Wednesday, February 9, 2011

நீங்க எந்த ஊரு..?


எனது அலுவலகத்தில் இருந்து, தேநீர் குடிக்க எப்போதும் ஒரு கிலோமீட்டர் தூரம் போய், ஒரு குறிப்பிட்ட கடையில் தேநீர் அருந்துவது தான் வழக்கம். இன்று மாலையும் நானும், எனது எடிட்டர் அருள் முருகனும் தேநீர் அருந்தப் போனோம். காலையில் இருந்து வேலை பார்த்துக்கொண்டே இருந்தாலும், களைப்பு இல்லாத உற்சாகத்துடன் தான் இருந்தோம். வழியில், மிக நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்க, "BK டீ சாப்பிடப் போலாமா" என்று கூப்பிட்டார். அதற்குத்தான் போகிறோம் என்றதும் அவரும், அவருடன் வந்த நண்பரும் சேர்ந்து நான்கு பேராகப் போனோம்.

டீக்கடையில், டீ மாஸ்டரைப் பார்த்ததும் வணக்கம் சொல்வது எனது வழக்கம். சிறந்த தேநீர் தருகிறார் என்பதால், முந்திக்கொண்டு முதல் வணக்கம் சொல்லிவிடுவேன். மாஸ்டர் முகம் நிறைந்த புன்னகையோடு எங்களுக்கு தேநீர் கொடுத்தார்.

நண்பர் அவரது நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார். நான் அருளை அவருக்கு அறிமுகம் செயவித்தேன். அறிமுகமான அந்தப் புதிய மனிதனிடம், "நீங்க எந்த ஊரு என்றேன்".

"தெரியாது" என்றார் புன்னகையுடன்

நான் கேட்டது, சந்தடியில் அவருக்குக் கேட்கவில்லையோ என்று கருதி மீண்டும் நீங்க எந்த ஊரு என்று கேட்டேன்.

மீண்டும், "தெரியாது" என்றார்

நண்பர் அவரைப் பார்த்து, "ஏய் எந்த ஊருன்னு கேக்குறாருப்பா" என்றார்.

அப்போதும் தெரியாது என்றே பதில் வந்தது

"ஏன்... எந்த ஊருன்னு சொல்ல விரும்பலையா..?" என்று கேட்டேன்.

அந்த மனிதன் நண்பரின் காதருகே போய் ஏதோ சொன்னார், நண்பரின் முகம் மாறியது. எனக்குப் புதிராக இருந்தது. அதற்குள் தேநீர் சாப்பிட்டு முடித்திருந்தோம். யாருக்கு என்ன சிகரெட்டு வேண்டும் என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்கு போனார் அந்த மனிதர். நண்பர் மெல்லிய குரலில் என்னிடம் சொன்னார், "அவர் ஒரு அநாதை இல்லத்துல வளந்தவரு... அப்பா அம்மா யாருன்னு தெரியாது... அதனால எந்த ஊருன்னும் தெரியாதுன்னு"

அந்த மனிதர் சிகரெட்டுடன் திரும்பி வந்தார். மெளனமாகப் புகைத்தோம். புறப்பட்டோம்.

அந்தப் புதிய மனிதரிடம் சொன்னேன், "இனிமே யாராவது எந்த ஊருன்னு கேட்டா, மதுரைன்னு சொல்லுங்க... அதுதான் என் ஊரு... இனிமே அதுதான் நம்ம ஊரு..."

"thanks sir" என்றார் அவர் சந்தோஷமாக.

நான் அலுவலகம் திரும்பினேன். நெருக்கடியான போக்குவரத்தில் எப்படி வந்தோம் என்பது நினைவிலேயே இல்லை. அலுவலகம் திரும்பியும் இன்னும் வழக்கமான வேலை செய்யும் மனநிலைக்கு நாங்கள் இருவருமே திரும்பவில்லை.

நினைவெல்லாம், "நீங்க எந்த ஊரு...?" என்கிற கேள்வியிலேயே நிலைத்து நிற்கிறது...

5 comments:

காமராஜ் said...

டீக்கடைகளில் நம்மை ஆசுவாசப்படுத்த தேநீர் மட்டும் கிடைப்பதில்லை.பொதிந்து கிடைக்கிற கதைகளும்.வேல்,அப்பாஸ் எங்கு போனாலும் கூடவே வருகிறார்கள்.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பகிர்வு BK!

vimalanperali said...

சங்கடம் நிறைந்த தருணங்களை தோற்றுவித்துவிடுகிற பல பேச்சுக்களில் இதுவும் ஒன்றாக,

க. சீ. சிவக்குமார் said...

haa! இன்னிக்குத்தானே பாத்தேன். எல்லாத்தையும் ஒரே மூச்சுல படிச்சுட்டேனே... சிவா

ஈரோடு கதிர் said...

சிலரிடம் சில கேள்விகள் கேட்க முடியாததாகவே இருக்கின்றன...

Post a Comment