சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 30
இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியை (சௌபா-29) ஜூலை இறுதி வாரம் எழுதினேன். இடையில் நான்கு மாதங்கள் இடைவெளி விழுந்தது. தவிர்க்க இயலாத வேறு பணிகள். தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் இந்த இடைவெளியைப் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.
பார்த்த திசையில்...
அப்பா வந்துகொண்டிருந்தார். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை தரையில் எறிந்தேன். அப்பா திரும்பிக் கீழே விழுந்த சிகரெட் துண்டைப் பார்த்தார். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் தேநீர் அருந்தி முடித்தப் பிறகு, “போகலாமா..?” என்பதுபோலப் பார்த்தார். அவரைப் பின் தொடர்ந்தேன்.
வேலையில் சேருவதற்கான ஆயத்தங்களை இருவரும் இணைந்து மேற்கொண்டோம். எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டோம். வேலைக்குச் சேருகிறபோது ஆயிரம் ரூபாய் காப்புரிமைத் தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும் என்று வேலை நியமன உத்தரவில் போட்டிருந்தது. அந்தப் பணத்தையும், கைச் செலவுக்குப் பணமும் அப்பாதான் கொடுத்தார். அவரிடம் பணம் வாங்க எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. 1981இல் அது பெரிய பணம்தான். சம்பாதித்து, அதைத் திருப்பிக் கொடுத்தேன் என்றாலும் வேலைக்குச் சேர அவர்தான் பணம் கொடுத்தார். இது தொடர்பில் எழுத வேண்டிய நிறைய செய்திகளை வேறொரு தொடரில் தனியே எழுதுகிறேன்.
நான் இராமநாதபுரத்தில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். சௌபா அமெரிக்கன் கல்லூரிக்குப் படிக்கப் போனான். நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இராமநாதபுரம் வந்து போவான். அடுத்த ஆண்டிலேயே அருப்புக்கோட்டைக்கும் சாயல் குடிக்கும் நடுவில் இருக்கும் மேலப்பரளச்சி என்ற சிறிய கிராமத்திற்கு நிர்வாகம் என்னைத் தூக்கி அடித்தது. சௌபா அங்கும் வந்தான். அந்த ஊரில்தான் சௌபாவின் நண்பனாக இருந்த பிரபாகரை எனக்கு சௌபா அறிமுகம் செய்து வைத்தான். பிரபாகர் பரளச்சிக்காரர். பிரபாகர் இப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். இரண்டே ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்தி்ல் என்னைத் தூக்கிப் போட்டது நிர்வாகம். அதே ஆண்டில் தொழிற்சங்கப் பணிகளுக்காக நானே சாத்தூருக்கு மாற்றலாகிப் போனேன். சாத்தூரில் இருந்து பள்ளத்தூர். பள்ளத்தூரில் இருந்து சாத்தூர். மீண்டும் சாத்தூரில் இருந்து தேவகோட்டை. தேவகோட்டையில் இருந்து விருதுநகர். விருதுநகரில் இருந்து கண்டனூர் புதுவயல் என்று நான் இடம் மாறிய எல்லா ஊர்களுக்கும் சௌபா வந்திருக்கிறான். ஏதேனும் பணி நிமித்தமாக, ஏதேனும் விவாதிப்பது தொடர்பாக, சந்திப்பதற்காக என்று எதன் பொருட்டேனும் சந்தித்துக்கொண்டே இருந்தோம்.
அதனால், எங்கள் நட்பு ஒன்றுபோல நீடித்து நிலைத்து இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது. இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் சந்திக்காமலும் பேசாமலும் இருந்தோம். அந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னான ஒருநாளில் மதுரையில் மேலமாசி வீதியில் நேருக்கு நேர் சந்தித்து எல்லாப் பகையும் கோபமும் மறந்து நட்பானோம்.
இருவரின் வாழ்க்கையிலும் ஏற்றமும் இறக்கங்களும் இருந்தபோதும் உள்ளார்ந்த நட்பில் பழுது ஏற்பட்டதில்லை. வங்கிப் பணியை விட்டு விலகுவது என்கிற என் முடிவில் சௌபாவிற்கு உடன்பாடில்லை. என்னை எப்படியேனும் வேலையில் நீடித்திருக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தான். “நினைச்சப்ப வந்து பாக்கவும், சேர்ந்து சாப்பிடவும், பேசவும் ஆளு வேணும் பிகே. எங்கேயாவது ஒரு ஊர்ல வேலைப் பாத்துக்கிட்டு இருந்தாத்தான் அது சாத்தியம்... அதுக்காகவாவது வேலைய விடாதீங்க..” என்று சொன்னான். நான் வேலையை விடுவதில் உறுதியாக இருந்தேன். “சரி, வேலைய விட்டுட்டு வேற என்ன வேலைக்குப் போகப்போறீங்க..” என்று கேட்டான். “தெரியல...” என்றேன். உரிமையோடு கோபித்துக்கொண்டான். அது தெரியாமல் வேலையை விடக்கூடாது என்றான்.
நான் சொன்னேன். “எட்டயப்புரத்தில் இருந்து சமஸ்தான வேலையை விட்டுவிட்டு பாரதியார் மதுரைக்கு வந்த போது, எந்த வேலைக்குப் போகப் போகிறோம் என்று தெரியாமல்தான் இருந்தார். அதைப் பற்றி பின்னாளில் நண்பர்கள் கேட்ட போது “பிடித்திருக்கிற கொம்பை விட்டால்தான், குரங்கு அடுத்த கொம்பிற்குத் தாவ முடியும்..” என்று சொல்லியிருக்கிறார் பாரதியார். பிடித்திருக்கிற கொம்பை விட்ட பிறகு, அடுத்த கொம்பு கிடைக்காவிட்டால் குரங்கு என்னாகும்? என்று நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அடுத்த கொம்பு கிடைக்காவிட்டால், கீழே விழுந்து மண்டை உடைந்து சாக வேண்டியதுதான் என்று சொல்லிச் சிரித்தாராம் பாரதியார். சௌபா... பிடிக்காத இடத்தில், பிடிக்காத மனிதர்களோடு, பிடிக்காத வேலையைப் பார்ப்பதை விட, மண்டை உடைந்து சாவது சிறந்தது...” என்றேன். உரக்கச் சிரித்தான். அதற்குப் பிறகு அது குறித்து சௌபா என்னிடம் பேசவே இல்லை.
நான் திரைத்துறையில் திரு. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். அப்படி நான் சினிமாவில் சேர்ந்ததில் சௌபாவுக்கும் பங்கு இருந்தது. உண்மையில் எனக்குச் சினிமா குறித்த கனவுகள் இருந்ததில்லை. என் கனவிலும் சினிமா இருந்ததில்லை. ஆனாலும் சினிமாவில் பணி செய்ய நேர்ந்தது. நாற்பது ஆண்டுகாலம் எங்கள் நட்பு நீடித்து நிலைத்திருந்தது.
2019ஆம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டான் சௌபா. நீதிமன்றத்திற்கு சௌபா அழைத்து வரப்பட்ட போதும், சிறையில் இருந்த போதும் அவனையும் என்னையும் அறிந்திருந்த நண்பர்கள் மூலம் சில செய்திகளைச் சொல்லி அனுப்பினேன். அவனும் எனக்குச் சில செய்திகளைச் சொல்லி அனுப்பினான். சில வாரங்களிலேயே உடல் நலம் சீர்குலைந்து சிறைச்சாலையில் இருந்து அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.
செல்லூரில் இருந்து அன்புத்தோழன் தர்மலிங்கம் மருத்துவமனையில் இருந்து சௌபாவைப் பார்க்கப் போன போது, “என்னைய பிகே புரிஞ்சிக்கிட்டாரு... எனக்கு தகவல் சொல்லிவிட்டாரு... அது எனக்குப் போதும்.” என்று தர்மலிங்கத்திடம் சொல்லியிருக்கிறான்.
எப்படியேனும் சென்று பார்த்துவிடுவது என்று பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். அவன் இறந்துபோனதாக செய்தி வந்தது. தத்தனேரி பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.
அந்த மயானத்தில்தான் என் தாயின் உடல் அருகே, என் சகோதரியின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோது, ஒரு கதை சொல்லுமாறு சௌபா என்னைக் கேட்டுக்கொண்டான். நானும் கதை சொன்னேன். கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை என்று என்னிடம் சொல்லிவிட்டு கண்ணீர் பெருக, என் தோளில் முகம் புதைத்து சௌபா அழுதிருக்கிறான்.
இதோ, இப்போதும் கதை சொல்ல நான் இருக்கிறேன். நண்பனே..! நீ எங்கு இருக்கிறாய்..?
பாரதி கிருஷ்ணகுமார்.
இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். இதற்கு மேல் எப்படி எழுத?
No comments:
Post a Comment