Tuesday, October 7, 2014

நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை

ஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்கு நாட்கள் போய்வந்தேன். ஆனால் அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.

அங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலிருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்டயபுரத்திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.

இந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும் முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.

குறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் பீகே தான் ஆளுமை.

                                                                                                                                     எஸ்.காமராஜ் 

1 comment:

Geetha said...

வணக்கம்
உங்களோடு வேம்பாருக்கு வர வைத்துவிட்டீர்கள்...நன்றி

Post a Comment