Sunday, May 5, 2013

இன்ஷா அல்லாஹ் . . .

அரபிக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஓமன்  நாட்டின் தலைநகரம் மஸ்கட் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை .

 பிரம்மாண்டம் , பேரழகு , தூய்மை அவைகளே அந்தப் புனிதமான வழிபாட்டுத் தளம் .

உலகின் ஆகச் சிறந்த வேலைப்பாடுகள் மின்னும் , சுத்தத்தின் தனித்த அடையாளம் . ஒரே சமயத்தில் பத்தாயிரம் பேர் வழிபாடு செய்யத்தக்க விதத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட அற்புதம் . பேரழகும் , பிரமிக்கத் தக்க வேலைப்பாடுகளும் கொண்ட அந்தத் தரை விரிப்பு இணைப்புகளே இல்லாத ஒரே விரிப்பு ஒற்றை விரிப்பு  . எந்த ஊரில் பாவு கட்டி, எப்படி நெய்து , எப்படிச் சுருட்டி.... இம்மி பிசகாத , மாறாத செய் நேர்த்தி . அதை உருவாக்கிய  கலைஞர்களை வியக்கிறேன் .


போன வேலைகள் எல்லாம் முடிந்த ஒரு நாளில் அருமைச் சகோதரர் ஜனாப் . முஹம்மது பஷீர் என்னை அங்கு அழைத்துப் போனார் . பஷீர் அன்பும் , அறிவும் நிறைந்த பண்பாளர் . பாலைப் பூக்கள் என்னும் சிறந்த கவிதை நூலின் ஆசிரியர் . மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மதிப்பு மிக்க நிர்வாகிகளில் ஒருவர் .


வெயில் ஏறிக் கொண்டிருந்த ஒரு காலையில் இந்தப் பள்ளி வாசலுக்கு என்னை அழைத்துப் போனார் . எத்தனை ஆயிரம் கார்கள் வந்தாலும் நிறுத்த ஏதுவாக இட வசதி. நிழல் தரும் மரங்களோடு அந்த இடம் முழுவதும் குளிர்ந்து இருந்தது . அத்தனையும் நன்கு வளர்ந்த வேப்ப மரங்கள் . வளாகம் முழுவதும் காய்ந்த சருகுகள் கூட இல்லாமல் தூய்மை, ஒரு நறுமணம் போலப் பரவிக் கிடந்தது . காரை விட்டு இறங்கும் வரை ஏதோ படித்துக் கொண்டிருந்த நான் , இறங்குகிற வரை  அந்தச் சுற்றுப்புறத்தைப்  பார்க்கவேயில்லை.


இறங்கி அந்தப் பள்ளிவாசலின் முகப்பில் நின்று அதனைப் பார்த்த நொடியில் எனது உடலெங்கும் , உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பெரும் சிலிர்ப்பு பரவியது . அதை இப்போதும் என்னால் உணரத்தான் முடிகிறதே தவிர , எழுதி முடியாது . பள்ளிவாசலை முழுவதுமாகப்  பார்த்து விட்டு வெளியேறுகிற வரை அந்தச் சிலிர்ப்பு தொடர்ந்தும் , விட்டு விட்டும் என் மீது பரவிக் கொண்டே  இருந்தது .


அப்படித் தாள முடியாத பரவசம் எதனால் எனக்கு நிகழ்ந்தது என்பதை என்னால் இப்போதும் கண்டறிய முடியவில்லை . உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டே இருந்தது மட்டுமல்ல ; கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டும் இருந்தது .  சகோதரர் பஷீர் வியப்போடும் , புன்னகையோடும் என் கைகளைப் பற்றிக் கொண்டார் . அப்போது பஷீர் தனது அலைபேசியில் பள்ளிவாசலின் மைய மண்டபத்தில்  எடுத்த புகைப்படங்களே இவை .


என்னைச் சிலிர்க்க வைத்த அந்தப் பள்ளிவாசலை, நான் எடுத்த புகைப்படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன் . இதே போல மேலும் இரண்டு அனுபவங்கள் எனக்கு இதற்கு முன்பும்  நேர்ந்து இருப்பதை நான் அந்தக் கணம் நினைத்துக் கொண்டேன் . பின் எப்போதாவது நான் அதை சொல்லக் கூடும் . இன்ஷா அல்லாஹ்.

3 comments:

viji said...

ரசித்து எழுதியுள்ளீர்கள்

Unknown said...

அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,

மஸ்கட் தமிழ் சங்க இலக்கிய பட்டறையிலே தாங்கள் பகிர்ந்து கொண்ட பேச்சும் அவ்வண்ணமே எங்களால் உணரப்பட்டது. ஒரு மனிதராக நீங்கள் உணர்ந்தது, முழுவதுமாக, பேச்சாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டது.(இதுவும் ஒரு விதத்தில் நன்று கருதலே என எண்ணுகிறேன்) நல்ல மனிதம் மிக்க நண்பராக நீங்கள் உணரப்பட்டிர்கள். வாழ்த்துகள். இன்னும் தொடருங்கள். .இப்பொழுதும் பஷீர் மற்றும் நண்பர்கள் உடன் நடக்கும் உரையாடல்களில் தங்களுடைய பேச்சு நினவுகூறப்படுகிறது. முன்னொரு நாள் நிகழ்ந்த திரு. இறையன்பு அவர்களுடைய பேச்சும் அவ்வண்ணமே எங்களால் உணரப்பட்டது.

இத்தகைய அனுபவங்கள் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும், எல்லோராலும் அல்லது எதனாலும் வாய்க்கப்படுவதில்லை. ஒரு மெல்லிய வலை பின்னலை போன்ற சில பதிவுகள் உலகின் பள்ளிவாசல்களாக, தேவாலயங்களாக, கோவில்களாக, சில சம்பவங்களாக, எழுத்துகளாக, கவிதையாக, மனிதர்களாக இன்னும் எதுவாகவோ காத்துக்கொண்டே இருப்பதாகவே படுகிறது. நம் அனுமதியை எதிர்நோக்காமல், வினாடிகளில் ஒரு பதிவை ஏற்றி, நம்முள் ஒரு உறைந்த தருணத்தை, காலங்கள் தோறும் தாங்கிய படியே, மீண்டும் மீண்டும் அனுபவங்களுகாக ஓடும் வாழ்க்கை யார்க்கும் வாய்ப்பதில்லை. அங்ஙனம் வாய்த்தோரும் பகிர்ந்தது மிக குறைவே.

பாரதியின் நிற்பதுவே என்னும் கவிதையும், வண்ணநிலவனின் பெயர் மறந்த, மீண்டும் நான் தேடும் ஒரு கதையும், ராஜசேகரனின் வட்டியும் முதலுமாய் வரும் தொடரும், இந்த வகையிலேயே என்னால் உணர முடிந்தது.

உங்களுக்கு உணரும் மனமும், வெளிப்படுத்த எழுத்தும், ஒளியும் ஒலியும் அருளப்பட்டு, கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளிர்கள்.

தொடருங்கள்.

மஸ்கட்டில் உங்களோடு இன்னொரு தினத்திற்காக காத்திருக்கின்றோம்.

சண்முக சுந்தரம்.
மஸ்கட், ஓமான்.

Unknown said...

அன்புள்ள பாரதி கிருஷ்ண குமார்,

மஸ்கட் தமிழ்சங்கத்தின் இலக்கிய பட்டறையிலே தங்களுடைய பேச்சும் எங்களால் அவ்வண்ணமே உணரப்பட்டது. ஒரு மனிதராய் நீங்கள் உணர்ந்தது, முழுமையாய், ஒரு பேச்சாக எங்களுக்கு உணர்த்தப்பட்டது. ஒரு விதத்தில் இதுவும் நன்று கருதலே என எண்ணுகிறேன். இப்பொழுதும் பசீர் அவர்களுடனான உரையாடல்களில் உங்கள் பேச்சு நினவுகூறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
இத்தகைய அனுபவங்கள் எல்லோருக்கும், எல்லோராலும் அல்லது எதுவாலும், எப்போதும் வாய்ப்பதில்லை. ஒரு மெல்லிய வலை பின்னலை போல சில அனுபவங்கள் பள்ளிவாசல்களில், தேவலாயங்களில், கோவில்களில், கவிதைகளில், கதைகளில், குறுஞ்செய்திகளில், பதிவுகளில், ஒரு வழிபோக்கனின் வார்த்தைகளில், சில நிகழ்வுகளில் எல்லாம் புதைந்து, காலங்கள்தோறும் யாருக்கோ காத்துக்கொண்டே இருப்பதாய் தோன்றுகிறது. ஒரு வினாடியில், நம் அனுமதி இன்றி, நாம் உணரும் முன்னே. ஒரு உறைந்த தருணத்தை நம்முள் ஏற்றி காலத்தை நிறுத்தும் அனுபவங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே வாயக்கின்றது. கண்டவர் அனைவரும் பகிர்ந்தவரில்லை என்பதும் ஒரு குறை.
பாரதியின் நிற்பதுவேயும், வண்ணநிலவனின் பெயர் மறந்த, மீண்டும் நான் தேடும் ஒரு கதையும், ராஜசேகரனின் வட்டியும் முதலும், இன்னும் பலவும் இந்த வகையிலேயே என்ன தோன்றுகிறது.
நல்ல மனமும், எழுத்தும், பேச்சும், ஒளியும், ஒலியும் உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. பலன் நோக்கா பதிவுகள் உங்கள் கடமை.
மஸ்கட்டில் உங்களுடனான இன்னொரு நாளுக்காக காத்திருக்கின்றோம்.

நெஞ்சார்ந்த அன்புடன்
சண்முக சுந்தரம்
மஸ்கட் ஓமான்.

Post a Comment