என்னைக் கணக்கு வைக்க
மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்
ஆள் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
சாதி கேட்கப்படும்:
சொல்லிவிடலாம் கூச்சப் பட்டாவது.
குடும்ப விவரம் கேட்கப் படும்:
அவள் இருப்பிடத்தில் இதே விவரத்துக்கு
கணக்குக் காட்டியிருக்க மாட்டாள் என்னை
இவ்விடத்தில் காட்டமுடியாது நானும்.
தவிர்த்துத் தவிர்த்து,
குடும்ப, வாக்குரிமை உரிமங்களும்
பெறமுடியாத குடிமகனாய்ப்
பதுங்கிப்புழங்கி வருவழியில்
இடு/சுடு காடு உண்டு.
அவ்விடத்தில் வைத்திருக்கிறேன் கணக்கு.
மனிதனை வார்த்த நாகரீகம், மனிதத்தையும்,மனிதமனத்தையும் இன்னும் வளப்படுத்தவில்லை.
மொழியின் உன்னதத்தை தேட வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டியிருக்கிறது...
அசத்தல் bk
அருமை bk!
உங்களின் பதிவும் +//
மொழியின் உன்னதத்தை தேட வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டியிருக்கிறது..//
இந்த பதில் மொழியும் அருமை
தீப்பொறிபோல நல்ல சிந்தனையை
விதைத்துச் செல்கிறது
உங்கள் பதிவு
இதயத்தை அறுக்காத சொற்களைக் கையாள
அவசியம் பழக வேண்டும்
நல்ல பதிவு
தங்களைத் தொடர ஆர்வமூட்டுகிறது
Post a Comment