இன்று ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள். CB என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அருமைத் தோழர் சி. பாலசுந்தரம் 2012 ஆம் ஆண்டு காலத்தில் அகாலமானார் .
என் தொழிற்சங்க வாழ்க்கையிலும் , தனிப்பட்ட வாழ்க்கையிலும் , நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த ஆளுமை.
படிக்கப் புத்தகம் கொடுப்பதாகட்டும் , பசியறிந்து பக்கத்தில் இருந்து உணவு பரிமாறுவதாகட்டும் , பிறரிடத்தில் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துவதாகட்டும், நல்வார்த்தைகள் சொல்லி வழிகாட்டுவதாகட்டும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
சிவந்த நிறம் , ஏற்றிச் சீவிய சுருண்ட கேசம், நீண்ட ஜிப்பா , மிகச் சற்றே சாய்ந்த நடை , களங்கமற்ற புன்னகை , இளம்பசுமை ஒளிரும் கண்கள் , கைகளில் புகையும் சார்மினார் , எவரிடத்தும் பகைகொள்ளாத பண்பு , ஆழ்ந்த பரந்த வாசிப்பு , பண்படுத்தும் விமர்சனம் , அரவணைக்கும் தலைமைப் பண்பு , பொதுப் பணத்தைக் கையாளும் நேர்மை , எல்லோருக்கும் இடமளித்த இல்லம், அனைவருக்கும் உணவளித்து உபசரித்த மன்னி , அன்பான ஆனந்த்... காந்த் ...
அது வற்றல் குழம்போடு மட்டும் நின்றதில்லை. பிற்பகல் வீட்டில் மன்னியின் கை மணம் நிறைந்த அன்பில் ஆக்கிய குழம்பு, மன்னியின் உபசரிப்பு , பரிமாறும் பாங்கு , மன்னியும் பிகே என்றழைக்கும் குழைவு ... பிறகு இரவில் என் அசைவ உணவுப் பழக்கம் அறிந்து இரயிலடியில் இருக்கும் கூரைக் கடைக்கு அழைத்துச் சென்று , தான் உண்ணாமல் ... நான் உணவருந்தியதும், வெற்றிலை வாங்கிக் கொடுத்து ... வாய் சிவந்திருக்கிறதா என்று கேட்டுப் பார்த்து மகிழ்ந்து , பேருந்தில் ஏற்றிவிட்டு , பயணச்சீட்டுக்குக் காசு கொடுத்து , பகிரங்கமான இரகசியமாக வில்ஸ் சிகரெட் பாக்கெட் வாங்கிக் கொடுத்து , பேருந்து புறப்படுகிற வரை பார்த்திருந்து ...தன் உருவத்திற்கும் உயரத்திற்கும் தொடர்பற்ற ஒரு சிறிய மொபெட்டில் போவதை ..
எழுத முடியவில்லை . விரல்களுக்கும் வியர்க்கிறது ... அது வியர்வை அல்ல ..
விரல்களின் கண்ணீர்.
நெஞ்சம் மறப்பதில்லை...
No comments:
Post a Comment