Thursday, December 20, 2012

கருப்பு ஓவியமும் , வண்ண ஓவியமும்

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மாலை நேரம் . அப்போது நான் சாத்தூரில் வங்கிப் பணியில் இருந்தேன் .அலுப்பும் , சலிப்பும் , கோபமும் , நிறைந்திருந்த ஒரு மாலை நேரம் . எங்கள் சங்க அலுவலகத்தில் தனித்து இருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன் . அருகாமையில் இருந்த பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வந்த அன்புத் தோழன் அழகர்சாமி வந்தான் . நான் மனதார வரவேற்று விட்டு , வேலைகளில் மீண்டும் அமிழ்ந்தேன்.

அவர்  எதையோ வரையத் துவங்கினார் . பென்சில்களை மாற்றி மாற்றி வரைந்து கொண்டே இருந்தார் . இருபது அல்லது முப்பது நிமிடம் . என்னையே வரைந்து எனக்குக் காட்டினார் . வியந்து போனேன் . என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை .

சிறிது நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள் . பாராட்டினார்கள் . வியந்தார்கள் . ஒரு சொல் கூடச் சொல்லாமல் அழகர்சாமி மெல்லிய புன்னகையுடன் எல்லாம் கேட்டுக் கொண்டார் .

" ரொம்ப நல்லா இருக்கு ... ஆனா ஓவியத்திலும் கோபமாகத் தான் இருக்க வேண்டுமா ? B.K நல்லா சிரிக்கிற மாதிரி ஒன்னு வரையக் கூடாதா ? " என்று அழகர்சாமியைப் பார்த்து  R.S.N  கேட்டார். அழகர்சாமியின் முகம் வாடி விட்டது .

நான் R.S.N.  ஐக் கோபமாகப் பார்த்தேன் ... " படத்துலயாவது சிரிக்கிற மாதிரி இருக்கட்டுமேன்னு  கேட்டேன் ... வேணாமுன்னா விடுங்க " என்றார் R.S.N .
எல்லோரும் சிரித்தார்கள் . நானும் தான் .

சிரித்துக் கொண்டே R.S.N ஐப் பார்த்து அழகர்சாமி சொன்னார் . " சிரிக்கிற மாதிரி தானே ? வரைஞ்சாப் போச்சு ... ஆனா உங்க தலைவரைச் சிரிக்கச் சொல்லுங்க " என்றார் .

எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள் . சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் . பென்சில்களை எடுத்து உள்ளே வைத்து விட்டு WATER COLOUR BOX  எடுத்து "நான் " முக மலர்ந்து சிரிக்கிற ஓவியத்தை வண்ணத்தில் அடுத்த அரை மணி நேரத்தில் வரைந்தார் அழகர்சாமி .

கோபமாக இருந்ததைக் கறுப்பிலும் , சிரித்து இருப்பதை வண்ணத்திலும் ஆக வரைந்து தந்தார் .

என் சந்தோசங்களைப் போலவே அந்த வண்ண ஓவியமும்  எங்கோ காணாமல் போய் விட்டது . எப்போதாவது திரும்பக் கிடைத்தால், உங்களுக்குக் காணத் தருவேன் . நானும் பார்த்துக் கொள்வேன்

No comments:

Post a Comment