Thursday, November 3, 2011

நன்றி - மனுஷ்யபுத்திரனுக்கும், அமீர் அப்பாஸுக்கும்...


எனக்கு இல்லையா கல்வி? - ஆவணத் திரைப்படம்


துயரத்தின் ஒரு துளிக் கண்ணீர்


தமிழ்ச்சூழலில் ஆவணப் படங்களுக்கென தனித்த அடையாளத்துடன் இயங்கும், மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தகுந்தவர் பாரதி கிருஷ்ணகுமார். அவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் "எனக்கு இல்லையா கல்வி?" சமூக நீதிக்கான, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின், சமகால வரலாற்று ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.மதுரையில் இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.


கல்வி என்பது முழுமையான சமூக மனிதனை உருவாக்குகிறது. உலகையே கட்டி எழுப்பும் வலிமை மிக்கது. வெறும் தகவல்களை மட்டும் தருவதல்ல..! உணர்வுகளை உருவாக்க வல்லது. இந்திய சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ள பார்ப்பனர்களிடம் இருந்து, உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களின் பக்கம் திரும்ப, பல நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த சமூகம், பாகுபாட்டை அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொண்ட சமூகம்.இந்நிலையை மாற்ற ஜோதிராம் பூலே,அண்ணல் அம்பேத்கர், கோபாலகிருஷ்ண கோகலே, தந்தை பெரியார் என பலரும் தொடர்ந்து போராடி வந்தனர்.அதன் விளைவாகவே, எளிய மக்களுக்குப் படிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதை தனியார்மயம் தட்டிப் பறிக்கும் அவலமே, இப்படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.


வாழ்வுரிமையும் கல்வியுரிமையும் ஒன்று என்கிற கருத்தாக்கம், நடைமுறையில் பொய்யாக்கப்பட்டு விட்டது.கூலி அடிமைகளை உருவாக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் கல்விமுறை இன்றளவும் மாற்றப் படவில்லை. இந்தியாவில் இருக்கும் 20 கோடி குழந்தைகளில், 3 கோடி குழந்தைகள் கல்விக்கூடத்துக்குச் செல்லவே முடியாத நிலை தொடர்கிறது. அவர்களே குழந்தைத் தொழிலாளர்களாகவும், பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்களாகவும் தொடர்ந்து வஞ்சிக்கப் படுகிறார்கள்.


அரசியல் ஆதாயத்திற்காக எல்லாவற்றையும் இலவசம் என அறிவிக்கிற அரசுகள், க்யூபாவைப் போல ஏன் கல்வியை இலவசமாக்கவில்லை என்ற கேள்வியை முன் வைக்கிறது. 67 சதவீத அரசுப் பள்ளிகள், முறையான கட்டிடம், கழிப்பறைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, அவல நிலையில் நீடிக்கின்றன.


மழைக்காலங்களில் ஒழுகும் பாழடைந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் நடக்கின்றன.ஆதி திராவிடர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் உருது பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து அரசினால் புறக்கணிக்கப் படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள், சென்னையில் மூடப்பட்டு விட்டன.


அருந்ததியர் சமூகக் குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் பெஞ்ச் இருந்தும் தரையில் அமர வைக்கப் படுகிறார்கள். பள்ளிக்கூடத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்ய கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். சாதியும் வர்க்கமும் சேர்ந்து, தலித் குழந்தைகளை கல்வியற்றவர்களாக மாற்றி விடுகின்றன.இயற்கையின் குழந்தைகளான மலைவாழ் மக்களில் 40 சதவீதம் பேர், எழுதப் படிக்க தெரியாதவர்களாக இருக்கின்றனர்.அவர்களின் வாழிடம் உயரத்திலும், வாழ்க்கை, அதல பாதாளத்திலும் உள்ளது.


மொழிப்போராட்டத்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த தமிழ்நாட்டில், தாய்மொழியில் கல்வியில்லை. கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டிய அரசாங்கம், சாராயம் விற்கிறது. சாராயம் விற்றவர்கள், கல்வித் தந்தையாக மாறி, சரஸ்வதியை விற்கிறார்கள்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதிகமான தனியார் கல்வி நிறுவனங்கள், வியாபாரம் என்கிற நிலையைத் தாண்டி, கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக இயங்குகின்றன. ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொடக்கக் கல்வி, கட்டணக் கல்வியாக உள்ளது. பணக்காரர்கள் படிக்கும் உயர்கல்வி இலவசமாகவும் உள்ளது. இத்தகைய முரண், களையப்பட வேண்டிய பெருந்தீமையாக உள்ளது.
சமச்சீர் கல்வி என்பதில் பொது பாடத்திட்டம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. கட்டிட வசதிகள், நிர்வாக கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடிப்படை மாற்றங்கள் ஏதும் இல்லை. எவ்வித சமரசமும் இன்றி, அச்சமின்றி உண்மைகளை, இப்படம் ஓங்கி ஒலிக்கிறது. பேச்சின் வழியாக சொல்லப்படாமல், காட்சிகளின் வழியாக அணுகும் லாவகத்தால், தொடர்ந்து படத்தைப் பார்க்க முடியவில்லை.கண்ணீர் திரையாக மாறி, சொல்லொணா துயரத்தால் நம்மைத் தாக்குகிறது.
"இருப்பதெல்லாம்..
அசைக்க முடியாத நம்பிக்கை தான்
துன்புற்ற என் மக்கள் மீதான
முடிவற்ற காதல் தான்"


பாலஸ்தீனக் கவிஞர் தெளபீக் சையத் கவிதை வரிகளுடன் முடிவுறும், இப்படம் போராடத் தூண்டுகிறது. புதுகை தனிக்கொடியின் பாடல் வரிகள், நெகிழ்வுறச் செய்கிறது. தன் எழுத்து, பேச்சு, ஆவணப்படம் என எதைச் செய்தாலும் சமூக அக்கறையோடு அணுகும் பாரதி கிருஷ்ணகுமாரின் நெடும்பயணத்தில் இப்படம், ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.


- அமீர் அப்பாஸ்