Sunday, May 22, 2011

அவனும்,நானும்

வ்வொரு கலை இலக்கிய இரவும் தனித்தனியான நிகழ்வுகள் தான் ,ஒன்று போல இன்னொன்று இருந்ததேயில்லை. பார்ப்பதற்கு ஒன்று போலத் தோற்றமளித்தாலும், அவைகளுக்குள் மிக நுண்ணிய வேறுபாடுகளை உணர்தல் கூடும்.

................. ஊரில் கலை இரவு. மிக விரிவான ஏற்பாடுகள். .எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்.ஆனால், ஊருக்குள் மக்களைத் திரட்டி வந்து உட்கார வைக்க முடியாதபடிக்குப் பனி கொட்டித் தீர்த்தது .பனியையும் மீறி நூறு பேருக்கும் மேல் மைதானத்தில் சிதறி உட்கார்ந்திருந்தார்கள். இரவு ஒன்பதரை மணிக்கெல்லாம் மேடைக்குப் போன என்னை , “இந்தா கூப்பிடறோம் ...அடுத்து கூப்பிடுறோம்...”என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் ,கூப்பிடவில்லை.
[பல சமயங்களில்,பல ஊர்களில் எல்லோரும் பாடி ,எல்லோரும் பேசி ,எல்லோரும் ஆடி முடித்த பிறகு கூப்பிடுவார்கள். “என்ன இப்பிடி...பொழுது விடியப்போகுது” என்றால்... “நீங்க முதல்ல பேசுனாக் கூட்டம் போயிருமில்ல தோழர்”என்று சொல்லி விடுவார்கள். அது போதாது நமக்கு]

ன்றைக்குப் பனி ஊரையே விரட்டிக்கொண்டிருந்தது .,நிகழ்ச்சிகளுக்கு நடுவே ,அறிவிப்பாளர் அதிக நேரம் எடுத்துக்கொண்டபோதெல்லாம், ஒவ்வொரு திசையிலும் அஞ்சு பேர், பத்துபேர் என்று புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். போர்த்திக் கொள்ளக் கொண்டு வந்திருந்த போர்வையை நன்றாக மேலுக்கு சுற்றிக்கொண்டு ஒவ்வொருவராக அங்குமிங்கும் படுத்துறங்கவும் ஆரம்பித்தார்கள்.என்னை பேசக் கூப்பிடுவார்கள் என்கிற தடயமே இல்லாமல் இருந்தது .கவிதை வாசிக்க வந்த ஒருவரும் ,பாடல்கள் பாட வந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவரும் மிச்சம் இருந்த ஆட்களை ‘வம்படியாக’ எழுந்து போக வைத்துக் கொண்டிருந்தார்கள்.


காகவி பாரதியின் இறுதிச்சடங்கில் இருபது பேருக்கும் குறைவானவர்களே கலந்தது கொண்டார்கள் என்பது வரலாறு. இதுவும் ,ஏறக்குறைய அந்த எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது .மேடைக்கு எதிரே மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூட்டம் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேர், எதிரும் புதிருமாக அங்கேயே படுத்தார்கள்.


ணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது . பேசக் கூப்பிட்டார்கள் . பத்திருபது பேர் முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்கள். நான்கைந்து பேர் கேட்கிற தோரணையில் , களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் .இதனால் எல்லாம் நம்பிக்கை இழப்பதோ ,குரல் சுண்டுவதோ, பேசுவதைக் குறைத்துக்கொள்வதோ நமக்குப் பழக்கமில்லை . எதிரே இருந்த மைதானம் ஏதோ போர்க்களம் போலக் காட்சி தந்தது. பேச நினைத்தது எல்லாம் மறந்து, மனம் மரணத்தைப் பற்றியே, சுற்றி வந்தது .”நான் மரணத்தைப் பற்றி சிந்திக்கிறேன்” என்று தான் பேசத் துவங்கினேன். பேசத் தகுந்த மரணங்கள் கூட எத்தனையோ உண்டு தானே ? ... பகத்சிங் ,கையூர் தியாகிகள் ,குதிராம்போஸ ,பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்தில் மாண்ட ஏழைகள் , வெண்மணி விவசாயக் கூலிகள்,கும்பகோணத்தில் பள்ளி வளாகத்தில் கொலையுண்ட குழந்தைகள் என்று ...... பேச்சு கிளை பிரிந்து பரவத் தொடங்கியது.


னக்கு நம்பிக்கையூட்டும் விதமாக,ஊருக்குள் இருந்து ஒருவன் மேடையை நோக்கி வந்தான். வந்து நின்று, பேச்சைக் கேட்க ஆரம்பித்தான். ஒரு போர்வையை மேலுக்குச் சுற்றி இருந்தான். பேச்சை ரசிக்க ஆரம்பித்தான். அவனுக்கும் ,எனக்குமான உறவுப்பாலத்தை வந்து நின்ற சில நிமிடங்களில் அவனே உருவாக்கினான் . அவன் ஈடுபாட்டுடன் கேட்க ,எனக்கு மிகுந்த உற்சாகமாகி விட்டது .அவனை மட்டுமே பார்த்துப் பேசத் துவங்கி விட்டேன் .ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். சுதாரித்துக் கொண்டேன் .வேறு சிலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே ...இருக்கிற “எல்லோரையும்” பார்த்துப் பேச ஆரம்பித்தேன். எனினும் அவனை அதிகம் பார்க்கத்தான் செய்தேன்.


வனுக்கு துணையாக , அவனுக்குப் பின்னால் இன்னுமொருவர் வந்து கொண்டிருந்தார் . எனக்குக் குஷி ஏற ஆரம்பித்தது .வந்தவர் ,நான் பார்க்கப் பார்க்க, என் உணர்வோடு கலந்து விட்ட அவனுக்குப் பின்புறமாக வந்து , அவன் முதுகில் வசமாக ஒரு அடியை இறக்கினார் .ஒரு நொடி எனக்கு பேச்சு நின்று போனது. “வக்காளி.. பாலு வாங்கிட்டு வரச் சொன்னா ... வாயப் பாத்துக்கிட்டு நிக்குறான். எவனோ பொழப்பத்தவன் பேசிக்கிட்டு இருக்கான் . நின்னு மண்டைய ஆடிக்கிட்டு இருக்கான்” என்றபடி மீண்டும் ஒரு அடியை இறக்கினார் . அவன் துள்ளிக்குதித்து ஓடினான் . கையில் பால் வாங்குகிற தூக்குப் போணி இருந்தது. மீண்டும் பேசத் துவங்கி இருந்தேன் .


துரையில் , திருவிளையாடல் புராணத்தில் , வந்தி என்ற வாரிசு இல்லாத கிழவிக்காக, மண் சுமக்க ஒப்புக்கொண்டு, அதற்குக் கூலியாக வந்தியிடமிருந்து புட்டு வாங்கி உண்ட பின் , வேலை பார்க்காமல் படுத்து உறங்கிய சொக்கநாதக் கடவுளின் முதுகில் பாண்டிய மன்னன பிரம்பால் வைத்த அடி , எல்லா உயிர்களின் முதுகிலும் பட்டது என்றொரு கதையை அம்மா சொல்லி இருக்கிறாள் . அது உண்மையோ, என்று உணர்வது போல் எனக்கும் வலித்தது .அதற்குப் பிறகு ரொம்ப நேரம் பேச முடியவில்லை.