Friday, June 3, 2011

நம்பிக்கை நொடிகள்...
ம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவுக்கும் எனக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழும்பி இருந்தது. யாரோடும் சேர்ந்து இருக்காமல், மதுரை வீட்டில் தனியே இருந்தார் அப்பா .என்னோடு வந்து இருக்க வேண்டுமென்று நானும் அவரை அழைக்கவில்லை. அதற்குக் காத்திரமான காரணங்கள் எனக்கிருந்தன.

னித்து, ஒற்றையாக,பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்பா இப்போது நினைவின்றிக் கிடந்தார். அன்று காலை தான் நினைவு தப்பிப் போய் இருந்தது. தகவல் தெரிந்து மாலையில் நான் வந்து சேர்ந்தேன். மருத்துவர் வந்து பார்த்தார். கொஞ்சம் மருந்து மாத்திரைகள், திரவ உணவு என்று அன்றைய இரவு கடந்தது.

று நாள் காலை நினைவு திரும்பியது. எல்லோரையும் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். “குளிக்கணும்”, “டிரஸ் மாத்தணும்” என்றார். உடம்பெல்லாம் துடைத்து, உடை மாற்றி விட்டேன். பால், கஞ்சி ,பழச்சாறு என்று மாற்றி மாற்றி மணிக்கொருதரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டார் .ஏதோ சொல்ல வந்து , சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்திக் கொண்டார்.

ரவு பத்து மணிக்கு பால் குடித்து முடித்ததும் , பக்கத்தில் அழைத்து, “இத்தன நாள் தனியா இருந்துட்டேன். இனிமே இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சுடா ... எங்கிட்ட இருக்குற எல்லாத்தையும் குடுத்துர்றேன். என்ன உன்னோட கூட்டிட்டுப் போயிரு.... உனக்கு எந்தக் கஷ்டமும் தரமாட்டேன்....கூடக் கூட்டிகிட்டுப் போயிடரு” என்றார். தாமதமின்றி, தயக்கமின்றி “சரி” என்றேன். உடல் பலவீனமாக இருப்பதால் இரண்டொரு நாள் ஓய்வுக்குப் பின் போகலாம் என்றேன். ஒப்புக்கொண்டார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்து உறங்கி போனார். அவர் கட்டிலில் படுத்திருக்க, நான் பக்கத்திலேயே தரையில் பாய் விரித்து படுத்து கொண்டேன்.

காலையில் எழுந்து, கடை வீதிக்கு போய் காப்பி குடித்துவிட்டு, அவருக்குப் பால் வாங்கி கொண்டு வந்து எழுப்பியபோது, உயிர் ஏற்கனவே பிரிந்து போய் இருந்தது. அளவற்ற துயர மென்னை ஆட்கொண்டது.

ந்தவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆறுதலாக சொல்லப்படும் சொற்கள் என் துயரத்தை ஏனோ குறைப்பதே இல்லை. அதிகரிக்கவே செய்கிறது.

றுதல் சொல்ல வந்தவர்கள் கலங்கிக் , கரைந்து, தயங்கித் தயங்கி சொற்களை தேடித் பேசுகிற துயரம், மேலும் துயரப்படுத்துகிறது. ஒரு துளிக் கண்ணீர் கூட வராமல், உள்ளுக்குள் ஏதோ எடை கூடிக் கொண்டிருந்தது.

பி
ற்பகல் ஒன்றரை மணிக்குத் “காவன்னா” வந்தார். பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தடையின்றிப் பேச ஆரம்பித்தார். “அப்பாவுக்கு என்ன வயசு? உனக்கு என்ன வயசு? இன்னும் கல்யாணமாகாத தம்பி தங்கச்சி யாரும் இருக்காங்களா? அப்பா எதுவும் கடன் வச்சிட்டுப் போய் இருக்காரா?” விடை சொல்லிக் கொண்டே வந்தேன்.

ந்தக் கடமையும் அப்பா பாக்கி வைக்கல; அம்மா ஏற்கனவே போயிட்டாங்க...கடனும் எதுவுமில்லை...அப்புறமென்னப்பா?... பெரிய சாவு... கலங்கிப் போய் உட்காரக் கூடாது. சந்தோஷமா வழியனுப்பி வைக்கணும். எந்த வயசா இருந்தாலும் தகப்பன் போறது துயரந்தான்... ஆனா... மத்தவங்க துயரத்தோட ஒப்பிட்டுப் பார்த்துதான் நம்ம துயரத்தக் கணிக்கனும். “ என்னைய எடுத்துக்குங்க... பொறந்து வளந்தது ஒரு சின்னக் கிராமத்துல... நிலம் புலம் எதுவும் கெடையாது.. அன்னாடம் உழைச்சுப் பிழைச்ச குடும்பம்.. நான் ஒத்தப் பொறப்பு. எனக்கு மூணு வயசானப்ப எங்கம்மா செத்துருச்சு... அஞ்சு வயசுல எங்க அப்பனும் போய்ட்டாரு... எங்கேயோ கெடந்து எப்பிடியோ வளந்தேன் . பாருங்க... அப்பா போட்டோவும் இல்ல; அம்மா போட்டோவும் இல்ல; முகமும் ஞாபகத்துல இல்ல... இப்ப நெனச்சாலும் கண்ணீர் பொங்கும்... என்ன பண்ணுறது... உடம்பு பூரா எண்ணெய் பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்”. ஒரு கனத்த பெருமூச்சை மெலிதாக வெளியேற்றினார்.

ந்த இடைவெளியும் இன்றி, அவரே தொடர்ந்தார். “எத்தனை மணிக்கு எடுக்குறீங்க?” சாயங்காலம் ஆறு மணிக்கு என்றேன். ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு வந்தேன்... சாயங்காலம் திரும்ப வர்றேன் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் “காவன்னா”. நமது துயரம் தான் உலகிலேயே பெரியது என்று நம்பி நாம் மயங்கும்போது, ஒவ்வொரு பெரிய கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னுமொரு பெரிய கோட்டை வரைந்து, நாம் பெரியதென்று நம்பியதைச் சிறியதாக்கி, விசித்திரம் காட்டி விளையாடுகிறது வாழ்க்கை.

மூன்று வயதில் தாயையும், ஐந்து வயதில் தந்தையும் இழந்திருந்தால் ஒரு குழந்தை ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் எவ்வளவு போராடியிருக்கும்? ஒவ்வொரு குச்சிக்கும் சிலேட்டுக்கும் யார் யார் வாசலில் எல்லாம் நின்றிருக்கும்? கொடுங்கனவுகள் கண்டு கண் விழித்த இரவுகளில் எல்லாம் அருகே அரவணைக்க யாருமின்றி எப்படித் தவித்திருக்கும்?... ஓ... இதோ அந்தக் குழந்தை தன துயரங்களை எனக்கு உணர்த்தித், தன் சொற்களால் என் துயரங்களைத் துடைத்தெறிந்து விட்டுப்போகிறான். துயரங்களைக் கடந்து வாழ்வின்மீது பெரும் காதலும், நம்பிக்கையும் உண்டாக்கும் விதைகளை எனக்குள் விதைத்துப் விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான். என் துயரங்கள் அவருக்குப் பின்னே கைகட்டிப் பணிந்து போவதை நானே பார்த்தேன். இழவு வீட்டிலும் திருப்பணி செய்கிற ஆற்றல் சிலருக்குத்தான் இருக்கிறது.- "நமது நம்பிக்கை" ஜூன் மாத இதழில் வெளியானது.
இதழாசிரியர் அருமை நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுக்கும்,
உதவி ஆசிரியர் கனகலக்ஷ்மிக்கும் நன்றி.