அனைவருக்கும் உளம் கனிந்த மே தின
வாழ்த்துகள்
. எழுத்து , பேச்சு , திரைப்படம் என்று இப்போதைக்கு நடப்பில் இருக்கும் மூன்று கலை வடிவங்களிலும் செயல்படும் நல் வாய்ப்பை இந்த வாழ்க்கை எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு மேடைப் பேச்சாளனாக எனது பொது வாழ்க்கை துவங்கியது . தொடர்ந்து நேரடியான அரசியல் சார்ந்த களப்பணிகள். பிறகு , ஒரு பொதுத்துறை வங்கியில் இருபதாண்டுகள் வங்கிப் பணியும் தொழிற்சங்கப் பணியும்.
எனக்கு சினிமாவைப் பற்றிய கனவுகள் ஏதும் இருந்ததில்லை. என் கனவிலும் சினிமா இருந்ததில்லை . ஆனால் தேர் ஓடுகிற திசைக்கு எதிர்த் திசையில் இழுக்கப்படும் தேரின் வடக்கயிறு போல நான் சினிமாவுக்குள் இழுக்கப்பட்டேன் .
அடுத்த இருபதாண்டுகள் சினிமாத் துறையில் .
இன்னும் களத்தில் இருக்கிறேன் . எழுதுகிறேன் . பேசுகிறேன் . திரைப்படத் துறையிலும் ஏதேனும் ஒரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறேன். இந்த அதிகாலையில் இதை எழுதும் வரை என் சக்திக்கு ஏற்ப இயங்கிக் கொண்டே இருக்கிறேன் .
எனது வாழ்க்கை தவறுகள் அற்ற வாழ்க்கை அல்ல . நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன் . ஏனெனில் எதையாவது செய்து கொண்டே , இயங்கிக் கொண்டே இருப்பது எனது இயல்பாக இருந்தது. எனவே வெற்றிகள் மாலைகளாக வந்ததும் உண்டு . எனது தவறுகள் பசித்த மலைப்பாம்பாகக் கழுத்தைச் சுற்றியதும் உண்டு .
எந்த இயக்கமும் இல்லாதவர்கள் , எந்தத் தவறும் செய்யாத புண்ணியர்கள். நான் புண்ணியன் இல்லை .If there is motion , there is friction ... என்கிறது விஞ்ஞானம். எனது அசைவுகள் காரணமாகவே உராய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.எனக்கும், என்னோடு இருந்தவர்களுக்கும், பணியாற்றிய இயக்கத்திற்கும்.
தேர் சரியான பாதையில் போக , எல்லாத் திசையிலும் இழுக்கப்படும் தேரின் வடம் போல , வாழ்க்கை எல்லாத் திசையிலும் என்னை இழுத்து அடித்திருக்கிறது . தேரோடும் பாதைகள் தான் எல்லோர் கண்களுக்கும் தட்டுப்படுகிறது. வடம்போக்கித் தெருக்களின் நெரிசலை எல்லோரும் உணர்ந்ததில்லை.
எனது செயல்பாடுகள் எனக்குத் தந்திருக்கும் பேச்சாளர் எழுத்தாளர் இயக்குநர் என்னும் அடையாளங்களை விடவும் தொழிற்சங்கவாதி என்னும் அடையாளம் எனக்கு மிகவும் நெருக்கமானது . உவப்பானது .
அந்த இருபதாண்டுகள் ... அவ்வளவு பேசியிருக்கிறேன் . எழுதிக் குவித்திருக்கிறேன் .
பேச்சென்றால் வெறும் பேச்சல்ல;
எழுத்தென்றால் வெறும் செயலற்ற எழுத்தல்ல ;
இயக்கம் இயக்கம் இயக்கம் ...செயல் செயல் செயல்
அதனோடு இணைந்த பிணைந்த இரண்டறக் கலந்த பேச்சு . இரட்டை நாதஸ்வர இசை போலக் கலந்த எழுத்து .
சும்மா மேடையில பேசுவாங்க ; ஏசி ரூம்ல உக்காந்து எழுதுவாங்க ; என்று எவரும் பகடி பேசிவிட இயலாத எழுத்தும் பேச்சும் எனக்கு இருந்தது . வாய்த்தது.
நிறைய நிறைய அனுபவங்கள் செறிந்த , பொருள் பொதிந்த வாழ்க்கை.
திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை . மர்மங்களும் திருப்பங்களும் வாழ்வில் நிகழ்வது போலக் கதைகளில் நிகழ்வதேயில்லை .
வங்கிப் பணியில் இருந்த நேரத்து அனுபவங்களை எழுத வேண்டும் என்கிற ஆசை வங்கிப் பணியில் இருந்த போதே எழுந்தது . எழுதவும் துவங்கினேன். ஆனால் அது தடைப்பட்டது . அது பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன் .
இப்போதும் சொல்கிறேன் . இது தன் வரலாறு அல்ல . ஒரு மாபெரும் இயக்கத்தில் , அந்தப் பிரம்மாண்டமான நாடகத்தில் நானும் இருந்தேன் என்பதைச் சொல்வது மட்டுமே.
இந்த நாடகத்தில் சில காட்சிகளை இயக்கி இருக்கிறேன். சில காட்சிகளில் நடித்து , சில காட்சிகளில் ஒப்பனை செய்து , சில சமயங்களில் அரங்கத்தைக் கூட்டிப் பெருக்கித் துடைத்தும், சில காட்சிகளில் நானே பார்வையாளனாகவும் இருந்திருக்கிறேன் . பின்னரங்கில் ஏற்காத பாத்திரமில்லை; செய்யாத வேலையில்லை .
எல்லாவற்றையும் எழுத விருப்பம் இருந்தாலும் , எல்லாவற்றையும் எழுத இயலுமா என்று தெரியவில்லை.
நான் இதைத் தனியே எழுதப் போவதில்லை . எனது தொழிற்சங்கப் பணி போலவே இதனையும் என் சகாக்களோடு இணைந்து எழுதுவேன் .
இருபது ஆண்டுகள் ... ஒரு கிராம வங்கியில் ...
பாண்டியன் கிராம வங்கியில்
இளநிலைக் காசாளராகப் பணியில் சேர்ந்தேன் . மூன்றே ஆண்டுகளில் முதுநிலைக் காசாளர் ஆகப் பதவி உயர்வு பெற்றேன் .
ஆனால் பணியில் சேர்ந்த அன்றே எனது தொழிற்சங்கப் பணிகளைத் துவங்கினேன் .வங்கிப் பணியை விட்டு நானே விலகும் வரை தொழிற்சங்கப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தேன் .
அதற்குப் பிறகும் இன்று வரை , எனக்குத் தரப்படும் ... என்னை நம்பித் தரப்படும் பணிகளைச் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று இரவு கூட சில ஆலோசனைகளை ஒருவருக்குத் தரும் வாய்ப்பு அமைந்தது .
இயற்கையாகவே ஓரளவு சாத்தியமான அளவு ஆவணப்படுத்தும் பண்பு எனக்கு உண்டு. வங்கித் துறையில் நான் என் சகாக்களோடு இணைந்து ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்த இருக்கிறேன் .
"ஒரு சிறுசேமிப்புக் கணக்கு"
என்பது அதற்கான தலைப்பாக இருக்கும்.
என்றும் தோழமையுடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01 05 2021
மே தினம்.
அதிகாலை 05:05 மணி
No comments:
Post a Comment