Sunday, May 10, 2015

உயிர்மை மே 2015 - சுதந்திர புருஷன் – ஜே.கே
சுதந்திர புருஷன் – ஜே.கே


அவரைச் சந்திப்பது பற்றி, அவருடன் தொலைபேசியில் முன்னதாகப் பேசி நேரம் குறித்துக் கொண்டு போவது நல்லது.
யாராக இருந்தாலும், அவருக்கு உவப்பில்லாத தருணத்தில் வந்தால், சந்திக்க மறுத்து விடுவார்.

அவரது வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, அவரை அப்போதே சந்திக்க விரும்பிய அவரது தீவிர வாசகர் ஒருவரை, “மறுநாள் சந்திக்கலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அவரோ மறுநாள் தான் ஊருக்குப் போவதாகவும், அன்றே பார்த்துவிட்டுப் போக விரும்புவதாகவும் சொன்னதை ஜே.கே ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு நிமிடம்” என்று கேட்ட போதும் சம்மதிக்கவில்லை. “மாடிப் படியில் வந்து நில்லுங்கள்... ஒரு கும்பிடு போட்டு விட்டு போகிறேன்” என்று அவர் கேட்டதைக் கோபமாக மறுத்துத் தொலைபேசியைத் துண்டித்தார் ஜே.கே.

அப்போது அவர் “சபையில்” தனது நண்பர்களுடன் தீவிரமான உரையாடலில் இருந்தார். அது குறித்து, அல்லது அந்த உரையாடல் குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை, அன்றைக்கு “சபையில்” நானும் இருந்தேன். திருக்குறளின் சிறப்பு குறித்து, நான் அறிந்த எந்தப் பண்டிதனும் சொல்லாத அற்புதமான நுட்பங்களை ஜே.கே. விவரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆழ்ந்த மௌனமான பெருமூச்சுக்குப் பிறகு ஜே.கே. சொன்னார், “ஒரு எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் என்ன உறவு..? படிப்பதா..? பார்பதா..?.. நான் சந்திக்கவே முடியாதுன்னு கூடச் சொல்லல... நாளைக்கு வரச்சொன்னேன்... அவருக்கு நாளைக்கு வேலை இருக்காம்? ....த்தா... எனக்கு இன்னைக்கு வேலை இருக்காதா... என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.”

அட்டகாசமாக,கம்பீரமாக, சந்தோஷமாக, பொங்கப் பொங்க, குலுங்கிக் குலுங்கி சிரிப்பார். மேஜையைத் தட்டிக்கொள்வார். ஒரு ஆண் சிங்கத்தின் பிடரி போல, அவர் சிரிக்கிறபோது அவர் தலைமுடி ஆடிச் சிலிர்க்கும். எந்த ஒரு அங்க அசைவையும் வலிந்து திட்டமிட்டு ஒருபோதும் ஜே.கே. செய்து நான் பார்த்ததில்லை. அவர் பேசுவதற்கு இசைவான உடலசைவே அவரிடம் எப்போதும் வெளிப்பட்டது . மிகையாக சுண்டு விரலைக்கூட அசைக்க மாட்டார் .
அவரது புன்னகையோ வசீகரமானது. புன்னகைக்கிற தருணங்களில் அவர் கண் சிமிட்டிக் கொண்டே பேசுவது பரவசம் தருகிற அனுபவம்.

அவரது எழுத்தின் வழியே, அவரை அறிந்தார்கள் எல்லோரும் சிறப்புடையவர்கள் தான். ஆனால்,அவர் பேசுவதை, அருகில் இருந்து கேட்கப் பெற்றவர்கள் மேலும் சிறப்புடையவர்கள்.
முன்னதாகத் தொலைபேசியில் அழைத்து, அவரது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு நானும், நண்பர் சௌபாவும் அவரைச் சந்திக்க அவரது கே.கே. நகர் வீட்டுக்கு போனோம்.

மாலை ஐந்து மணிக்கு வரச்சொல்லி இருந்தார். வீடு சென்று அழைப்பு மணியை அழுத்தினேன். அவரே வந்து, கதவைத் திறந்து “வாங்கோ” என்றார். தன்னைச் சந்திக்க வருகிற எல்லோரையும் பார்த்த மாத்திரத்தில் அன்பும், கனிவும் ததும்புகிற குரலில் “வாங்கோ” என்றழைப்பது ஜே.கே. வுக்கு வழக்கமாய் இருந்தது. சபையில் அவ்வப்போது வந்து சேருகிற தனது நண்பர்களை மனமார அழைக்க, ஜே.கே. எப்போதும் பயன்படுத்துகிற சொல் “வாங்கோ”. பலமுறை கேட்டிருக்கிறேன் அருகில் இருந்து. பெசன்ட் நகர் மயானத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போன போது கூட, “வாங்கோ” என்கிற அவரது குரல் எனக்குக் கேட்கத்தான் செய்தது. அப்படிக் கூப்பிடுவார்... அவரால் மட்டுமே அப்படிக் கூப்பிட முடியுமென்று, நாம் உணரும் படி அழைப்பார்.

மேல் சட்டை போடாமல், லுங்கியை மார்புக்கும், வயிற்றுக்கும் நடுவாக ஏற்றிக் கட்டி இருந்தார். மெல்லிய புன்னகையுடன் மீண்டும் “வாங்கோ” என்றார். வீட்டின் முன்னறையில் இருந்த நாற்காலிகளைக் காண்பித்து “உக்காருங்கோ” என்றார். “வந்துர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தார். துண்டில் முகத்தை துடைத்தபடியே வந்தார். முகம் துடைத்த, துண்டைத் தோளில்  போட்டுக்கொண்டு, “சொல்லுங்கோ” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான “சமூகம் என்பது நாலுபேர்” என்னும் குறு நாவலைத் திரைப்படமாக எடுக்க அவரது அனுமதியை வேண்டினேன். ஒரு கணம் உற்றுப் பார்த்தார் “டெலிவிஷனுக்கா..? இல்லை சினிமாவுக்கா..?” என்று கேட்டார். “சினிமா” என்றேன்.

screen play ரெடி பண்ணிட்டு வாங்கோ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

தேநீர் வரவழைத்து கொடுத்தார். மீசையை எப்போதும் போல் முறுக்கி விட்டுக் கொண்டே இருந்தார். எதற்காக வந்தோமோ, அந்த வேலை முடிந்தது. மொத்தமும் மூன்று நிமிடத்தில் முடிந்துபோனது. அவருடன் இன்னும் கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்கிற எனது விருப்பம் காரணமாக, “வீட்ல இருக்குற தென்னை மரத்துல தேங்காயைத் திருட ஒருத்தன் வீட்டுக்கு வந்ததைப் பத்தி, “தென்னை மரங்கள்” ன்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்களே ஜே.கே.... அது இந்த வீடா ? ” என்று கேட்டேன். “ஆமாம்... இந்த வீடு தான்” என்று மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டார்... அந்தக் கட்டுரையை எல்லோரும் அறிய வேண்டுமென்பதற்காக அதை அப்படியே கீழே தருகிறேன்.
...

“ மணிக்கணக்காக தென்னை மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். மயிலின் தோகை மாதிரி சில சமயங்களில் அவை சிலிர்க்கும். மந்தகாசத் தென்றலில், சிட்டுக்குருவிகளுக்கு ஊஞ்சல் கட்டித் தாலாட்டும். புயற்காற்று வந்து விட்டால் தலைவிரித்து நின்று ஆடும். மாரிக்காலத்தில் மழை ஓய்ந்த பின்னர் சரம் சரமாக முத்துக்கட்டி நின்று... நிலாக் காலமும் சேர்ந்துவிட்டால் ஜகஜ்ஜாலம் காட்டி ஜொலிக்கும்..!

அந்தத் தென்னை மரங்கள் எனக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை அண்டை வீட்டில் இருந்தாலும் போதும்; ஆற்றங்கரை மணலில் நின்றிருந்தாலும் போதும்; தொடு வானத்துக்கு விளிம்பு கட்டி ஊருக்கு வெளியே தோப்பாக குவிந்திருந்தாலும் அழகாய்த் தான் இருக்கும்.
பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்கள் பக்கத்திலேயே வேண்டும் என்பது பாரதியாரின் கனவு. எனக்கு அப்படி ஏதும் ஏக்கங்கள் இருந்ததில்லை. ஆனாலும் ஒரு ஏழெட்டுத் தென்னை மரங்கள் என்னைத்தேடி வந்து, என்னைச் சுற்றிலும் நிலைபெற்று, எங்கள் வீட்டை சுற்றி ஒரே அழகு தான் போங்கள்... மட்டையும்... செத்தையும்... பன்னாடையும்... பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்பு நான் புதுவீடு கட்டிக் குடியேறியிருக்கிறேன் என்று தெரிந்த, என் நண்பருக்குத் தெரிந்த நண்பரொருவர் இன்றுவரை அவர் பெயரோ, முகமோ எனக்குத் தெரியாது – வேதாரண்யத்துக்காரர்... வாசகராய் இருத்தல் வேண்டும்... ஒரு பத்துத் தென்னங் கன்றுகளை ரயில் மூலம் அனுப்பியிருந்தார்.

கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வருகிற அளவுக்கு ஒரு பத்து பன்னிரெண்டு தென்னங்கன்றுகள். ஒரு நண்பர் மூலம் தகவலும் அனுப்பியிருந்தார்; “ நட்டு வைத்து மரமாக வளரும் வரை நாள் தோறும் தண்ணீர் ஊற்றுங்கள் போதும், ‘உப்பு வைக்கிறேன் புளி வைக்கிறேன்’ என்று யாராவது வந்தால் கிட்டே சேர்க்காதீர்கள்.” அது போலவே இந்த மரங்களை நட்டு வைத்துத் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டது. ஒரு நாள் கூட நான் அந்தக் காரியத்தைச் செய்ததில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு, “ இந்த மரங்களையா நான் என் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு வந்தேன்..! ” என்று பிரமிக்கும் அளவுக்குச் செழித்து வளர்ந்து, பாலை வெடித்துச் சிலிர்த்துக் குலை குலையாய்க் காய்த்துத் தள்ள ஆரம்பித்து விட்டன. அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டியதுதான்... எனக்கு மரம் ஏறத் தெரியாதே..! நம் ஊர் பக்கத்தில் என்றால் அதற்கென்றே சில பேர் திரிவார்கள். இங்கே யாரையும் காணோம். நானும் பலரிடம், “தேங்காய் அறுப்பதற்கு யாராவது ஆள் கிடைப்பார்களா..?..” என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் நள்ளிரவில்  அவர் வந்தார், எப்படி வந்தார் என்று தெரியவில்லை. மரத்தின் மீதிருந்து தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்தார். சின்ன வயதிலிருந்தே எனக்குத் திருடர்களைப் பற்றிய பயம் கிடையாது. அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணம்.

எனவே மாடி அறை ஜன்னலைத் திறந்து, அவரிடம் அன்பாகப் பேசினேன். அவரை நான் “திருடன்” என்று நினைப்பதாக என்னை அவர் சந்தேகித்துக் குதித்து ஓடி விட்டால் எனக்குத் தானே நஷ்டம்..?

“என்னய்யா பகலெல்லாம் தேடினேன். கிடைக்கவில்லை, நல்ல வேளை.! இப்பொழுதாவது வந்தீரே. இருக்கிற காய்களையேல்லாம் பறித்துப் போடும், உமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு போம்”...
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தேன். அந்த மரத்துக்குக் கீழ் நான்கைந்து குலைகள் பறித்துப் போடப்பட்டிருந்தன. பறித்துப் போட்டவன் தனது கூலியை எடுத்துக் கொண்டு போயிருப்பான் அல்லவா..?
ஜன்னல் வழியாகத் தெரியும் தென்னை மரத்தின் பசிய ஓலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்கும் அவற்றுக்கும் உள்ள சொந்தம்..!
...

“அந்த இரவில், அந்தக் கணத்தில் எப்படிப் பதட்டமின்றி உங்களால் அப்படிக் கையாள வேண்டுமென்று தோன்றியது..?” என்று கேட்டேன்.
என்னை உற்றுப் பார்த்தார்.
“பதட்டப்பட்டு என்ன பயன் ? அவன் பதட்டப்பட்டு அவ்வளவு உயரத்துல, தென்னை மரத்துல இருந்து கீழே விழுந்துட்டா ? அது இன்னும் பெரிய திருட்டாயிடாதா..?...” என்று கேட்டு சிரித்தார்...
கனத்த கண்ணாடிக்குள் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. சட்டென்று தலையைக் குனிந்து, உதடுகளை மடித்து ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார். கைகள் மீசை மீது விளையாடிக் கொண்டிருந்தது. சில நொடிகள் அப்படியே இருந்தார். நாங்கள் இருவரும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தோம். இத்தகையான மௌனத்தில் அடிக்கடி அவர் அமிழ்ந்து, மூழ்கிய பின் விஸ்தாரமாகப் பேசுவதை நான் பல முறை தரிசித்திருக்கிறேன். சட்டென்று தலையை நிமிர்த்தி, தலையை இட வலமாக அசைத்தார். தோளில் கிடந்த தலை முடி புரண்டது. முன்னே விழுந்த தலைமுடியை, இடது கையால் பின்னுக்குத் தள்ளிக் கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து, நெற்றியில் பூத்திருந்த வியர்வையை அழுத்தத் துடைத்துக் கொண்டார். இருவரையும் ஒருசேரப் பார்த்தார்.

கண்கள் மேலும் சிவப்பாகி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“திருலோக சீதாராம் தெரியுமா..?” என்றார்.
“தெரியும்” என்றேன்.
மீண்டும் சில நொடிகள்... தலை குனிந்து, உதடுகள் மடித்து, ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார்.

“தஞ்சாவூர்ல தான் இருந்தார்... ரொம்பக் கஷ்ட ஜீவனம்... திருச்சியில தான் அவர் பொண்ணு எடுத்தது... அதனால மனைவியையும், குழந்தையையும் கொண்டு போய் திருச்சியில விட்டுட்டா, அவங்களாவது சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட மாட்டாங்களேன்னு... திருச்சியில, மாமனார் வூட்ல கொண்டு போய் விடணும்னு முடிவு பண்ணாரு... கொண்டுபோய் விட்ட இடத்துல “நீங்க மட்டும் தஞ்சாவூர் போய் என்ன பண்ண போறிங்க..? எங்க கூடவே  இருந்துருங்கன்னு மாமனார் சொன்னதை ஏத்துக்கல”... ரோஷக்காரர்.
“வேற வழி இல்லாமத் தான் இவங்களையே கொண்டாந்து விடுறேன்

கொஞ்ச நாள்ல திரும்ப வந்து கூட்டிக்கிறேன்னு சொல்லிட்டு, ராத் தங்கிட்டு காலையில தஞ்சாவூருக்கு வந்தா... அவரு வீட்டு வாசல்ல, வீட்டைச் சுத்தி ஒரே கூட்டம். என்னன்னு கேட்டா... அவர் வீட்டுல, பின் பக்கத்துச் சுவர்ல யாரோ கன்னக்குழி போட்டு உள்ளே போய்த் திருடி இருக்காங்க... ஜனங்கல்லாம் பதறிட்டு நிக்குதுங்க... கூட்டத்தை விலக்கிட்டு, பின் பக்கச் சுவரில், கன்னம் போட்ட துவாரத்துக்குப் பக்கத்துல வந்து நின்னு பாத்துட்டு, அங்கேயே உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டாரு திருலோக சீத்தாராம்..."
மீண்டும் சில நொடிகள் மௌனம்...
மெலிதாக, சத்தம் வருகிற மாதிரி சிரித்துக் கொண்டார் ஜே.கே... தொடர்ந்தார்.
"ஏதோ பெருசாக் களவு போயிருச்சுன்னு தான் கவிஞன் அழுகுறான்னு ஊர்ல இருக்கவன்லாம் நினைச்சுக்கிட்டான்..." சற்றே சப்தமாக சிரித்துக் கொண்டார் ஜே.கே.
"அழுதவர சமாதானப்படுத்தி, சுத்தி இருந்தவன்லாம் கேட்டப்ப திருலோக சீத்தாராம் சொன்னாராம்... "நானே ஏழை... திருட வந்தவனுக்குப் பசியாறிட்டுப் போக ஒரு பருக்கைச் சோறு கூட இல்லாத வீட்டுக்குத் திருட வந்திருக்கான்னா...
அவன் எவ்வளவு பெரிய ஏழையா இருப்பான்னு நினைச்சு அழுதேன்னாராம்”...
“அதுக்கு முன்னால இதெல்லாம் என்ன ?” என்றார்.
சட்டென்று உரையாடலை நிறுத்திய மௌனத்தில் ஆழ்ந்து, ஒளிரும் கண்களுடன் எங்களைப் பார்த்தார்.
நாங்கள் விடைபெற்றுக்கொண்டோம்.
வாசலில் வந்து நின்று கொண்டு நான் சொன்னேன்
“இரண்டு மாசத்துல screenplay ரெடி பண்ணிட்டு வர்றேன் ஜே.கே.”...

“வாங்கோ”... “போன் பண்ணிட்டு வாங்கோ” என்றார்.
இருவரும் கை கூப்பி வணங்கினோம்.
திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டார்...

நான்கைந்து அடிகள் நடந்த பின்னர், திரும்பிப் பார்த்தேன். கதவு திறந்திருந்தது. ஜே.கே. அங்கேயில்லை.
...
இரண்டு மாதங்கள் கழித்து திரைக் கதையை முழுவதுமாக எழுதி எடுத்துக் கொண்டு, தொலைபேசியில் சம்மதம் பெற்று அவரைப் போய்ப் பார்த்தேன்.
மாடியில் இருந்தார் வணங்கினேன்.
“வாங்கோ” என்றார்.
"screenplay ரெடி பண்ணிட்டேன்" என்றேன்
"உம்" என்றார்
"எங்கேயாவது இரண்டுநாள் discussionக்குப் போகணும்... நீங்க வரணும் ஜே.கே." என்று விண்ணப்பித்தேன்..
"போலாமே... ஏற்காடு போலாம்" என்றார்.
ஏற்காடு நல்லா இருக்குமா?" என்றேன்
"யாருக்குத் தெரியும்?" என்றார்... எனக்கு விளங்கவில்லை
"நான் போனதில்லை... அதனால அங்க போகலாம்னேன்" என்றார்.
அவரே, "நாலு நாள் போய் இருக்கலாம்" என்றார். ஜே.கே.
கலை இயக்குனர் ஜே.கே. என்கிற ஜெயக்குமார், இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர், கவிஞர். பரிணாமன், ஒளிப்பதிவாளர் wide-angle ரவிசங்கர், நான் என ஆறு பேருமாக ஏற்காடு போய்ச் சேர்ந்தோம்.
மூன்று அறைகளில், அறைக்கு இருவராகத் தங்கினோம். ஜே.கேவும், கவிஞர் பரிணாமனும் ஒரு அறையில் தங்கினார்கள். போய்ச் சேர்ந்த அன்று காலை 10 மணிக்கு அவரது அறையில் ஒன்று கூடினோம்.
கட்டிலின் மையத்தில் காலைச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். புகை சுழன்றது! அறையெங்கும் புகை பரவி அறைக்கதவைக் கடந்து ஏரியின் மீதும் பரவியது.

எந்த இடத்திலும், எந்த ஊரிலும் அச்சமின்றி தயக்கமின்றி தன் நண்பர்களுடன் சிலும்பியில், டெமோவைப் போடுவார். எத்தனை முறை போட்டாலும் ஒரு சொல் கூடப் பிழையின்றி, தடுமாற்றமின்றி, குழப்பமின்றி பேசிக் கொண்டிருப்பார். சமயங்களில், சபையில் எல்லோரும் சரிந்த பின்னரும், எப்போதும் விழித்திருக்கிற பிரக்ஞை தான் ஜே.கே...

“என்னை பார்த்து, நான் தான் செட்டியார்... இந்தப் படத்தோட producer…  shot by shot எனக்குப் படத்தச் சொல்லுங்க” என்றார்.

குறுநாவலின் இறுதிக்காட்சியில் நான் சில மாற்றங்கள் செய்திருந்தேன்.... அவர் எப்படி எதிர்வினையாற்றுவாரோ என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. எனினும் முழுத் திரைக் கதையையும் நான் செய்த மாற்றங்களுடனே சொன்னேன், சொல்வதற்கு நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்... குறுக்கிடவேயில்லை. மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.
சில நொடிகள் மௌனமாகவே இருந்தது சபை.
நான் பதட்டமாக இருந்தேன்.
“நல்லா இருக்கு” என்றார்...
dialogues  நீங்களே எழுதிக்கங்க” என்றார்.
“பெரும்பாலும் உங்க dialogues தான் use பண்ணப்போறேன்

சில இடங்கள்ல மட்டும் நான் எழுதிக்குவேன்" என்றேன்
"உம்... செய்ங்கோ" என்றார்
"உரையாடல் என்று டைட்டில் போடுற இடத்துல உங்க பேரைப் போட்டு, அதுக்குக் கீழ எம்பேரையும் போட்டுக்குவேன்" என்றேன்
மெலிதாகப் புன்னகைத்தார். "செய்ங்கோ" என்றார்.
அந்தத் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு காட்சிக்கென கவிஞர். பரிணாமன் எழுதிய பாடல் ஒன்றைப் பற்றிச் சொன்னேன்.. வியப்போடு பரிணாமனைப் பார்த்தார்.
கதையின் மையக் கதாபாத்திரங்களான முத்துவேலருக்கும், சுகுணாவுக்கும் இடையிலான காட்சியில் இடம் பெறும் பாடல் என்றேன்.
"அவங்களே பாடுறாங்களா?" என்று கோபமாகக் கேட்டார். நான் அவசரமாக மறுத்து, "இல்ல... montage song... song throw பண்றோம்... lip movement கிடையாது" என்றேன். பாடலை படிக்கச் சொன்னார். பரிணாமன் பாடினார். "எச்சில் படாத முத்தங்களை எனக்குத் தருவாயா?" என்று துவங்கும் அந்தப் பாடலை ஜே.கே. ரொம்பவே ரசித்தார்.

“சரி வந்த வேல முடிஞ்சது... எப்பவுமே வேலைய முடிச்சுத் தூக்கி வச்சிரணும்” என்றார் ஜே.கே.
“அப்ப இன்னைக்கே புறப்பட்டுறலாமா ? ” என்று கேட்டார் பரிணாமன்.
“எதுக்குய்யா ?” நாலுநாள் இருந்துட்டுப் போகலாம் என்றார்.
இருந்த நான்கு நாட்களும் அந்தக் கதையின் உள்ளிருக்கும் ஊற்றுக்கண்களைத் திறந்து வைத்துக் கொண்டேயிருந்தார்.
குடும்பம், சமூகம், காதல், திருமணம், மனித உறவுகள் குறித்த அவரது எல்லையற்ற, கரை காண முடியாத சிந்தனையின் வீச்சில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தோம்,
சென்னை திரும்பிய சில நாட்களுக்குப் பின், தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை அவரிடம் தந்தேன். எவ்வளவு என்று கேட்கவில்லை, எண்ணிப் பார்க்கவில்லை... அப்படியே மேசை மீது வாங்கி வைத்துக் கொண்டார். அது அங்கேயே ரொம்ப நேரம் கிடந்தது.
...
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, உங்க பேர்ல ஒப்பந்தம் type  அடிச்சிட்டு வாங்க... கையெழுத்து போட்டுறலாம்” என்றார்...
என் பெயருக்கே ஒப்பந்தம் தயாரானது. கையெழுத்திட்டார்.
ஆனால், திரைப்படமாகும் முயற்சி தொடரவில்லை...
அவரிடம் போய்த் தயக்கத்துடன் சொன்னேன்.
"So what... நடக்கும் போது நடக்கட்டும்... என்னைக்காவது நீங்க எடுங்க..
எல்லாக் கனவுகளும் மெய்ப்படும்" என்றார்...
வலது கையை உயர்த்தி...
தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டேன்..
அந்த வாழ்த்துக்கள் என்னிடம் எப்போதும் இருக்கும்.
...
தமிழகத்தின் வரலாற்றில் இலக்கியம், அரசியல், சினிமா, எழுத்து, பேச்சு என்று எல்லாத் துறையிலும் வென்ற, ஒளிர்ந்த ஒரு மனிதன் ஜே.கே. மட்டும் தான்.
அந்த மனிதன், தன் வீட்டில், தனக்கும் தன் நண்பர்களுக்குமாக உருவாக்கிய உலகம் ஒப்பற்றது.
அது அறிவும், ஞானமும், செருக்கும், சத்தியமும் ஒளிர்ந்த சபையாக இருந்தது.
அவரது ஞானச்செருக்கு கூட அவரது தனித்த சிறப்பன்று: பட்டினத்தார், கம்பர், பாரதி என்று நீண்ட கவி மரபில் இருந்த

தொடர்ச்சியே எனினும், நாம் நம் காலத்தில் கண்டு கேட்டு, வாசித்து, வியந்த, மனிதன், ஜே.கே.
நம் காலத்து அறிவுலகின் பேரழகுகளில் ஒருவர் ஜே.கே...

சீறுவோர்க்குச் சீறும், நேர்படப் பேசும் கம்பீரம்.
எந்த அதிகாரத்திற்க்கும் எப்போதும் மண்டியிடாத சுதந்திரம்.
தனக்குச் சரியென்று பட்டதை உரத்துப் பேசும் சங்கநாதம்.
கம்பனை, பாரதியை, வள்ளுவனை, வாசித்துணர்ந்த அறிவாற்றல்.
கனிவும் அன்பும் தோழமையும் ததும்பும் அற்புதம்...
தர்க்கத்தின் எல்லைகளை மீறிச் சதிராடும் வாக்குச் சாதுர்யம்...
உண்மையும் சத்தியமுமான மனிதன் ஜே.கே...

...


அந்த நான்கு நாள் உரையாடலின்போது ஒருமுறை சொன்னார்.
“உண்மை சுடும்”... (இது அவர் சிறுகதை ஒன்றின் தலைப்பு)
உண்மை சுடும் என்றால் எல்லோரும் தொடமுடியாது என்றாகாதோ..? உண்மை சுடாதென்றால் அது உயிர் அற்றது என்றாகிவிடாதோ..?
உண்மை சுடும்...
எல்லோரையும் அல்ல...
பொய்யர்களை...” என்றார்
ஜே.கே. பேசி எவ்வளவோ கேட்டிருந்தும் இதுதான் இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.
உங்களோடு இருந்த கணங்கள் குளிர்ச்சியானவை ஜே.கே.
ஏனெனில், அவை உண்மையானவை...