Thursday, January 10, 2013

மிகச் சிறந்த ஒரு நல்லுதாரணம்

இன்று  ஒரு  குரியர்  வந்தது .
திருச்சியில்  இருந்து  எஸ் . ஆர் . வீ . பள்ளியின்  முதல்வர்  அன்புச்  சகோதரர் துளசிதாசன்  அனுப்பி  இருந்தார் .
கடந்த  ஐந்தாம்  தேதி அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவிற்குப்  போயிருந்தேன் .

விழா குறித்து  சில தினசரிகளின் திருச்சிப் பதிப்பில் வெளியாகி  இருந்த  பத்திரிகைச் செய்திகளை எனக்கு அனுப்பி இருந்தார் .


நேர்த்தியான , எளிய ஆங்கிலத்தில்  ஒரு நன்றி பாராட்டும் கடிதமும்  எழுதி இருந்தார் . விழா குறித்த சுருக்கமான பதிவாகவும் அது  இருந்தது .

விழாவில் எடுக்கப்பட்ட , சில புகைப்படங்களும் முன்னதாக  மின்னஞ்சலில் வந்தது . ஆறாம் தேதி என்னைத் தொலைபேசியில் அழைத்து  நலமாக  ஊர் போய்ச் சேர்ந்தீர்களா என்றும் கேட்டுக் கொண்டார் .

அழைத்தோம் ; வந்தார்கள் ; பேசினார்கள் ; போனார்கள்; எல்லாம் முடிந்தது  என்பது தான் இங்கு பொதுவான நடைமுறை .

ஆனால் , பத்திரமாகப் போய்ச் சேர்ந்ததை உறுதி செய்து கொண்டு , நிகழ்ச்சி குறித்த பதிவுகளையும் அனுப்பி வைத்து , நன்றிக் கடிதமும் எழுதியது  சிறந்த நல்ல உதாரணம் .

அதே போல , ஐந்தாம் தேதி காலை ரயிலடிக்கு வரவேற்க  பேராசிரியர் மோகனை அனுப்பி  வைத்து  இருந்தார் . ,அவரோ ,  மறு நாள் ஊர் திரும்புகிற வரை , என்னைக் கைக் குழந்தை போலப் பார்த்துக் கொண்டார் .

நான் சில இயக்கங்களுக்கும் , அமைப்புகளுக்கும்  தலைமையேற்று  பொறுப்பு வகித்த காலத்தில் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கிற , பார்த்துக் கொள்ளுகிற  பணியைக்  குறைவின்றி  செய்து  இருக்கிறேன்  என்கிற பெருமிதமும்  எனக்கு  எப்போதும்  உண்டு .

என்னளவில் , இது  எதையும் நான் எதிர் பார்ப்பதில்லை என்ற போதும் , எதிர் பார்க்காமல் இருக்கிற  மன நிலைக்கு வந்து  நீண்ட காலமாகி விட்டது  என்ற போதும் ... இந்த அன்பும் , உபசரிப்பும் ,நம்மை ரொம்பவே படுத்தி விடுகிறது .

இதைப் போலவே, மூச்சுத் திணற அன்பு காட்டும் ,மேலும் சில நண்பர்கள் எனக்கு உண்டு என்பது என் வாழ்வின் ஆசீர்வாதங்களில் ஒன்று .

அத்தகைய அன்பும் , பரிவும் தான் எல்லாத் தடைகளையும் , இடையூறுகளையும்  மீறி  ஊர் ஊராக  ஓட  வைக்கிறது . இரவு , பகலாகப் பயணம் செய்யும் ஆற்றலைக் கொடுக்கிறது . சோர்வின்றிப் பேச வைக்கிறது . . புதிது புதிதாக சிந்திக்க இயலுகிறது ... 

நன்றி துளசி ...  நன்றி நண்பர்களே...நன்றி தோழர்களே ...

2 comments:

அழகிய நாட்கள் said...

//நம்மை ரொம்பவே படுத்தி விடுகிறது// "நம்மை பரவசப்படுத்தி விடுகிறது" என்பது சரியாக இருக்கும். 1994 இல் விருதுநகருக்கு வந்த இயக்குநர் ஆர் சி சக்தி அவர்களுடன் இப்படிப்பட்ட உபசரிப்பாளனாக இருந்திருக்கிறேன். அந்த கலை இரவு வீடியோவை அவரது வீட்டுக்கு(சாலிக்கிராமம்) நேரடியாகச் சென்று கொடுத்து வந்தேன். அவர் இல்லை. அவரது மகளிடம் கொடுத்தேன். புது மனை புகு விழாவுக்க்கு வந்தவர்களையெல்லாம் பதிவு செய்து. அவரவர் போட்டோவை அவரவருக்க்கு ஒரு காப்பி போட்டு கொடுத்தேன். சில நினைவலைகள் தங்களின் பதிவைப்பார்த்தபடியால். அந்தமாதிரியே தங்களின் விருதுநகர் கலை இரவுப்பயணத்துக்கு (2010)நீங்கள் வந்தபோது நானும் கிருஷ்ணகுமாரும் காத்திருந்தது... பேசுவதற்காக... இன்னும்... இன்னும்... நினைவலைகள் ஓய்வதில்லை...

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அப்பள்ளி செய்துவரும் பணிகள் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது.விளம்பரப்படுத்திக் கொள்ளாத தன்மை மிக மிக முக்கியமானது.தமிழகத்தில் எத்தனை பள்ளி மாணவர்களுக்கு ச.தமிழ்ச்செல்வனையும்,ஞாநியையும்,கவிதாமுரளிதரணையும்,பாரதி கிருஷ்ணகுமாரையும் தெரியும்?சிறாந்த பணி.கூடவே இப்படி ஒரு அக்கரையுள்ள உபசரிப்பு என கேள்விப்படும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.86ல் சென்னை கே.கே.நகரில் ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு வந்த திரு.வல்லிக்கண்ணன் அவர்களை கூட்டம் முடிந்து யாரும் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில் எனது சைக்கிளில் அவரை மாம்பலம் ரயிலடி வரை அழைத்து வந்தது நினைவுக்கு வருகிறது.(அது ஒரு முற்போக்கு முகாம் கூட்டம் என்பது வேதனை அளிக்கிற தகவல்).

Post a Comment