Wednesday, July 17, 2013

உறவுகள் . . . பாட்டி - 01

அது  மனம் மயங்கிச் சரிந்து கிடந்த மாலை நேரம் .
என் தனிமைக்குள் நான் இணைந்திருந்த தருணம் .
அலுவலக அழைப்பு மணி ஒலித்தது .
அன்பு நண்பர்கள் அதிஷ்டாவும் , யுவ கிருஷ்ணாவும் வந்தார்கள் .
நீண்ட நேரம் பேசி சிரித்துக் கழிந்தது பொழுது .
இறுதியில் , புதிய தலைமுறைக்கு  "உறவுகள்" என்ற பொதுத் தலைப்பில் பாட்டி பற்றி ஒரு கட்டுரை கேட்டார்கள் . அன்றைக்கு இருந்த மன நிலையில் சம்மதித்தேன் . சிறப்பாக அதனைப் பிரசுரம் செய்தது புதிய தலைமுறை .
அந்த இதழ் எடுத்து வைத்தது எங்கோ இடிபாடுகளில் கிடக்கிறது .
அதன் கையெழுத்துப் பிரதி இன்று கண்ணில் பட்டது .
அதனால் அதை உங்களுக்கும் பார்க்கத் தருகிறேன்


பாட்டி 

"அம்பாளுக்கு " ஒவ்வொரு ஊரிலும் ,ஒரு பெயர் இட்டு வழங்குவது  போலத்தான் பாட்டிக்கும் .ஆயா , ஆச்சி ,அம்மாயி ,அம்மாச்சி ,அம்மம்மா ,அம்மாத்தா , என்று  வட்டாரத்திற்கு ஒரு விதமாய்க் கூப்பிட்டுக் கொள்ளுகிறார்கள் . பாட்டி என்பது எங்குமான பொதுப் பெயராகி இருக்கிறது . தனது தாய் அழைப்பதைப் போலவே , பாட்டியையும்  "அம்மா" என்று அழைக்கிற பேரக் குழந்தைகளும் உண்டு .எந்த ஊரில்  , எங்கு , எப்படிக் கூப்பிட்டாலும்  , அவள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி உருவாகி , வார்ப்பாக நிற்கிறாள் .

தங்கள் குழந்தைகளிடம் , தாங்கள் காட்டிய  கண்டிப்பையும் அதிகாரத்தையும் கொண்ட ஒரு கரு நிழல்  தங்கள்  பேரக்குழந்தைகளின் மீது படிந்து விடக்கூடாது என்பதால் , எல்லாத் தாத்தாக்களும் , பாட்டிகளும் தங்கள்  பேரக் குழந்தைகளிடம்  பேரன்பைப் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள் . இளமையில் தாங்கள் செய்த தவறை , முதுமையில் , பிறர் செய்யாமல் தவிர்க்கும் , தடுக்கும் அனுபவத்தின் முதிர்ச்சியில் இருந்து தான் இந்த அன்பு ஊற்றெடுக்கிறது .

அம்மாவைப் பெற்ற அம்மாவை " அம்மம்மா " என்று தான் நாங்கள் எல்லோரும் கூப்பிடுவோம் . அம்மம்மாவுக்கு ஒரு மகள் , ஒரு மகன்  என இரண்டு குழந்தைகள் . நான் மகள் வழிப் பேரன் . ஒரே பேரன் . மூன்று பேத்திகள் . மகன் வழியில் இரண்டு பேரன்கள் , ஒரு பேத்தி என , பாட்டி ஏழு பேரக் குழந்தைகளுக்குச் சொந்தக்காரி .எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகப்  பாவித்திருந்தாள்.

திருமணமான ஐந்தே ஆண்டுகளில் , இரண்டு  குழந்தைகளைக் கையில் தந்து விட்டு , கடும் வயிற்றுப்போக்கு நோய்க்கு ஆளாகி , எந்த வைத்தியமும் பலன் தராது , தாத்தா செத்துப் போய் இருக்கிறார் .தாத்தா செத்த பிறகு , நெற்றியில் செந்நிறத்தில் திருமண்ணும் , மூக்குத் தண்டின் மேல் பகுதியில் இரண்டு புருவங்களையும் இணைத்தொரு வெண்ணிறத் திருமண்ணும் பாட்டி இட்டுக் கொள்ளுவாள் .சிறிய , கூர்மையான அவளது அழகிய நாசிக்கும் , முகத்திற்கும் அது எப்போதும் மங்களகரமாகவே  இருந்தது .

நாங்கள் மதுரையில் இருந்தோம் . பாட்டி , சென்னையில் தனது  மகன் வீட்டில் இருந்தாள் . எண் 7, வேதகிரி மேஸ்திரி வீதி , சிந்தாதிரிபேட்டை , சென்னை என்ற முகவரியில் தான் பாட்டி குடி இருந்தாள். அந்த முகவரியில் இருந்து , அம்மாவுக்கு அவள் எழுதின கடிதங்கள் கணக்கில் அடங்காதவை . பெரும்பாலும் பென்சிலால் எழுதப்பட்டு , பேனாவால் முகவரி எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் ஒன்றைக்கூட பாதுகாத்து வைக்காமல் போனோம் . பகல் வேளைகள் முழுவதும் புத்தகம் படிப்பது பாட்டிக்குப் பிரியமான நேரம் . படிப்பது அவளுக்குப் பெரும் விருப்பம் .

1940 களிலேயே  , தனது மகளை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிப்  படிக்க வைத்த பெருமை பாட்டிக்கு உண்டு . பின்னாளில் , ஆசிரியப் பணி புரிந்த அம்மா , தனது சம்பளத்தில் இருந்து , என்னைத் தவிர யாருக்கும்தெரியாது பாட்டிக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தாள் . ஒவ்வொருமுறை பணம்  அனுப்புகிற போதும் ," எங்க அம்மா தான என்னைப் படிக்க வைச்சா... " என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளுவாள் அம்மா .

பாட்டியும் , நாங்களும் வேறு  வேறு ஊர்களில் வாழ்ந்தது அழியாத நினைவுகளையும் ,வற்றாத பேரன்பையும் உருவாக்கியது . ஒவ்வொருமுறையும் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகிற போதெல்லாம் , சீர் கொண்டு  வருவது மாதிரி பத்துப் பன்னிரண்டு பெரும் பைகளோடு தான் வருவாள் . மதுரையில் இருந்து புறப்படுகிற போதும் , அதே போலச் சீர் கொண்டு போவாள் .அவள் மதுரைக்கு வருகிற போதும் . சென்னைக்குப் புறப்பட்டுப் போகிற போதும் , நாங்கள் ரயில்வே  ஸ்டேஷன் போகாமல் இருந்ததில்லை . எல்லோரும் பார்க்க , எதைப்பற்றியும் , யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாச் சந்திப்புகளையும் ,எல்லாப் பிரிவுகளையும் பெருகிய கண்ணீரால்  நிறைத்து விடுவாள் பாட்டி .ஒப்பனையற்ற , களங்கமற்ற அந்த அன்பை வேறு எந்த உறவிலும் கண்டடைய முடியாது .

இதனை எழுதுவதற்கு முன்பு , ஒரு முறை வேதகிரி மேஸ்திரித் தெருவில் நடந்து போக விரும்பினேன் . போனேன் .
அந்தத் தெருவும் , அதற்குப் போகிற பாதைகளும் , சுற்றி இருந்த வீடுகளும் முகம் தெரியாதபடி முற்றாக மாறி விட்ட சென்னையில் , ஏழாம் எண் கொண்ட பாட்டி வாழ்ந்த அந்த வீடு இன்னும் அப்படியே பெரிய திண்ணைகளுடன், அழிக் கம்பிகளுடன் அப்படியே என் நினைவுகளைப் போல அழியாமல் , மாறாமல் இருந்தது .மிக மிக மெதுவாக அந்த வீட்டைக் கடந்தேன் .

பாட்டியின் உரத்த குரலும் , அவளது தனித்துவமான சமையலின் மணமும் , பித்தளையில் செய்யப்பட சிற்றுரலில் அவள் வெற்றிலை இடிக்கிற சத்தமும் கேட்கத் தான் , உணரத்தான் செய்கிறது  மனது . சிற்றுரலில் இருந்து வெற்றிலையைச் சுழற்றி கையில் எடுத்து உருட்டுகிற லாகவமும்,இடித்துக் கொடுத்தால் அதிலிருந்து கிள்ளிக் கொடுக்கும் கருணையும்.... இப்போது நினைக்க உள்நாக்கு சிவக்கிறது அந்தப் பழைய வீட்டில் படியேறி உள்ளே போனதும் ,முதலில் வருகிற இடைகழியை அடுத்த முற்றத்தில் , இரண்டு மரத் தூண்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிற துணி காயப் போடுகிற கொடியில் அவளது  தூய வெள்ளை வாயில் ரவிக்கையும் , அரக்கு வண்ணத்தில் கருஞ் சிவப்புக் கட்டமிட்ட சின்னாளப் பட்டுப்  புடவையும் , அதே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது .

வளையாத முதுகு அவளுக்கு . எங்கேயும் , எப்போதும் நிமிர்ந்து தான் உட்காருவாள் . முதுமையின் தடங்கள் அவள் தோற்றத்தில் இருந்ததே அன்றி , ஒரு போதும் அவளது இயக்கத்தில் இருந்ததில்லை . எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள் . சளைக்கவோ, சலிக்கவோ அவளுக்குத் தெரியாது . உழைப்பின் பரவசத்தை ஜீவ சுபாவமாகக் கொண்டிருந்தாள் பாட்டி . எந்த வேலையானாலும் சுத்தம் அவள் இயல்பாகவே  இருந்தது ...

ஒரு சிறிய தவறு நடந்தாலும் , பெருங் குரலெடுத்துச் சண்டை போடும் அவளது குணத்தை யாருமே பாராட்டியதில்லை ."சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் ஊரைக்கூட்டுவாளே " என்கிற பேர் அவளுக்கு எப்போதும் இருந்தது . மிக மோசமான முன் கோபக்காரி என்பது தான் , அவளைப் பற்றிய அறிமுகமாக எப்போதும் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது . அம்மாவே கூட இதனைச் சமயங்களில் சொல்லி இருக்கிறாள் . எனக்கும் அப்போது அப்படித் தெரிந்திருக்கிறது .

ஆனால் , அடைபடாத அவளது கோபத்தின் நியாயங்கள் இப்போது  தான் எனக்குத் தட்டுப்படுகிறது . தன் காலம் முழுவதும் எந்த விதமான பொய், களவு , சூது , அழுக்காறு , அவதூறு , என எந்த இழி குணத்தையும்  ஒருபோதும் அறிந்திராத , உணர்ந்திராத பாட்டியால்  எந்த மிகச் சிறிய தவறையும் சகித்துக்கொள்ள இயலவில்லை . தன் கூடு நோக்கி வரும் ஒரு பசித்த பாம்பைக் கண்ட தாய்ப் பறவை போல சிறகு துடித்துப்  படபடத்திருக்கிறாள் . அந்தப்  படபடப்பைத்தான் தான் கோபமென் று  நாம்  குறைபாட்டுடன்  புரிந்து கொண்டிருக்கிறோம் .எல்லாக் குற்றங்களையும் , தவறுகளையும் பெருந்தன்மை , நாகரிகம் , பொறுமை என்னும் பாவனையில் சகித்துக்கொள்ள பழகி விட்ட நமக்கு  ஒரு தாய்ப் பறவையின் பரிதவிப்பு  புரிவது  சிரமமானது தான் .

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் மதுரையில் இருந்தேன் . . . 



                                                                                                         (இன்னும் இருக்கிறது )

No comments:

Post a Comment