Monday, May 13, 2013

அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள அறிவுத் திருக்கோவில் ஏற்பாடு செய்தது .

அறிவுத் திருக்கோவில், மகரிஷி வேதாத்திரி அவர்களின்  ஞான மரபைப் பின்பற்றி, போற்றி வாழும் அன்பர்களின் சங்கமம்.

அந்தத் தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வைத் துவங்கி வைக்கும் மகத்தான, பெரும் பேறு எனக்கு அமைந்தது.

முதல் அமர்வில், எனது ஞான குருவும், மகாகவியுமான சுப்ரமணிபாரதியைப் பற்றி பேசப் பணித்தார்கள் ,

ஒரு ஹிந்துவுக்கு காசியைப் போல், ஒரு முஹம்மதியனுக்கு மெக்காவைப்  போல், ஒரு கிருஸ்தவனுக்கு ஜெருசலேம் போல் எனக்கு எட்டயபுரம்.

 என் உயிரை உருக்கி, மனம் கசிந்து , காதலாகிக் கண்ணீர் மல்கி என் ஆசானைப் பற்றி 29.11.2009 ஆம் நாள் நடந்த முதல் அமர்வில் பேசினேன் .ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் பங்கு பெற்று , தங்கள் பங்கேற் பால் நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தார்கள் .

ஒரு தவம் போல உரையை அவதானித்தார்கள் . அப்படியான ஒரு சபையில் பேசுவது ஒரு சிறந்த அனுபவப் பொக்கிஷம் .

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில்,தமிழகத்தின் பெருமை மிக்க, அறிவிற் சிறந்த சான்றோர் பெருமக்களாகிய திருவாளர்கள் தமிழருவி மணியன்,  அறிவொளி, சுப. வீரபாண்டியன், கு.ஞானசம்பந்தன், நீலகண்டன், கனகசுப்புரத்தினம் எனப் பலரும் பேசிப் பெருமை சேர்த்தனர்.

முதல் அமர்வைத் தொடர்ந்து ஆறாவது அமர்வில் இந்தியத் தத்துவ  ஞான மரபின் மாபெரும் சிந்தனையாளன் சித்தார்த்த புத்தனைப் பற்றிப் பேச அழைத்தார்கள் . மீண்டும் ஒரு மகத்தான அனுபவம். இம்முறை கூட்டம் இரண்டாயிரத்தைத் தாண்டி இருந்தது .

 எனினும் அதே போலத் தவமிருந்த மேன் மக்கள் .இரண்டு தளத்திலும் நிரம்பி இருந்தார்கள் . ஒரு சிலர் தவிர எல்லோரும் குறித்த நேரத்தில் அரங்கில் இருந்தார்கள். சற்றே தாமதமாக வந்தவர்கள், வந்த தடம் தெரியாமல் கூட்டத்தில் கரைந்து கொண்டார்கள் .

புத்தனின் பூரண ஞானத்தை, அவன் பாமர மக்களின் மொழியில் பேசியதை, அவன் கடவுளை மறுத்ததை, தவத்தை, தேடலை அவைக்கு எடுத்து வைத்து, அவர்கள் புத்தனைக் காணச் செய்தேன்.

மீண்டும் வந்ததுஒரு வாய்ப்பு . அது இறுதியானதும், பதின்மூன்றாவதுமான நிகழ்வு . இம்முறை மகரிஷி வேதாத்திரி அவர்கள் முன் மொழிந்த பதினான்கு முக்கிய கோட்பாடுகளில் ஒன்றான "போரில்லா நல்லுலகு" என்கிற ஒன்றை மட்டும் முன் வைத்துப் பேசுவது எனப் பரஸ்பரம் பேசித் தீர்மானம் செய்தோம்.

இம்முறை முந்தைய நிகழ்வுகளையும் மிஞ்சி இருந்தது நிகழ்வு . அரங்கின் வெளியில் கூட அமர்ந்து , ஒரு சலசலப்பும் , சந்தடியும் இல்லாமல் பேசுவதை அவதானித்தார்கள் .

உலகில் நடைபெறும் அனைத்து வகையான போர்களையும் மகரிஷி எதிர்க்கிறார். அமைதி மட்டுமே மனிதனுக்கான வாழ் நெறி என்று தெளிவுற முழங்குகிறார் . ஆயுத வியாபாரமும், ஆயுத வியாபாரிகளுமே போர்களைப் பிரசவிக்கும் சாத்தான்கள் என்பதை மகரிஷி அறிந்திருந்தார். அதைத் தனது மொழியில் நேர்படச் சொன்னார். அதை விரிவாக, மேலும் வரலாற்றுச் செய்திகளோடு எனது பாங்கில் எடுத்து உரைத்தேன்.

ரொம்ப முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட மாட்டேன். ஒவ்வொருமுறையும் நிகழ்வு முடிந்ததும் அமைப்பாளர்களில் ஒருவர் மேடைக்கு வந்து நமக்கு நன்றி சொல்லும் தருணம் ...

 அவர் மேடைக்கு வந்து நமது பெயர் , நமது குடும்பம் ,நமது செயல்பாடு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சொன்னதும், அரங்கில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள்  ஒன்று சேர்ந்து , பிசிறின்றி , மனமுருக "வாழ்க வளமுடன்" என்று சொல்லும் விதம்.

 நீங்கள் ஆசீர்வதிக்கப்படும் தருணம் அது . மனம் , வெயிலில் வைத்த சாக்லேட் போல ஆகி விடும். அந்த மூன்று முறையும் , அந்தக்  குறிப்பிட்ட தருணத்தில் இறந்து போன அம்மாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. இதைப் பார்க்கவும், கேட்கவும் அவள் இல்லாது போன துயரம் காரணமாக இருக்கலாம்.

எதையோ எழுத வந்து எங்கோ தன் போக்கில் , நினைவின் பெரு  வெள்ளம் இழுக்கிற பாதையில் ஓடுகிறது எனது  எழுத்து. லகான் இல்லாத குதிரையை எதை வைத்து இழுத்து நிறுத்துவது  ... அது தானாகத் தான்  ஓடி நிற்க வேணும் . நிற்கிறது.

அந்தப் பதின்மூன்று அமர்வுகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளை  ஒலிக் குறுந்தகடாகப் {AUDIO CD } பதிவு செய்து  வைத்திருக்கிறார்கள். அதனைப் பெற விரும்புகிறவர்கள் எனது அருமை நண்பர் திருமிகு . அர்ஜுனன்  ( 99444 12888 )அவர்களைத் தொடர்பு கொண்டால் , அவர் உங்களுக்கு வழி வகை செய்து தருவார் .

 எனக்கும், அதன் தொகுப்பொன்றை தருமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன் . அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?