Saturday, June 12, 2021

அக்காவுக்கு அஞ்சலி

 

இரண்டாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி என் உடன்பிறந்த சகோதரிகளில் ஒருவர், திருமதி கனகலட்சுமி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மூத்தவர் மதுரையில் மாரடைப்பால் காலமானார்.

என்னோடு பிறந்தவர்கள் மூவர். மூவரும் பெண்கள். மூவரும் எனக்கு மூத்தவர்கள் . கனக லட்சுமி , விஜய் லட்சுமி , சாந்த லட்சுமி என்பது அவர்களது பெயர்கள் . எங்கள் இளமைக்காலம் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தது. நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் . ஒற்றுமையாகவே வளர்ந்தோம்.

எனக்குப் பன்னிரெண்டு வயதான போது மூத்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மதுரையில் அலங்கார் திரையரங்கிற்கு அருகில் இருந்த ஶ்ரீ சோலை முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது . மாப்பிள்ளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்தார். மாதச் சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளை என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது . சும்மா சொல்லக்கூடாது ... முப்பது பவுன் போட்டு எல்லா சீரும் செய்து மிக மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தினார் அப்பா.

அப்புறம் மற்ற இருவரும் அதே போல சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொண்டு போனார்கள் .

நான் தான் சரியாகப் படிக்காமல் , வீடு தங்காமல், எல்லா வகையான பழக்க வழக்கங்களும் கொண்டவனாக மாறி இருந்தேன் . என் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தான் எல்லோருக்கும் ஒவ்வாமை தந்ததே தவிர , எந்த சமூக விரோதச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை என்பதை அனைவருமே அறிந்து வைத்திருந்தார்கள் .

எனவே, திருமணமாகிப் போன எனது சகோதரிகளின் இல்லத்திற்கு எப்போது போனாலும் நன்கு உபசரிக்கப்பட்டேன் . குறையொன்றுமில்லை.

ஆண்டுகள் கடந்து , ஆளுக்கொரு திசையில் வாழ்ந்தாலும் எங்களுக்குள் பகைமை இருந்ததில்லை .
இப்போது சில ஆண்டுகளாக அந்த உறவில் கொஞ்சம் பின்னடைவு உண்டாகி விட்டது. அது சீர்ப்படுமா அன்றி சீர்ப்படாமலே காலம் கடந்து விடுமா என்பது காலத்திற்குத் தான் தெரியும்.

சரி ... துவங்கிய இடத்திற்கு வருகிறேன் . மதுரையில் அக்கா இறந்த அன்று நான் சென்னையில் இருந்தேன். அக்காவின் கணவர் நான்கு ஆண்டுகள் முன்பே இறந்து போயிருந்தார் . அக்கா மன உறுதி நிறைந்த மனுஷி . அவர் நடத்தி வந்த நிறுவனங்களைத் தானெடுத்து நடத்தி வந்தார் . மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டார் . மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு இயல்பாகத் திரும்பி இருந்தார் . வழக்கமான மாதாந்திர  பரிசோதனைக்காக செப்டம்பர் முதல் தேதி மாலை மருத்துவமனைக்குப் போய் இருக்கிறார் . ஆட்டோவில் போய் இறங்கி நடந்து மருத்துவ மனைக்குள் போய் இருக்கிறார். மருத்துவரைப் பார்க்க பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார். உடன் துணைக்கு வந்த பெண்ணிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாகச் சொல்லி ,நாற்காலியிலேயே மயங்கிச் சரிந்திருக்கிறார். பார்த்தவர்கள் பதறி மருத்துவர் வந்து பரிசோதிப்பதற்குள் உயிர் பிரிந்திருக்கிறது .

எனக்குத் தகவல் வந்தபோது இரவு 7மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்தேன். இரவெல்லாம் உறக்கமில்லை. ஏனோ ஒரு துளிக்கூட கண்ணீர் இறங்கி வரவில்லை. துக்கம் அதிகமாகி தொண்டை அடைத்தது . ஒரு மணி நேரத்தில் தொண்டை வலிக்க ஆரம்பித்தது. நிறையத் தேநீர் அருந்தினேன். நிறைய்ய நிறைய்ய புகை பிடித்தேன்.

செப்டம்பர் 2 காலையில் மதுரை வந்து பிறந்த வீட்டுக் கோடிப் புடவை எடுத்துப் போட்டேன் . எப்போதும் பார்த்ததும் குமாரு என அழைக்கும் அக்கா ஐஸ் பெட்டிக்குள் பேச்சற்று மூச்சற்றுப் படுத்திருந்தாள். பிற்பகலில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மயானம் சென்று எரியூட்டியதும் , தயாராக நின்ற வாடகைக் காரில் ஏறி கோவைக்குப் புறப்பட்டேன் .

செப்டம்பர் 2 மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் கிக்கானி பள்ளி வளாகத்தில்  ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் , நமது நம்பிக்கை மாத இதழும இணைந்து நடத்தும் "வல்லமை தாராயோ "
என்னும் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சியில் தனியுரை - சிறப்புரை நிகழ்த்த ஒப்புக் கொண்டிருந்தேன் . மிக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனக்கும் தெரியும்.

இரண்டாம் தேதி காலை மதுரை வந்து சேர்ந்ததும் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் பேசினேன். அவர் தான் என்னை நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவர் தான் நிகழ்வின் பொறுப்பாளர் . சூத்ரதாரி ... எல்லாமே...
என் இழப்பை உணர்ந்து கொண்டு "சரி ... நான் பார்த்துக் கொள்கிறேன்
நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க " என்று கனிவோடு சொன்னார் .
நான் சொன்னேன் " நன்றி முத்தையா ... ஆனாலும் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நேரத்தைப் பொறுத்து எதையும் முடிவு செய்யலாம். மாலை வரை இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் . இங்கு நேரம் தள்ளிப் போனால் நான்  உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். எதுவானாலும் பிற்பகல் வரை காத்திருங்கள் " என்று சொல்லி இருந்தேன்.

மதுரையில் இருந்து புறப்பட்டதும் முத்தையாவுக்குச் சொன்னேன் . "6.30 மணிக்குள் கூட்ட அரங்கிற்குள் வந்து விடுவேன் . ஒருவேளை பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமானால் அதை மட்டும் சமாளித்துக் கொள்ளுங்கள் ... ஒரு வேண்டுகோள். அக்காவின் மரணச் செய்தியை நீங்கள் யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் " என்றேன். எனக்குத் தந்த வாக்குறுதியை முத்தையா காப்பாற்றினார்.

கோவை வந்து ஒரு விடுதியில் விரைந்து குளித்து உடைமாற்றி பத்து நிமிடத் தாமதத்தில்  அரங்கம் போய்ச் சேர்ந்தேன் . அரங்கம் நிறைந்த கூட்டம் . ஆயிரம் பேர் அமரும் அரங்கம் .காரில் இருந்து இறங்கியதும் என் கைகளை மிக மிக இறுக்கமாக பற்றிக்கொண்டு என் கண்களைப் பார்த்தார் முத்தையா. என் கண்கள் சிவந்திருந்தன . வறண்டு போய் இருந்தன. நான் முத்தையாவின் கண்களைப் பார்த்தேன் . கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. நான் ஒரு வறண்ட , மிக மிக வறண்ட புன்னகையை அவருக்கும் அங்கு நின்ற எல்லோருக்கும் தந்தேன்.

இரண்டொரு நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கி விட்டது . வரவேற்பு அறிமுகம் மரியாதை எல்லாமே தராசில் நிறுத்தது மாதிரி நடந்து ஏழு மணிக்கு என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.

ஒன்றரை மணிநேரம் பேசினேன் . கூட்டம் என்னோடு சேர்ந்து சிரித்தது.
கைதட்டிக் கொண்டாடியது . கண் கலங்கியது. ஜீவரசம் ததும்பும் பார்வையாளர்கள் நமது எல்லா ஊற்றுக்கண்களையும் திறந்து விடுகிறார்கள் . மலை அருவி போல நம்மை விழுந்து எழுந்து புரண்டோடச் செய்கிறார்கள் .நமக்குள் கோடி மின்னல்களை வெட்டி எழுப்புகறார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது . ஆனால் மனமெங்கும் அக்கா ... அக்கா ... அக்காவோடு வாழ்ந்தது பேசியது விளையாடியது எனக் காட்சிகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்ததை யார் அறிவார் ? கவிஞர் அபி எழுதியது போல் " பழத்தின் அழகைப் பாராட்டுவார்; உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாருணர்வார் ? "

நான் நிறைவு செய்யப் போவதை அவதானித்துக் கொண்ட நண்பர் முத்தையா ஒருவரை ஏற்கனவே மேடைக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பெண்மணி மேடையின் வலது புறத்தில் மறைந்து நின்றுகொண்டு நான் உரையை நிறைவு செய்யக் காத்திருந்தார். ஆனால் ,இதனால் நான் பேச்சை முடித்து விடக்கூடாது என்கிற கவனத்தோடு எல்லோரது உடல்மொழியும் இருந்தது. எனவே நிறைவாகப் பேசி நான் நிறைவு செய்தேன் .அரங்கம் நிறைந்த கரவொலி. நிறையப்பேர் எழுந்து நின்று கை தட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அந்தப் பெண்மணி ஒலிபெருக்கிக்கு முன் ஓடி வந்து " ஒரு முக்கிய அறிவிப்பு " என்றார்கள். நான் திகைக்க, அரங்கமே திகைக்க என் சகோதரியின் மரணச் செய்தியை அறிவித்தார்கள் . அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவரது ஆன்மா அமைதி பெறவும் ,நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் என்றார்கள்.
‌
அரங்கம் முழுவதும் அமைதியில் உறைந்தது . ஆயிரம் பேரும் மௌனமாக அஞ்சலி செலுத்தினார்கள். நான் தடுமாறி எழுந்து நின்றேன். எங்கோ மதுரையில் பிறந்து வாழ்ந்து மறைந்த அக்காவுக்குக் கோவையில் ஆயிரம் பேர் தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
நேற்றில் இருந்து உள்ளுக்குள் பெருகிப் பெருகிச் சேர்ந்திருந்த கண்ணீர் சட்டெனக் கோடை மழை போலக் கொட்டியது.

அம்மா ... அம்மா ... அம்மா ...
அக்காவை எப்போதும் அக்கா என்று அழைத்ததில்லை .




Friday, June 4, 2021

அறிந்தே செய்த பிழை

இலக்கணத்தில் மொழிக்கு முதலில் என்றால் , இந்த இந்த எழுத்துக்களோடு சொற்கள் தொடங்கும் என்பதே ஆகும். உயிர்எழுத்துக்களோடு கூட க,த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங போன்ற மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அனைவரும் அறிவோம்.


இவை தவிர உள்ள இந்த எட்டு மெய்யெழுத்துக்களும் ( ட,ண,ர,ல,ழ,ள,ற, ன ) மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இந்த எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும் போது மட்டும் , இவை மொழிக்கு முதலில் வரும். அதாவது ட என்னும் எழுத்து,  ழ என்னும் எழுத்து என்று இந்த எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும், மொழி முதலில் இவை இடம்பெறும்.


தமிழர்கள் பிற மொழி பேசுபவர்களுடன் கலந்து பழகி வாழும் பண்பு கொண்டவர்கள். அவ்வாறு மற்றவர்களுடன் கொண்ட உறவினால் , பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப் பேச்சுத் தமிழில், தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.


அத்தகைய பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்யெழுத்துக்களும் சில இடங்களில் மொழி முதலில் வருகின்றன.


ராமன் , லலிதா முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவற்றை நமது மொழியின் இயல்புக்கும் இலக்கணத்திற்கும் ஏற்பத் தான் பயன்படுத்த வேண்டும்.

ர, ல போன்ற எழுத்துக்கள் மொழி முதலில் வருவதில்லை என்பதால் , அவற்றுக்கு முன் 'இ' என்னும் எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.

ராமன் ----- இராமன்

ரவி      -----. இரவி

லாபம் ------ இலாபம்

லாடம்  -----. இலாபம் 

சில இடங்களில் இ சேர்ப்பது போலவே 'அ' என்னும் எழுத்தும் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

சில இடங்களில் 'உ' சேர்ந்து வரும்.

ரங்கன் ---- அரங்கன்

ரோமம் ---- உரோமம். ... 

‌இவ்வாறு பிற மொழிகளில் இருந்து பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே பெயர்ச் சொற்கள் என்பதையும் நினைவில் இருத்த வேண்டும். பிற மொழிப் பெயர்ச் சொற்களைப் பயன்படுத்துவது போல, வினைச் சொற்களையும் பிற சொற்களையும் பயன்படுத்தக்கூடாது என்கிறது நமது இலக்கணம்.

‌

‌கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தை மொழியாக்கம் செய்த போது , அனைத்து வடமொழிப் பெயர்களையும் , தமிழ் இலக்கண மரபிற்கு ஏற்ப மாற்றித் தான் எழுதினார் .

‌ராமன் ---- இராமன் 

‌லக்ஷ்மண் ---- இலக்குவன்

      ராவணன் ---- இராவணன்.


இந்த இலக்கணக் குறிப்பை நான் அறிந்திருந்த போதும், கீழவெண்மணி குறித்த எனது ஆவணப்படத்திற்கு இராமய்யாவின் குடிசை என்று பெயர் வைக்காமல் ராமய்யாவின் குடிசை என்று தான் பெயரிட்டேன்.

அறிந்தே பிழை செய்தேன் .


ஆனால், எதிர்பார்த்தது போலவே, என்மீது அன்பு கொண்ட , தமிழை முறையாகப் படித்த நண்பர் ஒருவர் , ஆவணப்படம் கையில் கிடைத்த அடுத்த நிமிடம் என்னை அழைத்தார்.


" Bk என்னது ... எடுத்ததுமே இலக்கணப் பிழை"


"என்ன பிழை "


" இராமய்யாவின் குடிசை என்று தானே இருக்க வேண்டும். ராமய்யாவின் குடிசை என்று ஏன் வைத்தீர்கள் ?"


" தெரிந்தே , அறிந்தே வைத்தேன்."


"என்ன சொல்றீங்க ? நீங்க தெரியாம செய்த பிழை என்றல்லவா ... நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

தெரிந்தே பிழை செய்யலாமா ? 

தெரிந்தே செய்வது குற்றமாகாதா ? "


நான் மௌனமாக இருந்தேன்.


" பதில் சொல்லுங்க " என்றார்.


44 உயிர்கள் அநீதியாகப் பொசுக்கப்பட்ட குற்றத்தின் முன்பு , ஒரு உயிரெழுத்து இல்லாமல் போவது குற்றமா ? என் அறச் சீற்றத்தை மொழியின் மீதும் , இலக்கணத்தின் மீதும் காட்டினேன்" என்றேன்.


அவர் மௌனமாக இருந்தார்



" பதில் சொல்லுங்க " என்றேன்.


"நீங்க செஞ்சது குற்றமில்லை"என்றார்.




Monday, May 17, 2021

..என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்

 என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம் !

திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...” என்று திமிர்ந்த ஞானச் செருக்கோடு பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.
உலகப் பொதுமறை என்பதன் பொருள், இவ்வுலகிலே இருக்கிற அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவுமான அறங்களை, நீதிகளை, நெறிமுறைகளை மறை போல உரைப்பதால் திருக்குறளை உலகப் பொதுமறை என்று கொண்டாடுகிறோம். இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தும் சிந்தனையுமாகும்.
ஆனால், வேறொரு விதத்திலும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று நாம் உணர இயலும். அஃதாவது, திருக்குறள் ஏதேனும் ஒரு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், மொழி பெயர்க்கப்பட்ட பிரதியை அம்மொழி அறிந்த ஒருவரிடம் வாசிக்கத் தருவதாகக் கொள்வோம். அவ்வாறு தரும்போது, இம்மொழி பெயர்ப்பு இந்தியாவிலே இருக்கிற தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் என்னும் நூலின் மொழி பெயர்ப்பு எனும் அறிமுகம் இல்லாமல் வாசிக்கத் தந்தால், வாசிக்கிறவர் அந்தப் படைப்பு தன் தாய் மொழியில் தனது வாசிப்புக்காக எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் திருக்குறளை உணர்வார். உலகின் எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும், அப்பிரதியை வாசிக்கிறவர் மூலநூலையே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு உலகத் தன்மைப் பெற்றது திருக்குறள். அதனாலும் அது உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தமிழர், தமிழ்நாடு போன்ற சொற்களோ, பிரதேச, இன, மொழி அடையாளங்களோ இன்றி எழுதப்பட்ட பெருமைக்குரியது திருக்குறள்.
தமிழில் “திரு” என்னும் அடைமொழி, நான் அறிந்த வரையில், சமயம் சார்ந்த இறை வழிபாட்டுக்குரிய நூல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால், சமயச் சார்பற்ற, சமயம் கடந்த பெருமைக்குரிய திருக்குறள் மட்டுமே தமிழில் “திரு” எனும் அடைமொழியோடு சேர்த்து அழைக்கப்படும் ஒரே நூல். திரு என்றால் உயர்ந்தது, குறள் என்றால் அளவில் குறுகியது என்று பொருள்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா...” என்ற குறளின் வழியேயும் “கொல்லான் புலாலை மறுத்தானை...” என்று துவங்கும் குறளின் வழியேயும் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் உறுதியான நிலைபாட்டை எடுக்கிறார் வள்ளுவர். அனைத்திற்கும் மேலாக “தெய்வத்தான் ஆகாதெனினும்...” என்று துவங்கும் குறளின் வழியே, தெய்வம் சாதிக்க முடியாததை, செய்திட முடியாததை தன் உழைப்பினால் மனிதன் சாதிக்க முடியும் என்று எழுதினார் திருவள்ளுவர். இக் குறள் எல்லாம் இறைவன் செயல், அனைத்தையும் அவனே ஆக்கி, காத்து அழிக்கிறான், அவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது, தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது என்று காலங்காலமாக நிலவி வரும் அனைத்து நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கையாக்கிவிடுகிறது. உழைப்பின் உயர்வை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்த பெருமை திருக்குறளுக்கே உண்டு. கடவுளால் இயலாததை உழைப்பு ஈட்டித் தரும் என்று பாடிய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தும் பாடியிருக்கிறார் என்பதும் மனங்கொள்ளத் தக்கது.
உழைப்பின் சிறப்பை அறிந்து உணர்ந்ததாலேதான் வள்ளுவர் வேளாண்மையைச் சிறப்பித்துப் பாடுகிறார். வேளாண்மை இழி தொழிலாகவும், வேளாண் மக்கள் இழி சனங்களாகவும் கருதப்பட்ட காலத்தில், வேளாண்மையை உயர்த்திப் பேசிய ஒரே நூல் திருக்குறள். ஏதேனும் ஒரு தொழில் செய்துதான் இங்கு எல்லோரும் வாழ்கிறோம் என்றபோதும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...” என்று உழவின் சிறப்பை உயர்த்திப் பேசினார் வள்ளுவர். எத்தொழில் செய்வோர்க்கும், தமது உழைப்பால் உணவினை விளைவித்துக் கொடுத்து உதவுவதால் அவ்வுழவரே இந்த உலகத்தைத் தாங்கும் அச்சாணி என்று உணர்த்தினார் வள்ளுவர்.
அற நூல்களிலேயே காதலையும் காமத்தையும் வியந்துப் போற்றிப் பாடிய பெருமைக்குரியது திருக்குறள் மட்டுமே. அதனாலேதான், இல்லறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வள்ளுவர், வியக்கத்தக்க விதத்தில் துறவின் பெருமையையும் காட்டிச் சென்றார். ஊழ்வினையைப் பாடிய வள்ளுவரால் தான் ஆள்வினைவுடமையையும் பாட முடிந்தது.
கல்வி கற்பது ஒரு அறமுடைய ஒழுக்கச் செயல் என்றபோதிலும், திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை அறத்துப்பாலில் பாடினாரில்லை. அதை பொருட்பாலின் துவக்கத்தில் வைத்தார். நேரிய வழியில் பொருளீட்டுவதற்கும், அதைப் பேணிப் பாதுகாப்பதற்கும் கல்வியே அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து அதனைப் பொருட்பாலில் கொண்டு சேர்த்தார். அதிகார வரிசையில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்கிற வரிசையை உருவாக்கி கல்வியின் சிறப்பை அனைவரும் உணரச் செய்தார்.
தமது படைப்பில், தாம் கூறியவை அனைத்தையும், அனைவரும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்கிற வறட்டுப் பிடிவாதமும் வள்ளுவருக்கு இல்லை. வள்ளுவர் என்பவர் யார்? அவர் எத்தகையவர்? எங்கு இருந்தார்? என்பதற்கான ஆதாரங்களோ, சான்றுகளோ நம்மிடம் இல்லை. எனவே, இச்சூழலில் படைப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. தனது படைப்பை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இறுக்கமும் வள்ளுவருக்கு இல்லை. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்...” எனும் குறளை எழுதியதன் வழியே அவரது கருத்துக்களையே விசாரணை செய்யவும், மாறுபடவுமான வாய்ப்பினை நமக்கு வள்ளுவர் தருகிறார். இது திருக்குறளின் ஆகச்சிறந்த ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது. அதனாலேதான், திருக்குறளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட பல உரைகள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
யிடுக்கண் களைவதா நட்பு”
பலர் கூடிய இடத்தில் ஒருவனுக்கு உடுத்திய ஆடை சடக்கென நெகிழ்ந்துவிட்டால் அப்பொழுது அவன் கை விரைவில் அவ்வாடையைப் பற்றி உடுத்தி அவனது மானத்தைக் காத்தல் போல, தம்மில் ஒருவனுக்குத் தீங்கு நேரும்போது உடனே உதவி செய்து அத்தீங்கை ஒழிப்பதே நட்புக்கு இலக்கணமாகும் என்றே இக்குறளுக்கு உரை எழுதப்பட்டிருக்கிறது. துன்பத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு மனதினும் விரைவாக கை முற்படுதலால் துன்பம் நீங்கும் என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த உரை அனைவருக்கும் ஏற்புடையதே ஆகும். ஆனால், மறுவாசிப்பில் இக் குறள் வேறு ஒரு பொருள் கொள்ளுதற்கான சாத்தியப்பாட்டை தன்னுள் சுமந்து நிற்கிறது. உடுக்கை இழந்தவன் என்னும் சொல் திட்டவட்டமான இறந்தகாலச் சொல் (past tense) . எனில், துன்பத்தில் இருப்பவன் தனது ஆடையை முற்றிலும் இழந்து நிற்கிறான் என்பதே சரியான பொருள். இந்த இடத்தில், அவையின் கண் அல்லது பலர் கூடிய இடத்தில் ஒருவனது ஆடை நெகிழ்கிற போது அவிழ்கிற போது என்னும் பொருள் தரக்கூடிய நிகழ்காலத் தொடர் (present continuous) சொற்களை வள்ளுவர் பயன்படுத்தவில்லை. எனவே, அவிழ்ந்துக்கொண்டிருக்கும் ஆடையை விரைந்து பற்றும் கரங்களை நட்புக்கு இலக்கணமாக வள்ளுவர் சொல்லவில்லை. மாறாக, முற்றிலுமாக ஆடையை இழந்த ஒருவனது கைகள், மானத்தை மறைக்கும் பணியைத்தான் செய்யும். எனில் தனக்கு இயல்பாக விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு மானங்காக்கும் பணிக்கு முன் வருகிறது கைகள். அதுபோல நண்பனுக்குத் தீங்கு வருகிறபோது தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு நண்பனுக்கு உதவும் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவன் காட்டும் வழி. எனவே, உடுக்கை இழந்தவன் கை என்பது, விரைவை மட்டும் குறிக்கிற சொல் அல்ல. மாறாக பண்பையும் விரைவையும் ஒருசேர குறிக்கும் சொல்.
இங்ஙனம் வாசிக்கும்போதெல்லாம், ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் ஆற்றலோடு கூடிய படைப்பாகத் திருக்குறள் திகழ்கிறது. அதனாலேதான் “கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று சிறப்பித்தாள் அவ்வை. வெறுமனே குறளைக் கற்கிற ஒருவரால் குறளின் ஆழத்தை அறிய முடியாது. கல்வியின் துணை கொண்டு திருக்குறளை அறிவது ஒரு வழிமுறை என்றால், அறிவின் துணை கொண்டு திருக்குறளை அணுகுவது மற்றும் ஓர் அணுகுமுறை. பொருட்பாலில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் அதிகார வரிசையில் குறளை யாத்தபோதே கல்வி வேறு அறிவு வேறு என்று நமக்கு உணர்த்திய பெருமை திருக்குறளுக்கு உண்டு.
எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் என்று உணரத்தக்கதும், எந்த மொழியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட முடியாத சிறப்பும் திருக்குறளுக்கு உண்டு என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த சிறப்பு திருக்குறளுக்கு உண்டு என்றபோதிலும் திருக்குறளின் சிறப்பு திருவள்ளுவர் அல்ல ; தமிழ் மொழியே என்று சிறப்பாக உணர முடிகிறது. தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இத்தனை பொலிவோடும் பொருளோடும் திருக்குறளை எழுத முடியாது என்றே நான் கருதுகிறேன்.
“இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்
இன்மையே யின்னா தது”
என்பதான இதுபோன்ற ஒரு குறளை (பல நூறு குறள்களை மேற்கோள் காட்ட இயலும்.) தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் உயிரோடும் ஓசையோடும் பொருளோடும் எழுதிவிட இயலாது.
ஒவ்வொரு முறை வாசிக்கிற போதும், அவ்வை சொன்னதுபோல் ஒவ்வொரு குறளுக்குள்ளும் ஏழு கடல்கள் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது. எழுதப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலும், எமது மொழியிலும் பிற மொழிகளிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது திருக்குறள். வரும் நூறு நூறு ஆண்டுகளிலும் அது வாசிக்கப்படும். புதிது புதிதாய் உரைகளும் பொருளும் தந்துகொண்டே இருக்கும். என் பள்ளிப் பருவத்தில் நான் வாசித்த திருக்குறள் அல்ல நான் இப்போது வாசிக்கும் திருக்குறள். தான் அப்படியே மாறாமல் இருந்துகொண்டு, வாசிக்கிறவனுக்குள் நிகழும் மாற்றங்களை உணர்த்திக்கொண்டே இருக்கிறது பிரதி. இந்தச் சிறப்பு உலகின் மகத்தான படைப்புகளுக்கு எப்போதும் உண்டு. அதனால் அவை என்றைக்கும் எப்போதும் எவராலும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களாக தனிச்சிறப்பைக் கொள்கின்றன. திருக்குறள், புனித விவிலியம், திருக்குரான், பகவத் கீதை, பாரதி பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி, காந்தியின் சுயசரிதை, லியோ தால்ஸ்தாயின் படைப்புகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் மற்றும் இவை போன்ற மகத்தான புத்தகங்கள் எப்போதும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களே!

- பாரதி கிருஷ்ணகுமார்.

Saturday, May 1, 2021

ஒரு முன்னுரையும் , மேதினிக்கு மே தின வாழ்த்துகளும் ...

 

அனைவருக்கும் உளம் கனிந்த மே தின
வாழ்த்துகள்
.


எழுத்து , பேச்சு , திரைப்படம் என்று இப்போதைக்கு நடப்பில் இருக்கும் மூன்று கலை வடிவங்களிலும் செயல்படும் நல் வாய்ப்பை இந்த வாழ்க்கை எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு மேடைப் பேச்சாளனாக எனது பொது வாழ்க்கை துவங்கியது . தொடர்ந்து நேரடியான அரசியல் சார்ந்த களப்பணிகள். பிறகு , ஒரு பொதுத்துறை வங்கியில் இருபதாண்டுகள் வங்கிப் பணியும் தொழிற்சங்கப் பணியும்.

எனக்கு சினிமாவைப் பற்றிய கனவுகள் ஏதும் இருந்ததில்லை. என் கனவிலும் சினிமா இருந்ததில்லை . ஆனால் தேர் ஓடுகிற திசைக்கு எதிர்த் திசையில் இழுக்கப்படும் தேரின் வடக்கயிறு போல நான் சினிமாவுக்குள் இழுக்கப்பட்டேன் .

அடுத்த இருபதாண்டுகள் சினிமாத் துறையில் .
இன்னும் களத்தில் இருக்கிறேன் . எழுதுகிறேன் . பேசுகிறேன் . திரைப்படத் துறையிலும் ஏதேனும் ஒரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறேன். இந்த அதிகாலையில் இதை எழுதும் வரை என் சக்திக்கு ஏற்ப இயங்கிக் கொண்டே இருக்கிறேன் .

எனது வாழ்க்கை தவறுகள் அற்ற வாழ்க்கை அல்ல . நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன் . ஏனெனில் எதையாவது செய்து கொண்டே , இயங்கிக் கொண்டே இருப்பது எனது இயல்பாக இருந்தது. எனவே வெற்றிகள் மாலைகளாக வந்ததும் உண்டு . எனது தவறுகள் பசித்த மலைப்பாம்பாகக் கழுத்தைச் சுற்றியதும் உண்டு .
எந்த இயக்கமும் இல்லாதவர்கள் , எந்தத் தவறும் செய்யாத புண்ணியர்கள். நான் புண்ணியன் இல்லை .If there is motion , there is friction ... என்கிறது விஞ்ஞானம். எனது அசைவுகள் காரணமாகவே உராய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.எனக்கும், என்னோடு இருந்தவர்களுக்கும், பணியாற்றிய இயக்கத்திற்கும்.

தேர் சரியான பாதையில் போக , எல்லாத் திசையிலும் இழுக்கப்படும் தேரின் வடம் போல , வாழ்க்கை எல்லாத் திசையிலும் என்னை இழுத்து அடித்திருக்கிறது . தேரோடும் பாதைகள் தான் எல்லோர் கண்களுக்கும் தட்டுப்படுகிறது. வடம்போக்கித் தெருக்களின் நெரிசலை எல்லோரும் உணர்ந்ததில்லை.

எனது செயல்பாடுகள் எனக்குத் தந்திருக்கும் பேச்சாளர் எழுத்தாளர் இயக்குநர் என்னும் அடையாளங்களை விடவும் தொழிற்சங்கவாதி என்னும் அடையாளம் எனக்கு மிகவும் நெருக்கமானது . உவப்பானது .

அந்த இருபதாண்டுகள் ... அவ்வளவு பேசியிருக்கிறேன் . எழுதிக் குவித்திருக்கிறேன் .
பேச்சென்றால் வெறும் பேச்சல்ல;
எழுத்தென்றால் வெறும் செயலற்ற எழுத்தல்ல ;
இயக்கம் இயக்கம் இயக்கம் ...செயல் செயல் செயல்
அதனோடு இணைந்த பிணைந்த இரண்டறக் கலந்த பேச்சு . இரட்டை நாதஸ்வர இசை போலக் கலந்த எழுத்து .

சும்மா மேடையில பேசுவாங்க ; ஏசி ரூம்ல உக்காந்து எழுதுவாங்க ; என்று எவரும் பகடி பேசிவிட இயலாத எழுத்தும் பேச்சும் எனக்கு இருந்தது . வாய்த்தது.
நிறைய நிறைய அனுபவங்கள் செறிந்த , பொருள் பொதிந்த வாழ்க்கை.
திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை . மர்மங்களும் திருப்பங்களும் வாழ்வில் நிகழ்வது போலக் கதைகளில் நிகழ்வதேயில்லை .

வங்கிப் பணியில் இருந்த நேரத்து அனுபவங்களை எழுத வேண்டும் என்கிற ஆசை வங்கிப் பணியில் இருந்த போதே எழுந்தது . எழுதவும் துவங்கினேன். ஆனால் அது தடைப்பட்டது . அது பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன் .

இப்போதும் சொல்கிறேன் . இது தன் வரலாறு அல்ல . ஒரு மாபெரும் இயக்கத்தில் , அந்தப் பிரம்மாண்டமான நாடகத்தில் நானும் இருந்தேன் என்பதைச் சொல்வது மட்டுமே.

இந்த நாடகத்தில் சில காட்சிகளை இயக்கி இருக்கிறேன். சில காட்சிகளில் நடித்து , சில காட்சிகளில் ஒப்பனை செய்து , சில சமயங்களில் அரங்கத்தைக் கூட்டிப் பெருக்கித் துடைத்தும், சில காட்சிகளில் நானே பார்வையாளனாகவும் இருந்திருக்கிறேன் . பின்னரங்கில் ஏற்காத பாத்திரமில்லை; செய்யாத வேலையில்லை .

எல்லாவற்றையும் எழுத விருப்பம் இருந்தாலும் , எல்லாவற்றையும் எழுத இயலுமா என்று தெரியவில்லை.
நான் இதைத் தனியே எழுதப் போவதில்லை . எனது தொழிற்சங்கப் பணி போலவே இதனையும் என் சகாக்களோடு இணைந்து எழுதுவேன் .
இருபது ஆண்டுகள் ... ஒரு கிராம வங்கியில் ...
பாண்டியன் கிராம வங்கியில்
இளநிலைக் காசாளராகப் பணியில் சேர்ந்தேன் . மூன்றே ஆண்டுகளில் முதுநிலைக் காசாளர் ஆகப் பதவி உயர்வு பெற்றேன் .

ஆனால் பணியில் சேர்ந்த அன்றே எனது தொழிற்சங்கப் பணிகளைத் துவங்கினேன் .வங்கிப் பணியை விட்டு நானே விலகும் வரை தொழிற்சங்கப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தேன் .
அதற்குப் பிறகும் இன்று வரை , எனக்குத் தரப்படும் ... என்னை நம்பித் தரப்படும் பணிகளைச் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று இரவு கூட சில ஆலோசனைகளை ஒருவருக்குத் தரும் வாய்ப்பு அமைந்தது .

இயற்கையாகவே ஓரளவு சாத்தியமான அளவு ஆவணப்படுத்தும் பண்பு எனக்கு உண்டு. வங்கித் துறையில் நான் என் சகாக்களோடு இணைந்து ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்த இருக்கிறேன் .

"ஒரு சிறுசேமிப்புக் கணக்கு"
என்பது அதற்கான தலைப்பாக இருக்கும்.


என்றும் தோழமையுடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01 05 2021
மே தினம்.
அதிகாலை 05:05 மணி
Anuradha Kulasekhar, Azhagu Neela Jeyaram and 22 others
7 comments
1 share
Like
Comment
Share

Friday, April 30, 2021

பாரதி அமரன் | பாரதி கிருஷ்ணகுமார் | "IMMORTAL BHARATHI" | Bharathi Krish...

பாரதி அமரன் | பாரதி கிருஷ்ணகுமார் | "IMMORTAL BHARATHI" | Bharathi Krishnakumar |

Friday, March 19, 2021

சௌமா இலக்கிய விருதுகள் 2020. மணப்பாறை. (13.02.2021)




சௌமா இலக்கிய விருதுகள் 2020. மணப்பாறை. (13.02.2021)


 






 

அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சிராப்பள்ளி (29.01.2021)

      அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சிராப்பள்ளி  (29.01.2021)








தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சை. பன்னாட்டுக் கருத்தரங்கம். 30 ஜனவரி 2021

 தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சை.

பன்னாட்டுக் கருத்தரங்கம்.

30 ஜனவரி 2021

(திருக்குறள் பற்றிய எனது கட்டுரை முதல் பரிசு பெற்றது. )
















Wednesday, February 17, 2021

அருமைத் தோழர் சி. பாலசுந்தரம்

 இன்று ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள். CB என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அருமைத் தோழர் சி. பாலசுந்தரம் 2012 ஆம் ஆண்டு காலத்தில் அகாலமானார் .


என் தொழிற்சங்க வாழ்க்கையிலும் , தனிப்பட்ட வாழ்க்கையிலும் , நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த ஆளுமை.

படிக்கப் புத்தகம் கொடுப்பதாகட்டும் , பசியறிந்து பக்கத்தில் இருந்து உணவு பரிமாறுவதாகட்டும் , பிறரிடத்தில் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துவதாகட்டும், நல்வார்த்தைகள் சொல்லி வழிகாட்டுவதாகட்டும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

சிவந்த நிறம் , ஏற்றிச் சீவிய சுருண்ட கேசம், நீண்ட ஜிப்பா , மிகச் சற்றே சாய்ந்த நடை , களங்கமற்ற புன்னகை , இளம்பசுமை ஒளிரும் கண்கள் , கைகளில் புகையும் சார்மினார் , எவரிடத்தும் பகைகொள்ளாத பண்பு , ஆழ்ந்த பரந்த வாசிப்பு , பண்படுத்தும் விமர்சனம் , அரவணைக்கும் தலைமைப் பண்பு , பொதுப் பணத்தைக் கையாளும் நேர்மை , எல்லோருக்கும் இடமளித்த இல்லம், அனைவருக்கும் உணவளித்து உபசரித்த மன்னி , அன்பான ஆனந்த்... காந்த் ...

அது வற்றல் குழம்போடு மட்டும் நின்றதில்லை. பிற்பகல் வீட்டில் மன்னியின் கை மணம் நிறைந்த அன்பில் ஆக்கிய குழம்பு, மன்னியின் உபசரிப்பு , பரிமாறும் பாங்கு , மன்னியும் பிகே என்றழைக்கும் குழைவு ... பிறகு இரவில் என் அசைவ உணவுப் பழக்கம் அறிந்து இரயிலடியில் இருக்கும் கூரைக் கடைக்கு அழைத்துச் சென்று , தான் உண்ணாமல் ... நான் உணவருந்தியதும், வெற்றிலை வாங்கிக் கொடுத்து ... வாய் சிவந்திருக்கிறதா என்று கேட்டுப் பார்த்து மகிழ்ந்து , பேருந்தில் ஏற்றிவிட்டு , பயணச்சீட்டுக்குக் காசு கொடுத்து , பகிரங்கமான இரகசியமாக வில்ஸ் சிகரெட் பாக்கெட் வாங்கிக் கொடுத்து , பேருந்து புறப்படுகிற வரை பார்த்திருந்து ...தன் உருவத்திற்கும் உயரத்திற்கும் தொடர்பற்ற ஒரு சிறிய மொபெட்டில் போவதை ..

எழுத முடியவில்லை . விரல்களுக்கும் வியர்க்கிறது ... அது வியர்வை அல்ல ..
விரல்களின் கண்ணீர்.

நெஞ்சம் மறப்பதில்லை...

அண்ணா...










Friday, January 8, 2021

குழந்தைகளும் கேள்விகளும்| பாரதி கிருஷ்ணகுமார்| Children and their Questi...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 30


 















சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 30


இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியை (சௌபா-29) ஜூலை இறுதி வாரம் எழுதினேன். இடையில் நான்கு மாதங்கள் இடைவெளி விழுந்தது. தவிர்க்க இயலாத வேறு பணிகள். தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் இந்த இடைவெளியைப் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன். 


பார்த்த திசையில்... 

அப்பா வந்துகொண்டிருந்தார். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை தரையில் எறிந்தேன். அப்பா திரும்பிக் கீழே விழுந்த சிகரெட் துண்டைப் பார்த்தார்.  இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் தேநீர் அருந்தி முடித்தப் பிறகு, “போகலாமா..?” என்பதுபோலப் பார்த்தார். அவரைப் பின் தொடர்ந்தேன். 

வேலையில் சேருவதற்கான ஆயத்தங்களை இருவரும் இணைந்து மேற்கொண்டோம். எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டோம்.  வேலைக்குச் சேருகிறபோது ஆயிரம் ரூபாய் காப்புரிமைத் தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும் என்று வேலை நியமன உத்தரவில் போட்டிருந்தது. அந்தப் பணத்தையும், கைச் செலவுக்குப் பணமும் அப்பாதான் கொடுத்தார். அவரிடம் பணம் வாங்க எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. 1981இல் அது பெரிய பணம்தான். சம்பாதித்து, அதைத் திருப்பிக் கொடுத்தேன் என்றாலும் வேலைக்குச் சேர அவர்தான் பணம் கொடுத்தார். இது தொடர்பில் எழுத வேண்டிய நிறைய செய்திகளை வேறொரு தொடரில் தனியே எழுதுகிறேன்.  

நான் இராமநாதபுரத்தில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். சௌபா அமெரிக்கன் கல்லூரிக்குப் படிக்கப் போனான். நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இராமநாதபுரம் வந்து போவான். அடுத்த ஆண்டிலேயே அருப்புக்கோட்டைக்கும் சாயல் குடிக்கும் நடுவில் இருக்கும் மேலப்பரளச்சி என்ற சிறிய கிராமத்திற்கு நிர்வாகம் என்னைத் தூக்கி அடித்தது. சௌபா அங்கும் வந்தான். அந்த ஊரில்தான் சௌபாவின் நண்பனாக இருந்த பிரபாகரை எனக்கு சௌபா அறிமுகம் செய்து வைத்தான். பிரபாகர் பரளச்சிக்காரர். பிரபாகர் இப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். இரண்டே ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்தி்ல் என்னைத் தூக்கிப் போட்டது நிர்வாகம். அதே ஆண்டில் தொழிற்சங்கப் பணிகளுக்காக நானே சாத்தூருக்கு மாற்றலாகிப் போனேன். சாத்தூரில் இருந்து பள்ளத்தூர். பள்ளத்தூரில் இருந்து சாத்தூர். மீண்டும் சாத்தூரில் இருந்து தேவகோட்டை. தேவகோட்டையில் இருந்து விருதுநகர். விருதுநகரில் இருந்து கண்டனூர் புதுவயல்   என்று நான் இடம் மாறிய எல்லா ஊர்களுக்கும் சௌபா வந்திருக்கிறான். ஏதேனும் பணி நிமித்தமாக, ஏதேனும் விவாதிப்பது தொடர்பாக, சந்திப்பதற்காக என்று எதன் பொருட்டேனும் சந்தித்துக்கொண்டே இருந்தோம். 

அதனால், எங்கள் நட்பு ஒன்றுபோல நீடித்து நிலைத்து இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது. இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் சந்திக்காமலும் பேசாமலும் இருந்தோம். அந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னான ஒருநாளில்  மதுரையில் மேலமாசி வீதியில் நேருக்கு நேர் சந்தித்து எல்லாப் பகையும் கோபமும் மறந்து நட்பானோம். 

இருவரின் வாழ்க்கையிலும் ஏற்றமும் இறக்கங்களும் இருந்தபோதும் உள்ளார்ந்த நட்பில் பழுது ஏற்பட்டதில்லை. வங்கிப் பணியை விட்டு விலகுவது என்கிற என் முடிவில் சௌபாவிற்கு உடன்பாடில்லை. என்னை எப்படியேனும் வேலையில் நீடித்திருக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தான்.  “நினைச்சப்ப வந்து பாக்கவும், சேர்ந்து சாப்பிடவும், பேசவும்  ஆளு வேணும் பிகே. எங்கேயாவது ஒரு ஊர்ல வேலைப் பாத்துக்கிட்டு இருந்தாத்தான் அது சாத்தியம்... அதுக்காகவாவது வேலைய விடாதீங்க..” என்று சொன்னான். நான் வேலையை விடுவதில் உறுதியாக இருந்தேன். “சரி, வேலைய விட்டுட்டு வேற என்ன வேலைக்குப் போகப்போறீங்க..” என்று கேட்டான். “தெரியல...” என்றேன். உரிமையோடு கோபித்துக்கொண்டான். அது தெரியாமல் வேலையை விடக்கூடாது என்றான். 

நான் சொன்னேன். “எட்டயப்புரத்தில் இருந்து சமஸ்தான வேலையை விட்டுவிட்டு பாரதியார் மதுரைக்கு வந்த போது, எந்த வேலைக்குப் போகப் போகிறோம் என்று தெரியாமல்தான் இருந்தார். அதைப் பற்றி பின்னாளில் நண்பர்கள் கேட்ட போது “பிடித்திருக்கிற கொம்பை விட்டால்தான், குரங்கு அடுத்த கொம்பிற்குத் தாவ முடியும்..” என்று சொல்லியிருக்கிறார் பாரதியார்.  பிடித்திருக்கிற கொம்பை விட்ட பிறகு, அடுத்த கொம்பு கிடைக்காவிட்டால் குரங்கு என்னாகும்? என்று நண்பர்கள்  கேட்டிருக்கிறார்கள். அடுத்த கொம்பு கிடைக்காவிட்டால், கீழே விழுந்து மண்டை உடைந்து சாக வேண்டியதுதான் என்று சொல்லிச் சிரித்தாராம் பாரதியார். சௌபா... பிடிக்காத இடத்தில், பிடிக்காத மனிதர்களோடு, பிடிக்காத வேலையைப் பார்ப்பதை விட, மண்டை உடைந்து சாவது சிறந்தது...” என்றேன். உரக்கச் சிரித்தான். அதற்குப் பிறகு அது குறித்து சௌபா என்னிடம் பேசவே இல்லை. 

நான் திரைத்துறையில் திரு. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். அப்படி நான் சினிமாவில் சேர்ந்ததில் சௌபாவுக்கும் பங்கு இருந்தது. உண்மையில் எனக்குச் சினிமா குறித்த கனவுகள் இருந்ததில்லை. என் கனவிலும் சினிமா இருந்ததில்லை. ஆனாலும் சினிமாவில்  பணி செய்ய நேர்ந்தது. நாற்பது ஆண்டுகாலம் எங்கள் நட்பு நீடித்து நிலைத்திருந்தது. 

2019ஆம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டான் சௌபா. நீதிமன்றத்திற்கு சௌபா அழைத்து வரப்பட்ட போதும், சிறையில் இருந்த போதும் அவனையும் என்னையும் அறிந்திருந்த நண்பர்கள் மூலம்  சில செய்திகளைச் சொல்லி அனுப்பினேன். அவனும் எனக்குச் சில செய்திகளைச் சொல்லி அனுப்பினான். சில வாரங்களிலேயே உடல் நலம் சீர்குலைந்து சிறைச்சாலையில் இருந்து அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். 

செல்லூரில் இருந்து அன்புத்தோழன் தர்மலிங்கம் மருத்துவமனையில் இருந்து சௌபாவைப் பார்க்கப் போன போது, “என்னைய பிகே புரிஞ்சிக்கிட்டாரு... எனக்கு தகவல் சொல்லிவிட்டாரு... அது எனக்குப் போதும்.” என்று தர்மலிங்கத்திடம் சொல்லியிருக்கிறான்.

எப்படியேனும் சென்று பார்த்துவிடுவது என்று பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். அவன் இறந்துபோனதாக செய்தி வந்தது. தத்தனேரி பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். 

அந்த மயானத்தில்தான் என் தாயின் உடல் அருகே, என் சகோதரியின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோது, ஒரு கதை சொல்லுமாறு சௌபா என்னைக் கேட்டுக்கொண்டான். நானும் கதை சொன்னேன்.  கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை என்று என்னிடம் சொல்லிவிட்டு கண்ணீர் பெருக, என் தோளில் முகம் புதைத்து சௌபா அழுதிருக்கிறான். 

இதோ, இப்போதும் கதை சொல்ல நான் இருக்கிறேன். நண்பனே..! நீ எங்கு இருக்கிறாய்..? 


பாரதி கிருஷ்ணகுமார்.


இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். இதற்கு மேல் எப்படி எழுத?