Monday, December 23, 2013

ஊனும் , உயிரும் உருக உருக ...

எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறேன் . எனது ஆவணத் திரைப்படங்களுக்காக ... எனது புத்தகங்களுக்காக ...

ஆனால் , குறிப்பிட்ட படைப்புக்கென  இல்லாமல் இத்தனை நாள் பேசிய தமிழுக்காக "தமிழ் நிதி " விருது பெறுகிறேன் .அம்பத்தூர் கம்பன் கழகம் இந்த விருதினை வழங்குகிறது .

அம்பத்தூர் கம்பன் கழகம் தகைமை சான்ற மனிதர்களால் நடத்தப் பெறுகிறது . அதன் தலைவர் "பள்ளத்தூர் " திரு . பழ . பழனியப்பன் கம்ப ராமாயண உரை ஆசிரியர் .

அவர் என்னை அழைத்து இந்த விருது பற்றி சொன்னதும் , மனமார ஒப்புக் கொண்டேன்.

இத்தகைய விருதுகளுக்கு தகுதி உடையவனாக என்னை ஆளாக்கியது என் அன்னையே . அவளை நான் மிக அதிகமாக நினைத்துக் கொள்ளுவதுண்டு .இருபத்தி நான்கு மணி நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பதாகச் சொன்னால் அது மிகையான பொய் .

யாரும் , யாரையும் இருபத்திநாலு மணி நேரமும் நினைத்திருக்க இயலாது .எந்த பக்தனுக்கும் ,  காதலனுக்கும் , காதலிக்கும் , நண்பனுக்கும் ,எதிரிக்கும் ... கூட  அது சாத்தியமில்லை .

நினைக்கிற தருணத்தில் , அந்த நொடியில், மனதின் அடியாழம் வரை ஊனும் , உயிரும் உருக உருக நினைத்துக் கொண்டால் போதுமானது .

அம்மா ... உன்னைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் ஊனும் , உயிரும் உருக , உருகித் ததும்ப நினைத்துக் கொள்ளுகிறேன் .

அம்மா ... நீ ... இருந்திருக்கலாம் . எதனால் இத்தனை விரைவாக விடை பெற்றுக் கொண்டாய் ? உன் உயிர் பிரிந்த கணத்தில் உன் அருகில் தானே இருந்தேன் ... ஏதும் சொல்லாமல் போனாய் . நினைந்து , நினைந்து மகன் உருகட்டும் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய் . ஆனாலும் , தனியே விட்டு விட்டுப் போனாய் .

வாழ்வில் தனிமை என்பதை முதன் முறை அறிந்ததும் , உணர்ந்ததும் அன்றைக்குத் தான் . அது இன்றும் , இப்போதும் என்னைச் சூழ்ந்தே இருக்கிறது .
உன்னை எரியூட்டினோம் . சொந்த நிலத்தில் புதைத்திருக்க வேண்டும் . புதைப்பது தான் திராவிடர்களின் பழக்கம் , பண்பாடு .
நிலமில்லாத நாடோடிகளின் பழக்கமே எரியூட்டுவது .

உன்  கல்லறை இல்லாத போதும் எல்லாவற்றையும் உன் காலடியில் தான் சமர்ப்பணம் செய்கிறேன் .

3 comments:

Geetha said...

வாழ்த்துக்கள் சார்.உண்மை தான் நினைக்கின்ற காலங்களில் மனம் கரைகின்ற அன்பில் அம்மாவிற்கே முதலிடமாய் இருக்கின்றது எல்லோருக்கும்.உணர்வு பூர்வமான சமர்ப்பணம்.

Editor Palanivel said...

Tamizh Nithi - manasu niraintha vazhthukkal

Ammavai vanagugiren

Ponra said...

///நினைக்கிற தருணத்தில் , அந்த நொடியில், மனதின் அடியாழம் வரை ஊனும் , உயிரும் உருக உருக நினைத்துக் கொண்டால் போதுமானது .///

உண்மை

Post a Comment