Friday, December 31, 2010

அம்மாவுக்கு சொன்ன கடைசிக் கதை

அம்மா இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது . அம்மா இறந்த அன்று மாலையே , மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்வது என்று முடிவு . சென்னையில் இருந்து அக்கா வருகிற வரை வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால் மயானத்தில் காத்திருப்பதென்று தீர்மானமாகி இருந்தது . மயானத்தில் காத்திருந்தோம் . இரண்டு அல்லது மூன்று மணி நேரமாகும் என்றார்கள் . அப்பா , அவரது நண்பர்கள் , உறவினர்களுடன் ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார் . நான் அம்மாவுக்கு பக்கத்தில் இருந்தேன் . கொஞ்ச நேரம் கழித்து , நண்பர்கள் என்னைத் தனியே அழைத்துப் போய் புகைக்க ஒரு சிகரெட் கொடுத்தார்கள் . சௌபா@ சௌந்தரபாண்டியன் , தர்மா,முரளி,தங்கமாரி,ரவி,எழிலரசன்,ராஜாராம்,குணசேகரபாண்டியன்,சுந்தரமூர்த்தி , சங்கரநாராயணன் என்று பத்துப் பதினைந்து நண்பர்கள் சுற்றி இருந்தார்கள் .. யாரோ என்னைக் கதை சொல்ல சொன்னார்கள் . யாரோ அதெல்லாம் வேண்டாம் என்றார்கள் . நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் . எல்லோரும் மௌனமாகக் கதை கேட்டார்கள் , அந்தோன செகாவ்வின் "ஆறாவது வார்டு " கதையைச் சொன்னேன் . கொஞ்சம் பெரிய கதை .கதை எல்லா அம்மாக்களின் வாழ்வோடும் ஒரு வகையில் தொடர்புடையது தான் .கதை சொல்லி முடித்த அரை மணி நேரத்தில் அக்கா வந்து சேர எல்லாம் முடிந்தது.

போன வாரத்தில் இந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது சௌபா சொன்னான் . "அது நீங்க எங்களுக்குச் சொன்ன கதையில்ல BK....கதைகள் சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை " என்று . இருவரும் பிறகு பேசிக் கொள்ள முடியவில்லை . அவன் அழுதது எனக்குக் கேட்டது . நான் அழுதது அவனுக்கும் கேட்டிருக்கும் .

16 comments:

ராஜா சந்திரசேகர் said...

"அது நீங்க எங்களுக்குச் சொன்ன கதையில்ல BK....கதைகள் சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை "

சட்டென கண்ணீர் வந்தது.
உங்கள் வரிகளின் அடியில் படிந்து கிடக்கிறது வாழ்க்கை.

நன்றி கிருஷ்ணகுமார்.

bharathi krishnakumar said...

வரிகளுக்கு அடியில் வாழ்க்கையும்
வாழ்க்கைக்கு அடியில் வரிகளும் ...
விசித்திரம் தான் இங்கு எல்லாமே . நன்றி சச்சா சார்
உங்களை எல்லோரும் செல்லமாக சச்சா என்று தான் குறிப்பிடுகிறார்கள் . நானும் அப்படிக் கூப்பிடலாமா

Gopalakrishnan said...

நிதர்சனம்...!

ilangovan thayumanavar said...

அந்தக் கதை கேட்டகாம்பவுண்டும், நெகிழ்வான அந்த கண்ணீர் மாலையும் மறுபடியும் நெஞ்சில் நிழலாடியது குமார். முப்பது வருடங்களுக்கு முன் ஆயினும், முப்பது நொடிக்கு முன் ஆயினும், உள் வாங்கிக் கொள்ளூம் வலியை மனம் பத்திரமாக காபந்து செய்து அல்லவா காப்பாற்றி வருகிறது..

போ. மணிவண்ணன் said...

ஆங்கில புத்தாண்டு அன்று ஒரு பச்சைத் தமிழரின் இணைய நட்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி .அதுவும் பாரதியாரே வந்து "என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்" என்று கேட்பதுபோல் உணர்ந்தேன். நன்றி பாரதி.அன்பின் வணக்கங்கள் சொல்வது உங்கள் தோழன் மணிவண்ணன்

ரவிஉதயன் said...

அம்மா போனலே எல்லாம் போன மாதிரி தான். கதை சொல்லி முடித்த அரை மணி நேரத்தில் அக்கா வந்து சேர எல்லாம் முடிந்தது.
எல்லாம் முடிந்தது என்னை அழ வைத்து விட்டது

Unknown said...

மயானத்தில் அம்மாவின் இறந்த உடலை வைத்துக் கொண்டு நீங்கள் கதை சொன்னீர்கள் என்கிற காட்சியே எனக்கு வியப்பானதாக (இது சரியான வார்த்தை இல்லை தான்)இருக்கிறது. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, அம்மாவின் பிரிவு என்பது நிரபா முடியாத ஒன்றுதான். நெகிழ்ச்சியான பதிவு....

எஸ்.கருணா said...

உலகத்திலேயே மயானத்தில் கதை சொன்ன முதல் கதை சொல்லி நீங்கதான் பி.கே.அற்புதமான பதிவு.

ராஜா சந்திரசேகர் said...

பெயரில் நாம் மட்டும்தான் இருக்கிறோம்.அன்பில் எல்லாமே இருக்கிறது.உங்கள் விருப்பபடிக் கூப்பிடுங்கள்.

மாதவராஜ் said...

வணக்கம் பி.கே!

இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் குறித்து அறிந்தேன். சந்தோஷமாயிருக்கிறது. வருக!

மாதவராஜ் said...

பி.கே!

கமெண்ட் மாடரேஷனை எடுத்து விடுங்கள். பின்னூட்டமிடுபவர்களுக்கு அது தொல்லை.

தமிழ்மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைத்துக்கொண்டால், உங்கள் எழுத்துக்கள் இன்னும் பலரைச் சென்றடையும்.# ஆலோசனைகள்... :-))))

bharathi krishnakumar said...

நன்றி மாது .

சார்வாகன் பக்கங்கள் said...

அம்மா அடிக்க வளர்கிறோம். பின்பு அம்மாவை அடிக்கிறோம். அம்மாவைப் புறக்கணிக்கிறோம்.ஒரு கட்டத்தில் ஆயிரந்தெய்வங்களையும் புறக்கணித்து விட்டு அம்மாவை தெய்வம் என்று ஏற்றுக்கொள்கிறோம். அம்மா தெய்வம் என்றுணர்வதிலேயே வாழ்க்கை நிறைவுறுகிறது.

ஒரு அம்மாவைப் பற்றி எழுதுகிற கதையோ கவிதையோ ஏன் எல்லா அம்மாக்கைளப் பற்றிய கவிதையாக கதையாக மாறிவிடுகிறது?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..அருமை..அருமையாக இருந்தது!
படித்து முடித்ததும் என் கண்களில் கண்ணீர்1
படிப்பவரை நெகிழச் செய்து விடும் நிகழ்விது!!

VELU.G said...

உணர்ச்சிகரமான தருணம் நண்பரே

கடந்த மாதம் தான் என் அன்னையை இழந்தேன். அந்த துக்கத்தில் இன்னும் மீளாமல் இருக்கும் எனக்கு உங்கள் பதிவு நம்மைப்போல் நிறையப்பேர் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது

rara said...

சார்...அம்மா மரணம் குறித்த நிகழ்வு எழுத்து ஈரம் மிக்கது சார்...

Post a Comment