Monday, May 25, 2015

கந்தர்வன் கவிதைகள் நூலுக்கு எழுதிய முன்னுரை

முன்னுரை
1
அவரது முதல் கவிதைத்  தொகுப்பான "கிழிசல்கள்" நூல் வெளியீட்டு விழாவில், சிறப்புரையாற்றினேன். இப்போது, அவரது ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கும் முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரண்டும் தற்செயலானவை அல்ல. எனக்கும், அவருக்குமான எப்போதும், இப்போதும் அறுபடாத உறவின் அடையாளம் அது.

2
அன்னம் பதிப்பகத்தின் சார்பில், பேராசிரியர். மீரா தான் அந்தத் தொகுப்பினை வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரது படைப்பை பேரா. மீரா வெளியிட்டது அதுவே முதல் முறை. கலை இலக்கிய பெருமன்றத்துக்காரரான பேரா. மீரா அதனை வெளியிட்டது சிலருக்குப் பொறுக்கவில்லை. தங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் நேரிடையாகவே பேரா. மீராவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பேரா. மீரா அதைப் பொருட்படுத்தாது, தொகுப்பை வெளியிட்டார்.
மானாமதுரையில், மேல்கரைப் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் தான் வெளியிட்டு விழா நடந்தது. விழாவில், நீ தான் சிறப்புரையாற்ற வேண்டுமென்று கந்தர்வன் அழைத்தார். ஒப்புக் கொண்டேன். ஆனால், விழா நடந்த அன்று ஒரு வேலைச் சுழலில் அகப்பட்டுக் கொண்டேன். தொலைபேசியில் அழைத்து "விவரம்" எல்லாம் சொன்னேன். அமைதியாகக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டார். சொல்லி முடிந்ததும், "நீ சொல்றது எனக்குப் புரியுதுடா தம்பி... முதல்ல அந்த வேலையப்பாரு... நாம் பாத்துக்குறேன்... என்ன... நீ பேசுனா நல்ல இருக்கும்னு ஆசைப்பட்டேன்". என்றார். கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தாலும், புறப்பட்டு வந்து விடுவேன் என்றேன். "தம்பி... வேணாம்.. ஒரு மனசா அந்த வேலையப் பாருங்க... வர வேண்டாம்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார். மனிதர்களை அவர்களது சூழ்நிலையுடன், இணைத்துப் புரிந்து கொள்கிற பக்குவம் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. அவர் அப்படிச் சொன்னதும், எனக்குப் போயே தீர வேண்டுமென்று, வேகம் பிடித்தது.
எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு, மானாமதுரை போனேன். என்னை பார்த்ததும், "தம்பி... வந்துட்டீங்க... வருவீங்கன்னு தெரியும்" என்றபடி நகர்ந்து போனார். வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விழா துவங்க இன்னும் நேரம் கிடந்தது. வாசலில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அந்த "சிலர்" பற்றி, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீரா வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். பதிப்பகத்தின் பரந்து பட்ட செயல்பாடு, சந்திக்கும் தடைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என்று விரிவாக பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
விழா துவங்கி, புத்தகம் வெளியிட்ட பிறகு நான் பேசத் துவங்கினேன். வேறு எதையும் குறிப்பிடாமல், "ஊசிகள்" மீரா "கிழிசல்கள்" தொகுப்பை வெளியிட்டது தான் பொருத்தமானது; சரியானது" என்று பேச்சைத் துவங்கினேன். (ஊசிகள் என்ற தனது தொகுப்பை அதற்கு முன்பு மீரா வெளியிட்டு இருந்தார்) கந்தர்வனும், மீராவும் கைதட்டி ஆரவாரம் செய்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை என்னால் மறக்கவே இயலாது. அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழிமுறைகளை, கந்தர்வனைப் போல இந்த உலகத்தில் யாராலும் புதிது புதிதாக கண்டறிந்து விடவே முடியாது.
எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கூச்சலிடுவார், கொண்டாடுவார், கைதட்டுவார், உரக்கச்சிரிப்பார், தலை நிமிர்த்திப் பார்ப்பார், தலையைக் குனிந்து கொண்டு இடமும் வலமுமாகப் பலமுறை தலையசைப்பார், குலுங்கச் சிரிப்பார், கண்களில் கண்ணீர் பெருகச்சிரிப்பார், மேசையை அடிப்பார், தோள்களில் தட்டுவார், கைகளைப் பற்றுவார், கட்டியணைத்துக் கொள்வர், எதுவும் பேசாமல் கண்களுக்குள் பார்ப்பார், "சே" என்பார், 'அட' என்பார் "ஆஹா" என்பார்... அவரது சிவந்த முகம் மேலும் சிவக்கச் சிவக்க சந்தோசத்தைக் கொண்டாட்டமாக மட்டுமே வெளிப்படுத்துவார். அன்றைக்கு நிகழ்ச்சி முழுவதுமே அப்படித்தான் அமைந்தது. 
எல்லோரும் புறப்பட்டோம். என் கைகளைப் பற்றித் தனியே அழைத்துப் போனார். "நீ வரமுடியாதுன்னு சொன்னதும், "பொக்குன்னு" போயிடுச்சுடா தம்பி... ஆனாலும் வந்துடுவேன்னு மனசு சொல்லிச்சு... உன்னப் பார்த்ததும், சந்தோசமா இருந்தது மாதிரி, இவ்வளவு பிரச்சனைலையும் வந்துருக்கியேன்னு வருத்தமாவும் இருக்கு... ஆனா வேற எவன் பேசி இருந்தாலும், இப்படிப் பேசிக் கொண்டாட முடியாதுடா " என்று இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். வழிச்செலவுக்குப் பணம் கொடுத்தார். " அண்ணாச்சி காசெல்லாம் வேண்டாம்" என்றதும், உறுதியாக மறுத்து "புத்தகம் வாங்கிக்க" என்று சொன்னார். வந்திருந்த எல்லோரிடமும் தனித் தனியே பேசி வழியனுப்பினார். அவர் யாருடன் பேசினாலும், பழகினாலும், இந்த உலகத்திலேயே அவர்களிடம் மட்டுமே அன்பு பாராட்டுகிறார் என்கிற உணர்வைத் தந்துவிடுவார். கபடமின்றி, களங்கமின்றி, ஒளித்து வைக்காமல் வெளிப்படுகிற அன்பிற்கு, அத்தகைய உணர்வைத் தோற்றுவிக்கும் ஆற்றல் எப்போதும் உண்டு. அந்த ஆற்றலின் அடையாளம் கந்தர்வன்.

3
தன்னை விட அறிவும், ஆற்றலும் உள்ள மனிதர்களைப் பார்த்ததும்  நம்மில் சிலருக்கு வியப்பும், பலருக்குப் பொறாமையும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. திறமையும், ஆற்றலும் உள்ள மனிதர்களைக் கண்டு விட்டால், அவர்களைக் கொண்டாட மறுக்கும் பலரை நான் அறிவேன். அந்தத் திறமையை, ஆற்றலை மறைக்கவும், ஒழிக்கவும் அவர்கள் செய்யும் கிழ்த்தரமான தந்திரங்களையும் நான் கண்டிருக்கிறேன். வாய் நிறைய அவதூறும், மனம் நிறையக் கள்ளமெளனமும் சுமந்து ஊர் ஊராகப் போய், ஆள் சேர்த்து, அவதூறுகளை இறைத்துக் கொண்டே போவார்கள். தன்னைத் தவிர மற்றவர்களுக்குப் புகழும், வெளிச்சமும் வருவதை அவர்களால் தாங்கவே முடியாது. ஆற்றல் மிக்க, அறிவு மிக்க மனிதர்கள் நடந்து போகும் பாதையெங்கும் மலத்தையும் கண்ணடித் துண்டுகளையும் தங்கள் கைகளாலேயே கலந்து போடுவார்கள். ஆனால், ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் எதன் மீதும் நடந்து, கடந்து போய் விடுவார்கள் என்பதும், அவர்களைக் கையில் சுமந்து, அந்தப் பாதையைக் கடக்க கந்தர்வன் மாதிரி மனிதர்கள் எப்போதும் காத்திருப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

திறமையும், அறிவும், ஆற்றலும் உள்ள யாரைக் கண்டுவிட்டாலும், கந்தர்வன் அவர்களைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார். அவர்களைப் பற்றி ஆயிரம் பேருக்குச் சொல்லுவார். சலிக்காமல், வித விதமாய்ப் புகழ்ந்து கொண்டே இருப்பார். ஒரே நாளில், அவர்களுக்கு எல்லாப் புகழையும் வாங்கித் தர வேண்டுமென்று பேசுவார். அப்படிப் பலரை, அவர் கொண்டாடுவதை, அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என்னை அவர் கொண்டாடியதைப் பலர் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு கலை இலக்கிய இரவில் பேசி முடித்து விட்டு, மேடைக்குப் பின்புறம் வந்தேன். முன்னால் இருந்து ஓடோடி வந்தார். என்னை ஆரத் தழுவி, முகத்தில் பெருகுகிற வியர்வையை வழித்துக் கைகளில் எடுத்து, லேசாகச் சுவைத்து "இனிக்குதுடா தம்பி" என்று சொன்னார். நான் திகைத்து, கண்களை மூடித் திறந்த போது, முன் வரிசைக்குப் போய் விட்டிருந்தார். அதே ஊரில், அடுத்த ஆண்டு கலை இரவுக்கு அவரால் வர இயலவில்லை. இரண்டு நாள் கழித்துக் கடிதம் வந்தது, "தம்பி... திரும்பிய பக்கமெல்லாம் உன் பேச்சுத் தான்... வந்திருந்தால், வியர்வை துடைத்திருப்பேன்" என்று எழுதி இருந்தார். இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது அந்தக் கடிதம்.
இதோ, இப்போதும் இந்த முன்னுரையை வியர்வை பொங்கத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நிகழ்வுகளில், வியர்வை வழிய வழியத் தான் பேசிவிட்டு இறங்குகிறேன். துடைத்துவிடும், துடைத்து விடுவதாக எழுதும் கைகளைத் தான் காணவில்லை.

4
எங்கள் முதல் சந்திப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் என்கிற ஊரில் தான் நடந்தது. இபோதைய செம்மலர் இதழின் ஆசிரியர் அன்பும், அருமையுமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் தான் எங்கள் இருவருக்குமான அறிமுகத்தைச் செய்து வைத்தார். முகம் மலர, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "உங்களுக்கு என்னத் தெரியாது: எனக்கு உங்களத் தெரியும். நீங்க பிரபலம்" என்றார். நான் விழித்தேன்.
 "நீங்க எங்ககிட்ட இருக்க வேண்டிய ஆளுன்னு, நான் தான் முதல்ல சொன்னேன்... நீங்க எங்க கிட்ட வந்துருவீங்கன்னும் சொன்னேன். தோழர்... இவர விட்டுறாதிங்க... எப்பிடியாவது புடிங்கன்னு நாந்தான் எஸ்.ஏ.பி. கிட்ட சொன்னேன்". நான் வியப்பாகப் பார்த்தேன்.
"தோழர்... எங்க ஊரு முத்தாலம்மன் கோவில் திடல்ல நீங்க பேசுனதை நாங்க கூட்டமா வந்து கேட்டோம்... அடேங்கப்பா... என்னா பேச்சு?... பேச்சா அது?..." என்று சப்தமாகச் சிரித்தார்.
பெருமிதத்துடன் எஸ்.ஏ.பியைப் பார்த்தார். "பேசின மாதிரியே புடிச்சிட்டு வந்துட்டீங்க எஸ்.ஏ.பி... எப்பிடிப் பிடிச்சீக?" என்று கேட்டு விட்டு, மீண்டும் சப்தமாகச் சிரித்துக் கொண்டார். எப்போதும் போல, உதடு பிரியாத ஒரு மர்மப் புன்னகையுடன் எஸ்.ஏ.பி. சொன்னார். "வந்தாச்சுல்ல... பத்திரமாப் பாத்துக்குங்க" என்றார்.
 "ஆஹா" அதை விட வேற வேல... ஒப்படைச்சுட்டீங்கல்ல, நாங்க பாத்துக்குறோம்" என்று மீண்டும் கைகளைப் பற்றிக் கொண்டார். அந்தப் பற்றுதலை இறுதி வரை விடவேயில்லை. இந்த, "ஆஹா" என்கிற ஒற்றைச் சொல்லை அவர் உச்சரிக்கும் விதமும், தொனியும், பாங்கும் ஜீவரசம் ததும்பிக் கிடக்கும். அந்தச் சொல்லையே அவர் தான் கண்டு பிடித்தார் என்று நம்பத் தோன்றும்.
கொஞ்ச நாள் தான் 'தோழர்' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் 'தம்பி' தான். கடைசி வரைக்கும் 'தம்பி' தான். திருமதி. கந்தர்வனை "மதினி" என்று தான் நான் எப்போதும் அழைத்தேன். வாங்க "கொழுந்தனாரே" என்று குறைவில்லாமல் இப்போதும்  மதினி அழைக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டும், வாய் நிறைய எப்போதும் "சித்தப்பா" என்று தான் கூப்பிடும். அரவணைத்துக் கொள்ள ஆயிரம் ஆயிரம் கைகள் இருந்த மனிதன் கந்தர்வன்.

5
அவர் பார்த்த வேலையில் இருந்து, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்த பத்தொன்பது மாதங்களும், ஏறக்குறைய அன்றாடம் சந்தித்திருக்கிறோம். அவர் அப்போது பரமக்குடியில் இருந்தார். நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்தேன்.
"நேரங் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பாக்கணும், முடிஞ்ச வரைக்கும் கூட இருக்கணும், நிறையப் பேசணும், பாதிக்கப்பட்டவங்க கூட இருக்குறது தான் அவங்களுக்கான நம்பிக்கை... கஷ்டப்படுற காலத்துல கை விட்டுறக் கூடாது "என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் எஸ்.ஏ.பி. சொல்லிக் கொண்டே இருப்பார். எங்களை எல்லாம் இணைத்த மையப் புள்ளி எஸ்.ஏ.பி. தான். அது தனி வரலாறு.
வேலை முடிந்து, வேக வேகமாக பரமக்குடி போவேன். முக்கால் மணி நேரப் பயணம். பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் தான் எங்கள் சந்திப்பு மையம். சில நாட்களில் எஸ்.ஏ.பியும் வந்து இறங்கி விடுவார். அந்த நாட்களில் நான் மட்டுமின்றி, ஒரு பெரிய அறிவுலகப் பட்டாளமே அவரோடு இருந்தது. பேராசிரியர் தொ. பரமசிவன், ஷாஜஹான் கனி, கே.ஏ. குணசேகரன், ஜேம்ஸ் வாத்தியார், பறம்பைச் செல்வன் என்று பலரும் வந்து கூடி விடுவார்கள். சந்திப்பு எப்போதும் மாலையில் துவங்கி விடும். எப்போது முடியுமென்று சொல்லவே முடியாது. அதிகாலை ஆறு  மணி வரை பேசிக் கொண்டிருந்தது கூட உண்டு. அந்தப் பணி நீக்கம் செய்யப்பட்ட நாட்கள் பற்றி, "பத்தொன்பது மாதங்கள்" என்றொரு கவிதை எழுதி இருக்கிறார்.
இன்னும் பலருக்குத் தெரியாது. அவர் பணியாற்றிய துறையில் இருந்த மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடத் துவங்கி இருந்தனர். அதற்கு மேல் நிலையில் இருந்த, இரண்டாம் நிலை அதிகாரிகளின் துணை கொண்டு, அந்தப் போராட்டத்தை விழ்த்த அரசு திட்டமிட்டது. போராட்டத்தை அடக்கும் ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்துக் கொண்டே இருந்தது. இரண்டாம் நிலை அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்ற பலரும், மூன்றாம் நிலை ஊழியர்களாக இருந்து, பதவி உயர்வு பெற்றவர்கள் தான். ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் தெரிந்தும், அதிகாரத்திற்கு அஞ்சி, அதிகாரிகள் அரசுக்குத் துணை போனார்கள். ஆனால், அதிகாரியாக இருந்தும், ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் கந்தர்வன். போராடிய ஊழியர்களைவிடவும், அவர்களை ஆதரித்த அதிகாரிகளின் மீது வெஞ்சினம் கொண்டது அரசு. அதிலும் எப்போதும் அதிகாரத்திற்கு அடி பணிய மறுத்துக் தன் மானுட இயல்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த கந்தர்வன் மீது தனிக் கோபம் கொண்டது அரசு. தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. பத்தொன்பது மாதங்கள். பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு, பணியில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. பணியில், காலையில் சேர்ந்தவரை, பிற்பகலில் மீண்டும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது அரசு. உறுதி குலையாது நின்றார் கந்தர்வன்.
இந்தத் தொகுப்பில் உள்ள அந்தக் கவிதையை, வாழ்வின் போராட்டக் கணங்களில் இருக்கும் எல்லோரும் படிக்க வேண்டும். வீட்டில், நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த பத்து பைசாவில், பேனாவுக்கு மைநிரப்பி, அதிகாரத்திற்கு எதிராகப் போராட அழைக்கும் கவிஞனின் குரல் அது. இந்தக் தொகுப்பு முழுவதும் "அந்தப் பத்துப் பைசா" மையில் எழுதியது தான்.
அந்த நீண்ட கவிதையில் ஓரிடத்தில் எழுதி இருப்பார்
"நான் கவலையோடு
வருவதறிந்தால்,
செடிகள் சிரித்துக் கொண்டு
வரவேற்புக் கொடுக்கும்.
விடிய விடிய என்னோடு
விவாதங்கள் நடத்தும்.
கவலைப் படாதே என்று
தைரியம் சொல்லும்"
அந்தச் செடிகளில் ஒன்றாக நானும் இருந்தேன்.

6
இந்தத் தொகுப்பில் உள்ள மிகப் பெரும்பாளான கவிதைகளை அவர் வாசிக்க நான் கேட்டிருக்கிறேன். அவரது வீட்டில், அலுவலகத்தில், கலைஇரவு மேடைகளில்,எனது அலுவலகத்தில், ரயிலில், பேருந்தில், பெட்டிக்கடை வாசலில் என்று நாங்கள் பேசி வாழ்ந்த இடமெங்கும் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பது ஒருவகை இன்பம் என்றால், வாசிக்கக் கேட்பது பேரின்பம். ஏற்ற இறக்கங்களோடு, குரலில் உணர்வைக் குழைத்து, வாசிப்பின் வழியே கவிதையை உயிர் பெற்று எழச் செய்வார்.

அவர் சிறுகதைகளுக்குள் இருந்த இலக்கியச் செறிவை, அவரது கவிதைகள் பெற்றிருக்கவில்லை என்று ஒருமுறை சொன்னபோது, தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். “எனக்கு அது வேற இது வேற... கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு... கோவிலுக்குப் போனா  சிங்காரிச்சிட்டு போகலாம்... சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா..? என்று சொல்லி விட்டுப் பலமாக சிரித்துக்கொண்டார். ஆனால், அவர் விரும்பியிருந்தால், இன்னும் ஆழமான, அற்புதமான கவிதைகளை எழுதி இருக்க முடியும். அவரே வரைந்து கொண்ட ஒரு கோட்டிற்குள் தனது கவிதைகளை நிறுத்திக் கொண்டார் என்பது என் கணிப்பு. கவிதையைக் களமாடும் கருவியாக மட்டுமே வைத்துக் கொண்டார். மேடைகளில் அவர் கவிதை வாசிக்கும்போது பெரும் திரளான மக்கள் கை தட்டி ஆர்ப்பரிப்பதை அனைவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஜனங்களைச் சிரிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, எழுச்சிகொள்ளச் செய்து விடுவார். கவிதை எழுதுவதில் வெற்றி பெற்ற எல்லோராலும், கவி அரங்குகளில் வெற்றி பெற முடிந்ததில்லை. அது ஒரு தனித்துவமான நிகழ் கலை, நுட்பமான வித்தை. அந்த வித்தையில் அவர் எப்போதும் வெற்றியாளராகவே இருந்தார்.

அவரது ஒளிரும் நிறத்திற்கு, மேடை விளக்கின் ஒளியும், அவரது வியர்வையும் மின்ன, அவர் கவிதை வாசிப்பதை எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும். அதை ஒரு வீடியோப் புத்தகமாக வெளியிட்டிருக்க வேண்டும். நமக்கென்ன..?... எல்லா யோசனையும் “இருக்கிறபோது வருவதில்லை. இல்லாது போன பிறகு இப்படிச் செய்திருக்கலாம், அப்படி நட்டிருக்கலாம், எப்படி பறித்திருக்கலாம், என்று பேசிக்கொண்டு இருப்போம். எல்லாக் கருவிகளும் வந்துவிட்ட காலத்தில் வாழ்ந்தவரை, அவரது எல்லாச் செயல்பாடுகளையும் பதிவு செய்யத் தவறினோம். பாதுக்காக்கத் தவறினோம்.

நமது இல்லாமைகளும், இயலாமைகளும் சேர்ந்து, குவித்துக்கொண்டே இருக்கும் குற்ற உணர்ச்சிகளின் மீது தான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். உன்னதமான கனவுகளும், இல்லாமையும் நடத்துகிற போரில், பல சமயங்களில் இல்லாமை வென்று விடுவதைத் தடுத்தாக வேண்டும். ஒரு நாவல் எழுத வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டும், எழுதாமலே போய்விட்டது மாதிரி நடக்கவே கூடாது.

7
மனதில் தோன்றும் நினைவுகளும், உணர்ச்சிகளும் ஒரு முழுப் புத்தகம் எழுதுகிற அளவுக்கு பெருகிக்கொண்டே இருக்கிறது. கைகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

8
இந்த முன்னுரையை எழுதுவதற்கு முன் ஒரு சிறு தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள திருமதி கந்தர்வனுக்குப் போன் செய்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் பேசுகிறேன் “வணக்கம் என்று மட்டும் தான் சொன்னேன் “என்னப்பா கொழுந்தனாரே எப்படி இருக்கீங்க..? என்று கேட்டார். “மதினி... எப்படி கண்டுபுடிச்சிங்க..? என்றேன். “...நீங்கெல்லாம் கூடப் பொறந்தவங்க மாதிரி... கூடப் பொறந்தவங்க எல்லாம் நமக்குப் பொறந்தவங்க என்றார்.

9
“தம்பி என்றுதான் அண்ணாச்சி எப்போதும் கூப்பிடுவார். “கூடப்பொறந்தவங்க, நமக்கு பொறந்தவங்க மாதிரி என்பதாகத் தான் நானும் அவரும் இருந்தோம், வாழ்ந்தோம்.




10
சந்தித்த தருணங்களில் எல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். உரையாடல் இன்றி ஒரு நிமிடம் கூடக் கழித்ததில்லை. பேசாத பொருளே இல்லை என்பது மாதிரி, எல்லாவற்றைப் பற்றியும் அறிவு பெருக, மனம் மலரப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம். இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுப் போன அண்ணாச்சி மரணத்தைப் பற்றி ஒருமுறை கூட பேசியதே இல்லை.

பாரதி கிருஷ்ணகுமார்.
16.03.2015.
சென்னை.


No comments:

Post a Comment