Tuesday, May 31, 2011

பி.கு. சரவணனின் “முகில் பூக்கள்” குறித்து

னக்கு சரவணன் ஒரு அரசு ஊழியராகத்தான் அறிமுகம். வேலையில் ரொம்பக் கறாரான ஆள் என்று பேர் வாங்கி இருந்தார். அவர் பேரைச் சொன்னதும், சக அதிகாரிகள் நமக்குத் தருகிற மரியாதை, அவரது “இடத்தைப்” புலப்படுத்துகிறது. ரொம்பப் பெரிய ஆட்களைக் கூட தனது அதிகார வரம்பிற்குள் அவர் “நிறுத்தி” இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். வியந்த போது அவரது இயல்பே அதுவென்றார்கள். பிற்பாடு ஊழல எதிர்ப்பு இயக்கமொன்றில் அவர் பணியாற்றியதும் என் கவனத்துக்கு வந்தது. இதெல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், அவருக்கும், கவிதைக்கும் சகவாசம் இருக்குமென்பதற்கு, சிறிய தடயம் கூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. அவரோடு தொலைபேசியில் பேச நேர்ந்த தருணங்களும் கூட, அலுவல் சார்ந்த “அக்கப்போர்கள்” தான்.


டந்த நவம்பரில், தனது கவிதை நூல் வெளியீடு, கோவையில் நடப்பதாகவும், நான் அதற்கு வர வேண்டுமென்றும் அழைத்தார். எனக்கு வியப்பேதுமில்லை. தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை பெருகுவது, ஏறக்குறைய புவி வெப்பமேறுவதற்கு இணையாகத் தான் நடைபெறுகிறது. வாசகர்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாகக் கவிஞர்கள் “அவதரிக்கிற” மொழியாக நமது தாய் மொழியே இருந்து வருகிறது. நமது மொழிக்கு வாய்த்த வரமும் சாபமும் அது.


முன்பெல்லாம், கவிஞர்கள் அறிமுகமாகிற போது, அதிக பட்சமாக ஒரு கவிதை சொல்லுவார்கள் அல்லது வாசித்துக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் பார்த்த இடத்தில ஒரு தொகுப்பைத் தந்து விடுகிறார்கள். பதட்டமாகி விடுகிறது. எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. பலவற்றைப் படிக்கவே முடிவதில்லை. பிழையாக எழுதப்பட்ட கவிதைகளைப் படித்துத் தன தலையில் எழுத்தாணியால் குத்திக் கொள்வார் சீத்தலைச்சாத்தனார் என்று ஒரு கதை உண்டு. எந்தக் கதைக்குப் பின்னும் உண்மையே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. நம் காலத்திலயே மொழியைக் காக்க உயிர் நீத்தவர்கள் உண்டு தானே.

விழா வெற்றி பெற வாழ்த்தினேன். டிசம்பரில், புத்தகம் வந்தது. இரண்டு மூன்று மாதங்கள், கவனமாகப் போகிற இடத்திற்கெல்லாம் அதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். என் செலவில், எல்லா ஊரும பார்த்தது அந்தப் புத்தகம். சரவணன் கூடத் தன புத்தகத்தை இத்தனை ஊர்களுக்கு அழைத்துப் போய் இருக்க மாட்டார்.

கோடையின் வெப்பம் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த ஒரு இரவில், வாசிக்கக் கண்ணில் பட்டது புத்தகம். மழை பற்றி நிறையக் கவிதைகள் நிறைந்த தொகுப்பு . முதல் கவிதை.

“அசைந்து
நடந்து பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்”

ந்த இடத்திலேயே சொற்களின் அணிவகுப்பு துவங்கி விடுகிறது.

“மண்ணை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது மழை”

“மாமழையும் மண்ணோடு மெய் கலக்கும்”...

“மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்”.

ந்தக் கவிதையைப் படித்ததும், கழுத்தைச் சுற்றி குறுகுறுவென்று சின்னதாக சிலிர்ப்புத் தட்டி விட்டது. இது தான் வேண்டும். வாசிப்பின் அனுபவம். ஏதேனும் ஒரு கணத்தில், ஒரு விதத்தில், அறிவால், மனதால், உடலால் உணரப்பட வேண்டும். தொகுப்பில் இருந்து நிறைய, இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சொல்ல மாட்டேன். அவரவர்கள் வாங்கிப் படிக்கட்டும்.

புத்தகம், மழை பற்றிய நினைவுகளின் மீது தூறல் போட்டு நிறைய மண் வாசனைகளைக் கிளப்பி விட்டது.

வளோடு இணைந்து இருக்கிற போது அமுதமாகவும், அவளின்றி தனித்துத் தவிக்கிற போது நஞ்சாகவும் பொழிகிற வித்தை மழைக்கு மட்டுமே தெரியும்.

ண்ணுக்கெட்டிய தூரத்தில் பொழியத் துவங்கி, நாம் பார்க்கப் பார்க்க நம்மை நோக்கி வந்து, நமக்குள் ஊடுருவும் மழை காதலியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

ன் நினைவுப் பேரேட்டில், ஈரமாகப் படிந்திருக்கும் மழை பற்றிய ஒரு தனிப்பாடல் வரிகள்.... “கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்; கோகனக நகை முல்லை முகை நகைக்கும் காலம்; அங்குயிரும் இங்குடலும் ஆன மழைக்காலம்; அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்”

“வானமழை நீயெனக்கு” என்று காதலில் நனைந்து கரைவான் மகாகவி பாரதி

தற்கு மேல் மழை பற்றிப்பேசக் கூடாது. நனையத்தான் வேண்டும்.

புத்தகத்தில் நான்கைந்து உரைநடைப் பத்திகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கவிதைப் புத்தகம் என்று பெயரிட்டு விட்டு, இதெல்லாம் ஆகாது சரவணன். சக்கரை டப்பாவில் மிளகாய்ப்பொடி என்று எழுதி ஒட்டி விடுவதால் எறும்புகள் கூட ஏமாறுவதில்லை. இது போன்ற பிழைகள் கவனத்துடனும், அக்கறையுடனும் தவிர்க்கப்பட வேண்டும். முகப்பு அட்டை இன்னும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

தையெல்லாம், கடந்து மனதில் நிற்கும் பல கவிதைகளோடு தான் இருக்கிறது தொகுப்பு. அதில் மிக முக்கியமான ஒன்று...

“கடந்து செல்கின்றன
மழை மேகங்கள்
அதில்
நீரருந்திச் செல்கின்றன
தூர தேசத்துப் பறவைகள்”

ரந்த, தொடர்ந்த வாசிப்பு சரவணனை நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அடுத்தொரு, தொகுப்பு வருமென சரவணன்
சொன்னால் நான் மகிழவே செய்வேன். ஏனெனில் இந்தத் தொகுப்பிற்குள் நுழைந்து வெளியேறியபோது மழையில் நனைந்த
ஈரமும், சந்தோஷமும் எனக்கு இருக்கவே செய்தது சரவணன்.