Tuesday, May 10, 2011

உருகாத பனிச் சிற்பங்கள்

எப்போது புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அழைத்தாலும், மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொள்கிறேன். “எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல” என்பதைத் தனியே குறிப்பிடுகிற அவசியம் ஏதுமில்லை. புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு பெறுவதில், காத்திரமான ,ஸ்தூலமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. “யார் படிப்பதற்கு முன்பும், லேசான ஈரத்தோடு நமக்குப் படிக்கப் புத்தகம் கிடைக்கிறது” என்பது முதலாவதும், பிடித்தமானதுமான அம்சம்.

வெளியீட்டு விழாவில்,புத்தகத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும் என்பதால் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது இரண்டாவது சிறப்பம்சம். மூன்றாவதும், அற்புதமானதும் யாதெனில், வாசிப்பனுபவத்தைத் தகுதியான பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற உயிர்ப்பான தருணம். ஒவ்வொரு விழாவிலும் கிடைக்கிற புதிய அனுபவங்கள், அறிமுகங்கள், சிந்தனைகள் என பலப் பல நன்மைகள்.

வெளியீட்டுக்கான புத்தகங்களில் வெகு சில, மிக முன்னதாகவும், பல மிகக் குறைந்த கால இடைவெளியிலும் வந்து சேருகின்றன.மிகுந்த அவகாசத்துடன் வந்து சேரும் புத்தகங்கள் தருகிற வாசிப்பனுபவத்தை விடவும், மிகக் குறைந்த கால இடைவெளியில் வந்து சேரும் புத்தகங்கள் தரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறானது. நிகழ்ச்சிக்குப் புறப்படுகிற வரை, பதட்டத்தோடு புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்கள் தான் அதிகம்.

வாசிப்பைப் பொறுத்தவரை,எனக்கென்று ஒருபிரத்யேகமான அனுபவ நடைமுறை தான் எப்போதும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறது. படிக்கத்துவங்கியதும், திறந்துவைத்திருக்கிற புத்தகம் தன்னை மட்டுமே எனக்குத் திறந்து வைத்திருக்குமானால், அஃதொன்றும் எனக்குச்சிறந்த புத்தகமாகிவிடாது. ஒரு புத்தகம் தன்னைத்தவிர வேறு பல புத்தகங்களையும்,நினைவுகளையும் எனக்கு திறந்து காட்ட வேண்டும்.அப்படி,எனக்கு வேறு வேறு உலகங்களையும் உணர்வுகளையும் தராத புத்தகங்களுடன் நான் தொடர்ந்து பயணம் செய்வதேயில்லை.தன்னையும் திறக்க மறுத்து, “எங்கே?...உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா ?”...என்று என்னோடு மல்லுக்கு நிற்கும் புத்தகங்களோடு நான் சகவாசம் வைத்துக்கொள்வதேயில்லை அவைகளிடம் இருந்து நான் விலகிப்போய் விடுகிறேன்.ஒரே ஒரு கவிதைக்கு கூட இந்த அளவு கோலைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு முறைக்கு இருமுறை ஏன் பல முறை வாசித்த பிறகும், பல்லைக் கட்டிக்கொண்டு இறுகி நிற்கும் படைப்புகளுக்குத் தனியே சில வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் நான் எப்போதும் இல்லை. என் “அறியாமையை”ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த அவமான உணர்வும் ஒரு போதும் வந்ததில்லை, வாங்கிவைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கப் படுவதற்காகக் காத்திருக்கும் போது,என்னோடு மல்லுக்கட்டும் புத்தகங்களோடு நான் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும். புரியாத ,விளங்காத ,திறக்காத புத்தகத்தோடு உறவாடுவது , மனதுக்குப்பிடிக்காத பெண்ணோடு /ஆணோடு குடும்பம் நடத்துகிற கொடுமைதான். புத்தகங்களைப் பற்றி எழுத இன்னும் நிறையக் கிடக்கிறது..
இந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்களில் பங்கேற்க வாய்த்தது , “வாய்த்தது” என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு புத்தகம் பவா.செல்லத்துரையின் “19.டி.எம்.சாரோனிலிருந்து .இன்னுமொன்று ஆர். விஜயஷங்கரின் “அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய் தான் இருக்கின்றன”


முன்னதன்வெளியீட்டு விழா திருவண்ணாமலையில். பின்னதன் வெளியீட்டு விழா சென்னையில்.திருவண்ணாமலையில் திறந்த வெளியிலும் ,சென்னையில் தேவநேயப்பாவாணர் அரங்கிலும் நடந்தது. இரண்டுமே வேறு வேறு வகையான வாசகர்களும்,பார்வையாளர்களும் நிரம்பிய நிகழ்ச்சிகள். பவா.செல்லத்துரையின் புத்தகமும் விஜயசங்கரின் புத்தகமும் முற்றிலுமான வேறு வேறு அனுபவங்களின் தளத்தில் எழுதப்பட்ட நூல்கள் என்ற போதும் ,இரண்டிலும் ஒரு பொதுவான அம்சமாக ,இருவருமே தங்களது தந்தைகளின் நினைவுகளைப் பதிவு செய்திருந்தது மிக முக்கிய மானதாக இருந்தது. இரண்டுமே வாசிப்பில், நமக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிற புத்தகங்கள்.


இரண்டு விழாக்களிலும், நானும், பங்கேற்ற மற்றவர்களும், படைப்பாளிகளும் பேசியதன் மூலம் உருவான மனோநிலை உருண்டு திரண்டு உருகாத பனிச் சிற்பம் போலாகி விட்டது. அந்த இரண்டு உருகாத பனிச் சிற்பங்களும் ,இப்போது என் எழுது மேசையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் குளிர்ச்சி எங்கும் பரவி ,பல வண்ணங்களை உருவாக்கியபடியே இருக்கிறது . எல்லாப் புத்தக வெளியீட்டு விழா அனுபவங்களும் அதனதன் அனுபவ அளவுக்கு ஏற்ப உருவான , உருகாத பனிச் சிற்பங்களே .