Friday, June 24, 2011

சொல்லின் வசீகரம்


வரைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும் .அச்சக உரிமையாளர் . பதிப்பாளர். பரந்த வாசிப்பாளர். அதிர்ந்து பேசாத மென்மையாளர் ."வேனில்" என்பது நான் அறிந்த அவரது பெயர். இயற்பெயரா ,புனைப்பெயரா என்பது தெரியவில்லை. கோவையில் வாழ்கிறார். எட்டுப் பத்து ஆண்டுகளாகத் தான் அறிமுகம். மிக மென்மையாக, மரியாதையாகப், பிரியமாகப் பேசுகிற மனிதர். எப்போதும், எந்தத்தருணத்திலும் அப்படித்தான் பேசுவார். "நல்லாஇருக்கீங்களா?" எப்பிடி இருக்கீங்க ?"என்று அவர் கேட்கிறபொழுது உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால் குணமாகிவிடும்.

ப்படியாப்பட்டமனிதர் போன மாதம் ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். "என்னடா .... கதை இது ? ஏண்டா .. இப்பிடி எழுதுறீங்க ?" என்று தான் பேசவே ஆரம்பித்தார் . எனக்குத் தெரியும் . அந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை குறித்துப் பேசுகிறார் என்பது , முதல் சொல்லில் புலப்பட்டு விட்டது .

தை குறித்து அந்தரங்கமாகப் பேசிப் பகிர்ந்து கொண்டதை எல்லாம் எழுத இயலாது . என் கதையைப் புகழ்ந்தார் என்பதை "உலகத்திற்குச் " சொல்வதற்காகவும் நான் இதனை எழுதவில்லை . ஒரு கதை வெளியானதும், அதைப் பாராட்டுகிறவர்களும் , பழிக்கிறவர்களும் ஒரு சேர உருவாகி விடுவார்கள் . குறைந்த கதைகள் எழுதின எனக்கே இது தெரிந்திருக்கிறது. நிறைய எழுதுகிறவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கும் .

ருவரைக் கவர்ந்து இழுக்கிற கதை , இன்னொருவருக்கு எதுவுமேயில்லை. ஒருவர் ஒன்றுமே இல்லையென்று நிராகரித்த கதையைப் பிறிதொருவர் கொண்டாடித் தீர்க்கிறார். புரிந்து ஏற்றுக்கொள்ளத்தக்க , தகாத , என்றெல்லாம் பொது உண்மைகள் எப்போதுமில்லை கதைகளின்,மனிதர்களின் உலகத்தில்.

னிதர்களைப் போலவே தான் கதைகள். கதைகள்போல் தான் மனிதர்கள். ஒன்று போல் மற்றொன்று இருப்பதேயில்லை. இருப்பது போலத் தோன்றினாலும் அது தோற்றம் மட்டுமே. நான் அறிவேன்.

ப்போதும் சொல்கிறேன். நான் எழுத வந்தது அவரது பாராட்டுதல்கள் குறித்தல்ல. மாறாக ,அவர் பாராட்டிய விதம் பற்றித் தான். பத்துப் பதினைந்து நிமிடங்கள் பேசினார். ஒரே "போடா... வாடா " தான். ஒவ்வொரு வாக்கியத்தையும் "டேய் " என்று துவங்கி "என்னடா " ..."எதுக்குடா " என்று வித விதமான"டா" க்களால் நிரம்பி இருந்தது அவரது உரையாடல்.

ந்தக் கணத்தில் , அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளும் , குறிப்புகளும் , என் சந்தோஷத்தைப் பெருக விடாமல், ஊடறுத்துக்கொண்டே இருந்தன . அவர் பேசி முடிக்கிற வரை , அடக்கமாய் நடந்து கொண்டேன். "நன்றி ... வேனில் .. நன்றி ... ரொம்ப நன்றி " என்று மிகக் குறைவான சொற்களுடன் , பணிவாகப் பேசி முடித்தேன் .

ரையாடல் முடிந்ததும் , என் சந்தோஷமும் , உற்சாகமும் , மகிழ்ச்சியும் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது . அவர் போட்ட எல்லா "டா "க்களும் என்னை உயரத் தூக்கிச்சென்றன. பறப்பதல்ல அது ; அதுவல்லாத வேறு ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருந்தது . கால்கள்தரையிலேயே இல்லை. வானத்திலும் இல்லை .

த்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ,வாய் நிறைய ஒருவர் "டா" போட்டுப் பேசியிருக்கிறார் .வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, வாழ்க்கை நம் மீது உருவாக்கும், அல்லது நாமே உருவாக்கிக்கொள்ளும் கற்பிதங்கள் காரணமாக ,உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கவே ஆளில்லாமல் போய் விடுகிறது .பள்ளிப் பருவத்து நண்பர்களே கூட நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கிற போது "வாங்க " "போங்க "என்று வார்த்தையாடி விடுகிறார்கள் .அதிலும் பள்ளித்தோழன் எவனாவது "சார் " என்று கூப்பிட்டால், அது கெட்ட வார்த்தையாகி விடுகிறது.

ப்போதும், உரிமையோடும், பிரியத்தோடும் "என்னடா... "வாடா""போடா" என்று கூப்பிடுவதற்கு நண்பர்கள் இருப்பது மகத்தான வரம் . மிக, நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு வேனில் அப்படி அழைத்த போது, என் குழந்தைமை முழுவதும் திரண்டு, திரும்பக் கையில் கிடைத்து விட்டது. ஒரே சொல் தான் . "டா ". நம் இறந்த காலத்தின் வசீகரத்தை உடன் அழைத்து வருகிற ஆற்றல் உடைய ஒரே சொல். மந்திரம் போல இயங்கியது அந்தச் சொல் . இனி , எப்போதும் அப்படிக் கூப்பிடுங்கள் என்று வேனிலைப் பார்க்கிற போது கேட்டுக் கொள்ள வேண்டும்.