1. எப்போதும் மேடை என்பது தனித்த , உயர்ந்த பீடம் அல்ல ; அது பார்வையாளர்கள் கண்களில் , பேசுபவர் காணக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தரப்படும் தற்காலிக உயரம் . மேடையில் ஏறி விடுவதாலேயே நாம் உயர்ந்தவர்கள் ஆகி விடுகிறோம் என்று கருதாமல் இருப்பது , மேடையை வசப்படுத்த விரும்புவர்களுக்கான அரிச்சுவடி .
2. எந்த மேடையிலும் ஏறுவதற்கு முன் , அது நமது சிந்தனைக்கு உகந்த மேடைதான் என்கிற உறுதிப்பாடு வேண்டும் . எத்தனை கோடிக் கொட்டிக் கொடுத்தாலும் , அறிவுக்கும் ஆன்மாவுக்கும் ஒவ்வாத மேடைகளை மறுக்கிற மன உறுதி ஆதாரமானது . ஒவ்வாத மேடைகளில் ஒளிரவே இயலாது .
3. மேடையை அறிவதென்பது , பார்வையாளர்களை அறிவதேயாகும் . பார்வையாளர்கள் இன்றி மேடைகள் இல்லை. பார்வையாளர்களின் நீட்சியே மேடை . மேடையின் நீட்சியல்ல பார்வையாளர்கள் . இதை அறிந்திருப்பது அவசியமானது .
4. எந்த அவையிலும் , கூடி இருப்போர் அனைவரின் நேரமும் நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது என்கிற கவனமும் அக்கறையும் எப்போதும் நினைவில் இருக்கட்டும் . சங்கீதம் தெரியாது போனாலும் பிழையில்லை . இங்கிதம் தெரியாமல் இருக்கலாகாது .
5. மேடையில் நிற்பது நுனிக் கொம்பேறுவது என்கிற அவையச்சம் இருந்தேயாக வேண்டும் . அந்த அச்சம் தருகிற துணிவு எல்லையற்றது.
6. நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் என சுற்றுச் சூழலை முற்றாக உணர்ந்து , பேசுபொருளைத் தீர்மானிப்பது பேசுகிறவன் கடமை . கண்ணியமும் , கட்டுப்பாடும் தேவைப்படுகிற கடமை .
7. முழுமையான , விரிவான முன்தயாரிப்பு ( HOME WORK ) இன்றி மேடையேறுதல் குற்றம் . தயாரிக்க இயலாது போனால், பேசுவதைத் தவிர்ப்பதே சிறந்தது . தயாரிக்கப்படாத உரை நிகழ்த்தப்படாவிட்டால் , எவருக்கும் எந்த இழப்பும் இல்லை .
8. வெல்லும் சொல் தேர்ந்து பேசுவது வெற்றிக்கான வழி . மனித மனங்களை வெல்லுவதொரு மாயக்கலை . அது அவ்வளவு எளிதில் வசமாகி விடுவதில்லை. அர்ப்பணிப்பு , அக்கறை , உழைப்பு , என்று பல படிகள் ஏறித்தான் உயரத்துக்கு வர இயலும் .ஒரு குழந்தைக்குச் சோறூட்டும் தாயின் அக்கறை போலப் பேச்சு இருக்க வேண்டும் . எப்படியாவது கற்றுத் தந்துவிட வேண்டும் என்ற நல்லாசிரியனின் தீவிரம் தேவைப்படுகிறது .இந்த அக்கறையும் , தீவிரமும் பேசுகிற சொற்களில் மட்டுமல்ல; சொற்களின் இடைவெளிகளிலும் இருக்க வேண்டும். பேசுவதை நாமும் கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறோம் என்பதால் , எப்போதும் ஒரு மாணவப் பணிவு மனதிற்குள் இயங்குதல் வேண்டும் .
9. இவை அனைத்தின் திரட்சியில் . எல்லையற்றுப் பரந்து விரிந்த நமது மொழி, நமக்குத் தரும் விசாலமான வெளியெங்கும் பறந்து திரிதல் வேண்டும் .சொற்கள் சேர்ந்து பொருளாக உருக்கொள்ளும் தருணத்தில் , தொனியின் துணை கொண்டு களமாட வேண்டும் . பேசுகிறவரை அது நிலம் . பேசத் துவங்கியதும் அது களம் .
10. ஆயிரம் பேர் நிறைந்த அவையென்றால் , இரண்டாயிரம் கண்களும் , இரண்டாயிரம் செவிகளும் பார்த்துக்கொண்டும் / கேட்டுக்கொண்டும் இருக்கப் பேசுகிறோம் என்கிற பிரக்ஞையில் இருந்து பிறழவே கூடாது .
11. புதிய சிந்தனைகளும் , செய்திகளும் அவைக்கு எளிதில் வசமாகி விடும் . தேர்ந்த அவை அதனை அப்போதே கொண்டாடி மகிழ்ந்து விடும் . ஆனால் , அறிந்த செய்திகளைப், பேசியே தீர வேண்டியவற்றை பேசுகிறபோது , கூறியது கூறல் நேருகிறபோது , வியத்தகு புதுமையுடன் அதனை மொழிதல் வேண்டும் .
12. மேடைப்பேச்சு ஒரு நிகழ்கலை . சர்க்கஸ் , நாடகம் , கூத்து இவற்றைப்போல ... "கரணம் தப்பினால் மரணம் " என்கிற கவனமே , நமது வழித்துணை .
13. மொழி , சிந்தனை , த்வனி இவற்றுடன் உடல் மொழியும் இசைவாகச் சேருவது , சமைத்த பண்டத்தைச் சாதுர்யமாகப் பரிமாறுவதற்கு ஒப்பானது .
14. தனித்தனி இழைகள் சேர்ந்து , கூடித் துணியாகி மானம் காப்பது போலவே , மேற்சொன்னதெல்லாம் சேர்ந்துதான் ஒரு உரை நிகழ்த்தப்படுகிறது . அது பேசுகிறவனுக்குப் பொருளும் , புகழும் கொண்டுவந்து சேர்க்கும் . அது அவன் வாழ்க்கைத் தேவைகளுக்கான நேரிய பொருளீட்டும் வழி. ஆனால், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான மாண்புடைய, மாசற்ற அன்பும், இந்த மண்ணின் மீது கொண்ட மாளாத காதலும் தான் வசப்படுத்தும் தகுதிகள்.
15. "அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியால் பயனில்லை, "கல்லார் அவையாஞ்சா ஆகுலச் சொல்லாலும் பயனில்லை" என்பார் பிரபந்தங்களின் பேராசான் குமரகுருபரர். இது - "பூத்தலின் பூவாமை நன்று."
16. ஓர் அங்குலமேனும் தானும், சபையும் மாண்புற்று உயர வேண்டும் என்று கங்கணம் காட்டிக் கொண்டால், எல்லாமே நம் வசமாகும்.
4 comments:
இது பேச்சிலக்கண நல்காப்பியம்.
சொல்லதிகாரம் முற்றிய கழைச்சுவை.
பாராட்டுகள் பல பா.கி.
வாஸ்தவம்.
Super tips. It will take ages to imbibe all this in a speech. Now I can understand why you are such a great orator.
புதிய பேச்சாளர்களுக்கான அரிச்சுவடி இது. இனி ஒவ்வொரு முறை ஒலிவாங்கியின் முன் நிற்கும் போதும் கவனத்தில் கொள்வேன் இவ்வரிய குறிப்புகளை.
வாழ்த்துகளும் நன்றியும் பா.கி.
Post a Comment