Tuesday, September 13, 2011

மௌனத்தின் பாதாளத்திலிருந்து ...


மேடைகளில் பேசத் துவங்கி , தனித்த புகழும் , அங்கீகாரமும் ,அடையாளமும் , நட்பு வட்டமும் உருவாகி இருந்தது .

எங்கும் பேசப் போகக் கூடாதென்று இரண்டு கரங்கள் என் குரல் வளையை இறுக்கத் துவங்கியது .

இணைந்து வாழவும் , இணங்கி இருக்கவும் இந்த மௌனம் பயன் தருமென்ற கணிப்பில் மௌனத்தின் பாதாளத்திற்குள் விரும்பி வீழ்ந்தேன் .

இரண்டு ஆண்டுகள் . யார் அழைத்த போதும், எங்கும் போகாது , யாரோடும் பேசாது இருந்தேன் .

 என் மௌனம் சிலருக்கு மிகுந்த சந்தோசத்தையும் , பலருக்கு அளவற்ற துயரத்தையும் தந்தது .

விரும்பிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற போதும் , மௌனம் என்னை அடியற்ற ஆழத்துக்கு அழைத்துக்கொண்டு .... போய்க்கொண்டே இருந்தது .

ஒளியற்ற , ஓசைகளற்ற பாதாளம் அது . மறக்கவே முடியாத ஆண்டுகள் .
என்னால் மேடையில் பேச முடியும் என்பதே மறந்த நாளில் மதுரை பாலனின் கடிதம் வந்தது .

துரை தாசன் என்னும் இயற் பெயர் கொண்ட மதுரை பாலன் என்னோடு சமதையாக தமிழ் மேடைகளில் வலம் வந்த ஒரு ஆளுமை .

என்னை ஒரு போட்டியாகக் கருதி , என் மௌனத்தை அவர் கொண்டாடி இருக்கலாம் . மாறாக அவர் பதறினார் . என்னிடம் நேரில் அது பற்றிப் பேசாமல் கடிதம் எழுதினார் .

என்னைப் பேச வைத்த கடிதம் .( இந்தக் கடிதம் வந்த சில நாட்களில் கந்தர்வன் கடிதம் வந்தது . அதைத் தனியே எழுதுகிறேன் ) மௌனத்தின் பாதாளத்தில் இருந்து என்னை மீட்ட கடிதம் .

இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் . பாலனுக்கு, மனசுக்குள் எப்போதும் நன்றி பாராட்டிக்கொண்டே இருக்கிறேன் .

என்னைப் பேசப் பணித்த பாலன் சில ஆண்டுகளுக்குப்பின் தான் மேடையில் பேசுவதை நிறுத்திக் கொண்டார் .

பாலனின் கடிதம் ...

அத்தனை பயல்களையும்
ஊமையாக்கி விட்டு நீ அடங்கு
எனக்கு ஆட்சேபம் இல்லை

ஆந்தைகளின் அலறலால்
லஜ்ஜையாகிப் போன
என் தேசத்தில்
குயிலே....
நீ
கூவ மறுத்தால்
உன் நாக்கு
நறுக்கப்படும்!

தீபாவளி...
தீபாவளியன்று
வெடிப்பதற்கு
நீ என்ன
சிவகாசி ராக்கெட்டா?

பாட்டாளி வர்க்கத்தின்
போர்ப்பரண் மீது
பொருத்தப்பட்டிருக்கும்
ஏவுகணையடா நீ!

கையில் நாக்கும்
வாயில் பேனாவும்
வைத்திருப்பவன் நீ
எழுது... பேசு...
இரண்டு கைகளிலும்
இரண்டு ஆயுதங்கள் ஏந்து!

இரவுக்குச் சூரியனாகவும்
பகலுக்குச் சந்திரனாகவும்
இருக்க ...
உன் ஒருவனால் தான் முடியும்
இரு!

நீ
வளரும் பிள்ளைகளுக்கு
வார்த்தைகளின் தொட்டில்!
சிவப்புச் சிந்தனைகளின்
சிம்மாசனம்!

உன் எவரெஸ்ட்
உயரத்தைக் கண்டு
எவனும் அஞ்சவில்லை...
உன்
சிறிய வாய்க்குள் இருக்கும்
சின்ன நாக்கைத்தான்
கண்டம் விட்டு
கண்டம் தாவும் ஏவுகணையாய்ப்
பண்டிதக் கூட்டம் கண்டு
பதறிப் போனது!

அரிவாள்மனை
துருப்பிடிப்பதை கூட
அனுமதிக்காக
நமது வர்க்கம்....
அணு ஆயுதமே
உன்னை அனுமதிக்குமா?

நீ
நடப்பது
உன் கால்களால் அல்ல‌
நாக்கால் என்று நம்பு!

சிக்கிய மேடைகளில்
சினத்தைக் கொட்டி
சபிப்பதற்காக‌ப்
பிறந்தவனல்ல நீ...!

நீ
கக்கிய நெருப்பு
கனன்று கொண்டிருக்கும் போது
ஓய்வு கொள்ள‌
உனக்கு உரிமையேது?

ஒரு
சாம்பல் மேட்டில்தானே
நமது சரித்திரமே
ஆரம்பமாகிறது...
சமுத்திரத்தின் அலையே
நீ சம்மணம் போட‌
ஆசைப்படலாமா?

வேண்டாம் நண்பனே
இந்த விசித்திரத் துறவு