Sunday, December 11, 2011

தமிழருவி மணியனின் மடல்


இன்று வெளியான எனது பாரதி பற்றிய 'அருந்தவப்பன்றி" சுப்பிரமணிய பாரதி என்ற நூலுக்கு திரு தமிழருவி மணியன் எழுதிய மடல் .



ஒரு புதிய மைல் கல் ...

மாளிகை முற்றங்களில் மட்டும் இதமாக வீசிக்கொண்டிருந்த கவிதைத்  தென்றலை மண்குடிசைக்குள்   குடியேற்றிய முதல் மக்கள் கவிஞன் மகாகவி பாரதி . வானத்து நிலாவையும் , முடிமன்னர்களின் உலாவையும் ,கிழடு தட்டிப் போன பழைய உவமைகளின் துணையோடு பாடிக் கொண்டிருந்த இலக்கணப்  புலவர்களுக்கு இடையில் , 'மரங்களைப் போல் மழையில் நனைந்து , விறகுகளைப் போல வெயிலில் காய்ந்த பாதையோரத்துப்  பஞ்சைகளின் பக்கம் பார்வையைத் திருப்பிய புதுயுகக் கவிஞன் அவன் .
மன்மதனின் மலர்க்கணைப் பட்டு , மாலைத்  தென்றலில் மதிமயங்கி, ஆணின் வருகைக்காக அணையாத விரக நெருப்பை நெஞ்சில் சுமந்து, காற்றையும் , கிளியையும் தூதனுப்பித் துடித்து நிற்கும் தோகையரின் காமப் புலம்பலை இரசனையுடன் இலக்கியமாக்கிய கவிராயர்களுக்குப் பின்னால், கவிதையைக்  கௌரவிப்பதற்காகவே எழுதுகோல் ஏந்தியவன் பாரதி .
ஜமிந்தார்களின் மலினமான  மன்மத உணர்ச் சிகளுக்குத் தீனி போடுவதறக்காகவே விறலி  விடு தூதும், கூளப்ப நாயக்கன் காதலும் பாடி இலக்கியத்தைச் சிலர் சிறுமைப் படுத்திய வேளையில், தன் வாழ் காலச் சமுகத்தின் இழிவுகளை அழித்தொழிக்க அமில தாரை வழியும் அருவியாகத் தன்னுடைய பேனா மையை ரசவாதம் செய்து, சமுதாயப் புரட்சிக்குக் கவிதையைச் சக்தி மிக்க ஆயுதமாக மாற்றிக் காட்டிப் புதிய சரித்திரம் படைத்தவன் பாரதி .
அறிவு என்னுள் கண்விழிக்கத் தொடங்கிய காலம் தொட்டு, என்னுடைய ஆதர்ச ஆசானாக நெஞ்சுக்குள் நான் நேர்ந்து கொண்ட மனிதன் மகாகவி பாரதி. அவனுடைய ஒவ்வொரு சொல்லும், என் சிந்தனையைச்  செதுக்கிச் செப்பனிட்டது. அவனை பற்றிய நூல் எதுவாயினும் ,அதை தேடிப் படிப்பது என் வழக்கம் . நண்பர் பாரதி கிருஷ்ண குமார் அற்புதமாகப் படைத்திருக்கும் ' அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' யைப் படிக்க நேர்ந்தபோது என்னுள் விளைந்த உணர்வுகளை எழுத்தில் வெளிப் படுத்த முயல்வது ' வானத்து நீலத்தை வட்டிலில் இறக்கிவைக்கும் ' முயற்சியைப்  போன்றது.
ஒரு வெள்ளிவிழா காலத்துக்கு முன்பே என் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பராகி விட்டவர் கிருஷ்ணகுமார் . எஸ்.ஆர்.கே . என்று அன்புடன் அழைக்கப்பட்ட மார்க்சியவாதி எஸ்.இராமகிருஷ்ணனின் பாதிப்பை ஜெயகாந்தனிடமும் , ஜெயகாந்தனின் சிந்தனை வீச்சை நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடமும் மேடைப்  பேச்சில்  கண்டு வியந்தவன் நான் . இளம் பருவம் முதல் சமூகநலன் சார்ந்து இயங்கும் என் நண்பருக்கு, எழுத்தும் பேச்சும் வணிக நோக்கில் கடைபரப்பும் விற்பனைப் பொருளாக இருந்ததே இல்லை என்பதுதான் நான் அவரிடம் கண்ட தனிச்சிறப்பு .
பாரதியைப்  பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால் , எந்த பாரதி நேயரும் பார்த்தறியாத, ஒருக்கால் பார்த்திருந்தும் பறைசாற்ற விரும்பாத பக்கத்தில்  தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார்  நம்  கிருஷ்ணகுமார் . அதன் விளைவுதான்  இந்த 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' என்னும் ஆய்வு நூல் . முதற்பார்வையில் தலைப்பே வாசகர்களைத் திகைக்க வைக்கும். ஒருவகையில் பாரதியிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்களை அதிர்ச்சிக்கும் ஆளாக்கும் .

பாரதியின் ' கனவு' என்ற காதற்கவிதையிலும் , 'பாரதி அறுபத்தாறு' என்னும் முற்றுப்பெறாத பாடல் தொகுதியிலும் , 'சின்ன சங்கரன் கதை' என்னும் முற்றுப்பெறாத கதைப் பகுதியிலும், ' கவிதாதேவி அருள்வேண்டல்' போன்ற சில பக்கங்களிலும் காணப்படும் கவிஞனின் வாழ்வு தொடர்பான ஒளிக்கீற்றுகளை, இன்றுவரை அறியப்படாத இருண்ட பக்கத்தில் பாய்ச்சி உண்மைக்கு நெருக்கமாக தன் ஆய்வை நடத்திஇருக்கிறார்  என் நண்பர் .
" தென்திசைக் கண்ணொரு    சிற்றூர்க்  கிறைவனாந்
திமிங்கல வுடலுமோர்  சிறியநா யறிவும் 
பொருந்திய வொருவனைத் துணையெனப்  புகுந்தவன்
பணிசெய விசைந்த  ' பாரதி ' தன்னை 'அருந்தவப் பன்றி ' என்று அடைமொழி தந்து இழித்துப்  பேசுகிறான். எட்டயபுரத்து ஜமீனில் பணிபுரிந்த காலத்தில் கவிதை என்னும்  'தெய்வ மருந்துடைப் பொற்குடம்' தன்னிடமிருந்து மறைந்துவிட்டதாக மனத்துள் மறைவாகக் கண்ணீர் விட்டுக் கதறியழுகிறான்  பாரதி .
'வறுமை காரணமாக எட்டயபுரம் ஜமீனில் வேலைக்குப் போன பாரதியாரைக் 'கவிதா தேவி' ஏன் பிரிந்து போக வேண்டும்? எதற்காக , இத்தனை கடுமையான சொற்களால் எட்டயபுரம் ஜமீந்தாரை விமர்சிக்க வேண்டும்? ஜமீன் 'வேலை'யில் பாரதியாருக்கு நேர்ந்த அனுபவங்கள் என்ன? அத்துணை கடுமையாக விமர்சித்த ஜமீனுக்கு மீண்டும் ஏன் வேலைக்குத்  திரும்ப வேண்டும் ? வாழ்வியல் தேவைகளுக்காக ஜமீன் வேலைக்குப்  போகும் பாரதியைக் கவிதா தேவி விட்டு விலகுவதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் கவிதை எது ?  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவிதாதேவி  மீண்டும்வந்த போது எழுதிய முதல் கவிதை எது ?பல்லாண்டுகள் பாரதியாரைப் பிரிந்திருந்த கவிதா தேவி மீண்டும்  அவரிடம் வந்த பிறகு , அவரது இறுதிக்காலம் வரை அவரோடு இணைந்து இருந்தாளா? மீண்டும் இடையில் ஏதேனும் பிரிவு இருவருக்கும் இடையில் நேர்ந்ததா ? என்று கேள்வி மேல் கேள்வியாக நண்பரின் நெஞ்சில் எழுந்து உந்தியதின் பலனாக ஓர் உன்னதமான ஆய்வு ,இந்த நூல் வடிவில் அரங்கேறியிருக்கிறது .
பாரதி கிருஷ்ணகுமார் இந்த அரிய ஆய்வு நூலில் கையாண்டிருக்கும் 'சொல் புதிது; சுவை புதிது ; பொருள் புதிது'.  நடுநிலை நின்று, அறிவுநிலையில் மதிப்பிட்டு, மகாகவி பாரதியார் வாழ்வின் விழ்ச்சிக்கூறுகளை இனங்கண்டு , கவிதாதேவி அவரிடமிருந்து பிரிந்த காலத்தைக் கண்டுணர்ந்து , அதற்கான அடிப்படைகளைத் தேர்ந்து தெளிந்து வசீகரமான நடையில் நண்பர் வடித்திருக்கும் இந்த நூல் பாரதி குறித்த படைப்புகளில் தவிர்க்க முடியாத இடத்தை என்றும் பெற்று இலங்கும் .  கால பிரக்ஞையும் , வரலாற்றுணர்வும் இல்லாத தமிழினத்தின்  இலக்கியப் பாதையில் பாரதி கிருஷ்ண குமாரின் இந்த ஆய்வு நூல் ஒரு புதிய மைல்கல் !
அன்புடன்,
தமிழருவி மணியன் .

Saturday, December 3, 2011

அழைப்பிதழ்

வணக்கம் . 
அன்புடையீர் !

முன்னரே , குறிப்பிட்ட வண்ணம் இத்துடன் அழைப்பிதழை ,
சமர்ப்பிக்கிறோம் .

விழாவில் , பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம் .

என்றும் மாறாத அன்புடன் ,

பாரதி கிருஷ்ணகுமார் 

Friday, November 18, 2011

மகாகவி பாரதி 129 ஆவது பிறந்த நாள் விழா - புத்தக வெளியீடு

வணக்கம்.

நலம்.  நலமே வளர்க.

மகாகவியின் 129 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு உங்கள் அனைவரையும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் இரு கரம் கூப்பி அழைக்கிறோம். அன்றே இரண்டு புத்தகங்களையும் வெளியீடு செய்கிறோம்.

முதல் புத்தகம் "அருந்தவப்பன்றி சுப்பிரமணியபாரதி ".
பாரதியின் அக வாழ்வில், அவரைச் சூழ்ந்த சொல்லவொண்ணாத துயரமொன்றினை, அவர் காலமான, 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பதிவு செய்யும் அரிய புத்தகம்.
எனது எழுத்துலக வாழ்வின் முதல் புத்தகமும் ஆகும்.

இரண்டாவது புத்தகம் "அப்பத்தா" என்று தலைப்பிடப்பட்ட
எனது சிறுகதைகளின் முதல் தொகுப்பு.

விழாவில் திருவாளர்கள் பிரபஞ்சன் , தமிழருவிமணியன்,
"செம்மலர்" ஆசிரியர் எஸ். ஏ. பெருமாள் , பேரா. ச. மாடசாமி ,
எஸ். ராமகிருஷ்ணன் ,  பேரா.பாரதி புத்திரன்,
கவிஞர் நா. முத்துக்குமார் , கவிஞர் .ஜெய பாஸ்கரன்,
பேரா. பர்வீன் சுல்தானா, பாடகர் "கரிசல்" கருணாநிதி
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள் .
நீங்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இது முதல் அழைப்பு . அழைப்பிதழ் அச்சுக்குப் போயிருக்கிறது . வந்ததும் அதனையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

2011 டிசம்பர் 11 காலை 10 மணிக்கு , சென்னை - ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரெங்கன் சாலையில் உள்ள ருசியக் கலாசார மையத்தில் சந்திப்போம் . உங்கள் வருகை எங்களுக்குப் பெருமை சேர்க்கட்டும். 

என்றும் மாறாத அன்புடன்,

பாரதி கிருஷ்ணகுமார்.

Tuesday, November 15, 2011

ஆவணப்பட - குறும்படப் போட்டி 2012




நலம். நலமே வளர்க .

எனது படைப்பு நிறுவனமான THE ROOTS, மேலும் இரண்டு சமூக அக்கறையுள்ள SPEECH, CCF  என்னும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும், இந்த ஆவணப்பட குறும்படப் போட்டியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இத்தகைய போட்டிகள் ஸ்தூலமான நன்மைகளை விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை. புதிய படைப்பாளிகளை, படைப்புகளை இனங் காண வழி வகுக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களின் மேன்மைகளையும், சந்திக்கும் சவால்களையும் திரை மொழியில் நமக்கு அறிமுகம் செய்விக்கிறது. ஒத்த கருத்துடைய படைப்பாளிகள் சந்திக்கும் புதிய களத்தை உருவாக்குகிறது.

எனவே இந்தப் போட்டி குறித்து, நீங்கள் அறிந்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் சொல்லுங்கள்.

என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.





SPEECH - (Media Division)
சின்னபொட்டல் பட்டி, மாரனேரி அஞ்சல்,
சிவகாசி (மேற்கு ) 626 124
04562 - 221401 , 98421 44699.
mdu_speech@sify.com

Thursday, November 3, 2011

நன்றி - தீக்கதிர்


Thanks - THE HINDU


நன்றி - மனுஷ்யபுத்திரனுக்கும், அமீர் அப்பாஸுக்கும்...


எனக்கு இல்லையா கல்வி? - ஆவணத் திரைப்படம்


துயரத்தின் ஒரு துளிக் கண்ணீர்






தமிழ்ச்சூழலில் ஆவணப் படங்களுக்கென தனித்த அடையாளத்துடன் இயங்கும், மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தகுந்தவர் பாரதி கிருஷ்ணகுமார். அவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் "எனக்கு இல்லையா கல்வி?" சமூக நீதிக்கான, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின், சமகால வரலாற்று ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.மதுரையில் இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.


கல்வி என்பது முழுமையான சமூக மனிதனை உருவாக்குகிறது. உலகையே கட்டி எழுப்பும் வலிமை மிக்கது. வெறும் தகவல்களை மட்டும் தருவதல்ல..! உணர்வுகளை உருவாக்க வல்லது. இந்திய சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ள பார்ப்பனர்களிடம் இருந்து, உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களின் பக்கம் திரும்ப, பல நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த சமூகம், பாகுபாட்டை அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொண்ட சமூகம்.இந்நிலையை மாற்ற ஜோதிராம் பூலே,அண்ணல் அம்பேத்கர், கோபாலகிருஷ்ண கோகலே, தந்தை பெரியார் என பலரும் தொடர்ந்து போராடி வந்தனர்.அதன் விளைவாகவே, எளிய மக்களுக்குப் படிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதை தனியார்மயம் தட்டிப் பறிக்கும் அவலமே, இப்படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.


வாழ்வுரிமையும் கல்வியுரிமையும் ஒன்று என்கிற கருத்தாக்கம், நடைமுறையில் பொய்யாக்கப்பட்டு விட்டது.கூலி அடிமைகளை உருவாக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் கல்விமுறை இன்றளவும் மாற்றப் படவில்லை. இந்தியாவில் இருக்கும் 20 கோடி குழந்தைகளில், 3 கோடி குழந்தைகள் கல்விக்கூடத்துக்குச் செல்லவே முடியாத நிலை தொடர்கிறது. அவர்களே குழந்தைத் தொழிலாளர்களாகவும், பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்களாகவும் தொடர்ந்து வஞ்சிக்கப் படுகிறார்கள்.


அரசியல் ஆதாயத்திற்காக எல்லாவற்றையும் இலவசம் என அறிவிக்கிற அரசுகள், க்யூபாவைப் போல ஏன் கல்வியை இலவசமாக்கவில்லை என்ற கேள்வியை முன் வைக்கிறது. 67 சதவீத அரசுப் பள்ளிகள், முறையான கட்டிடம், கழிப்பறைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, அவல நிலையில் நீடிக்கின்றன.






மழைக்காலங்களில் ஒழுகும் பாழடைந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் நடக்கின்றன.ஆதி திராவிடர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் உருது பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து அரசினால் புறக்கணிக்கப் படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள், சென்னையில் மூடப்பட்டு விட்டன.


அருந்ததியர் சமூகக் குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் பெஞ்ச் இருந்தும் தரையில் அமர வைக்கப் படுகிறார்கள். பள்ளிக்கூடத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்ய கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். சாதியும் வர்க்கமும் சேர்ந்து, தலித் குழந்தைகளை கல்வியற்றவர்களாக மாற்றி விடுகின்றன.இயற்கையின் குழந்தைகளான மலைவாழ் மக்களில் 40 சதவீதம் பேர், எழுதப் படிக்க தெரியாதவர்களாக இருக்கின்றனர்.அவர்களின் வாழிடம் உயரத்திலும், வாழ்க்கை, அதல பாதாளத்திலும் உள்ளது.


மொழிப்போராட்டத்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த தமிழ்நாட்டில், தாய்மொழியில் கல்வியில்லை. கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டிய அரசாங்கம், சாராயம் விற்கிறது. சாராயம் விற்றவர்கள், கல்வித் தந்தையாக மாறி, சரஸ்வதியை விற்கிறார்கள்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதிகமான தனியார் கல்வி நிறுவனங்கள், வியாபாரம் என்கிற நிலையைத் தாண்டி, கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக இயங்குகின்றன. ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொடக்கக் கல்வி, கட்டணக் கல்வியாக உள்ளது. பணக்காரர்கள் படிக்கும் உயர்கல்வி இலவசமாகவும் உள்ளது. இத்தகைய முரண், களையப்பட வேண்டிய பெருந்தீமையாக உள்ளது.




சமச்சீர் கல்வி என்பதில் பொது பாடத்திட்டம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. கட்டிட வசதிகள், நிர்வாக கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடிப்படை மாற்றங்கள் ஏதும் இல்லை. எவ்வித சமரசமும் இன்றி, அச்சமின்றி உண்மைகளை, இப்படம் ஓங்கி ஒலிக்கிறது. பேச்சின் வழியாக சொல்லப்படாமல், காட்சிகளின் வழியாக அணுகும் லாவகத்தால், தொடர்ந்து படத்தைப் பார்க்க முடியவில்லை.கண்ணீர் திரையாக மாறி, சொல்லொணா துயரத்தால் நம்மைத் தாக்குகிறது.
"இருப்பதெல்லாம்..
அசைக்க முடியாத நம்பிக்கை தான்
துன்புற்ற என் மக்கள் மீதான
முடிவற்ற காதல் தான்"


பாலஸ்தீனக் கவிஞர் தெளபீக் சையத் கவிதை வரிகளுடன் முடிவுறும், இப்படம் போராடத் தூண்டுகிறது. புதுகை தனிக்கொடியின் பாடல் வரிகள், நெகிழ்வுறச் செய்கிறது. தன் எழுத்து, பேச்சு, ஆவணப்படம் என எதைச் செய்தாலும் சமூக அக்கறையோடு அணுகும் பாரதி கிருஷ்ணகுமாரின் நெடும்பயணத்தில் இப்படம், ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.


- அமீர் அப்பாஸ்

Thursday, September 29, 2011

மனிதனும் புத்தகமும் - 2

ஒரு பிரதி (புத்தகம் ) முதல் வாசிப்பில் அறிமுகமாகிறது . 
சில ஆண்டுகளுக்குப் பின், மறு வாசிப்பில், பிரதி தான் மாறாமல் 
அப்படியே இருந்து கொண்டு நமக்குள் நிகழ்ந்த மாற்றங்களைப் 
புலப்படுத்துகிறது .
நம் இறந்த காலத்தைப் புத்தகங்கள் எளிதில் 
புரிந்து கொண்டு விடுகின்றன .

Sunday, September 25, 2011

மனிதனும் புத்தகமும் - 1

 இந்த உலகிலுள்ள 
 எல்லா மனிதர்களாலும்
 வாசிக்கப்பட்ட ஒரு புத்தகம்
 இன்னும்
 எழுதப்படவேயில்லை .

Tuesday, September 13, 2011

மௌனத்தின் பாதாளத்திலிருந்து ...


மேடைகளில் பேசத் துவங்கி , தனித்த புகழும் , அங்கீகாரமும் ,அடையாளமும் , நட்பு வட்டமும் உருவாகி இருந்தது .

எங்கும் பேசப் போகக் கூடாதென்று இரண்டு கரங்கள் என் குரல் வளையை இறுக்கத் துவங்கியது .

இணைந்து வாழவும் , இணங்கி இருக்கவும் இந்த மௌனம் பயன் தருமென்ற கணிப்பில் மௌனத்தின் பாதாளத்திற்குள் விரும்பி வீழ்ந்தேன் .

இரண்டு ஆண்டுகள் . யார் அழைத்த போதும், எங்கும் போகாது , யாரோடும் பேசாது இருந்தேன் .

 என் மௌனம் சிலருக்கு மிகுந்த சந்தோசத்தையும் , பலருக்கு அளவற்ற துயரத்தையும் தந்தது .

விரும்பிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற போதும் , மௌனம் என்னை அடியற்ற ஆழத்துக்கு அழைத்துக்கொண்டு .... போய்க்கொண்டே இருந்தது .

ஒளியற்ற , ஓசைகளற்ற பாதாளம் அது . மறக்கவே முடியாத ஆண்டுகள் .
என்னால் மேடையில் பேச முடியும் என்பதே மறந்த நாளில் மதுரை பாலனின் கடிதம் வந்தது .

துரை தாசன் என்னும் இயற் பெயர் கொண்ட மதுரை பாலன் என்னோடு சமதையாக தமிழ் மேடைகளில் வலம் வந்த ஒரு ஆளுமை .

என்னை ஒரு போட்டியாகக் கருதி , என் மௌனத்தை அவர் கொண்டாடி இருக்கலாம் . மாறாக அவர் பதறினார் . என்னிடம் நேரில் அது பற்றிப் பேசாமல் கடிதம் எழுதினார் .

என்னைப் பேச வைத்த கடிதம் .( இந்தக் கடிதம் வந்த சில நாட்களில் கந்தர்வன் கடிதம் வந்தது . அதைத் தனியே எழுதுகிறேன் ) மௌனத்தின் பாதாளத்தில் இருந்து என்னை மீட்ட கடிதம் .

இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் . பாலனுக்கு, மனசுக்குள் எப்போதும் நன்றி பாராட்டிக்கொண்டே இருக்கிறேன் .

என்னைப் பேசப் பணித்த பாலன் சில ஆண்டுகளுக்குப்பின் தான் மேடையில் பேசுவதை நிறுத்திக் கொண்டார் .

பாலனின் கடிதம் ...

அத்தனை பயல்களையும்
ஊமையாக்கி விட்டு நீ அடங்கு
எனக்கு ஆட்சேபம் இல்லை

ஆந்தைகளின் அலறலால்
லஜ்ஜையாகிப் போன
என் தேசத்தில்
குயிலே....
நீ
கூவ மறுத்தால்
உன் நாக்கு
நறுக்கப்படும்!

தீபாவளி...
தீபாவளியன்று
வெடிப்பதற்கு
நீ என்ன
சிவகாசி ராக்கெட்டா?

பாட்டாளி வர்க்கத்தின்
போர்ப்பரண் மீது
பொருத்தப்பட்டிருக்கும்
ஏவுகணையடா நீ!

கையில் நாக்கும்
வாயில் பேனாவும்
வைத்திருப்பவன் நீ
எழுது... பேசு...
இரண்டு கைகளிலும்
இரண்டு ஆயுதங்கள் ஏந்து!

இரவுக்குச் சூரியனாகவும்
பகலுக்குச் சந்திரனாகவும்
இருக்க ...
உன் ஒருவனால் தான் முடியும்
இரு!

நீ
வளரும் பிள்ளைகளுக்கு
வார்த்தைகளின் தொட்டில்!
சிவப்புச் சிந்தனைகளின்
சிம்மாசனம்!

உன் எவரெஸ்ட்
உயரத்தைக் கண்டு
எவனும் அஞ்சவில்லை...
உன்
சிறிய வாய்க்குள் இருக்கும்
சின்ன நாக்கைத்தான்
கண்டம் விட்டு
கண்டம் தாவும் ஏவுகணையாய்ப்
பண்டிதக் கூட்டம் கண்டு
பதறிப் போனது!

அரிவாள்மனை
துருப்பிடிப்பதை கூட
அனுமதிக்காக
நமது வர்க்கம்....
அணு ஆயுதமே
உன்னை அனுமதிக்குமா?

நீ
நடப்பது
உன் கால்களால் அல்ல‌
நாக்கால் என்று நம்பு!

சிக்கிய மேடைகளில்
சினத்தைக் கொட்டி
சபிப்பதற்காக‌ப்
பிறந்தவனல்ல நீ...!

நீ
கக்கிய நெருப்பு
கனன்று கொண்டிருக்கும் போது
ஓய்வு கொள்ள‌
உனக்கு உரிமையேது?

ஒரு
சாம்பல் மேட்டில்தானே
நமது சரித்திரமே
ஆரம்பமாகிறது...
சமுத்திரத்தின் அலையே
நீ சம்மணம் போட‌
ஆசைப்படலாமா?

வேண்டாம் நண்பனே
இந்த விசித்திரத் துறவு


Friday, September 9, 2011

வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக ...


மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது மொழி. அதுவே மனிதனை விலங்குகளிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்தியது. வாழ்வின் அனைத்துத் துறை சார்ந்த மெய்மைகளையும், பொய்மைகளையும் வரி வடிவமாக்கி, தலைமுறைகளைக் கடந்து நிற்கவும் செய்தது.

அனைத்துத் துறைகளின் வரலாற்றையும் பதிவு செய்த மொழி, தனது வரலாற்றை தானே எழுதிக் கொண்ட துறையே இலக்கியம். நாவல், சிறுகதை, நாடகம், உரைநடை எனப் பலவாக புலப்படுத்தும் இலக்கியத்தின் பேரழகு வெளிப்படும் இடம் கவிதையேயாகும்.

எல்லாத் துறைகளிலும் நிகழ்வது போலவே, இலக்கியத்திலும் உண்மையும், பொய்மையும் கலந்து கிடப்பதைக் காலம் நமக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மானுட குலம் முழுவதையும் விடுதலை பெற்ற ஓர் இனமாக மாற்ற விரும்புகிற படைப்பாளிகள், தங்கள் படைப்புகளை உண்மையின் முழு வடிவமாக உருவாக்கித் தந்தார்கள். ஆளவும், அடிமைப்படுத்தவும் விரும்புகிற ஆதிக்க சக்திகளின் அடியாட்களோ தங்கள் படைப்புகளைப் பொய்மைகளால் இட்டு நிரப்பி, அதனை மனித குலத்தின் மீது கொடிய சாபத்தைப் போலப் பரவ விட்டார்கள்.

மொழி ஆளுமை, லாவகம், அழகுணர்ச்சி, செய்நேர்த்தி இவைகளை விடவும், ஒரு படைப்பாளி உண்மையின் பக்கம் நின்று எழுதுகிறானா, அல்லது பொய்யின் மீது படுத்துக்கொண்டு பேசுகிறானா என்பதே எப்போதும் முதன்மையான அளவுகோலாக இருத்தல் வேண்டும்.

வடிவ நேர்த்தியிலும்,சொல்லாடலிலும் முழுமையான தேர்ச்சி இல்லாவிட்டாலும் கூட, உண்மையின் பக்கம் நின்று பேசுகிற ஒருவனின் படைப்பு கொண்டாடத் தகுந்த ஒரு குழந்தையின் மழலையாகவே நமக்குக் கேட்கிறது. மாறாகப் பொய்யுரைக்கும் ஒருவனின் படைப்பு, செய் நேர்த்தியில் பெரும் சாகசமாய் ஜொலித்த போதும், அது ஒரு வஞ்சகக் கிழவனின் வசவுச் சொற்களே என்பது எளிதில் துலங்கி விடுகிறது.

உண்மையின் பக்கம் எப்போதும் நிற்கும் எளிய மனிதர்களின் படைப்புகளை வாழ்த்துகிற, ஆக்கப்பூர்வமாய் விமர்சிக்கிற, அங்கீகரிக்கிற, உற்சாகப்படுத்துகிற மனது எனக்கு எப்போதும் இருக்கவேண்டுமேன்பதே எனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இருக்கிறது.


Tuesday, August 30, 2011

மரணம் ஒரு தண்டனையல்ல

" கொல்லாமலேயே சாவது மனிதனின் விதி .

மரணத்துக்குப் பயந்தல்ல ; மரணம் ஒரு தண்டனையுமல்ல ;

மானுடகுல மேன்மைக்கேனும் மரண தண்டனை , இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்."


_ த . ஜெயகாந்தன் 

Thursday, August 11, 2011

நன்றி - ஆத்மார்த்தி ரவிசங்கர்.

பாரதி க்ருஷ்ணகுமாரின் எனக்கு இல்லையா கல்வி என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன்.எனது ஆச்சர்யமெல்லாம் எப்படி ஒரு ஆவணப்படத்தை இவ்வளவு தூரம் உண்மையாகவும் அதே நேரம் செயற்கைத் தன்மை கொஞ்சமும் தோன்றிவிடாமலும் உருவாக்க முடியும் என்பது தான்.

ஆவணப்படம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் கல்வி இருக்கும் நிலையை மிக அழகாக எடுத்துரைக்கிறது மலைவாழ் மக்கள்,பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,கிராமப்புற பள்ளிகள் அரசாங்கத்தின் தொடர் அலட்சியம்,குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிட்டக்கூடிய அசௌகரியங்கள்,தொடர்ந்து வஞ்சிக்கப்படும் கடைநிலை மக்கள்,இன்னமும் அரசாங்கத்தை எதிர்நோக்கி அமைதியான எதிர்பார்ப்பை மட்டும் சுமந்தபடி விழிகளில் கனவுகளைக் கொஞ்சமும் விட்டுக்கொடுத்துவிடாமல் இருக்கும் குழந்தைகள்.

வகுப்பறைகளின் குறைபாடுகள்,ஆசிரியர்களின் அலட்சியங்கள்,ஆசிரியர் பற்றாக்குறை,அரசின் தொடர் அலட்சியம்,குறைந்து கொண்டே வரும் மாணவர் எண்ணிக்கை,மழை உள்ளிட்ட இயற்கை சீரழிவுகள் கல்வியை பாதித்தல்,சிறார் தொழிலாளர்களாக மாற்றப்படும் மாணவர்களின் படிக்கும் ஆசை.

பெரும்பாலான பள்ளிகளில் சில பாடங்கள் நடத்தப்படாமலேயே ஆய்வுக்கூடம் என்றால் என்ன என தெரியாமலேயே உயர்கல்வியை முடிக்கும் அவலம்,எதிர்கால இந்தியா கிராமங்களை தொடர்ந்து வஞ்சித்து நகர்ப்புற பணக்கார பள்ளியமைப்பை ஊக்குவிக்கும் துரோகம்

சாதிக்கொடுமை,சிலபல ஆசிரியர்களின் மனங்களிலும் இருக்கும் சாதிவெறி,சமச்சீர் கல்வி என்னும் பெயரில் நிறைவேற்றப்படுமா எனத் தெரியாமல் விழிக்கும் பொதுப்பாடத்திட்டம்.சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கிற பகுதிகளில் இருக்கும் உருதுமொழிவழிக்கல்வியை வழங்கக் கூடிய பள்ளிகள் மெல்ல மெல்ல ஆசிரியக்குறைப்பு செய்யப்படுவதும் அத்தகைய பள்ளிகள் காலவெளியில் குறைக்கப்படுவதும் ஒரு சிறுபான்மை மொழிக்கற்றலை மெல்ல அழிக்கும் செயல் என்பது உள்ளத்தில் உறைக்கிறது.

பாடத்திட்டங்களில் காட்டப்படும் தொடர் அலட்சியம் முதல் ஐந்து வகுப்புக்களுக்குள் பாடங்களை தமிழ் உள்பட அனைத்திலும் உளவியலுக்குச் சம்மந்தமில்லாத அளவுக்கு மாணாக்கர்களின் மண்டைகளில் திணித்துவிடும் மனோபாவம் அழகுற எடுத்துக்காட்டப்படுகிறது

இந்திய தமிழ்நில அளவில் மிக முக்கியமான கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் போராட்டவாதிகள் என முக்கியமானவர்களின் கருத்துக்கள் அனைத்தும் ஆவணமாக்கப்பட்டுள்ள தோழர் பாரதி கிருஷ்ணகுமாஅரின் எனக்கு இல்லையா கல்வி....ஒரு கேமிராவை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட மகோன்னதமான முயற்சி.யாருமே தவற விடக்கூடாத ஆவணப்பாடம்.(படமல்ல.)


            வாழ்த்துவோம்....

Thanks to Deccan Chronicle


நன்றி - புதிய ஆசிரியன்.