Tuesday, October 7, 2014

நேரமற்ற நேரத்தின் நினைவரிக்கும் பேர்கள். கிருஷ்ணகுமார் - பாரதி

பாரதியைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம் அந்தப்பெயரும் நினைவுக்கு வந்துவிடும்.பாரதியைப்பற்றி சொல்லுமுன் என்னைச்சொல் என்னைச்சொல் என்று பிடிவாதம் பண்ணும்.ஆமாம் அதுதான் அது மட்டும் தான் நியாயம் என்று ஏற்றுக்கொள்கிற இடத்துக்கு வந்தாகிவிட்டது.

ஒவ்வொரு கொடியேற்ற நாளின் போதும் பாரத சமுதாயம் வாழ்கவே பாடலாக இருந்த பாரதியை.இயற்பெயர் சுப்ரமணிய பாரதியார் என்று மதிப்பெண்ணுக்காக படித்த பாரதியை.அங்கொன்றும் இங்கொன்றுமான அறிமுகத்தில் சலித்துப்போன பாரதியை கொண்டுவந்து கண்முன் நிறுத்தி பாராடா மஹா கவியை.கேளடா மானிட சாதியில்கீழோர் மேலோர் இல்லை என்று சொன்ன மயிர்க்கால்கள் குத்திட வைத்த ஒரு கிரியா ஊக்கி கிருஷ்ணகுமார்.

 ஒரு பத்தாண்டுகள் பேய்பிடித்து ஆட்டிய காலத்தில் கூடவே நடந்தகால்கள்.மாதுவெனும் மஹா நட்பின் தூதுவனாக வந்து தாலியெடுத்துக் கொடுத்த கைகள்.அவ்வளவு பெரிய கண்களில் எங்களை விழுங்கிச் செரிக்கிற பார்வை இருக்கும் .தமிழகம் அப்போதும் இப்போதும் கொண்டாடுகிற ஒரு பேச்சாளியின் இடமும்,வலமுமாக நானும் மாதுவும் மட்டும் .நானும் மாதுவும் மட்டுமே அலைந்தோமென்கிற பெருமிதத்தின் பெயர் கிருஷ்ணகுமார்.

ஆனால் எங்கள் பண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்து தோழர்களிடம் எங்கள் பெயர் பைதூக்கிகள், தூக்குத்தூக்கிகள்.உண்மையில் அது ஒனிடாப் பொறாமையின் மருவிய சொற்கள்.விடிய விடிய நடக்கும் செயற்குழுக் கூட்டம்.அவர் உள்ளே நடத்திக்கொண்டிருப்பார் நாங்கள் வெளியே காத்திருப்போம்.எதாவது கதைகள் பேசிக்கொண்டு,எதாவது புத்தகம் படித்துக்கொண்டு, சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொண்டு காத்திருப்போம்.அல்லது கோட்டோ வியம் வரைவான். அவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதிப் புகையாக்குவான். நானும் ரெண்டு மூணு பங்கெடுத்துக்கொள்வேன்.பசிக்கும், ஒரு டீ க்கூட குடிக்காமல் காத்திருப்போம். 'அவர் வீட்டுக்காரம்மா கூட இப்படிக்காத்திருக்குமோ என்னமோ ஏண்டா இப்படிக் கெடந்து வயித்தப் பாழாக்குறீங்க' என்று சொல்லிச்செல்லும் வார்த்தைகள் எங்களுக்கு பெருமிதமாகப்பட்ட நாட்கள்.இரவு பதினோரு மணிக்குமேல் வருவார்.எல்லோரையும் கழித்துவிட்டு மூவர் மட்டும் சாப்பிடப் போவோம்.அவர் தான் செலவழிப்பார் பணத்தை .சாப்பாட்டோடு முடிந்து போவதில்லை அந்த இரவுகள் .இலக்கியம்,மார்க்ஸ்,பாரதியென்று விரியும் சஞ்சாரம் .இப்படித்தான் பேச்சின் திசையிருக்கும் என்று திட்டமிடப்படாதபடிக்கு பூவே பூச்சூடவா படத்து நதியாவின் நடையும் அவளது பிருஷ்ட அசைவுகளும் இடையிடையே வந்து புல்லாங்குழல் வாசிக்கும்.

அதுதான் அந்த சிலாக்கியம்தான் கூடவே பாரதியையும் பேசும். அகண்டமாக்கு அணைந்துகொள் விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை என்று புறம் பேசுகிற பாரதிதான் உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று அகம் பேசும்.ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியையும்,கண்ணம்மாவிடம் கனியும் அந்தரங்கத்தையும் பேசுவோம்.அப்போது பாரதி,அந்த மதுக்கிறக்க நேரத்தில் எங்களை அந்தரத்துக்கு தூக்கிப்போவான்.பாரதியைப்பற்றி பேசப்போகிற மேடைப்பேச்சுகளின் அனுக்கங்களை,உச்சிக்குத் தூக்கிப்போகும் இடங்களை எங்களிருவரிடமும் பேசிப்பயின்று கொள்வார்.அந்தக்காலத்தில் அவர் பேசப்போகிற இடங்களுக்கெல்லாம் நாங்கள் இருவரும் கட்டாயம் போவோம்.ஆயிரக் கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்துக்குள் அமர்ந்து அழுவோம் சிரிப்போம் எழுந்து கைதட்டுவோம்.மேடை காலியாகி கீழே வரும்போது நேரே எங்களிடம்தான் வருவார் என்கிற பெருமிதத்தோடு காத்திருப்போம்.

தொழிற்சங்க சுற்றறிக்கையில் பாரதியின் கவிதை வரிகள் கோர்த்துக்கொடுக்க அவர்தான் பரிந்துரைப்பார். எங்கள் சங்கத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குவதெனத் திட்டமிடும் போது பாரதிதான் எங்களுக்கு பத்திரிக்கைக்கு பேர்தந்தான் .அக்கினிக்குஞ்சு. அது ஒரு கையெழுத்துப் பிரதி.அந்தப்பதினாறு பக்கப் பிரதியில் எது யார் கையெழுத்து என்று கண்டுபிடிக்கச் சிரமப்படும் எழுத்துக்கள் மூவருக்கும் வாய்க்கபெற்றோம்.       மாது இதை நீ எழுது,காம்ஸ் நீ எழுதிப்பாரேன் என்று உசுப்பேத்தி எங்களை அங்கீகாரம் செய்த சமதர்மக் குருகுலம் கிருஷ்ணகுமார். நாங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது சட்டையைப்போட்டுக்கொண்டு வெளியேறிப்போவார்.திரும்பவரும்போது ஒருபாக்கெட் கோல்டு ப்ளேக் பில்டரும் ரெண்டு குவளைத்தேநீரும் வாங்கிக் கையில் ஏந்திக் கொண்டுவருவார். அப்போது அந்த ஆறடி உயரம் எங்களுக்கும் அவருக்குமான வயது இடைவெளியைச் சுருக்கி அளக்கமுடியாத உயரத்துக்குப்போகும்.

அவரது ஜோல்னாப்பையிலும்,அவரது புத்தக அலமாரியிலுமாக பாரதிசார்ந்த புத்தகங்கள் நிறைய்யக்கிடக்கும்.மாது படிப்பான் எனக்குப்படிக்கத் தோன்றாது.கற்றலிற்கேட்டல் நன்று.முதல் பையனுக்கு கிஷோர் பாரதி எனப்பெயரிடவும்,அடுத்தவனுக்கு சூரியபாரதி எனச் சூட்டி மகிழவும் பாரதி எங்களோடிருக்கிறான்.அதன்பிறகு எனது சுற்றத்தாரின் குழந்தைகள் எல்லோரது பெயரிலும் பாரதி தொற்றிக்கொண்டான்.

இதோ இருநூறு புத்தகங்களுக்கிடையில் ரெண்டே ரெண்டு பாரதி புத்தகம் கிடக்கிறது.அதை முழுமையாகப் படித்தேனென்றெல்லாம் பொய்சொல்ல முடியாது.ஆனால் நடந்துகொண்டு,கால்போட்டுத் துங்கும்போது, மதுக் கிறக்கத்தில்,மேடையில் என பாரதியை வியந்தோதிய வரிகள் கோர்வையற்று வந்து வந்து போகிறது.

அவரோடு இரண்டு முறை எட்டயபுரம் போயிருந்தோம்.ஒன்று கருத்தரங்கம் அதில் தோழர் எஸ் ஏபி,தமிழ்செல்வன்,கந்தர்வன்,மாம்ஸ் ஷாஜஹான், கோணங்கியெல்லாம் பேசினார்கள்.இன்னொருதரம் பாரதியின் வீட்டுக்கு அந்த தாழ்ந்த வாசலுள்ள வீட்டை நினைவிடமாக மாற்றி யிருந்தார்கள். போய்விட்டு அரண்மனை பார்க்கப் போகலாம் என்ற யோசனையை யாரோ சொன்னார்கள் நானும் மாதுவும் பிடிவாதமாக மறுத்துவிட்டோ ம்.இப்போதும் அதை நினத்தால் சிரிப்பு வருகிறது.

1990 ஆம் வருடம். பாரதி பிறந்தநாளில். அந்த 42 பி எல் எஃப் தெருவில். எங்கள் சங்க அலுவலகத்து விடிகாலையில்.புகைநாற்றம் கலைந்து சந்தனப்பத்தியின் வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. எங்களுக்கு முன்னாடியே எழுந்து கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து அவர் வியர்த்திருந்தார் கிருஷ்ணகுமார்

.கரகரத்த அவரது குரலில் பாரதியின் பாடல்களை முணுமுணுத்தபடி அந்த எட்டுக்குப்பத்து அலுவலகத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.ஒரு பண்டிகையின் குதூகலம் அவரிலிருந்து எங்களிடமும் தொற்றிக்கொண்டது.'அடே உடல் முழுக்க இன்று பாரதியே நிறைந்திருக்கிறான்,எனது கால்கள் தரையில் பாவமாட்டேங்குது' என்று சொல்லிவிட்டு காம்ஸ் டே அந்த சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டைப் பாட்றா என்றார். அந்த நினைவுகள் ஒவ்வொரு டிசம்பர் பதினோறாம் தே஢ மட்டும் தான் வரும் என்றில்லை. நேரமற்ற நேரத்தில்,நல்ல உச்சி வெயிலில் வியர்வையோடு.ஒரு தீக்குச்சியைக்கிழிக்கும் ஜ்வாலையின் தகிப்பில்,ஆரத்தழுவிக்கொள்கிற ஆலிங்கணத்தில் ஏன் கழிப்பறையின் காத்திருப்பில் கூட வரும்.
மன்னித்துவிடு பாரதி எனக்கு உன்னைவிட அவனை ரொம்பப் பிடிக்கும்.நண்பனாய் தோழனாய் நல்லாசிரியனுமாய்.
                                                                                                                                எஸ்.காமராஜ் 

No comments:

Post a Comment