Saturday, April 23, 2016

உலக புத்தக தினம் - இன்று

தி இந்து நாளிதழுக்கு வாசிப்பு குறித்து எழுதிய 
கட்டுரையின் முழு வடிவம் .


அம்மாவிடம் இருந்து தான் எல்லாமே ஆரம்பித்தது.
அம்மா எப்போதும் வாசித்துக்கொண்டே இருப்பாள் .
அவள் வீணையில்லாத சரஸ்வதி.
திருப்பாவை, திருவெம்பாவை என எல்லாமும் பாடுவாள்.

வீட்டில் இந்துநாளிதழ், தினமணி, கல்கி, விகடன், மஞ்சரி, அமுதசுரபி, அம்புலிமாமா, பாரதியார் கவிதைகள், மகாத்மா காந்தியின் சுயசரிதை, பொன்னியின் செல்வன் என்று வாசிக்க ஏராளம் இருந்தது. எப்பொதும், வேலையின் அவசரத்தில் இருக்கும் அப்பா, கழிப்பறைக்குப் போகும் போது ஏதேனும் ஒரு  புத்தகத்துடன் தான் போவார்.


வசிப்பதற்கென்று தனியாக அறைகள் ஏதும் இல்லாத ஒரு சின்ன வீட்டில் தான் குடியிருந்தோம். என்றாலும், எல்லோரும் எதையாவது வாசித்துக் கொண்டே இருந்த வீடு. எப்பொழுதும் வாசித்துக் கொண்டே இருப்பதற்கான ஒரு வாழ்க்கை அமைந்தது ஒரு ஆசீர்வாதம் தான்.


பள்ளியிலும், கல்லூரியிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எது வந்தாலும் பேர் கொடுத்து விட்டு, வீடு வந்து அதற்கெனத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட போது வாசிப்பின் எல்லை மேலும் விரிந்தது.


பிறந்து வாழ்ந்த மதுரையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் அம்மா அழைத்துப் போய்க்கொண்டே இருந்தாள். தமிழின் மிகப் பெரும் ஆளுமைகளின் உரைகளைக் கேட்டதும் வாசிப்பின் மீதான காதல் பெருகி வளர்ந்தது.


கல்லூரி வாழ்க்கையில், நண்பர்களுடன் சேர்ந்து துவங்கிய “பாரதி கவிதா மண்டலம்” பாரதியை ஆழ்ந்து வாசிக்க வழி வகுத்தது. தனது படைப்புகளில், தனது மொழியறிவை, வாசிப்பின் விஸ்தீரணத்தை பாரதி உணர்த்திக் கொண்டேயிருந்தான். எல்லோரையும், எல்லாவற்றையும் வாசிக்காமல் “யாமறிந்த மொழிகளிலே” என்றும் “யாமறிந்த புலவரிலே” என்றும் பாரதி பாடியிருக்கவே முடியாது.
எட்டயபுரம் மகாராஜாவுடன் சென்னைக்குப் போய் விட்டுத் திரும்பிய பாரதி, மகாராஜா கொடுத்த பணத்தில் முழுவதும் புத்தகங்களே வாங்கி வந்தார் என்னும் செய்தி பாரதி மீதும், புத்தகங்கள் மீதும் ஒரு சேர மதிப்பும், காதலும் தந்தது.


கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று பரந்து விரிந்து வாசிக்கத் துவங்கிய காலத்தில் தான் இன்றைய செம்மலர் ஆசிரியர். எஸ்.ஏ.பெருமாள் அறிமுகமானார். சந்திக்கும் போதெல்லாம், வாசிக்கவென்று சில புத்தகங்களைத் தந்து விட்டு, அடுத்த சந்திப்பில் அப்புத்தகங்களைப் பற்றி அவர் உரையாடத் துவங்கியது வாசித்தே தீர வேண்டிய கட்டாயத்தை வாழ்க்கையாக்கி விட்டது.


இந்திய விடுதலைப் போரில், கேரளா மாநிலம் கையூரில் நடந்த நிகழ்வுகளை, நிரஞ்சனா எழுதிய “நினைவுகள் அழிவதில்லை” என்னும் புத்தகத்தை வாசித்துப் பெருக்கிய கண்ணீரின் ஈரம் இப்போதும் இருக்கிறது.
புதுமைப்பித்தனின் எழுத்தும், எழுத்தில் ஜொலித்த பகடியும், நவீன இலக்கியத்தின் மீது எல்லையற்ற ஈர்ப்பைத் தந்தது. வடிவமைப்பும், வண்ணங்களும் நிறைந்த, விலை குறைவான சோவியத் புத்தகங்கள் திறந்து வைத்த பலகணிகள் ஏராளம்.


வானம்பாடிகளும், அன்னமும், உருவாக்கிய பேரெழுச்சி மகத்தானது. கண்ணதாசனும், ஜெயகாந்தனும், ந. பிச்சமூர்த்தியும், சுந்தர ராமசாமியும், மௌனியும், ஜி நாகராஜனும், லா.ச.ராவும்  உருவாக்கித் தந்த வாசிப்பு அனுபவம் வாழ்வின் அனைத்துக் தளங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது.


எந்தப் புத்தகத்தை வாங்கினாலும், அதை விரித்து முகர்ந்து பார்க்கிற பழக்கம் இப்போதும் இருக்கிறது. காகிதமும், கஞ்சிப் பசையும் சேர்ந்து உருவாக்கும் அந்த வினோதமான மணம், உலகின் எல்ல வாசனைத் திரவியங்களையும் வீழ்த்தி விடும் ஆற்றல் கொண்டது.


புத்தகங்களை அக்றிணைப் பொருட்கள் என யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு மனதின், அறிவின் மகரந்தங்களை இன்னுமொரு மனித மனதிற்கு, அறிவிற்குக் கொண்டு சேர்க்கும் ‘தேனீக்களே’ புத்தகங்கள். சிறகடித்துப் பறந்து கொண்டேயிருக்கும் தேனீக்கள் உயர்திணைகள். என் கையிருப்பில் இருக்கும் எல்லாப் புத்தகங்களும் எப்போதும் சிறகடித்துப் பறக்கும் தேனீக்களாகவே எனக்குத் தோன்றுகிறது. புத்தகங்கள் உயர்திணை. அவைகள் உயர்திணை என்று அறியாதவர்களே அக்றிணைகள்.


நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அனால் வாழ்க்கைக்கான ஓட்டம் அதை சாத்தியமற்றதாக ஆக்கி விடுகிறது. வாங்கிய கடனை முறையாகத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பதட்டமும் நேர்மையும் போல, இழந்த மணி நேரங்களை வாய்ப்பிருக்கிற வேறொரு நாளில் வாசித்துச் சரிசெய்து கொள்வேன்.
ஏனோ, மின்புத்தகங்களை கணிப்பொறியில் என்னால் வாசிக்க இயலுவதில்லை. ஏனெனில், அவைகளில் புத்தகங்களின் வாசனையும், தொடுதலையும் என்னால் உணரமுடிவதேயில்லை.


வாசிப்புக்கும் மேலான சிறப்புடையது மறுவாசிப்பு. ஏற்கெனவே வாசித்த சில புத்தகங்களை மீண்டும் படிக்க நேரும் தருணங்கள் சிறப்புமிக்கவை. பல ஆண்டுகள் பிரிந்து போன ஒரு நண்பனை மீண்டும் பார்க்கிற அற்புதம் அது.
தான் மாறாமல் அப்படியே இருந்து கொண்டு, இத்தனை ஆண்டு கால இடைவெளியில், நாம் அறியாத நமக்குள் நேர்ந்திருக்கும் மாற்றங்களை நமக்கு உணர்த்தும் சாகசத்தை மறுவாசிப்பின் வழியே ஒரு புத்தகம் நிகழ்த்துகிறது.


எந்த சமூகத்தில் வாசிப்பில்லையோ, அந்த சமூகம் தன் காலத்திடமிருந்து தானே பிரிந்து, விலகிக் கிடக்கிறது. அது எல்லாவற்றில் இருந்தும், எல்லா வகைகளிலும் பிரிந்து கிடக்கிறது.
புத்தகங்களுக்கும், சமூகத்திற்குமான இடைவெளி பெருகிக்கிடக்கிற சமூகத்தில் பாகுபாடுகள் பெருகிக் கிடக்கும். வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளலாம்: பாகுபாடுகளை ஒப்புக் கொள்ளவே முடியாது. பாகுபாடுகள் அடக்குமுறையின் மூலமே உயிர் வாழ்கின்றன. அடக்குமுறைகள், வன்முறையின் வழியே நிலை பெறுகின்றன. வன்முறை சட்டத்தின் ஆட்சியை நிராகரித்துவிட்டுத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.


சட்டத்தின் ஆட்சி (Rule of law) வாசிப்பு நிறைந்த ஒரு சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. வாசிப்பற்ற சமூகமும், மனிதனும் தங்கள் பேதமையால், அறியாமையால் அனைத்து அநீதிகளுக்கும் ஏதேனும் ஒரு வழியில் அங்கீகாரம் தந்து கொண்டே இருக்கிறார்கள்.


ஒரு சமூகம் பாகுபாடுகளற்ற சமூகமாக உருக்கொள்வதற்கு, அந்தச் சமூகம் தெளிந்த நல்லறிவு கொண்ட சமூகமாக இருத்தல் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வாசிப்பிலே இருந்து வருகிறது.


வாசிப்பு எனக்கு தந்த முதல் அறிவு எனது அறியாமை பற்றியது; என் அறியாமையின் எல்லையை அல்லது எல்லையற்ற அறியாமையைக் கண்டு, உணர்ந்து, கடந்து போக வாசிப்பு ஒன்றே வழித்துணை.


பரிணாம வளர்ச்சியில், குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற போதும், மனிதனை குரங்கையும் வேற்றுமைப் படுத்த பல காரணிகளை இயற்கை உருவாக்கி இருந்தது. என்ற போதும், மொழியை மனிதன் உருவாக்கி, உலகின் முதல் புத்தகம் எழுதப்பட்டதும் தான் , குரங்கிற்கும் மனிதனுக்குமான தொடர்பு முற்றிலும் தீர்க்கப்பட்டது என்று எங்கோ படித்திருக்கிறேன். உண்மைதான். தன்னையும், மனிதனையும் பிரித்த புத்தகங்கள் மீது குரங்குகளுக்கு எப்பொதும் தீராப்பகைமை உண்டு.
விலங்குகளுக்குக் குரல் தந்த இயற்கை அவைகளுக்கு மொழி தரவில்லை. அது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த அமுதசுரபி. விலங்குகளுக்கு வரலாற்று உணர்வு இல்லை. ஆனால், மனிதன் அப்படியில்லை... அவனுக்கு வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வரலாறும், வரலாற்று உணர்வும் உண்டு. வாசிப்பு இன்றி இந்த உணர்வு சாத்தியமே இல்லை.


எல்லாவற்றிற்கும் மேலாக,  காதலுக்கும், புத்தக வாசிப்பிற்கும் மிக நெருங்கிய பொருத்தம் ஒன்று உண்டு. 
நேருக்கு நேர் கண் கொண்டு பார்த்தால் மட்டுமே காதலும், வாசிப்பும் ஒருவருக்கு வாய்க்கும்.
கண்கள் இன்றி வேறெந்தப் புலன்களின் வழியாகவும் ஒரு புத்தகத்தையோ அல்லது இதயத்தையோ  அடைந்து விட முடியாது.



வாசிப்பதென்பது காலத்தை அறிவது.
வாசிப்பதென்பது காலத்தைக் கடப்பது.
வாசிப்பதென்பது காலத்தை உருவாக்குவது.



No comments:

Post a Comment